மகாகவி பாரதியை நாம் இன்றும் கொண்டாடுவதற்கு பல காரணங்கள்
இருக்கின்றன. பல விடயங்களில் அவர் முன்னோடியாக விளங்கியதும் ஒரு காரணம்தான்.
குழந்தைகளை அதட்டி வளர்க்கும், கண்டித்து ஒதுக்கும் சமூகத்திடம்
எதுவும் சொல்லாமல், குழந்தைகளைப்பார்த்து " ஓடிவிளையாடு பாப்பா" பாதகம் செய்வாரைக்கண்டால்
மோதி மிதித்துவிடு பாப்பா" என்றும் அறிவுரை பகன்றவர்.
"முகத்தில் காறி உமிழ்ந்துவிடு..." என்று அக்காலத்தில்
எவரால் அப்படி துணிந்து சொல்ல முடியும். தமிழ் சமூகத்திற்காக மாத்திரமல்லாது முழு உலகிற்கும்
தன்னம்பிக்கையை அவர் புகட்டினார்.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேணும்
தெளிந்த நல்லறிவு வேணும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியை போலே,
நண்ணிய நின்முன் இங்கு
இந்தவரிகள் பாரதியின் வேதம். இந்த வரிகள் அவர் பிறந்த தமிழ் சமூகத்திற்கானது
மட்டுமல்ல என்பது எளிதாகப்புரிகிறது.
அத்தகைய ஒரு தீர்க்கதரிசியின் இயல்புகளை, பண்புகளை, குணநலன்களைப்பற்றி
இலங்கையில் 1929 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதியிருக்கும் பண்டிதை பத்மாசனி
அம்மையார் பற்றிய ஒரு தகவல் எமக்கு கிடைத்துள்ளது.
பண்டிதை பத்மாசனி அம்மையார், 1930 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின்
பண்டிதர் தேர்வில் சித்தியடைந்த ஐவருள் ஒருவர். இவர் இலங்கை வடமராட்சியில்
புலோலியில் பிறந்தவர்.
புலோலி பசுபதீஸ்வரர்
பதிற்றுப்பத்தாந்தி இயற்றியவர். அதனால்
மரபுவழிக்கவிதை எழுதிய ஈழத்தின் முன்னோடி கவிஞராகவும் இனம் காணப்படுகிறார்.
தோமஸ்கிரேயின் கவிதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்தவர். அதனால் ஈழத்தின் முதல்
பெண்மொழிபெயர்ப்புக்கவிஞர் என்ற பெயரும் பெற்றவர் என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ்
இவர் பற்றி விதந்து குறிப்பிட்டுள்ளார்.
பல புலவர்களின் குரல் ஒலித்த ஊர் என்பதால் புலோலி என்ற காரணப்பெயரும்
தோன்றியிருக்கும். இங்குதான் வியாபாரிமூலை
என்னும் இடத்தில் பாரதியாரின் ஞானகுரு " யாழ்ப்பாணத்துச்சாமி" சி.வே.
அருளம்பலமும் தோன்றியிருக்கிறார். தமிழறிஞர் சதாவதானி நா.
கதிரவேற்பிள்ளை, அறிஞர் கந்தமுருகேசனார், குமாரசாமிப்புலவர், தென்புலோலியூர் மு.
கணபதிப்பிள்ளை, உட்பட பல இலக்கியப்படைப்பாளிகளும் இந்த ஊரில் பிறந்துள்ளனர்.
தமிழுக்குப்பெருமை
சேர்த்த புலோலியில் பிறந்திருக்கும் பண்டிதை பத்மாசனி அம்மையார் பன்முக ஆளுமை
கொண்டவர்.
இவர்
எழுதியிருக்கும் பாரதி கவிநயம் என்ற கட்டுரையில், பாரதியே தமிழின் முதல் அரசியல்
கவிஞர் என்று விதந்துரைக்கின்றார்.
"
இக்கவிஞர் பெருமான், தமது தாய்நாட்டின் நிலைமையையுற்று நோக்கினார். நோக்கும்போது,
தேசமக்கள் அந்நியருக்கடிமையாயிருத்தலையும் தேசத்தின் பண்டைய பெருமையையும்
தற்காலமிருக்கும் கேவல நிலைமையையும் பெருமையடைதற்கேற்ற சாதனங்கள் நாட்டில்
மலிந்திருத்தலையும் இன்னபிறவற்றையும் நன்குணர்ந்தார். இவ்வுணர்ச்சியானது
பாரதியாருள்ளத்திற் சுதந்திர தாகத்தை எழுப்பியது. அச்சுதந்திர தாகமானது பாரதியார்
நாவினின்றும் கவியெனும் அமிர்தமாகச்சொரிய ஆரம்பித்தது." எனக்குறிப்பிடும்
பத்மாசனி அம்மையார், பாரதியின் இயற்கைமீதான தீராத மோகம், இந்தியத்தேசியத்திற்கு
சமமாக தமிழ்த்தேசியத்தின் மீதுகொண்டிருந்த பற்றுதல், எழுதிய கவிதைகளில் பொருட்
சிறப்பு பற்றியும் பதிவுசெய்கிறார்.
பாரதியார்
தமது கவிதைகளுக்கு சந்தம், மெட்டு, இசை என்பவற்றையும் வழங்கியிருக்கும் ஆற்றலையும்
பத்மாசனி அம்மையார் சுட்டிக்காண்பிக்கின்றார்.
இவர்
குறித்து பரவலாக அறியப்படவில்லை என்பது கவலைக்குரியது. இலங்கையில், பாரதியை
அறிமுகப்படுத்திய முன்னோடியாக சுவாமி விபுலானந்தரையே (1892- 1947) சொல்வார்கள். எனினும் இவர் வாழ்ந்த காலத்தில்
புலோலியில் பண்டிதை பத்மாசனி அம்மையார் 1929 இல் பாரதியின் பன்முக ஆற்றல் குறித்து
விரிவாக எழுதியிருக்கிறார் என்ற செய்தி பரவலாக அறியப்படவில்லை.
இந்த
அரிய தகவலை, கொழும்பில் வீரகேசரி நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட வருடாந்த
சிறப்பு நூலில் ( KESARI YEAR BOOK) எழுத்தாளர்
அந்தனிஜீவா இணைத்துள்ளார்.
புலோலியில்
பிறந்திருக்கும் பத்மாசனி அம்மையார் எவ்வாறு, அக்கால (1929) கட்டத்தில் பாரதி
பற்றி ஆய்வுசெய்து எழுதியிருந்தாரோ, அவ்வாறே மற்றும் ஒரு பெண்ணியவாதி இலங்கையில்
பாரதியின் பன்முக ஆளுமையை விரிவாகப்பதிவுசெய்துள்ளார்.
அவர்தான் இலங்கையில் கிழக்கு மகாணத்தில் பிறந்திருக்கும்
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு.
மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தை நோக்கினால், அவருடைய
ஆளுமைக்கும் பெண் விடுதலைச் சிந்தனைகளுக்கும்
சுதந்திரவேட்கைக்கும் பின்புலமாக நிவேதிதா தேவியிலிருந்து பலர் தொடர்ச்சியாக அவரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம்.
பாரதியின் கவிதை வரிகள் பலவற்றுக்கு பல ஆளுமைகள்தான் ஊற்றுக்கண். அதுபோன்று
சித்திரலேகாவின் வளர்ச்சியிலும் இந்த அம்சங்களை காணமுடிகிறது.
வடபுலத்தில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுத்த அவரது
தந்தையின் கருத்தியல்களினால் சிறுவயதிலேயே
ஆகர்சிக்கப்பட்டிருக்கும் இவர், பெற்றவர்கள்
கிழக்கில் வாழத்தலைப்பட்டவேளையில், மட்டக்களப்பில்
பிறந்து வின்சன்ட் மகளிர் கல்லூரியில் பயின்றவர்.
அங்கு தனது ஆசிரியைகளிடம் கல்வியை மாத்திரம்
கற்றுக்கொள்ளாமல் பெண்கள் பற்றிய அறிவார்ந்த
சிந்தனைகளையும் பெற்றவர்.
கல்லூரிப்பருவத்திலேயே தான் கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்தவகையில் மூலதனமாக்கிய
சித்திரலேகா அவர்கள், மௌனகுரு அவர்களை
சந்தித்த பின்னர்-- மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் முதலானோரின் கருத்தியல்களிலிருந்து
பெண்ணியம், குடும்பம், சொத்துடைமை, அரசியல்,
பொருளாதாரம் , ஒடுக்குமுறை, இனநெருக்கடிகள், சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான
இன்னோரன்னவற்றையும் உள்வாங்கியிருக்கிறார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தபின்னர், இவரிடத்தில் இலக்கியம், அரசியல், பெண்ணியம் சார்ந்த
பார்வைகள் மேலும் ஆழமும் விரிவும் பெற்றிருக்கிறது.
பேராசிரியர் கைலாசபதி, குமாரி ஜயவர்தனா முதலானோரின் ஆளுகை
இவரது ஆற்றல்களை வெளிப்படுத்தியும் நெறிப்படுத்தியுமிருக்கிறது.
நெதர்லாந்தில் சமூக விஞ்ஞானத்திற்கான நிறுவனத்தில் அபிவிருத்தி
சம்பந்தமான கற்கை நெறியில் இணைந்து பெண்களும் அபிவிருத்தியும் என்ற பாட நெறியில் முதுகலை
மானி பட்டம் பெற்றிருக்கும் சித்திரலேகா, அங்கும் தனது விரிவுரையாளர்களிடமிருந்து அனைத்துலக
பெண்களின் பிரச்சினைகளையும் , பல உலக நாடுகளில் பெண்கள் தொடர்பான கோட்பாடுகளையும் தெரிந்துகொள்கிறார்.
சித்திரலேகா, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் அனுசரனையிலிருக்கும் ஹன்டர் கல்லூரியில் சுமார் ஒருவருடகாலம்
தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். இங்கு பாலஸ்தீனம், எல்சல்வடோர் முதலான
நாடுகளைச்சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் சேர்க்கையினால்
பெண்ணிலைவாதம், புகலிடத்தில் பெண்களின் வாழ்வுக்கோலங்கள் பற்றியெல்லாம் மேலும்
மேலும் புதிய கருத்தியல்களை பெற்றுக்கொண்டவர்.
இவ்வாறு தனது அறிவையும் ஆற்றலையும் தொடர்ச்சியாக விரிவுபடுத்திக்கொண்டிருக்கும்
இயல்பு அவரிடம் குடியிருப்பதனால்தான் நெருக்கடியான காலகட்டங்களிலும் தெளிவோடும் தீர்க்கதரிசனத்தோடும்
அவரால் செயல்பட முடிந்திருக்கிறது.
இவர் முன்னேடுத்த சொல்லாத
சேதிகள் கவிதைத்தொகுப்பு முயற்சி காலம்
கடந்தும் பேசப்படுகிறது.
மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில், குறிப்பாக போர்நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்துகொண்டு
ஈழத்து பெண் எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார்.
சித்திரலேகா 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்
பெண்கள் ஆய்வு வட்டத்தின் சார்பில் தொகுத்து
வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதைத்தொகுப்பு இன்றும் இலக்கியப்பரப்பில் பேசுபொருளாகவே
வாழ்கிறது.
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு எழுதியிருக்கும் " பாரதியின்
பெண் விடுதலை: இலக்கியம் - கருத்து - காலம்
என்னும் நூலை மட்டக்களப்பு விபுலம் 1996
இல் வெளியிட்டிருக்கிறது.
" தென்னாசியாவில் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலைபற்றியும்,அதில்
முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றியும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து
எழுத்தாளர்கள் சிலராவது அக்கறை காட்டியுள்ளனர். சுப்பிரமணிய பாரதியார் இத்தகையோரில்
மிக முக்கியமானவராக விளங்குகிறார். பெண்ணுடைய வாழ்க்கை, அவளது அந்தஸ்து நிலை, அவள்
பற்றிய சமூக நோக்கு ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படவேண்டுமென பாரதியார் மிகவும்
வற்புறுத்தி வந்தார்.
பாரதியின் பெண்ணுரிமைக்கருத்துக்கள், கவிதைகள் முதல் கட்டுரைகள்
, கதைகள் வரை அவரது பல்வேறு ஆக்கங்களிலும் விரவிக்கிடக்கின்றன.
பாரதியின் சமகாலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலும் நடந்தேறிய
நிகழ்ச்சிகளும் தோன்றிய இயக்கங்களும் பாரதியினுடைய இத்தகைய கருத்துக்களுக்கு உந்துதலாக
அமைந்தன. அவற்றைக்கோடிட்டுக்காட்டுவதும், தமிழ்ச்சூழலில் பாரதியை அவரது சமகாலத்தவருடன்
ஒப்பிடுவதன் மூலம் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்துவதும் இச்சிறு நூலின் நோக்கமாகும்"
என்று இந்நூலின் முன்னுரையில் சித்திரலோக குறிப்பிட்டுள்ளார்.
இவர் எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அவ்வப்போது எழுதிய
பாரதியார் தொடர்பான கட்டுரைகளை மேலும் விரிவுபடுத்தி இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
பாரதியின் பெண்விடுதலை: காலமும் கருத்தும்.
பாரதியும் பெண்விடுதலையும்.
சுப்பிரமணிய பாரதியும் பெண்விடுதலைக்கு உழைத்த சீனத்து ஜியூஜினும்.
துரையப்பாபிள்ளையும் பாரதியாரும்: சமகாலக்கருத்தோட்டங்களில்
ஒற்றுமையும் வேற்றுமையும்.
முதலான தலைப்புகளில்
பாரதியை இந்நூலில் ஆய்வுசெய்திருக்கும் பேராசிரியை சித்திரலோக மௌனகுரு அவர்கள், இலங்கையில் புதிய அரசு பதவியேற்றதும் தொடங்கப்பட்டிருக்கும் நல்லிணக்கம்
தொடர்பான செயலணியிலும் இணைந்துள்ளார்.
இலங்கையில் நீடித்து முற்றுப்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகிய
மக்களுக்காகவும், ஐ.நா. மனித உரிமைப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய இச்செயலணி தொடங்கப்பட்டது.
எனினும் இச்செயலணி ஐ. நா.வுக்கு சமர்ப்பித்த நீண்ட அறிக்கை தொடர்ந்தும்
ஏட்டுச்சுரைக்காயாக இருப்பதுதான் விதிப்பயன். அன்று பிஜித்தீவில் வாடிய தமிழ்
மக்களுக்காக கேட்டிருப்பாய் காற்றே... என்று
பாடிய பாரதி, இன்று இருந்திருப்பாரேயானால், " இலங்கையில் காணமலாக்கப்பட்ட மக்களின் உறவுகளின் ஓலங்களையும்
கேட்டிருப்பாய் காற்றே..." எனப்பாடித்தான் இருப்பார்.
(தொடரும்)
No comments:
Post a Comment