27/10/2017 ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டலோனிய மக்கள் பெரும் சந்தோஷக் களிப்பில் சுதந்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

கட்டலோனிய பாராளுமன்றில் இன்று (27) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம், ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றுள்ளது.
கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஸ்பெயின் பிரதமர் அந்நாட்டு செனட் சபையில் அனுமதி கோரியிருந்தார்.
அதற்கு இன்னும் சில மணி நேரங்களில் அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கட்டலோனிய பாராளுமன்றில் இவ்வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
கட்டலோனியாவின் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பு உள்நாட்டு நேரப்படி இன்று (27) காலை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுமார் பதினைந்து உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
எனினும், வாக்கெடுப்பில் 70 பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டு வாக்குகள் எவ்வித முடிவும் குறிக்கப்படாமல் அளிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு எதிராக பத்து வாக்குகள் மட்டுமே பதிவாகின.
இதையடுத்து, கட்டலோனியா சுதந்திரம் பெற்றதாகப் பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி