இலக்கிய சந்திப்பு - 27 -



அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!

எல்லோருக்கும் வணக்கம்!

எல்லோரும் நலம் தானே?

இடையிலே ஒரு சிறிய இடைவேளை, கொஞ்சம் குளிர் காலத்தின் மீதான சாக்குப் போக்கு, அதனோடு கூடவே தனிப்பட்ட வேலைகள் விடுமுறைகள் என்று கொஞ்சம்…

மேலும் இடையிலே நடந்த நமது இரண்டு புத்தக வெளியீட்டு விழாக்கள்….

பிறகு வந்துவிட்ட குளிர்காலம்…

அதனால் இலக்கிய சந்திப்புகள் ; அது பற்றிய ஏற்பாடுகளில் கொஞ்சம் தடங்கல்கள். இருந்த போதும் மூத்த வானொலி ஊடகவியலாளர் திரு. எழில் வேந்தன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பொன்றுக்கு முஸ்திப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் விக்ரோரியா மாநிலத்தில் இருந்து பாரதி பள்ளி ஸ்தாபகரும், சமூக ஆர்வலரும், கலை இலக்கிய வாதியும், நாடகங்கள் பல எழுதி நெறியாள்கை செய்து மேடை ஏற்றியவருமான திரு. மாவை நித்தியானந்தன் அவர்கள்;  அவரோடு கூடவே எழுத்தாளர் என நம் எல்லோராலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் முருக பூபதி அவர்களும் இங்கு சிட்னிக்கு வர இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்ட காரணத்தால் மிக அவசர அவசரமாக இந்த இலக்கிய சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

இவ் இருவரும் இலக்கிய, கலை உலகில் பல தசாப்தங்களாக ஓய்வு ஒழிச்சல் இன்றி இயங்கி வருபவர்கள். சமூகத்தின் மீதான கரிசனை கொண்டவர்கள். தாம் எடுத்துக் கொண்ட கலா ஆயுதத்தின் மூலமாக சமூகத்தினை சீரியதாக்க சமூக  செல் நெறியை கலை வடிவால் செப்பனிட முயன்றவர்கள். முயன்றுகொண்டு இருப்பவர்கள். தாயகத்தின் மீது ஒரு காலும் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு காலுமாக இயங்குபவர்கள். அதனால், பலவிதமான அனுபவங்களைத் தம்மோடு சுமந்து கொண்டிருப்பவர்கள்.

இந்த அனுபவங்கள் அவர்கள் சுமந்து திரியும் அரிய பொக்கிஷங்கள்.

அவர்கள் சிட்னிக்கு வரும் அரிய இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் சமூக கலை இலக்கிய கருத்தோட்டங்களின் பின்னணியில் அவர்களின் சம கால சமூக வாழ்க்கைக் கோலங்கள் கலை இலக்கிய வடிவம் பெறும் அனுபவங்களை கருத்தோட்டங்களை, கேட்கவும் நம் அபிப்பிராயங்களைப் பகிரவும் புதிய விடயங்களை அறியவும் ஆர்வலர்கள் எல்லோரையும் அன்போடு அழைக்கிறது உயர்திணை!

விபரங்கள் இதனோடு இணைக்கப் பட்டுள்ள அழைப்பிதழில் உள்ளன.

உங்கள் எல்லோரையும் அன்போடு அழைக்கிறோம்.

உயர்திணை சார்பாக,
யசோதா.ப.




No comments: