.
9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான்.
1925-ம் ஆண்டில் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இலங்கை வானொலி நிலையத்துக்கு, உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. (பிபிசி வானொலி 1922-ம் ஆண்டில் லண்டனில் முதன்முதலாக நிறுவப்பட்டது) இலங்கை வானொலி தனது வர்த்தக சேவைப் பிரிவை 30.09.1950-ல் தொடங்கிய உடனேயே, இந்திய துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமயமலையில் உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் செவிமடுத்தார்கள்.
பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, அன்றும் இன்றும், புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசை தேர்தல், பாட்டுக்கு பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் என தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை இலங்கை வானொலி உருவாக்கிக் கொண்டதுடன் அதில் பணியாற்றிய ஒலிபரப்பாளர்களான எஸ்.பி. மயில்வாகனன், கே.எஸ். ராஜா, பி.ஹெச். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருக்கு தமிழகத்தின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட நேயர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தனர்.
இன்றளவும் உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பாடல் களின் இசைத் தட்டுக்களைக் கொண்ட ஒரே வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம் மட்டுமே.
இலங்கை உள்நாட்டுப் போரினால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புணர்வுகளுக்கு இடையே கடந்த 31.05.2008 அன்று இலங்கை வானொலி தனது இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை நிறுத்திக் கொண்டது. மேலும் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் பரவலாக பண்பலை வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்ட பின்னரும் கூட மீண்டும் இலங்கை வானொலி காற்றலைகளில் தமிழகத்தில் தவழாதா என்ற ஏக்கம் பல்வேறு நேயர்களுக்கு மத்தியில் இருந்தது.
மேலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற கடற்கரை மாவட்டங்களில் உள்ள வானொலி நேயர்கள் இலங்கையிலிருந்து ஒலிபரப்பு செய் யப்பட்ட சக்தி, தென்றல் போன்ற பண்பலைகளை தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தமிழ் நேயர்களுக்காக தினமும் இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலும் தமிழ் நிகழ்ச்சிகளை வியாழக்கிழமையிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கி உள்ளது.
இந்த ஒலிபரப்பினை தமிழக நேயர்களும் சிற்றலை வரிசையில் 25 மீட்டர் 11835 கி.ஹெர்ட்ஸ் அலைவரிசையில் கேட்கலாம். மேலும் Thendral Slbc என்ற பேஸ்புக் முகவரியிலும், +94112676868என்கிற தொலைப்பேசி இலக்கத்தை தொடர்பு கொண்டும் இலங்கை வானொலியின் தமிழக ஒலிபரப்பிற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.
இது குறித்து தமிழக- இலங்கை வானொலி மன்ற ஒருங்கிணைப் பாளர் ஜெயகாந்தன் கூறியதா வது: தொலைக்காட்சிகள், இணை யதளங்கள், சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் இலங்கை வானொலி தான் பொழுது போக்கு சாதனமாக இருந்தது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இலங்கை வானொலி நிலையம், இந்தியாவிற்கான தமிழ் ஒலிபரப்பை 2008-ம் ஆண்டு நிறுத்திக் கொண்டது.
மீண்டும் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியதை வரவேற்கிறோம். மேலும் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே செய்யப்படும் ஒலிபரப்பினை காலை, மாலை நேரங்களில் அதிகரிக்க வேண்டும் என்றார்.
நன்றி Fwd: 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம்
No comments:
Post a Comment