பயணியின் பார்வையில் அங்கம் --06 தொலைக்காட்சித் தொடர்கள் போன்று தொடரும் போராட்டங்கள் மறைந்த ஊடகவியலாளர்களும் உருவாகியிருக்கும் ஊடகக்கற்கை( Media Studies) நெறிகளும் முருகபூபதி

.
இலங்கையில் சில தொடர்கதைகள்,  தமிழகத்தின் தொலைக்காட்சி தொடர்கள் போன்று நீண்டுகொண்டேயிருக்கின்றன.
முற்றுப்பெறாத இந்தத்தொடர்கள் போராட்டம் சார்ந்தது. ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், தொடரும் இந்தப்போராட்டம்,  அகிம்சைவழியில் தொடர்ந்தாலும், அதற்கும் அச்சுறுத்தல், தாக்குதல், எச்சரிக்கை என்பன அரச மட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது.
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களைத்தேடித்தாருங்கள் என்ற கோரிக்கையுடன   உறவுகள் நடத்தும் கண்ணீர் போராட்டம்.
கேப்பாபிலவில் எங்கள் காணிகளை மீட்டுத்தாருங்கள் என்று காணிகளை இழந்தவர்கள் நடத்தும் நிலமீட்பு போராட்டம்.
தனியார் மருத்துவக்கல்லூரி வேண்டாம் என்று சைட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மருத்துவக் கல்விக்கான உரிமைப்போராட்டம்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குகள் என்று வாழ்வாதாரம் கேட்டு பட்டதாரிகள் தொடரும் போராட்டம்.
பாடசாலை மாணவிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டித்து பெற்றவர்களும் பாடசாலை மாணவர்களும் அடிக்கடி நடத்தும் வீதி மறியல் போராட்டம்.



இத்தனையும் இந்த நல்லாட்சியில் தொடர் எபிசொட் காட்சிகள்.
இந்தப்பின்னணிகளுடன், முன்னர் பதவியிலிருந்த பொது எதிரணி மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக அவ்வப்போது நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு  போராட்டத்தை தொடங்கப்போவதாக செய்தி வருகிறது.
இத்தனை போராட்டங்களும் ஒரு புறம் நடந்துகொண்டிருக்கையில், இந்தப்போராட்டங்கள் பற்றிய செய்திகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் ஊடகவியலாளர்கள் அடிக்கடி நடத்திக்கொண்டிருக்கும்  கருத்துரிமைப்போராட்டமும் இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மொத்தத்தில் எந்தத்தீர்வினையும் எட்ட முடியாமல் போராட்டங்களே காட்சி மாற்றங்களுடன் அரங்கேறிக்கொண்டிருக்கும்  இந்த நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தத்தமக்குள் உரசிக்கொண்டு மற்றும் ஒரு நிழல் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
ஆக,  மொத்தத்தில், இன்று இலங்கையில் ஆயுதப்போராட்டம் நடக்காதுவிட்டாலும், தொடர்ச்சியாக நடைபெறும் அகிம்சைப்போராட்டங்களுக்கு எதிரான  தடியடி தாக்குதலும், கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நிகழ்த்தப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உண்ணாவிரதம் இருந்தும் பலன் இல்லை.
அண்மையில் ஒரு தாய் தனது மகனை மீட்டுத்தாருங்கள் என்று கத்திக்கத்தியே இறுதியில் தனது உயிரையும் விட்டுவிட்டார்.
இந்தப்பின்னணிகளை அவதானித்துக்கொண்டே,  ஊடகவியலாளர்களின் படுகொலைகளை கண்டித்தும், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்தும் கொழும்பில் இயங்கும் தமிழ் ஊடகவியாலாளர்கள் ஒன்றியம் நடத்திய கூட்டத்திற்கு ஒரு பார்வையாளனாகச்சென்றிருந்தேன்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வினோதன் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு ஒன்றியத்தின் செயலாளர் இராஜநாயகம் பாரதி தலைமை தாங்கினார். இந்த அமைப்பின் தலைவர் நிக்சனும் பொருளாளர் ஜீவா சதாசிவமும் அறிமுகவுரையும் நன்றியுரையும் நிகழ்த்தினார்கள்.
மூத்த ஊடகவியலாளர்  சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லக்‌ஷ்மண் குணசேகரா, " நல்லாட்சி அரசாங்கத்தில் இன முரண்பாடுகளுக்கான தீர்வு முயற்சிகளின் தற்போதைய நிலை" என்ற தலைப்பில் ஆழமான கருத்துக்களுடன் விரிவான நினைவுரையை நிகழ்த்தினார்.
நவமணி ஆசிரியர் என். எம். அமீன், நோன்பு காலத்திலும் இந்நிகழ்வை தவிர்க்காமல், தனது மார்க்க கடமையை முடித்துக்கொண்டு வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டம் மறைந்த (கொல்லப்பட்ட ) இரண்டு பிரபலமான தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து நடத்தப்பட்டது.
ஒருவர்  தராக்கி என்ற தர்மரத்தினம் சிவராம். மற்றவர் நெல்லை நடேஸ் என இலக்கிய வட்டாரத்தில் அறியப்பட்ட ஐயாத்துறை நடேசன்.
இவர்கள் இருவருடனும் நான் பணியாற்றியிராதபோதிலும் எனது நல்ல நண்பர்கள். இந்நிகழ்ச்சியை நடத்திய தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தைச்சேர்ந்த இராஜநாயகம் பாரதி, நிக்சன், ஜீவா சதாசிவம் ஆகியோருடனும் நான் இணைந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.
இவர்களுடனான நட்புறவு, வீரகேசரியில் பணியாற்றியதனாலும், இலங்கையை விட்டு 1987 இல் விடைபெற்றபின்னரும் இலங்கை பத்திரிகைகளில்  - குறிப்பாக இவர்கள் பணியாற்றும் வீரகேசரி - தினக்குரல் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதிவருவதனாலும் உருவானது.
எப்படி இருந்தாலும் நாம் ஒரே வர்க்கத்தினர் அல்லவா...?
எனது வர்க்கத்தைச்சேர்ந்த பலரையும் ஓரிடத்தில் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழ்ச்சங்கத்திற்கு சென்றேன். உடன் வந்தவர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன். அன்றைய தினம் வாரநாளாக இருந்தமையாலோ என்னவோ, பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள் அங்கு வருவதற்கு  தாமதமானது.
நேரத்தை மதிக்கும் ஒரு நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றமையால், அந்த பழக்கத்தால் உரியநேரத்திற்கு முன்பே மண்டபத்திற்கு வந்துவிட்டேன். தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபம், பிரதான மண்டபத்தின் பின்புறம் அமைந்திருக்கிறது.
அங்கு எட்டிப்பார்த்தால், எவருமில்லை.
நண்பர் ஞானசேகரன் சோர்ந்த முகத்துடன் என்னைப்பார்த்தார். நான் அவரைப்பார்த்தேன். சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கின்றோமா என்ற சந்தேகமும் வந்தது. அங்கிருந்த ஒரு ஊழியரிடம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி பற்றி உறுதிப்படுத்திக்கொண்டு வாசல் திண்ணையில் அமர்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒவ்வொருவராக வந்தார்கள். வார நாளில் அத்தகைய கூட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல. கொழும்பில் பல முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு நோன்பு காலம். இவற்றையெல்லாம் கவனித்து மண்டபத்தை தெரிவு செய்ய முயன்றால், கொழும்பில் அதற்கும் தட்டுப்பாடு இருக்கிறதோ தெரியவில்லை.
திருமண மண்டபங்களுக்கு முற்கூட்டியே அனுமதி பெறுவதுபோன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்திடமும் அனுமதி பெற்றுவிடவேண்டியிருக்கும். சனி, ஞாயிறு தினங்களிலெல்லாம் அங்கு காலையும் மாலையும் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.
அது அமைந்திருக்கும் வீதிக்கு தமிழ்ச்சங்கம் வீதி எனப்பெயரிடுவதற்கு நடந்த போராட்டத்தின் விளைவால், இறுதியில் சங்கம் வீதி என பெயர் சூட்டுவதற்குத்தான் கொழும்பு மாநகர சபை அனுமதி அளித்திருக்கிறது.
தமிழ் அப்படி என்ன பொல்லாத வார்த்தையா...? அரைநூற்றாண்டுக்கும் மேலாக அவ்விடத்தில் இயங்கும் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ்ச்சங்கம் வீதி என்று பெயர்சூட்டிவிட்டால் என்ன விக்கினம் வந்துவிடப்போகிறது.
நல்லவேளை அவ்விடத்தில் ஒரு அரசமரம் இல்லை... !!!
சங்கத்தின் திண்ணையில் அமர்ந்தவாறு சங்கத்துடன் எனக்கு முன்பிருந்த உறவு பற்றி யோசித்தேன். தேசிய  சாகித்திய விருது பெற்ற எனது பறவைகள் நாவலில் 300 பிரதிகளை இச்சங்கத்திற்கு நன்கொடையாக  வழங்கி,  நிகழ்ச்சி நடத்தி விற்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று 2004 ஆம் ஆண்டளவில் கொடுத்திருக்கின்றேன்.
அந்த விழாவை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தலைமையில் நடத்தி, முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான ( அமரர்) சந்திரசேகரன் மற்றும் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் கலந்துகொண்ட பெருவிழாவாக ஏற்பாடு செய்து  அசத்தியிருந்தார், தற்போதைய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி.
அந்த விழாவிற்கு நான் செல்லவில்லை. எனக்கு படங்களும், நிகழ்ச்சி உரைகள் அடங்கிய கஸட்டும்  வந்துசேர்ந்தன.
இன்று என்னிடம் பறவைகள் நாவலின் பிரதியும் இல்லை. சங்கத்திடம் ஏதும் மிச்சம் இருந்தால் ஒரு பிரதி தாருங்கள் என கையேந்துகின்றேன்.
அந்த மண்டபத்தில்தான் நாம் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடத்தியிருக்கின்றோம். அந்த நினைவுகளை மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கும்போது, அன்றைய நிகழ்வின் பிரதான பேச்சாளர் மூத்த பத்திரிகையாளர் லக்‌ஷ்மண் குணசேகரா வந்தார்.
நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது அமீன் வந்து கலந்துகொண்டார்.
கொலைசெய்யப்பட்ட தராக்கி தர்மரத்தினம் சிவராம், ஐயாத்துறை நடேசன் பற்றிய சிறப்பியல்புகளை சுட்டிக்காண்பித்து  தலைமையுரையாற்றிய இராஜநாயகம் பாரதி, அரச மட்டத்தில் குறிப்பிட்ட கொலைகளின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன எனவும், எவரும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதனால் தண்டிக்கப்படவில்லை என்றும் தமது ஏமாற்றத்தை தெரிவித்தார்.
லக்‌ஷ்மண் குணசேகரா, இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் தன்னைப்போன்ற பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கிய சவால்கள் பற்றியும் அவற்றை கடந்துவருவதற்கு மேற்கொண்ட சாமர்த்தியங்கள் பற்றியும் விரிவாக பேசியதுடன், நல்லிணக்க ஆட்சியிலும் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டவில்லை என்றும் தனது ஏமாற்றத்தை குறிப்பிட்டார்.
அவருடை  உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.  அதனை பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர் மகேஸ்வரன் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்தார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தமிழ் தவிர்ந்த மொழிகளில் நினைவுரைகள் நிகழ்த்தப்படுமானால், முதலிலேயே குறிப்பிட்ட உரையை எழுத்தில் பெற்று மொழிபெயர்த்துவிட்டு, அதன் சாரம்சத்தை பேச்சாளரின் உரைக்குப்பின்னர் சமர்ப்பிக்கலாம். அதனால் நேரத்தையும் சேமிக்கலாம்.
லக்ஷ்மண் குணசேகராவின் நீண்ட உரை ஊடகங்களில் வெளியிடப்படல்வேண்டும். இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உரையாற்றியிருப்பது முன்னுதாரணமாகும். அதேவேளையில், இத்தகைய நிகழ்ச்சிக்கு மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ளத்தக்கதாக எதிர்காலத்தில் நாட்களையும் நேரத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும்.
இலங்கையில் நல்லாட்சி நடக்கிறதோ இல்லையோ, எமது மூவின ஊடகவியலாளர்களிடமும் நல்லிணக்கம் தோன்றிவருகிறது என்பது ஆறுதல்தான்.
" போனவர்கள் போனதுதான். இனி வரப்போவதில்லை " என்ற எண்ணப்பாடுகள் இல்லாமல், இனியும் அவ்வாறு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நினைவுக்கூட்டங்கள் நடக்கின்றன என்ற உணர்வு பத்திரிகையாளர்களிடம் தோன்றவேண்டும்.
அன்றைய நிகழ்வில் கணிசமான பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை ஒளிப்படக்கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு நிகழ்த்தப்பட் உரைகளில் ஒரு பொதுத்தன்மை தெரிந்தது.
"முன்னைய ஆட்சியில் நிகழ்ந்த ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு ( படுகொலைகளுக்கு)  இன்றைய நல்லாட்சியிலும் தீர்ப்புக்கிடைக்கவில்லை."
ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தமையால்தான் அந்த முன்னைய ஆட்சியை தோற்கடித்து,  புதிய நல்லாட்சியை உருவாக்கினோம். அதற்கு ஊடகவியலாளர்களின் ஒருமித்த ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தது. ஆனால், அமைந்த புதிய ஆட்சியிலும் எமக்கு ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது."
இந்தத்தொனியிலேயே அனைத்துப்பேச்சாளர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தவாறு, ஏனைய தொடர்போராட்டங்கள்போன்றே ஊடகவியலாளர்களின் போராட்டங்களும் இந்த ஆட்சியில் தொடருகின்றன.
கொழும்பில்  லசந்த விக்கிரமதுங்கவுக்காக வீதியில் இறங்கி போராடினார்கள். யாழ்ப்பாணத்தில் நிமலராஜனுக்காகவும் அவ்வாறு போராடினார்கள்.
ஊடகத்துறையிலிருந்த  தனது கணவர் எங்கே...? எனக்கேட்டு, அன்றைய அரசுக்கு சாபமிட்டு,  காலிவீதியில் அலரி மாளிகை முன்பாக வந்து  தேங்காய் உடைத்து கதறிய பெண்பற்றியும் அறிவோம்.
இன்றைய நல்லாட்சியிலும் ( ?) சில அமைச்சர்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் தராமல் கடும் சீற்றத்துடன் நடந்துகொள்வதைக்கண்டித்து, பத்திரிகைகள் ஆசிரியத்தலையங்கம் எழுதுகின்றன.
 1975  - 1985  காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான அமைப்புகள் சில இயங்கின. நானும் ஒன்றில் அங்கம் வகித்து,  நடந்த தேர்தல்களில் வாக்களித்திருக்கின்றேன். ஆனால், தற்காலம் போன்று அன்று இலங்கையில் ஊடகக்கல்லூரிகள்   இருக்கவில்லை. எப்போதாவது கொழும்பு மன்றக்கல்லூரியில் பயிலரங்குகள் நடக்கும்.
தற்போது இலங்கையில்,  தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் ஊடகக்கல்லூரிகள் பெரிய அளவிலும் சிறிய அளவிலும் இயங்குகின்றன.
ஊடகத்துறையில் விரிவுரையாற்றும் சிலரையும் இந்தப்பயணத்தில் சந்தித்தேன். கணினியின் அறிமுகத்திற்குப்பின்னர், டிஜிட்டல் தொழில் நுட்பம் வந்தபிறகு  ஊடகக்கல்லூரிகளில் ஒளிப்படக்கலை பற்றிய பயிற்சிகளிலும் இளம் தலைமுறை ஈடுபடுகின்றது.
இலங்கை கல்வி முறையில் ஊடகக்கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், தொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை நெறிக்கான கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தின் நூலின் முதல் பதிப்பு 2008 இல் வெளியாகியிருக்கிறது.
அதனை முதலில் சிங்களத்தில் எழுதியிருக்கிறார்கள். பின்னர் தமிழுக்கு அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். படங்களும் பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறு வெளியிடப்பட்ட நூலை செம்மைப்படுத்தியிருப்பவர், முன்னர் வீரகேசரி, மற்றும் தினக்குரலில் பணியாற்றியிருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் ஊடகக்கல்லூரி  ஒன்றில் விரிவுரையாளராகவும் இயங்கிய தேவகௌரி.
இவர்  யாழ். பல்கலைக்கழகத்தில் பயின்றவேளையில் தமது ஆய்வுக்கு ஈழத்தில் நீண்ட காலம் வெளியான மல்லிகை இதழ்களையே உட்படுத்தியவர். Media Studies இற்குரிய அந்தப்  பாட நூலை இலக்கிய நயத்துடன்  அழகாக செம்மைப்படுத்தியிருக்கிறார்.
பாடசாலைகளில் மேல்வகுப்புகளுக்கு இந்த  Media Studies வந்திருக்கிறது. ஆனால், இன்னமும் பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகமாகவில்லை.
இதேவேளை, நாடெங்குமுள்ள பத்திரிகைத்துறை மற்றும் இலத்திரனியல் ஊடக  நிறுவனங்களில் முழுநேர சேவையிலோ, அல்லது பகுதிநேர சேவையிலோ மூன்று வருடங்கள் பூர்த்திசெய்த ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ஒரு இலட்சம் ரூபா புலமைப்பரிசில் வழங்குவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு முன்வந்திருக்கும் செய்தியும் இலங்கையில் வெளியாகியிருக்கிறது.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் முதலானவற்றில் சமகாலத்தில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காண்பிக்கும் கலாசாரம் பெருகியிருக்கும் சூழ்நிலையில், அரசும், அமைச்சர்களும் பொறுப்புடன் நடந்துகொண்டால், அது அரசுக்கும் நல்லது. தேசத்திற்கும் நல்லது.
கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களினால் தமது தாயகத்தை விட்டுச்சென்று வெளிநாடுகளில் அஞ்ஞாத வாசம் இருக்கும் ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு  திரும்புவதற்கு ஏற்ற நல்லாட்சி இனித்தான் உருவாகவேண்டும்.
ஆனால்,  எமது தாயகத்தில், தலையணை உறைகள்தான் மாற்றப்படுகின்றன.
(பயணங்கள் தொடரும்)











No comments: