.
சினிமாவில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சியும், காலமும் வேண்டும் என்பதில் கறாராக இருப்பவர் நடிகர் நாசர். தனது முறையான பயிற்சியின் அடிப்படையில் வளர்த்துக்கொண்ட நடிப்பினால் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் தென்னிந்திய மொழிகளில் தவிர்க்கவியலாத நடிகராக இயங்குகிறார். சினிமா கல்வி, சுயாதீன திரைப்படம், ஆவணக்காப்பகம் என பலதளங்களில் நாசருக்கு உள்ள பார்வையை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
சினிமா ரசனை வகுப்புகளின் இன்றைய தேவை என்ன? யாருக்காக நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்
?
முதலில் இது படம் எடுப்பவர்களுக்கு. இரண்டாவது, தன் படைப்பை நுகர்பவர்களுக்கு. ஆனால், இங்கு சினிமாவை உருவாக்குபவர்களுக்கு சினிமா ரசனையை யார்கற்றுக்கொடுப்பது? என்ற கேள்வியும் இருக்கிறது.அயல்நாடுகளில் சினிமா ரசனை வகுப்புகளை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அங்கு படம் பார்ப்பவர்களுக்கு சினிமா பற்றி போதிய புரிதல்இருக்கிறது. அங்கு வாழ்கிற படைப்பாளிகளுக்கு சினிமா ரசனை வகுப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமக்கு பாலியல் கல்வி அவசியமா? இல்லையா? என்பதையே குழப்பத்தோடு அணுகுகிறோம். அதேதான் சினிமா ரசனைக்கும் நடக்கிறது.ஒரு நவீன, மக்களிடம் பெரிய தாக்கத்தைஉண்டாக்கக்கூடிய, வலிமை பெற்றிருக்குமாயின் அக்கலையைப் பற்றிய ரசனை வகுப்புகள் இந்நேரம் கல்லூரிகளிலாவது பாடமாக இருந்திருக்க வேண்டும். அது இல்லை. இந்த மாதிரியான கேள்வியிலேயே வெகுகாலமாக நிற்கிறோம்.
அரசாங்க திரைப்படக் கல்லூரியில் படித்த அனுபவம், இப்போது அது எப்படி செயல்படுகிறது?
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தியிருக்கிற சினிமா தனக்கென ஒரு கல்வி முறையை வகுத்துக்கொள்ளாதது மாபெரும்சோகம். எல்லா தொழிலுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட கல்விமுறை இருக்கிறது. நூறுவருடங்கள் கழிந்தும் தமிழ்சினிமா தனக்கென ஒரு கல்வித்திட்டத்தை வரையறுத்துக் கொள்ளாததிலிருந்து, மக்கள்அதனை ஒரு கல்வியாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றுதான் தெரிகிறது.எனக்கு சினிமாவும் ஒரு வேலையே. இந்த சினிமாவிற்கு நான் போனால் என்னுடைய பொருளாதார பிரச்சனைகள் தீரும் என்று நினைத்துதான் வந்தேன்.
அதற்குப் பின்பாக நான் திரைப்படக் கல்லூரியில் படிக்கின்ற பொழுது சினிமாவை மறைமுகமாக கற்றுக்கொண்டேன். சினிமாவைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொண்டேன். அதனைப் புரிந்து கொண்டு லயித்தேன் என்பெதல்லாம் வேறு. ஆனால், நான் சினிமாத்துறையை தேர்ந்தெடுத்தது ஒரு நிர்பந்தத்தின் காரணமாகவே.ஒரு வேளை நான் சமையல்காரனாக போயிருந்தால், உலகத்திலேயே மிகச்சிறந்த சமையல்காரனாக மாறுவது எப்படி என்றுதான் யோசித்திருப்பேன். என்னுடைய அடிப்படை குணாதிசயம். இதற்கு தேர்ந்தெடுத்த ஒரு தொழிலை ஏனைய எல்லோரையும் விட சிறப்பாக செய்வது என்று பொருள். என் அப்பா ஒரு வேளை என்னை இட்லிக்கடை வைக்கச் சொல்லியிருந்தால், இருப்பதிலேயே சிறந்த இட்லிக்கடையை நான் நடத்தியிருப்பேன்.நடிப்பை மெல்ல மெல்ல கற்றுக் கொண்டதிலிருந்து, இந்நடிப்பிற்கு ஒரு பயிற்சி அவசியம் என்றே நம்புகிறேன். பயிற்சியில் சில கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்றும், மெத்தட் ஆக்டிங் என்றும் சொல்கிறார்கள். நடிப்பைப்பற்றி அறிஞர் எழுதியிருக்கிறாரே என்றுதோன்றுகிறது. பின்னர் ஏன் நம் ஊரில் இதுபோல எழுதவில்லை என்று தேடிப்பார்த்தால், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் நாடகத்தைப்பற்றியும் நடிப்பைப்பற்றியும் எழுதியிருப்பது தெரிகிறது. ஆனால், ஸ்டானிஸ் லாவ்ஸ்கி எழுதிய அளவிற்கு தீவிரம் கிடையாது. ஆக, சினிமாவில் இருப்பதற்கு, ஆழமான கற்றல் அவசியம் என்பதை தீவிரமாக நம்புகின்றேன். இது தான் என்னை ஒரு நடிகனாகக் கட்டமைத்தது.ஆனால், இது எதுவுமே எனக்குக் கல்லூரியில் கிடைக்கவேயில்லை. இருவேறு திரைப்படக் கல்லூரியில் படித்தேன். முதன் முதலில் சினிமாக்காரர்களே நடத்திய சௌத்இண்டியன் பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ், என்றஅமைப்பு அவர்களுக்கான ஒரு நடிப்புப்பள்ளியை அமைத்துக் கொண்டது.
இதிலிருந்துதான் சிரஞ்சீவி, ரஜினிகாந்த் போன்றோர் நடிக்க வந்தனர். நானும் வந்தேன். அங்கு படித்தபலபேர் நடிகர்களாகியிருக்கிறார்கள்.அந் தக் கல்லூரியின் சிறப்பம்சம், சினிமாவைக் கையாள்பவர்களே நடிப்புக் கல்லூரியை நடத்துவதால், அவர்களுக்கு என்னவகையான நடிகர்கள் தேவைப்படுகிறார்களோ, அந்த வகையான நடிகர்களை உற்பத்தி செய்கிறமையமாக இருந்தது. அதனால்தான் அங்குபடித்த எல்லோருமே ஏதாவது ஒரு படத்திலாவது நடித்திருப்பார்கள். அவர்கள் ஒரு நடிகரை தேர்ந்தெடுப்பதிலேயே நம் படத்திற்கு இவன் சிறப்பாக வருவான், நன்றாக நடிக்கிறான் என்று தான் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆகையால், அவர்கள் என்னமாதிரியான சினிமாவை நம்புகிறார்களோ அதற்கேற்ற ஒரு சினிமா நடிகரை தயார்செய்தார்கள். அவர்களுக்கும், அவர்கள் எடுக்கின்ற சினிமாவிற்கும் தேவையான விஷயங்களை ஒரு எளிமையான கோட்பாட்டில் வைத்தார்கள்.அந்தப் பள்ளியில் படித்தும் என் தாழ்வு மனப்பான்மை குறையவில்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக பல வேலைகளைச் செய்து வந்தேன். பிறகு, மூன்று வருடங்கள் கழித்துஅடையாற்றில் உள்ள அரசு திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்த முதல்நாளே இங்குவந்தது தவறு என்ற எண்ணமேற்பட்டது. எல்லாஅரசுக்கல்லூரிகளில் இருக்கின்ற கட்டமைப்பும், வகுப்பும் தான் அங்கும் இருந்தது. எங்களுக்குவகுப்பெடுக்க மிகச்சிறந்த ஆசிரியர்கள் கிடையாது.
இருந்தாலும் திரு.ராஜிவ் மேனன்,யூகி சேது, சிவா, பகுதி நேர விரிவுரையாளரான வெங்கடேஷ் சக்கரவர்த்தி, பாண்டியன்போன்றோர்களெல்லாம் எப்போதுமே சினிமாவை விவாதித்துக் கொண்டும், ஆங்கிலப்படங்களைப் பற்றி பேசிக்கொண்டும்,விமர்சித்துக் கொண்டும் இருந்தனர்.அவர்களுடனேயே சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் மறைமுகமாக எனக்கு சினிமா போதிக்கப்பட்டது. அந்தக் காலத்தில்தான் சினிமா இலக்கியம் என எல்லாமே அறிமுகமானது. அந்த மாணவர்களோடு பழகியதுதான் எனக்குசினிமா பற்றிய விழிப்புணர்வினை அதிகமாக்கியதே தவிர, கல்லூரியில் படித்ததால் அல்ல.நடிப்பு பற்றி நான் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்தேன். ஆனால், இங்கு அடையாறு திரைப்படக்கல்லூரியில் எடுக்கின்ற நடிப்பு வகுப்புகளைக் கவனிக்கின்ற போது முந்தைய வகுப்பில் சொல்லப்பட்ட கருத்துக்களோடு கூட பொருத்திப்பார்க்க மாறானதாக இருந்தது. இன்றைக்கும் இருப்பது போல இணைய வசதிகள் எல்லாம் அப்போது இல்ல.
உட்கார்ந்த இடத்திலேயே மடியில் உலகம் வந்து உட்காராது. நான் மீனாட்சி சுந்தரம் போன்ற நண்பர்களோடு, சினிமாவைப் பற்றி கற்றுக்கொள்ள தேடித்தேடி சென்றேன். அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் கவுன்சில், மேக்ஸ்முல்லர் பவன் போன்ற இடங்களில் நடக்கிற ஏதாவது ஒரு நிகழ்விற்கு சென்று கொண்டேயிருந்தேன். இல்லையேல் புத்தகம் படித்துக்கொண்டிருப்போம். எங்களுக்கு நாங்களே பாடங்கள் நடத்திக்கொண்டோம். இன்று அந்த அரசு திரைப்படக் கல்லூரி மிகமிகமோசமான நிலையில் இருக்கிறது. சமீபத்தில் கூட அந்தத் திரப்படக் கல்லூரிக்கு போய்வந்தேன்.அங்கு ஏறக்குறைய 60 விழுக்காடு பணியிடங்கள் காலியாகவே உள்ளன. சரியான ஆசிரியர்கள் கிடையாது. மாணவர்கள் என்ன படிக்கிறார்கள்? யார் இதை வழிநடத்திச் செல்வார்கள்? என்று தெரியவில்லை.ஆக, இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் வருடத்திற்கு 120 படங்கள் எடுக்கிறார்கள்.
மக்களுக்கு சினிமாவின் தேவைகள் இருக்கிறது.இருப்பினும், இட வசதி, நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏன் இந்த அரசு திரைப்படக்கல்லூரி மோசமான நிலையில் உள்ளது. அரசு உத்யோகங்களை நிரப்ப வழக்கமாக இருக்கும்சட்டங்களை மாற்றியமைத்து கற்றுக்கொடுக்கும் திறன்வாய்ந்த படைப்பாளிகளை உள்ளேகொண்டுவர வேண்டும். நாடகங்கள் நடத்தப்படவேண்டும், கவிதைகள் வாசிக்கப்பட வேண்டும்.இசை காற்றை நிரப்ப வேண்டும், இது ஒரு கலா மையமாக மாற வேண்டும். ஒரு இளைஞன் ஒரு கருவியை எப்படி இயக்க வேண்டும் என்பதைவிட, அவன் மனோநிலையை கலாபூர்வமாக உயர்த்திச்செல்லும் சூழல்உருவாக்கப்பட வேண்டும். அங்கிருக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் எளிய குடும்பப்பின்னணி யிலிருந்து வந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களைத் தொழில் அடிப்படையில் தன்னம்பிக்கையுள்ள இளைஞர்களாக உருமாற்றுவதுதான் அக்கல்லூரியின் கடைமையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment