ஏற்றிடலே நன்று ! - எம் . ஜெயராமசர்மா

.
image1.JPG

          தானியங்கள் பலவற்றை நாமுண்டு வந்தோம்
                தகரத்து உணவுகளை நாம் காணவில்லை
           ஊரெல்லாம் விவசாயம் உயிர்ப்புடனே அன்று
                ஒழுங்குடனே இருந்ததனை யாவருமே அறிவோம்
           காலமெனும் சக்கரமோ வேகமாய் சுழன்று
                 கடுகதியாய் உணவெல்லாம் மாற்றமுறத் தொடங்கி
            நாமின்று வேண்டாத உணவுகளை உண்டு
                  நலமிழந்து போவதற்கு ஆளாகி உள்ளோம் !

              கூழ்குடித்த காலமதில் குடல்நோய்கள் குறைவே
                    கொக்கோகோலா குடித்தவர்க்கு வருநோய்கள் பலவே
              ஆழ்கிணறு நீரெடுத்து அருந்திநின்றோம் நன்றாய்
                      அதனாலே ஆரோக்கியம் அமைந்திருந்த தன்று
               நீர்குடித்தோம் மோர்குடித்தோம் நிரம்பியது வயிறு
                    பீர்குடித்து உடல்நலத்தைக் கெடுக்கின்றோம் இன்று
               ஊர்முழுக்க இப்போது மாறியே போச்சு
                      உயிர்ப்புள்ள உணவுகளை உண்பாரும் குறைவே !


               வரகுதினை கம்புசோளம் மாட்டுணவாய் ஆச்சு
                       மனதவுண வெல்லாமே வரண்டு போகலாச்சு
               தினமுண்ட  எள்ளும்கூட சிதறியெங்கோ போச்சு
                    பனைதந்த பலபொருளும் காட்சிப் பொருளாச்சு
                நின்றுகொண்டே  உண்டுவிட்டு ஓடிநிற்கும் பலபேர்
                      கண்டதையும் கடையில்வாங்கி வாயினுள்ளே போட்டு
                மென்றிடாமல் விழுங்கிநின்று வேகமுடன் சென்று
                        விலைகொடுத்து நோயையவர் வாங்குகிறார் நாளும் !

                 பக்கற்றில் உணவுவகை பதம்பதமாய் இருக்கு
                      பார்ப்பவர்கள் மனங்கவரும் கவர்ச்சியதில் இருக்கு
                 காலைமாலை வேளைக்கென கலர்கலராய் இருக்கு
                        கண்டவுடன் வாயூறும் காட்சியதில் இருக்கு
                  சமையல்செய்ய விரும்பாத பலபேர்க்கும் இப்போ
                         சரியான துணையாக இருக்குதந்த உணவு
                   பணம்கொடுத்து வாங்கியதை பலபேரும் உண்டு
                           பறிகொடுத்து நிற்கின்றார் பலநலத்தை இன்று !
image1.JPG
                  செயற்கையாய் தயாரிக்கும் உணவு வகையெல்லாம் 
                        செரிமானம் ஆகாமல் சிக்கலினைத் தருமே 
                 அதைவிரும்பி ஏற்பதற்கு அதையாக்கி விற்போர்
                        அதிகபணம் செலவாக்கி விளம்பரங்கள் செய்வார்
                 விளம்பரத்தால் மயங்கிநிற்கும் பலபேரும் ஆங்கே
                         விரைந்துசென்று அதைவாங்கி வீட்டிலுண்டு மகிழ்வார் 
                  மகிழ்கின்றார் மகிழ்ச்சியது நிலைத்துவிடு முன்னே
                          மருந்துதேடி அவரலைந்து மாட்டிடுவார் வகையாய் !

                மேல்நாட்டு உணவுவகை மெத்தவுமே வந்து
                       மெய்யாக உடல்நலத்தை பொய்யாக்கி விட்டு 
               நாளெல்லாம் பலநோய்கள் நமதுடலுள் செலுத்தி 
                      நம்பணத்தை வீணாக்கும் நடைமுறையில் இருக்கு 
               பழையவுண வெல்லாமே உடல்நலத்தை நோக்கி
                      பக்குவமாய் அமைந்தமையை பார்க்கின்ற போது
                எமதுணவை நாம்மறத்தல் எமைமறத்தல் அன்றோ 
                       இனிமேலும் எம்முணவை எற்றிடலே நன்று !
                   


          

எம் . ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


No comments: