இலங்கைச் செய்திகள்


வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் : இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப்

ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம்

சுவிஸ் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் : எச்சிரிக்கும் கரனின் பிள்ளைகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழில் திரண்ட மக்கள்

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் : இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

13/10/2017 வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர்.

 
இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 நன்றி வீரகேசரி

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப்

12/10/2017 ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில்  முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவினரிடம்  நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள்  உறவுகளான  தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட  முடிவு  என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
உறவுகளின் உள்ளக்குமுறல்களை பொறுமையாக செவிமடுத்த பப்லோ டி கிரீஃப் "நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளுக்காக மேற்கொண்டு வரும் இப் போராட்டத்தை மதிகின்றேன், நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு நிச்சயமாக அரசுடன் பேசுவேன்" என தெரிவித்தார்.  
 நன்றி வீரகேசரி
 
ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம்

12/10/2017 ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் பிரகாரம் நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் பொருட்டு வருகைதந்திருந்தனர்.

இதன்படி முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு கற்கள் அமைக்க பட்டுள்ள சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள போரில் படுகொலையானவர்களின் நினைவு தூபியை பார்வையிட்டதோடு போரின் எச்சங்களாக மிஞ்சியுள்ள அடையாளங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் முறைப்பாடுகளை குறித்த குழுவினரிடம் முன்வைத்திருந்தனர்.

கடந்த மே 18 அன்று குறித்த சின்னப்பர் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நினைவு கற்கள் அமைக்கப்பட்டு நடைபெறவிருந்த நிகழ்வு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடை விதிக்கப்பட்டதோடு அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைக்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு 
பரிந்­து­ரை­களை ஏற்­க­வேண்­டிய கட்­டாயம் அர­சுக்கு கிடை­யாது


நன்றி வீரகேசரிசுவிஸ் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

08/10/2017 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே சுட்டு கொல்லப்பட்டிருந்தார். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்படடுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியாகியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என  தெரிவிக்கின்றனர்.
தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நன்றி வீரகேசரி

சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் : எச்சிரிக்கும் கரனின் பிள்ளைகள்

10/10/2017 கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய அரசியல் பிரிவு அதிகாரி சுஷாந்தினி கோபலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவுகளுடன் கலந்துரையாடியதோடு தனது ஆறுதலையும் தெரிவித்தார்.
அவர்களிடம் இது தொடர்பாக மேற்கொண்டு ஆறுதல் கூறிய சுஷாந்தினி,
“சுவிஸ்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தொடர்பில் இது வரையில் இலங்கை சுவிஸ் தூதரகத்திற்கு மேலதிக விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை, குறித்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கின்றோம். இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடைபெறும்.
சுட்டுக் கொல்வது என்பது தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பணிப்பின் பேரிலேயே நாம் இன்று சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்ப நிலைமைகளை நேரில் கண்டு ஆராய்வதற்காகவே வந்தோம். தந்தையை, சகோதரனை, கணவனை இழந்து தவிக்கும் உங்களின் வலிகளை புரிந்துகொள்கிறோம். உங்கள் நிலைமை தொடர்பில் சுவிஸ் அரசிற்கு அறிவிப்போம்” என உயிரிழந்தவர்களின் உறவுகளிடம் கூறினார்.

தூதரக அதிகாரியினை பார்த்து உயிரிழந்தவரின் உறவுகள் கதறி அழுது தமது வேதனையை வெளிப்படுத்தியதோடு சுட்டுக்கொல்லப்பட்ட தமது தந்தைக்கு உரிய பதிலை வழங்குமாறும் தமது தந்தையை சுவிஸ் பொலிஸார் சுட்டுக்கொன்றது ஏன் எனவும் சுட்டுக்கொல்லும் அளவிற்கு தமது தந்தை தவறு செய்திருக்க மாட்டார் எனவும் கொலை செய்யப்பட்டவரின் பிள்ளைகள் கதறி அழுதனர்.
மேலும் தமது தந்தை தொடர்பில் சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் எனவும் உயிரிழந்த தமது தந்தை தொடர்பாக நடக்கும் விசாரணைகளை தம் குடும்பத்தின் சார்பில் தாம் சுவிஸ் சென்று ஆராய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

நன்றி வீரகேசரிஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழில் திரண்ட மக்கள்

09/10/2017 அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று  யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னாள் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்  பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இப் போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக யாழ் நகரைச் சுற்றி பேரணியாகச் சென்று மீளவும் பஸ் நிலையம் வந்து போராட்டம் நிறைவடைந்தது.  நன்றி வீரகேசரி


No comments: