.
இப்புவியில் உள்ள உயிர் வடிவங்களில் மிக அதிக அளவில் உள்ளவை தாவரங்கள். இவற்றுக்கு அடுத்த இடம் பூச்சிகளுக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், பூச்சிகளில் பெரும்பான்மை வண்டினத்தைச் சேர்ந்தவை. எந்தக் காட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கு எண்ணிக்கையளவில் வண்டுகளே ஆட்சி செய்கின்றன.
உயிரியலாளர்கள் உயிர் வடிவங்களை ஏழு அடுக்குகளில் தொகுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அடுக்கு வரிசை உயிர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிய உதவுகிறது- விலங்கினம் அல்லது தாவர இனம் (animal/ plant kingdom), பெருந்தொகுதி (phylum), வகுப்பு (class), வரிசை (order), குடும்பம் (family), பேரினம் (genus), வகையினம் (species).
சாண வண்டு, அல்லது, சாணம் உருட்டு வண்டு (Dung Beetles or Dung Roller Beetles), கொலியாப்டெரா (coleoptera) என்ற வரிசைமுறைக்கு உரியதாய் உயிரியலாளர்களால் பகுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல் கொலியோஸ் (Koleos), டெரா (Ptera) என்ற இரு லத்தின் மொழிச் சொற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. கொலியோஸ் என்றால் உறுதியான ஓடு, டெரா என்றால் சிறகுகள். கொலியாப்டெரா என்ற வரிசைமுறையில் ஸ்காராபீயடெய் (Scarabaediae) என்ற மாபெரும் குடும்பத்துக்கு உரியவை சாண வண்டுகள். உலகில் ஆர்க்டிக் பிரதேசம் தவிர்த்து உலகெங்கும் இக்குடும்பத்தில் 7000 வகையினங்கள் உள்ளன.
அனைத்து பூச்சிகளைப் போலவும் சாணம் உருட்டு வண்டின் உடலில் மூன்று பிரிவுகள் உண்டு – தலை, மார்புக்கூடு, வயிறு. தலைப்பகுதியில் கண்கள் மற்றும் உணர்கொம்புகள் உள்ளன. நடுவில் உள்ள மார்புக்கூடு சவ்வுத்தன்மை கொண்ட இரு இறகுகளும் ஆறு கால்களும் கொண்டது. மூன்றாம் பகுதி வயிற்றால் மட்டும் ஆனது. மூட்டைப்பூச்சி, நாவாய்ப்பூச்சி போன்ற உறிஞ்சி உண்ணும் பூச்சிகளைப் போல் அல்லாது வண்டுகள் உறுதியானவை, கனமானவை, தடுமாறுபவை, மெல்லப் பறப்பவை. உறுதியான ஓடு போன்ற ஒன்று அவற்றின் மென்மையான உடல்களையும் நுண்மையான, சவ்வுத்தன்மை கொண்ட இறகுகளையும் மூடி மறைத்துப் பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட உடல் அமைப்பின் காரணமாய் இவை பறப்பதற்கு முன், தம் கெட்டித்த ஓடுகளை விரித்து தூக்கி நிறுத்திக் கொண்ட பின்னரே மெல்லிய இறகுகளை அசைத்துப் பறக்க முடியும். பாதுகாப்புக்கான சுமைகூலியாய் தம் வேகத்தைக் கொடுப்பதால், அவற்றின் கனமான ஓடுகள் காற்றில் மோதும்போது எழும் முரல் ஒலியுடன் வண்டுகள் மெல்லப் பறந்து செல்ல வேண்டியதாகிறது.
ஸ்காராபீயடெய் குடும்பத்தில் உள்ள வண்டுகளில் பெரும்பான்மை சாணம் உருட்டு வண்டினங்கள். அவற்றின் நெற்றியை அலங்கரிக்கும் மண்வெட்டி போன்ற அமைப்பு சாணம் அள்ள மட்டுமல்ல, நிலத்தை அகழ்ந்து சுரங்கப் பாதை அமைக்கவும் பயன்படுகிறது. கிடையாட்டுக்கும் மரங்கொத்திக்கும் அடுத்தபடி சாணம் உருட்டு வண்டு மட்டுமே கடும் வேலை செய்வதற்கான, உறுதியான, அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வலிமையான மண்டை கொண்டிருக்க வேண்டும். ஐஸ் க்ரீமை அள்ளுவது போல் சாணத்தை அள்ளி ஒரு குப்பை வண்டியில் கொண்டு செல்வது போன்ற உடல் அமைப்பு இவற்றுக்கு இல்லை. இவ்வண்டுகள் ஆற்றலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. சுமையைத் தூக்கிச் செல்ல பல உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கு பதில் இவை மண் அள்ளும் இயந்திரம் ஒன்று பின்புறமாய் நகர்வது போல் சாணத்தை ஒரு பெரிய பந்தாய்த் திரட்டி உருட்டிச் செல்கின்றன.
இவை தாவரங்களின் அனைத்து பகுதிகளையும் உண்ணக்கூடியவை. ஆனால் ஆடுகள், யானைகள், மாடுகள் போன்ற தாவரம் உண்ணும் விலங்குகளின் சாணத்தையே மிகவும் விரும்புகின்றன. அவை சீரணம் செய்யாமல் கழியும் ஊட்டச்சத்துப் பொருட்கள் இந்த வண்டுக்களுக்கு பயன்படுகின்றன. ஒரு வேளை இவையும் உண்ணிக்கொக்குகளைப் போல் (cattle egrets) தாவரம் உண்ணும் விலங்குகளுடன் இணைந்து பரிணாம வளர்ச்சி கண்டிருக்கலாம். சாணம் இவற்றுக்குப் பிடித்தமான உணவு மட்டுமல்ல, இவை சாண உருண்டையில் முட்டையிட்டு மண்ணுக்கடியில் உருவாக்கிய சுரங்கங்களில் புதைக்கின்றன. இந்த முட்டைகள் பொரிந்ததும் பிறக்கும் நுண்புழுக்கள் சாணத்தை உண்டு வளர்ந்த பின்னரே வெளியுலகில் நுழைகின்றன.
சக்திவாய்ந்த கால்களும் தலையில் மண்வெட்டி போன்ற ஒரு அகலமான, பட்டையான அமைப்பும் உள்ளதால் தங்கள் முட்டைகள் பொதிந்த சாண உருண்டைகளைப் புதைப்பதற்குத் தக்க ஆழமான சுரங்கங்களை இவற்றால் தோண்ட முடிகிறது. சில சமயம் இவை தம்மிடம் உள்ள பெரிய சாண உருண்டைகள் புக முடியாத வகையில் குறுகிய வாசல்களை முட்டாள்தனமாய் அமைத்துவிட்டுத் தவிக்கவும் செய்கின்றன. அந்த சமயங்களில் சிறிதுகூட அலுத்துக் கொள்ளாமல், சுரங்க வாசலில் சாண உருண்டையை வைத்துவிட்டு, நுழைவாயிலை விரிவுபடுத்தும் பணியில் இரட்டிப்பு பலத்துடனும் உற்சாகத்துடனும் இறங்குகின்றன. இந்தச் சமயத்தில் எதிரிகளும் கள்வர்களும் சாண உருண்டையைக் கடத்திச் செல்ல முயற்சிக்கின்றன. ஆனால் எப்போதும் கவனமாய் இருக்கும் இந்த வண்டுகள், கள்வர்களை விரட்டிச் சென்று, சில சமயம் தம் பெண் துணைவியரின் உதவியுடன், முட்டைகள் பொதிக்கப்பட்டிருக்கும் விலைமதிப்பற்ற புதையலை மீட்டு வருகின்றன.
சாண உருண்டைகளை உருட்டிச் செல்வதிலும் சில பாதக அம்சங்கள் இருக்கின்றன. உருண்டைகள் பாதையில் உருண்டுச் செல்லச் செல்ல மேலும் பல சாண, மண் துகள்களும் அவற்றில் ஒட்டிக்கொண்டு உருண்டைகளின் எடையும் அளவும் அதிகரிக்கிறது. ஆனால் இறுதியில் வழவழப்பான ஒரு பந்து போன்ற உருவமைப்பு இந்த உருண்டைகளுக்குக் கிடைத்து விடுகிறது. தம்மைவிட 250 மடங்கு கனமான உருண்டைகளை ஒரே நாள் இரவில் இவற்றால் மண்ணுள் புதைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, தம் உடல் எடையைவிட 1141 மடங்கு அதிக எடையை இவற்றால் இழுத்துச் செல்ல முடியும் என்பதை அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது, பயணிகள் நிறைந்த ஒரு இரட்டை அடுக்கு பேருந்தை ஒற்றை மனிதனாய் இழுத்துச் செல்வதற்கு சமம்.
நடைமுறையில் இவை தம் பின்னங்கால்களால் சாண உருண்டையை குண்டும் குழியுமான, கற்களும் புற்களும் நிறைந்த நிலப்பரப்பில் உருட்டிச் செல்கின்றன. இனிமேலும் கொண்டு செல்ல முடியாத அளவு உறுதியான ஒரு தடையை எதிர்கொள்ளும்வரை இவை தொடர்ந்து பயணிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தடை எதிர்படும்போது, சாண உருண்டையின் மீதேறி மிகவும் பரபரப்பாய் தம்மைச் சுற்றிலும் உள்ள நிலப்பரப்பைப் பார்வையிட்டபின், இன்னும் எளிதான பாதையை நோக்கி சாண உருண்டையை நகர்த்திச் செல்கின்றன. திசையும் பாதையும் தெரியாத பகுதியில் சுமை நிறைந்த ஒரு ட்ரக்கைத் தள்ளிச் செல்வதற்குச் சமமானது இது. ஆனால் இதுதான் இவற்றின் வாழ்க்கை. இந்த மண்ணில் மனித இனம் தோன்றுவதற்கு முன் பல யுகங்களாய் இதையே இவை செய்து வந்திருக்கின்றன.
மானுட வரலாற்றில் சாண வண்டு அளவு போற்றப்பட்ட பூச்சி எதுவும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. 5200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய எகிப்தியர்கள் ‘கெப்ரி’ என்ற தெய்வமாக சாண வண்டுக்களை வழிபட்டனர். சாண வண்டுக்களே உதிக்கும் சூரியனை தொடுவானுக்கு அப்பாலும் அதன் பின் அந்திப்பொழுதில் புத்துயிர் பெறும் வேறு உலகுக்கும் கொண்டு செல்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் உள்ள சூழியல் மற்றும் ஆற்றல் சேமிப்பு குறித்து எகிப்தியர்கள் முழுமையாய் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இந்த வண்டுகளை வழிபட்டார்கள் என்பது மட்டுமல்ல, பொன்னணி நகைகளாய் அணிந்தனர், இறந்தபின் மம்மிக்களுடன் இவையும் புதைக்கப்பட்டன.
சாண வண்டுக்கள் சாணத்தை உண்பது மட்டுமல்ல, அவற்றைத் தமக்கும் தம் சந்ததியினருக்கும் ஏற்ற உணவாய்ச் சேமித்து வைத்துக் கொள்ள மண்ணில் புதைக்கவும் செய்கின்றன என்பதைப் பார்த்தோம். இவை இப்படிச் செய்வதால், மண்ணுக்குள் காற்று புகுகிறது, வண்டல் மண்ணில் செறிவான சத்துக்கள் சேர்கின்றன, தாவரம் உண்ணும் விலங்குகள் பயனடையும் வகையில் நல்ல அறுவடை நிகழ்ந்து அதன் பின் வண்டுகளும் பயன் பெறுகின்றன. காற்றில் கொண்டு செல்லப்பட்டு மண்ணில் விழுந்து கிடக்கும் விதைகளை சாணத்தை உருட்டிச் செல்லும் வழியில் திரட்டி வேறு இடங்களுக்கு இவை கொண்டு செல்கின்றன. இவ்வாறு விதைகள் பரவுவதால் பயிர் வளர்ச்சி செழிக்கிறது, பூமியின் மேற்பரப்பில் உள்ள மண் அரித்துச் செல்லப்படுவதும் காற்றில் புழுதியாய் கொண்டு செல்லப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. சுத்தம் செய்யப்படாமல் சீரழிந்து கொண்டிருக்கும் சாணம் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் சுகாதாரக் கேடான சூழலை உருவாக்குகிறது- குறிப்பாக ஈக்களால் பரவும் நோய்கள் தாவரம் உண்ணும் விலங்குகளுக்கு ஆபத்தானவை. இந்தச் சாணத்தை உண்டும் புதைத்தும் இவ்வண்டுக்கள் ஆபத்தான நோய்களைச் சுமக்கும் ஈக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வைக்கின்றன. சாண வண்டுகள் மனிதர்களைக் கடிப்பதில்லை. உண்மையில் இவை சார்ந்த நுண்ணுயிரிகள் அனைவருக்கும் நன்மை விளைவிப்பவை என்பது தற்போது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
சாண வண்டின் ஆயுட்காலம் சராசரியாக மூன்று ஆண்டுகள். இவற்றின் எதிரிகள் எண்ணற்றவை- அன்றில் பறவைகள், காகங்கள், நரிகள் என்று பல. ஆனால் தொகையளவில் மிகுந்திருப்பதால் இவை வென்று பிழைத்து விடுகின்றன. அண்மையில் ஆப்பிரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்று சாண உருட்டு வண்டுகள் மட்டுமே பால்வழிப் பாதையைக் கொண்டு தாம் இருக்குமிடத்தையும் தம் செல்திசையையும் தீர்மானித்துக் கொள்கின்றன என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது.
புகைப்படக் கலைஞனாகவும் இயற்கை ஆர்வலனாகவும் நான் என்னிடமிருந்த புராதன புகைப்படக் கருவிகளைக் கொண்டு எழுபதுகளில் சில சாணம் உருட்டு வண்டுக்களைப் படம் பிடித்திருக்கிறேன். என்னுடன் கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பன் ஒருவனை உதவியாளனாக அழைத்துக் கொண்டு வானம் இருண்டிருந்த ஒரு பருவமழைக்கால அதிகாலைப் பொழுதில் நான் சில பூச்சிகளைப் புகைப்படம் எடுக்கச் சென்றது எனக்கு இன்னும் துல்லியமாக நினைவில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, அப்போதுதான் விழுந்திருந்த சாணத்தில் தனக்கு வேண்டிய அளவைத் திரட்டி உருட்டிச் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பொன்னீல வண்ண அழகிய சாண வண்டு ஒன்றை நான் பார்த்தேன். அவசர அவசரமாக என் காமிரா செட்டிங்குகளை அமைத்துக் கொண்டு வண்டைக் கண்ணோடு கண் நோக்கும் வகையில் தரையில் விழுந்தேன். ஆனால் வண்டு நேராகச் செல்லாமல் வளைந்து வளைந்து வேகமாகச் சாணத்தை உருட்டிச் சென்றதால் பிளாஷை ஒழுங்காகப் பிடித்துக் கொள்ளும்படி என் நண்பனிடம் உரக்கச் சொல்லிவிட்டு கல்லும் முள்ளும் நிறைந்த கட்டாந்தரையில் நானும் அதனுடன் நீந்தினேன்- ஆனால் எந்த பிளாஷ் ஒளியும் விழவில்லை, என் நண்பன் தொலைதூரத்தில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததுதான் ஓரக்கண்ணில் தெரிந்தது.
இந்தப் பிரச்சனைகள், காமிராவின் தொழில்நுட்பக் குறைகள், அந்த இடத்தின் அசௌகரியங்கள் என்று எதுவும் என்னை பாதிக்காமல் வெற்றிகரமாய்ப் புகைப்படம் எடுத்தேன். என் உடலின் பல இடங்களில் சிராய்ப்புக் காயங்களில் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது- ஆனால் சாணத்துடன் சேர்த்து வண்டைப் புகைப்படம் எடுத்த மகிழ்ச்சியில் நான் சிரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் மிகவும் நிதானமான 64 ISO கோடாக்ரோம் டிரான்ஸ்பரன்சி பிலிமில் படம் எடுத்திருந்ததால் அதை பிராசஸ் செய்ய நியூ யார்க் அனுப்ப வேண்டியிருந்தது. அது நல்லபடியாக இந்திய போஸ்டல் கஸ்டம்ஸ்சின் சேவையைக் கடந்து சென்று வர வேண்டுமே என்று நான் வேண்டாத தெய்வமில்லை. ஒரு வழியாக மூன்று மாதங்களுக்குப்பின் சாணம் மீதிருந்த வண்டின் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் திரும்பி வந்தது – அது சர்வதேச விருதுகள் பலவற்றைப் பின்னர் எனக்குப் பெற்றுத் தந்தது.
இந்நாட்களில் திறந்தவெளிகளில் மாடுகள் மேய்வதில்லை, வண்டுகள் மொய்க்கும்வரை சாணம் விட்டு வைக்கப்படுவதில்லை- அண்டை மாநிலங்களில் உள்ள உயர் தர டீ மற்றும் காபி எஸ்டேட்களுக்கு சாணம் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு விடுகின்றது. இதில் இன்னொரு வருத்தமான விஷயம், நீலகிரிக் காடுகளில் உள்ள மசினகுடி பகுதியில் ஏராளமான மாடுகள் மந்தைகளாய் மேய்கின்றன, ஆனால் அவற்றின் சாணம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுவதால் காடு முக்கியமான ஒரு ஊட்டச் சத்தை இழக்கிறது. இது தவிர, சாண வண்டுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு, விஷத்தன்மை கொண்ட பூச்சி மருந்துகள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் காரணமாய் இருக்கலாம்.
Nantri http://solvanam.com/?p=50459
No comments:
Post a Comment