இலங்கையில் பாரதி -- அங்கம் 40 முருகபூபதி


பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி பற்றி ஏற்கனவே  இந்தத்தொடரில்  குறிப்பிட்டுள்ளோம்.  இலங்கை வடமராட்சியில் அல்வாய் பிரதேசம் பல கலை, இலக்கியவாதிகளையும்  தமிழ்  அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அத்தகைய அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ்,  இந்த ஆண்டு (2017 ஓக்டோபர்) வரையில் தங்குதடையின்றி 109  இதழ்களை வெளியிட்டிருக்கிறது.


இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச்சேர்ந்தவர்.
யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த  புதிய இதழ்.
ஜீவநதியின் வருகையை பாரதியின் ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா என்ற கவிதையுடன் ஒப்புநோக்கலாம்.
இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து  வெளிவரத்தொடங்கிய ஜீவநதி,  ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த  பத்தாண்டுகளுக்குள் 17 சிறப்பிதழ்களை ஜீவநதி  வெளியிட்டுள்ளது.இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் இதுவரையில்  எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான் ஆகியோரை கௌரவிக்கும் வகையில்  நான்கு  சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ்  ,  கவிதைச்  சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் ,  சர்வதேச  தமிழ்  எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் ,  அவுஸ்திரேலியா சிறப்பிதழ் , கனடா சிறப்பிதழ் ,  மலையக சிறப்பிதழ் ,  திருகோணமலை சிறப்பிதழ் ,  ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ்   முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.  
அத்துடன் ஜீவநதி வெளியீடாக இதுவரையில் 84  நூல்களும் வெளிவந்துள்ளன. ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணீதரனும் படைப்பிலக்கியவாதி.  இவரது தந்தையார் கலாமணியும் மூத்த எழுத்தாளர். கலாமணியின்  தந்தையார் தம்பிஐயா வடபுலத்தில் கிராமங்கள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  இசைநாடகங்களை அரங்கேற்றியிருப்பவர்.


இவருடைய இசைநாடகங்களில் ஈழத்தின் புகழ்பெற்ற நடிகமணி வயிரமுத்துவும் நடித்திருக்கிறார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.   பரணீதரனின் மனைவி விஷ்ணுவர்த்தினியும் படைப்பிலக்கியவாதியாவார். பாரதியின் கவிதை வரிகளில் மனதில் உறுதி வேண்டும், நினைவு நல்லது வேண்டும் ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டவர்.
இவ்வாறு  ஒரு  கலை இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து ஜீவநதியை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பரணீதரன் மீண்டும் துளிர்ப்போம் , இலக்கியமும் எதிர்காலமும் ,  உளவியல் பிரிவுகள் - ஒரு அறிமுகம் ஆகியநூல்களையும் வரவாக்கியிருப்பதுடன், சில நூல்களின் தொகுப்பாசிரியருமாவார்.
பரணீதரனின் பாட்டனார்  தம்பிஐயாவின் பாரம்பரியத்திலிருந்து உருவான பிரசித்திபெற்ற பூதத்தம்பி இசை நாடகம் தலைமுறைகள் கடந்தும் மீண்டும் மீண்டும் அரங்கேறிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜீவநதி,  சிற்றிதழ் சங்கத்தின் விருதையும் தமிழ்நாடு கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதையும் இதுவரையில் பெற்றுள்ள ஜீவநதியும் பாரதி தொடர்பான ஆய்வுகளுக்கு களம் வழங்கியிருக்கிறது.
பெண்களும் வர்க்கமும் -  சங்க இலக்கியங்களை மையமாகக்கொண்ட  ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  மொழித்துறை  பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்  ஜீவநதியில் பாரதியை விரிவாக ஆய்வுசெய்து  எழுதியிருக்கிறார்.
ஜீவநதியில் இவர் எழுதியிருக்கும்  1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்தது.  பாரதியை ஆராயப்புகுமிடத்து,   நவீன  கவிதை பற்றிய  இவரது அறிமுகம் இவ்வாறு தொடங்குகிறது:

   " எமக்குக்கிடைத்துள்ள தமிழிலக்கியம் ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு வருடப்பழைமை வாய்ந்தது.  இந்த நீண்ட காலப்பிரிவில் தோன்றிய இலக்கியங்களுள்  தொண்ணூறு வீதமானவை கவிதைகளே. இக்கவிதைகளிற் பெரும்பாலானவை அரசரையும் பிரபுக்களையும் கடவுளரையும் பொருளாகக் கொண்டு அரசவைகளிலும் கோயில்களிலும் பாடப்பட்டவையாகும்.
தமிழ்நாட்டில்  பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக அரசியற்பின்னடைவு அதைச் சந்தர்ப்பமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மேனாட்டதிகாரம் போன்றன தமிழ்நாட்டு வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தின.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த மேனாட்டினரின் அதிகாரத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களினால் நிகழ்ந்த  கல்வி முறைமை மாற்றம், சமூக மாற்றம,  கைத்தொழில் மயமாக்கம், நகர மயமாக்கம் போன்றவை காரணமாக அன்றைய இந்திய நிலவுடைமை வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டது. மக்கள் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது. புதிய முறையில் இலக்கியம் எழுந்தது. இது ஆங்கிலேயராட்சி ஏற்படுத்திய மறுமலர்ச்சியாகும்."
அம்மன்கிளி, தமது ஆய்வில் தமிழக அறிஞர்  சாலை இளந்திரையன்,  பாரதியின் பாடல்கள் தொடர்பாக கூறவிழைந்ததையும் இவ்வாறு  பதிவுசெய்கிறார்:  
" கவிஞனின் உள்ளத்தில் மூன்று பக்கங்கள் உண்டு. ஒருபக்கம் அவன் வாழ்ந்த காலத்தை எதிரொலிக்கிறது. ஒருபக்கம் அவன் பிறந்த வளர்ந்து மொழி பயின்று வந்த சமூகத்தை எதிரொலிக்கிறது.   மூன்றாவது பக்கம் உலகப்பொது மனிதப்பண்பை எதிரொலிக்கிறது சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மூன்றில் ஒருபக்கம் “ஒலி மிகுந்தும் பிற பக்கங்கள் ஒலி குன்றியும் நிற்கும். ஆயினும் எந்தக்கவிதை உள்ளத்திலும் இந்த மூன்று பக்கங்களும் இருந்தே தீரும் பாரதியின் நெஞ்சம் காலத்தைச் சிறப்பாகவும் மற்ற இரண்டையும் பொதுவாகவும் எதிரொலிக்கிறது."
அம்மன்கிளி மேலும் தொடருகிறார்:

பாரதியார் வாழ்ந்த காலம் ஆங்கிலேயராட்சிக் காலம். அதாவது இந்திய தேசம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த காலம்.  ஆங்கிலக்கல்விக்கு முக்கியம் கொடுக்கப்பட்டிருந்த காலம். பாரதியார் இளமையிலே தந்தையின் நிர்ப்பந்தத்தின் பேரில்  ஆங்கிலக் கல்வியைக் கற்றவர். இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்வதை அடியோடு வெறுத்தவர். தன்னாட்டுச் செல்வங்களை வெள்ளையர் கொண்டு செல்வதைப் பார்த்து உள்ளம் கொதித்தவர். அன்றைய இந்திய விடுதலைப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். கப்பலோட்டிய தமிழன் எனப் பேசப்பட்ட வ.உ.சி - சுப்பிரமணிய சிவா போன்றோர் அவரது நெருங்கிய நண்பர்களாவர். பாரதியின் கவிதைகள் தன்கால  சமூகத்தின் மீதுள்ள கோபம் ஆத்திரம் அன்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. எந்த நேரத்திலும் தன் நாட்டின் கீர்த்தி பற்றியே அவர் சிந்தித்தார். காளிதேவியிடம் வரம் வேண்டும் போது கூட நாட்டைப் பற்றியே சிந்தித்தார். அதற்காகத் தான் உழைக்க வேண்டும் எனக் கருதினார்.
ஆங்கில இலக்கியமும் பாரதியும்
     பாரதியார் ஆங்கிலக் கல்வியை வெறுத்தாலும் ஆங்கில இலக்கியங்களை அவர் படிக்கத் தவறவில்லை.   ஷெல்லி,  கீட்ஸ்,  பைரன் முதலிய ஆங்கிலக் கவிஞர்கள் பாரதியாரின் இளமைக்கால இலட்சியக் கவிஞர்கள். ஷெல்லிதாசன் என்று ஒரு காலத்தில் புனைபெயர்கூடப் பூண்டிருந்தார். எட்டயபுரத்திலே இருந்த காலத்தில் ஷெல்லிகழகம் ஒன்றும் கூட்டினார்.  ஷெல்லி,  பைரன் முதலிய புரட்சிக்கவிஞர்களைப் படித்து தன் இலட்சிய தர்மாவேச தாகத்தைத் தீர்க்க முயன்றார்.
என அவரின் ஆங்கில இலக்கியப் புலமை பற்றி கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். அவரது காலத்திலேதான் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும்புலவர்களும் வாழ்ந்தனர்.
அவரது பாடல்கள் தேசிய கீதங்கள்,பக்திப்பாடல்கள், ஞானப்பாடல்கள், பல்வகைப்பாடல்கள், தனிப்பாடல்கள் என வகுக்கப்படுகின்றன. அத்துடன் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, ஆகியனவும் பாஞ்சாலி சபதம் என்ற குறுங்காவியமும் அவரால் இயற்றப்பட்டன. வசன கவிதையின் முன்னோடியாகவும் அவர் விளங்கினார்.

நவீன கவிதையும் பாரதியும் 
தமிழின் கவிதை மொழியும் அதன் பொருளும் கடின நடையிலிருந்தும் விளங்கா நடையிலிருந்தும் விடுபட வேண்டும் என பாரதி எண்ணினார்.  காலத்துக்குக்காலம் ஏற்படும் அரசியல் சமூக மாற்றங்களுக்கேற்பவும் சிந்தனைகளுக்கேற்பவும் புதிய பண்பாடுகளுக்கேற்பவும் எந்தமொழியும் மாற்றமடையும். அந்த வகையில் காலந்தோறும் தமிழ் மொழியும் மாற்றமடையும், மாற்றமடைந்தது என்பதில் பாரதி நம்பிக்கை கொண்டிருந்தார்.  அதனால் அவ்வக்காலத்து வழங்கும் மொழியிலே கவிதைகள் எழுதப்படவேண்டும் எனக் கருதினார். பாரதியார் கட்டுரைகள் தொகுதியில் உள்ள புனர்ஜென்மம் என்ற கட்டுரையிலே தனது காலக் கவிதைகள் பற்றிக் குறிப்பிட்டு தமிழ்க் கவிதையடைய வேண்டிய மாற்றங்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்
கரடு முரடான கல்லும் முள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்றியது. நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள்  அக்காலத்து பாஷையைத் தழுவியவை. காலம்மாற மாற பாஷை மாறிக்கொண்டு போகிறது.  பழைய பதங்கள் மாறிப்புதிய பதங்களும் உண்டாகின்றன.  புலவர் அந்தக் காலத்து ஜனங்களுக்கு தெரியக்கூடிய உள்ளக்காட்சியினை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.
இப்போது உலக முழுவதிலும் ராஜாக்களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய் விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக்கொடுப்பது வித்வான்களுடைய கடமை.  
  அவர் சொன்னபடியே தன் கவிதைகளை இயற்றத் தொடங்கினார். அதனால் அவர் நவீன கவிதையின் முன்னோடியானார்.

" புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத்
தமிழ்மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை யென்னும்
வசையென்னாற் கழிந்ததன்றே
சுவை புதிது பொருள் புதிது வளம்புதிது
சொல் புதிது சோதி மிக்க நவ கவிதை எந்நாளும்
அழியாத மகா கவிதை" -   என தன்னால் இயற்றப்பட்ட கவிதைகளால் தமிழுக்குப் புதிய வளம் சேர்ந்ததென கூறியுள்ளார்.   இவ்வாறு பாரதியைபோன்று  ஈழத்திலும் கவிஞர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதவேண்டும் என்பதே அம்மன்கிளி முருகதாஸின் எண்ணம் என்பதையும் ஜீவநதியில் வெளியான ஆக்கம் கூறிநிற்கிறது.
( முற்றும்)
 முடியாத முடிவுரை
-------------------------------------------------------------------
பாரதி பெருங்கடல். எட்டயபுரத்தில் தோன்றி தமிழகத்தையும் இந்தியாவையும் கடந்து ஈழத்திற்கும் வந்து, சிந்தனைகளால்  உலகெங்கும் பரவி,  ஆழமும் விரிவும் கொண்ட பெருங்கடல்.
இதுவரையில் எமக்கு கிட்டிய தகவல்கள், தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் பாரதி தொடரை எழுதியிருக்கின்றோம். இதனைப்படித்து மின்னஞ்சல்கள், தொலைபேசி ஊடாக கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அன்பார்ந்த வாசகர்களுக்கும் பாரதி பக்தர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், இந்தத் தொடருக்கு களம் தந்த  அவுஸ்திரேலியா தமிழ்முரசு  ஆசிரியர் குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றோம்.
அன்புடன் முருகபூபதி - அவுஸ்திரேலியா
letchumananm@gmail.com
---------------------------------------------------------------------

No comments: