உலகச் செய்திகள்


இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பா.ஜ.க.வின் ராம்நாத் கோவிந்த் தெரிவு

"ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர்

பிரித்தானியாவில் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்

 மதபோதகர் சுட்டுக்கொலை








இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பா.ஜ.க.வின் ராம்நாத் கோவிந்த் தெரிவு
21/07/2017 இந்திய ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின்  வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 


இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் 3,67,314 வாக்குகள் பெற்றிருந்தார். 
தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10,69,358 ஆகும்.
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களையும் சேர்ந்த  (பிரதமர் அடங்கலாக ) 776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப்பது நடைமுறை.
ஒவ்வொரு வாக்கிற்கும் மாநிலங்களின் அடிப்படையில் பெறுமானம் நிர்ணயிக்கப்பட்டு அவை மாநிலங்களின் அடிப்படையிலான வாக்குகளாக கணக்கிடப்பட்டு அவ்வாக்குகள் இறுதி மொத்த வாக்குகளாக கணிக்கப்படும். 
ஜனாதிபதி தேர்தலில் தமக்கு கிடைத்த வெற்றி இந்திய ஜனநாயகத்தின் சிறப்பிற்கு சிறந்த ஆதாரமென ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 
இந்தத் தேர்தலில் தம்மை ஆதரித்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாக திரு.கோவிந்த் தெரிவித்துள்ளார். 
இவர் இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். இந்த தேசத்தின் குடியரசுத் தலைவர் பதவிக்கு தெரிவாகும் இரண்டாவது தலித் ராம்நாத் கோவிந்த் ஆவார். முதல் தலித் என்ற பெருமை கே.ஆர். நாராயணனுக்கு உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.
இதன்பிள்ளர் டெல்லி உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு சட்ட உதவி வழங்கி உள்ளார்.
1977 ஆம் ஆண்டு இந்தியாவில் நிருவாகத்திலிருந்த ஜனதா அரசில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றினார். இதுதான் ராம்நாத் கோவிந்த்தின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
அதன்பிறகு பா.ஜ.க. வில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக செயல்பட்டார்.
இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994 இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2 முறை 2006 ஆம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
பா.ஜ.க.வின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும் (1998 2002) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











"ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர்

18/07/2017 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி  தெரிவித்தார். 
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தெரிவித்து வந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரில் செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும், அதிமுகவின் அம்மா அணியினரும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்ததாவது,
‘ஜெயலலிதா சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. அவரது மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்’ என்று தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 













பிரித்தானியாவில் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்

17/07/2017 பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள ஸ்டன்மோர் பகுதியில் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்துமீறி வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணையும் அவரது தாயாரையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கறுப்பின இளைஞர்கள் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பிரித்தானியப் பொலிஸார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி வீரகேசரி










 மதபோதகர் சுட்டுக்கொலை

17/07/2017 இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் 50 வயதுடைய சுல்தான் மாஷிஹ் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 அவரது கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் நின்ற வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளால் குறித்த மதபோதகர் சுட்டுக்கொல்லப்படும் காட்சி அருகிலிருந்த சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி

No comments: