வியப்பான ஊகங்களைத்தரும் சொல்லவேண்டிய கதைகள் நூல் நயப்புரை சாந்தி சிவகுமார்


-->
முருகபூபதி ஐயா அவர்கள் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகமானார்.

சொல்ல வேண்டிய கதைகள்”, நான் படிக்கும் அவரின் முதல் புத்தகம். எளிமையான நடையில் அனைவருக்கும் விளங்கும் விதமாக, பொதுவான நிகழ்வுகளை பற்றி எழுதியுள்ளார்.

மனைவி இருக்கிறாவா?” என்ற தலைப்பில் அவர் பேசியுள்ள விஷயத்தை எளிதில் என்னால் தொடர்புபடுத்திகொள்ள முடிந்தது. சென்னையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு வருடம் படித்தபொழுது ஒரு முறை கூட நான் அங்கிருந்த கழிப்பறையை பயன்படுத்தியது கிடையாது. பயன்படுத்தும் சூழ்நிலையில் அவை இன்னமும் இல்லை என்பதே உண்மை. இந்த சூழலை எனக்கு நினைவூட்டும் வகையில்,  ஐயா மெல்பனில்   நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இலக்கியவாதி தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் ஒரு கட்டுரையையும் மேற்கோள் காட்டியுள்ளார்.


அதைப் படித்தபொழுது எனக்கு பாரதி பாஸ்கர் அவர்களின் மேடைப் பேச்சு ஒன்று நினைவுக்கு வந்தது. ஓரு ஆண் வெளியூருக்கு கிளம்பும்பொழுது எப்படி கிளம்புகிறார், ஒரு பெண் எப்படி கிளம்புகிறாள் என்பதை  அவர் விளக்குகிறார். ஒரு ஆண் கிளம்பும்பொழுது பேருந்து நிலையத்தில், வார அல்லது மாதாந்திர பத்திரிகையும் ஒரு தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு கிளம்புகிறார். ஆனால் அதே சூழலில் ஒரு பெண்ணிற்கு, பயணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்து தண்ணீர் குடிக்காமல் இருக்கவேண்டும் என்ற யோசனைதான் முதலில் வரும் என்று கூறுகிறார். நான்கிலிருந்து ஆறு மணி நேரப் பயணத்தில் பொது கழிப்பறையை பெண்கள் பயன் படுத்தமுடியாத நிலையில்தான் இன்னமும் பெண் தெய்வங்களை போற்றும், வல்லரசாகப் போகும் இந்தியாவின் நிலை உள்ளது.


இதே போன்று, இங்கு நடந்த ஒரு சம்பவத்தை முருகபூபதி அவர்கள் இந்த தலைப்பில் குறிப்பிட்டு எழுதியுள்ளது எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

திசைகள்என்னும் பத்தியில் குழந்தை காப்பகங்களையும், முதியோர் இல்லங்களையும் பற்றி விசனத்துடன் குறிப்பிடுகிறார்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர், ஒன்று அல்லது அதிக பட்சமாக இரண்டு குழந்தைகள் என்ற சூழ்நிலையில் குழந்தைகளுக்கு தன் ஒத்த வயதுடைய பிள்ளைகளுடன் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதனால் குழந்தை காப்பகங்களுக்கு வாரத்தில் சில நாட்கள் செல்வது அவர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். அதை எதிர்மறையாக பார்க்க வேண்டியதில்லை என்பதே என் அனுபவத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டது.

முதியோர் இல்லங்களும் அவ்வாறே, காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில் பிள்ளைகள் மிகுந்த குற்ற உணர்வோடுதான் இதை அணுகுகின்றனர். இதற்கு வலியின்றி, வேதனையின்றி வேறு தீர்வுகள் உள்ளதா என்பது கேள்விக்குறியே?

எங்கள் நாட்டில் தேர்தல் என்னும் பத்தியில் ஆஸ்திரேலியாவில் எப்படி தேர்தல் நடக்கிறது என்பதை தன் அனுபவத்தையும் சேர்த்து கூறியுள்ளார். அதை படித்தபொழுது நான் இந்தியாவில் முதன் முதலில் ஓட்டுப் போட்டதும், பின் இங்கு வந்து பிரமிப்போடும், ஒன்றும் விளங்காமலும் வாக்களித்ததும் நினைவிற்கு வந்தது.
இப்படி ஒரு தேர்தல் நம் தாய்நாட்டில் நடக்குமா?  என்கிற அவரின் ஏக்கத்தையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இதில் வரும்நாம் இன்னும் திருந்தவில்லையா?” என்னும் கடைசி வரி நம் முன் இன்னும் பல கேள்விகளை முன்வைக்கிறது.

காவியமாகும் கல்லறைகள்பகுதியில் பல ஆளுமைகளின் கல்லறைகள் பராமரிக்கப்படாமல் இருப்பதைப் பற்றிய தன் வேதனையை வெளிப்படுதியுள்ளார்.

தனிமையிலே இனிமைகாண முடியுமா? அது அவரவரின் இயல்பை பொறுத்தது என்பதே என் தனிப்பட்ட கருத்து. முதுமையில் தனிமை கொடிது என்பதையும் பல எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் எவ்வாறு தனிமையில் இருந்தனர் என்றும், பலரின் சுயசரிதையில் அவர்களின் தனிமை பேசப்பட்டிருப்பதையும் முருகபூபதி ஐயா இதில் விரிவாக எழுதியுள்ளார்.

அவர் தம் கதைகளுக்கு வைக்கும் தலைப்பை வைத்து, இதை பற்றித்தான் பேசப்போகிறார் என நாம் யூகித்து உள்ளே சென்றால் அவர் நமக்கு வியப்பையே தருகிறார்.

(மெல்பனில் நடந்த சொல்ல வேண்டிய கதைகள் நூல் வெளியீட்டில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)

---0---


No comments: