பயணியின் பார்வையில் -- அங்கம் 10 எல்லாம் கடந்துசெல்லும் வாழ்வில், சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முருகபூபதி



-->

நெல்லியடி பஸ் நிலையத்திலிருந்து  அச்சுவேலிக்குப்  புறப்படும்போது, " அடுத்து எங்கே செல்கிறீர்...?" எனக்கேட்டார் நண்பர் கேதாரநாதன்.
" அச்சுவேலியில் எனக்கு ஒரு பெறா மகள் இருக்கிறாள். அவளுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. என்னால் வரமுடியவில்லை. தற்பொழுது அவள் தாய்மையடைந்துவிட்டாள். பார்த்து வாழ்த்தவேண்டும்.  உபசரிக்கவேண்டும்" என்றேன்.
" இன்றும் நாளையும் உறவுகளைத்தான் தேடிச்செல்வதற்கு நேரம் ஒதுக்கியிருக்கின்றேன். பயணங்களில் நான் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களைத்தான் பார்த்துவிட்டு திரும்புகின்றேன். உறவுகளைப்பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை எனது வீட்டில் குடும்பத்தினர் எனக்கு சுமத்துகின்றனர்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதானே... அதனால் சொந்தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது" என்று மேலும் விரிவாக நண்பரிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
குறிப்பிட்ட அச்சுவேலி  பெறாமகள், எனது மனைவியின் அக்கா மகள். இங்கும் ஒரு கதை இருக்கிறது. 1987 இல் வடமராட்சியில் லலித் அத்துலத் முதலி காலத்தில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷனில் அந்த அக்கா கொல்லப்பட்டார்.
அவர் பருத்தித்துறை வேலாயுதம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது மூன்று பெண்குழந்தைகளுடன் வரும்போது பொம்மர் தாக்குதலில் படுகாயமுற்றார். குழந்தைகளுக்கும் காயம்.
மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் தாயின் உயிர் பிரிந்தது. அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல்தான் உடனிருந்து உதவிகள் செய்ததாக பின்னர் அறிந்தேன். அந்தக்குழந்தைகளின் சித்தியான எனது மனைவி,  எங்கள் பெறாமக்களையும் இம்முறை அவசியம் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தித்தான் என்னை வழியனுப்பினாள்.

அந்த மகள் தற்போது ஒரு பொறியியலாளரை மணந்து  யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கியில் பணியாற்றுகிறாள். அந்த முன்னிரவு வேளையில் தனது கணவருடன் எனக்காக அச்சுவேலியில் காத்திருந்தாள் அந்தப்பெறா மகள். 
 

இலங்கையில் நீடித்தபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப்பின்னால் பல கதைகள் இருக்கின்றன. அனைத்தையும் கடந்து நகர்ந்துகொண்டிருக்கின்றோம். எங்கள் அடுத்த சந்ததியாவது போரின் துயரம் தெரியாமல் சுபீட்சமாக வாழவேண்டும்.
யாழ். குடாநாட்டில் உணவு விடுதிகள் நிரம்பியிருக்கின்றன. திருமண மண்டபங்கள் பெருகியுள்ளன. பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒருவர் வெளிநாட்டிலிருக்கிறார்.   பல   வீடுகளுக்கு   (காலையும் இரவும்)  கடைகளிலிருந்து உணவு வருகிறது. Fast Food கலாசாரம் இலங்கை முழுவதும் பெருகியிருக்கிறது.
கனடாவிலிருக்கும் ஒரு குடும்பத்தலைவி  வீட்டிலிருந்து இடியப்பம் அவித்து குடும்ப மற்றும் பொது  நிகழ்ச்சிகளுக்கு விற்று  உழைக்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஊரிலிருக்கும் உறவுக்கு அனுப்புகிறாள். அந்த வெளிநாட்டுப்பணத்தில் அந்த உறவுகள் Take away Fast Food இல் காலத்தை ஓட்டுகின்றன.  இது ஒரு உதாரணம்தான்.

அச்சுவேலியிலும் சாப்பாட்டுக்கடைகள் இருக்கும்,  அதனால் பெறாமகளுக்கு  சிரமம் கொடுக்காமல் அவளையும் மருமகனையும்  அழைத்துக்கொண்டு வெளியே செல்லவிரும்பினேன்
               " உங்கள் திருமணத்திற்கும் வரமுடியவில்லை. அதனால் இன்று இரவு உங்களை நான்தான் உபசரிக்கப்போகின்றேன்." எனச்சொன்னதும், " சித்தப்பா, உங்களுக்காக வீட்டிலேயே விருந்து தயார். எங்கும் செல்லவேண்டியதில்லை" என்று சிரித்துக்கொண்டே  பெறாமகள் உபசரித்தாள்.
நேரம் கடந்துகொண்டிருந்தது. நான் புறப்படத்தயாரானேன். எனக்கிருந்த சந்திப்புகள் நேரம் குறித்த பதட்டத்தையும் தருவதுண்டு.
" இரவாகிவிட்டது. இங்கேயே தங்கி காலையில் செல்லுங்கள்" என்று பெறாமகள் தடுத்தாள்.
" இல்லையம்மா, இன்றும் நாளையும் மேலும் சில பெறாமகள்மாரை நான் பார்த்தாகவேண்டியிருக்கிறது. அதன்பின்னர் யாழ். செயலகத்தில் மாணவர் ஒன்றுகூடல். அதன்பின்னர் தொடர்ச்சியான பயணங்கள்" என்று எனது நிகழ்ச்சி நிரலைச்சொன்னபோது அவள் மலைத்துவிட்டாள்.
" அடுத்து எங்கே செல்லவேண்டும்...?" எனக்கேட்டார்கள்.
" கோண்டாவிலில் மற்றும் ஒரு பெறாமகள் இருக்கிறாள்." என்றேன்.
" ஊரெல்லாம் உங்களுக்கு பிள்ளைகள்தான்" என்று சிரித்துக்கொண்டே  என்னை அவர்களின் வாகனத்தில் ஏற்றி வழியனுப்பினாள் அச்சுவேலி பெறாமகள்.
கோண்டாவிலில் வசிக்கும் பெறாமகளுக்குப்பின்னாலும் ஒரு போர்க்காலக்கதை  இருக்கிறது.
எனது அண்ணியின் மகள் அவள். உடன்பிறந்தவர்கள் மூன்று பெண் சகோதரிகள். இவர்கள் நால்வரும் வவுனியாவில் பூவரசங்குளத்தில் பெற்றவர்களுடன் வசிக்கும்போது குழந்தைகள். தகப்பன் ஒரு லொறிச்சாரதி. வேப்பங்குளத்தில் அவர் பணியாற்றிய அரிசி ஆலை இயங்கியது. அதிகாலை மனைவி ( எங்கள் அண்ணி) தந்துவிட்ட இடியப்ப பார்சலுடன் புறப்பட்டவரை,  இரண்டு நாட்களின் பின்னர் சூட்டுக்காயங்களுடன்  சடலமாக  வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் கண்டோம்.
 புலிகள் கண்ணிவெடி வைத்துவிட்டு மறைந்தனர். மன்னாரிலிருந்து வந்த இராணுவ வாகனம் சிதறியது. சிலர் அதில் கொல்லப்பட்டனர். அந்தவேளையில் அங்கு சென்றிருந்த அண்ணியின் கணவர் ஆரிசி ஆலை மலகூடத்திற்குள் மறைந்து தப்ப முயன்றார். இராணுவம் கண்மண்தெரியாமல் சுட்டுத்தள்ளியது. அதில் அவரும் கொல்லப்பட்டார்.
அவருடைய நான்கு பெண் குழந்தைகளும் வளர்ந்து படித்து முன்னேறி ஆசிரியைகளாகிவிட்டனர்.  மூத்தமகள் வவுனியாவில் ஒரு பிரபல பாடசாலையில் அதிபர். ஏனைய மூவரில் இளையவளான கோண்டாவிலில் இருக்கும் இந்தப்பெறமகள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள்.
ஆம், முன்னரே சொன்னதுபோன்று அனைத்தையும் கடந்துதான் நாம்  செல்கின்றோம். " எல்லாம் கடந்து போகும்"  
இந்தப்பெறாமகளின் கணவரும்  ஆசிரியர்தான் . அத்துடன் எழுத்தாளர், இதழாசிரியர். இயற் பெயர்: சபாபதி உதயணன்.  இலக்கிய உலகில் இவரது பெயர் சித்தாந்தன். இவர்களுடைய திருமணத்திற்கும் நான் செல்லமுடியவில்லை. எனது இலக்கிய நண்பர்கள் கருணாகரன், அ.யேசுராசா முதலனோரின் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது.
போருக்குப்பின்னர், 2010 இல்தான் நண்பர் கருணாகரனின் தொடர்பினால் இவர்களின் கோண்டாவில் இருப்பிடத்தை கண்டு பிடித்தேன்.
1977 இல் பிறந்திருக்கும் சித்தாந்தன், கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபடுபவர். தருணம் என்ற வலைப்பதிவிலும் இவரது ஆக்கங்களை காணலாம். மறுபாதி என்னும் கவிதைக்கான இதழின் ஆசிரியராவார்.  இவரும் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே  பட்ட மேல்படிப்பு ஆய்வுமுயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.
காலத்தின் புன்னகை, துரத்தும் நிழல்களின் யுகம் முதலானவை  வெளிவந்த நூல்கள். ஆனையிறவு, முள்ளிவாய்க்காலுக்குப்பின் ( குட்டி ரேவதி தொகுத்தது) மரணத்தில் துளிர்க்கும் கனவு ( தீபச்செல்வன் தொகுத்தது) சிதறுண்ட காலக்கடிகாரம் முதலான நூல்களிலும் சித்தாந்தனின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர வேறும் சில படைப்பாளிகளின் நூல்களையும் தொகுத்தும் பதிப்பித்துமிருக்கிறார்.
மூன்று குழந்தைகளின் தந்தையான சித்தாந்தன்,  எனது மருமகன் மட்டுமல்ல  நல்லதொரு இலக்கிய நண்பருமாவார். யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் இவரையும் சந்திக்கத்தவறமாட்டேன். பெறாமகளோ, வரிக்கு வரி "  சித்தப்பா... சித்தப்பா... " எனச்சொல்லி என்னை நெகிழவைத்துவிடுவாள். தந்தையை குழந்தைப்பருவத்தில் இழந்த ஏக்கம் அதில் தெரிகிறது.
யாரையாவது  நான்  சந்திக்கவேண்டுமென்றால் சித்தாந்தன் தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்துச்செல்வார். அதனாலும் எனக்கு அங்கு நேரத்தை சேமிக்கமுடிந்திருக்கிறது.
அன்றைய இரவுப்பொழுது அவர்களின் வீட்டில் பேரக்குழந்தைகளுடன் கடந்தது. மறுநாள் காலை  புறப்படும்போது, "இனி அடுத்து எங்கே செல்கிறீர்கள்..?" எனக்கேட்டார்கள்.
" ஒரு பெறாமகளைப்பார்க்கத்தான்...?" என்றேன்.
" என்ன... சித்தப்பா... உங்களுக்கு யாழ்ப்பாணத்தில் எத்தனை பெறாமக்கள்...? " எனக்கேட்டாள் சித்தாந்தனின் மனைவி.
எனக்கு ஏர்ணஸ்ட் சேகுவேராதான் நினைவுக்கு வந்தார். " நீ காலடி வைக்கும்  ஒவ்வொரு நிலமும் உனக்குச்சொந்தமானதுதான்" என்று அவர் சொல்லியிருக்கிறார். இதனைத்தானே திருமூலரும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எனச்சொன்னார்.
2015 ஆம் ஆண்டில் நான் கோண்டாவிலுக்கு வந்திருந்தபோது சித்தாந்தனைத்தான் அழைத்துக்கொண்டு அந்தப்பிரதேசத்தில் வசித்த எனது நீண்டகால நண்பர் சிவா சுப்பிரமணியத்தை பார்க்கச்சென்றேன்.
அவர் 2016 முற்பகுதியில் சுகவீனமுற்றதை அறிந்து,  தகவல் சொல்லி, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சித்தாந்தனை அனுப்பிவைத்தேன். சிவா சுப்பிரமணியம் 29 மே மாதம் 2016 இல் மறைந்தார். இவரது மகள் மஞ்சு மெல்பனில் வசிக்கின்றா. ஒருவகையில் இவரும் எனது பெறாமகள்தான். இவர் எனது உடன்பிறவாச்சகோதரன்  பாலமனோகரனை திருமணம் செய்துகொண்டு மெல்பன் வந்தபொழுது குடும்பத்துடன் சென்று ஆராத்தி எடுத்து வரவேற்ற வசந்தகாலங்கள் மறக்கமுடியாதவை.
" அப்பாவின் ஆண்டுத்திவசம்   வருகிறது. செல்கின்றேன். யாழ்ப்பாணத்தில் நின்றால் வாருங்கள்" என்று மஞ்சு அழைத்திருந்தார்.
சிவா சுப்பிரமணியமும் எனது வாழ்வில் மறக்கமுடியாத நண்பர். ஒரு சந்தர்ப்பத்தில் என்னை  பெரியதொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்றியவர். இதுபற்றி அவர் மறைந்தவேளையில் விரிவாக எழுதியிருக்கின்றேன். மேலும் சில இணைய இதழ்களிலும் அந்தப்பதிவு வெளியாகியிருக்கிறது.
இறுதியாக அவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடியபொழுது, " களைப்பாக இருக்கிறது. மீண்டும் பேசுவோம்"  என்றார். அதன் பின்னர் பேசவே முடியவில்லை. எங்கள் நட்புவட்டத்திலிருந்தவர்கள், பிரேம்ஜி ஞானசுந்தரன், மு. கனகராஜன், ராஜஶ்ரீகாந்தன், மல்லிகை ஜீவா.
தற்போது எஞ்சியிருப்பது நானும் ஜீவாவும்தான். கோண்டாவிலில்  அமரர்  சிவா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் நிரம்பியிருந்தனர்.
அவரது சகோதரர்கள் தங்கவடிவேல் (கனடா) சிவபாதம் ( ஜெர்மனி) ஆகியோரும் வந்திருந்தனர். வெளிநாடொன்றில் வதியும் இலக்கிய சமூக ஆய்வாளர் சமுத்திரன் சண்முகரத்தினத்தின் சகோதரர்களும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் அனைவரையும் அன்றுதான்  முதல் முதலில் சந்தித்தேன்.
சிவா சுப்பிரமணியம் பற்றி நான் எழுதியிருந்த பதிவுகளை அவரது சகோதரர்கள் பார்த்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமானது.  கொழும்பில் வதியும்  பிரபல சிங்கள எழுத்தாளர் குணசேன விதானவுக்கும் சிவா மறைந்த தகவல்  இந்தப்பயணத்தில் நான் சொல்லும்வரையில் தெரியாது என்பதும் ஆச்சரியமானது.
தொடர்பாடலில் இவ்வாறு பின்தங்கிவிடுகின்ற சூழலிலும் Face Book, What sup, Viber என்று எமது உலகம் சுருங்கிக்கொண்டிருக்கும் அதிசயத்தையும் பார்க்கின்றோம். 
குணசேனவிதானவின் பாலம சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தவர் சிவா சுப்பிரமணியம். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாடுகளிலும் சிவா,  சிங்கள பேச்சாளர்களின் உரைகளை தமிழுக்குத்தந்தவர். இவர் சோதிடமும் கணிப்பார் என்பது பலரும் அறியாதது.
முற்போக்கு எழுத்தாளர்,  இடதுசாரியாக வாழ்ந்தவர்,  மார்க்ஸீயத்தில் நம்பிக்கை வைத்திருந்தவர் , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளில் எழுதியிருப்பவர். அங்கிருந்து விலகி தோழர் வி. பொன்னம்பலம் உருவாக்கிய செந்தமிழர் இயக்கத்தில் இணைந்தவர்.   இறுதிக்காலத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவரது ஒரு புதல்வனும் போரிலே மடிந்தார்.
எனவே,  சிவாசுப்பிரமணியமும்  பலதையும் கடந்து சென்றவர்தான்.
இந்தப்பதிவை எழுதும்போது அண்மையில் நான் படித்த ஜெயமோகனின் பின்வரும்  குறிப்புகள் நினைவுக்கு வந்தன.
" யார் இடதுசாரி எழுத்தாளர்? எழுத்து என்ற இந்தக்குழப்பம் எப்போதும் இலக்கியச்சூழலில் உள்ளது. கட்சி சார்பானவர்களுக்கு எந்தக்குழப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் கட்சியைச் சார்ந்தவர்கள் இடதுசாரி எழுத்தாளர்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ விலகிச் சென்றாலோ வலதுசாரி எழுத்தாளர்க்ளாகிவிடுவார்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர் அனைவரும் வலதுசாரிகள் தான்.
இங்கே நான் முற்போக்கு என்ற சொல்லை தவிர்க்கிறேன். அது இடதுசாரி எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்ட ஒரு சொல். எல்லா படைப்பாளிகளும் முற்போக்காளர்களே. எல்லா படைப்பும் மானுடப்பண்பாட்டில் முன்னகர்வையே நிகழ்த்துகிறது. ஆகவே இலக்கியமே முற்போக்குச் செயல்பாடுதான்.
உண்மையில் கருத்தியல் சார்ந்தும் அழகியல் சார்ந்தும் இடதுசாரி எழுத்து என்றால் என்ன என்று ஒரு வரையறையை நிகழ்த்திக்கொள்ள வேண்டுமென்றால் படைப்பின் இயல்புகளின் அடிப்படையில் சில நெறிமுறைகளைக் கண்டடைய வேண்டியுள்ளது. என்னுடைய பார்வையில் தமிழ் இலக்கியப்பரப்பு உருவாக்கிய மிகச்சிறந்த் இடதுசாரி எழுத்தாளர் ஜெயகாந்தனே. அவரை ஒரு அடையாளமாகக்கொண்டு இடது சாரி எழுத்தென்றால் என்ன என்று நான் வரையறுப்பேன்.
ஒன்று: பொருளியல் அடிப்படையில் பண்பாட்டு சமூகவியல் மாற்றங்களை பார்க்கும் மார்க்ஸியப் பார்வை இருக்கவேண்டும். இதை பொருளியல்வாதம் என்கிறேன்.
இரண்டு: மனிதனை பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்கான அடிப்படை அலகாகக் கொள்ளுதல். மனிதனின் வெற்றிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் தன் சிந்தனையை முதன்மையாகச் செயல்படுத்துதல் இதை மனிதமையநோக்கு என்கிறேன்.
மூன்று: புதுமை நோக்கிய நாட்டம். உலகம் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை. பழமையிலிருந்து புதுமைக்குச் செல்வதை வளர்ச்சியென்றும் மானுடத்தின் வெற்றியென்றும் கருதும் பார்வை. எதிர்காலம் மீதான நம்பிக்கை. வரலாறு மானுடனையும் சமூகத்தையும் முன்னெடுத்தே செல்கிறது என்னும் தர்க்கபூர்வ நிலைபாடு. இதை மார்க்ஸிய வரலாற்றுவாதம் என்கிறேன்.
இந்த மூன்றுகூறுகளும் கொண்ட ஒரு படைப்பாளி இடதுசாரித் தன்மை கொண்டவரே. அவர் கட்சி சார்ந்து இருக்கலாம், சாராமலும் இருக்கலாம். பெரும்பாலும் முதன்மையான படைப்பாளிகளுக்கு ஏதேனும் ஒரு இயக்கம் சார்ந்தோ, அமைப்பு சார்ந்தோ தங்களை கட்டுப்படுத்திக்கொள்வது இயல்வதில்லை. அவர்களின் சுதந்திரமான சிந்தனைக்கும் பேச்சுக்கும் வெளியே இருந்து ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுவது அவர்களைக் குறுகச் செய்வதாக உணர்கிறார்கள். "
(பயணங்கள் தொடரும்)



No comments: