எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்திக்கிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே?
எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்திக்கிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
20/07/2017 அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்தியோகபூர்வ
விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று
எதிர்க்கட்சித் தலைரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ்
ஹட்சனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிஷப் பொருளாதாரம்
மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதை நோக்காக
கொண்டே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அரசியல்
விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனை நாளை வெள்ளிக்கிழமை
காலையில் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ஐக்கிய
நாடுகள் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின் போது சமகால
அரசியல் நிகழ்வுகள் உட்பட பல்வேறு விட யங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள்
இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டு ள்ளது. நன்றி வீரகேசரி
“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
19/07/2017 நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் 177 ஏக்கர் வனப்பகுதியில் அமையவிருக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும், காடழிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று முல்லைத்தீவில் பாரிய கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை உடனடியாக தடை செய்யவேண்டுமெனவும் தெரிவித்து குறித்த கண்டன பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
'சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் போராட்டம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பகுதியிலிருந்து ஆரம்பித்து குடியேற்றம் நடைபெறவிருக்கும் கூளாமுறிப்பு வாரிவண்ணாங்காடு வரையான 6 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று நிறைவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிக்காதே ', கூளாமுறிப்பு உனக்கு இன்னொரு வில்பத்தா " , “ எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்க விடமாட்டோம் ”, "முல்லையில் வரட்சிக்கு காரணம் ரிசாத்" , “கூளாமுறிப்பு வீழாது உங்கள் கோழைக்கத்தி ஏறாது”, "மண்ணில் துளையிட்டது வீர்கள் மட்டுமல்ல மாவீரர்களது கனவுகளும்தான்” , “நம் பூமி வந்தாரை வாழவும் வைக்கும் நம் பூமி வஞ்சகர்களை வீழ்த்தவும் நிற்கும்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தில் யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து திரண்டுவந்த இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கஜதீபன் ,புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறிக்கை வெளியிட்ட இளைஞர்கள் அடாத்து குடியேற்றத்தையும் காடழிப்பையும் நாம் எதிர்க்கின்றோம் ,தமிழர்களின் தாயக பகுதியான வடக்கு கிழக்கு பிரதேசம் பாரிய அபாயங்களை எதிர்நோக்குகின்றது.
இந்த செயற்பாடுகளால் இலங்கை தீவில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றது. இந்த நிலையில் தான் வடக்கு, கிழக்கில் நடாத்தப்படும் அடாத்து குடியேற்றங்கள் தமிழரின் இருப்பையும் பண்பாட்டு நிலத்தொடர்பையும் முறித்து அழிக்கப்பதையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் நாம் தற்போது அனுபவிக்க தொடங்கியிருக்கின்றோம் . இந்த அபாயத்திலிருந்து விழிப்பு பெற்று எதிர்ப்பு குரல் காட்டவேண்டிய சூழல் தோன்றியுள்ளது. தொடர்பறாத பண்பாட்டு நிலமாக காணப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசம் தற்போது பௌதீக ரீதியில் உடைந்து காணப்பட இந்த திட்டமிட்ட குடியேற்றங்களே காரணம்.
கிழக்கில் எமது பண்பாட்டு ஊர்களை இன்று காணமுடியவில்லை வளம் நிறைந்த கிழக்கு இப்படித்தான் துண்டு துண்டானது ,எங்கள் பண்பாட்டு தொடர்ச்சி முறிய முறிய நாம் பலமிழக்கின்றோம். இலகுவில் இலக்கு வைக்கப்பட்டு அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு துறைகளிலிருந்து அழித்தொழிக்கப் படுகின்றோம் . இப்படித்தான் கிழக்கும் துண்டுதுண்டானது இப்போது வடக்கிலும் கண்வைத்துவிட்டார்கள் .மன்னாரில் வில்பத்து ,வவுனியாவில் பம்பைமடு ,முல்லைத்தீவில் குமாரபுரமென வன அழிப்பும் திடீர் குடியேற்றங்களும் உருவாகியுள்ளன.
தொன்றுதொட்டு நாம் வாழ்ந்த எமது பண்பாட்டு நிலங்களில் புதிய குடியேற்றங்களை உருவாக்குவதால் நாம் பின் தள்ளப்படுகின்றோம் ,மீள முடியாத அளவுக்கு பாதாளத்துக்கு தள்ளி விடப்படுகின்றோம் ,எனவே இளைஞர்களாகிய நாம் விழிப்படைய வேண்டும். முதல் கட்டமாக எங்கள் கண்ணீராலும் செந்நீராலும் செழித்தோங்கிய வனத்தை அழித்து குடியேற்றங்களை உருவாக்கும் நாசகார செயல்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்
முள்ளியவளை கூளாமுறிப்பு பகுதியில் வனங்களை அழித்து குடியேற்றம் மேற்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
பணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே?
18/07/2017 படித்து நாட்டுக்கு சேவை செய்ய இருந்த எமது
பிள்ளைகளை பணத்துக்காக கடத்திச் சென்றனர். எம்மிடம் கோடிக்கணக்கில்
கப்பம் கோரினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை.
கடற்படையினரே இந்த கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை
குற்றப்புல னாய்வுப் பிரிவின் விசாரணைகள் ஊடாகவே நாம் அறிந்தோம்.
தற்போது சில அரசியல்வாதிகள் எமது பிள்ளைகளை பயங்கரவாதிகளாக
சித்திரிக்க முற்படுகின்றனர். 8 வருடங்களாக நாம் எமது பிள்ளைகளை
தேடுகின்றோம்.
அவர்கள் எங்கே? தயவு செய்து இந்த விடயத்தில் அரசியல் சாயம் பூசாது,
எமக்கான நியாயத்தைப் பெற்றுத்தாருங்கள் என்று கொழும்பு மற்றும் அதனை
அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின்
உறவினர்கள் நேற்று கண்ணீர் விட்டு கதறியழுது வேண்டுகோள் விடுத்தனர்.
கொழும்பு - நிப்போன் ஹோட்டலில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை
நடாத்தியே அவர்கள் அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்ததுடன்
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைகளை முன்னெடுத்துச்
செல்ல அனுமதிக்குமாறும் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையிலான
அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள்
விடுத்தனர்.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட
11 பேரும் விடுதலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச
ஊடகங்களிடம் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ,
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை
ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே
கண்ணீருடன் குறித்த உறவுகள் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்ட ரஜீவ் நாகநாதனின் தாய் சரோஜினி நாகநாதன்:
2008 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்தப்பட்டார். எனக்கு
இருந்தது ஒரே ஒரு மகன். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருந்த
நிலையில் அவன் கடத்தப்பட்டான். திலகேஸ்வரன், டிலான் ஆகிய தனது இரு
நண்பர்களுடன் அவன் வீட்டில் இருந்து காரில் சென்றபோதே, தெஹிவளையில்
வைத்து கடத்தப்பட்டுள்ளான்.
கடற்படையினரால் அவன் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த
போது தொலைபேசி ஊடாக எங்களுடன் கதைத்தும் உள்ளார். அவர்கள் பேசும்
தொலைபேசி இலக்கத்துக்கு நாமே ரீலோட்டும் செய்துள்ளோம். மகனை விடுவிக்க
என்னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது. நான் 75 இலட்சம் ரூபாவுடன்
நாரம்மலைக்கு செல்ல முற்பட்ட போது அப்போதைய அமைச்சர் பீலிக்ஸ்
பெரேராவின் அறிவுறுத்தலுக்கு அமைய நான் அங்கு செல்லவில்லை.
பீலிக்ஸ் பெரேரா அப்போது கடற்படை தளபதி கரண்ணாகொடவுடன் பேசி,
எனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இன்று வரை
எனது மகன் விடுவிக்கப்படவில்லை.
இன்று அரசியல் வாதிகள், கடத்தல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய
தஸநாயக்க எனும் கடற்படை அதிகாரியைக் கைது செய்ததும், தஸநாயக்கவின்
பிள்ளைகள் மனைவி அழுவதாக பேசுகின்றனர்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். கடந்த 8 வருடங்களாக
நாம் அழுத அழுகையும், உங்களிடம் விடுத்த வேண்டுகோள்களும்
உங்களுக்கு தெரியவில்லையா?. எமது பிள்ளைகளுக்காக நாமும் இப்படித்
தானே 8 வருடங்களாக அழுதுகொண்டிருக்கின்றோம்.
எனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலிசறை முகாமில்
வைத்திருந்தனர். பின்னர் சைத்திய வீதியில் உள்ள மறைவிடத்திலும்,
பின்னர் திருமலை இரகசிய முகாமிலும் வைத்திருந்தனர். இவை சம்பத்
முனசிங்க, ஹெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க ஆகியோரின் கீழேயே
இடம்பெற்றன. இதனை மகன் எனக்கு தொலைபேசியில் கதைக்கும் போதே
தெரிவித்தார். தயவுசெய்து எமது பிள்ளைகளை எம்மிடம் தாருங்கள் என
கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதன் போது கடத்தப்பட்ட ஐவரில் உள்ளடங்கும் டிலான் மொஹம்மட் எனும் மாணவனின் பெற்றோர் பேசுகையில்:
எமது பிள்ளையைக் கடத்தியவர்கள் கடற்படையினர் என்பது தெரியவந்த
போது மிக கவலையாக இருந்தது. ஏனெனில் நாமும் இராணுவ குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர். எனினும்
இவ்வாறான கடத்தல்களை ஒரு போதும் உண்மையான இராணுவ வீரர்கள்
புரியமாட்டார்கள்.
எமது பிள்ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது
மகன் புலி என நிரூபித்தால் நான் எனது முறைப்பாட்டை மீளப்
பெற்றுக்கொள்வேன். அப்பாவிகளை கடத்தி காணாமல் ஆக்கியவர்களுக்கு
எதிராக நடவடிக்கை வேண்டும்.
எமது பிள்ளைகளை கடத்தியோரை நாம் அடையாளம் காணவில்லை. ஆனால்
புலனாய்வுப் பிரிவினரே, கடற்படை அதிகாரிகளின் சாட்சியங்களுக்கு
அமைவாகவே அவற்றை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி கைது
செய்யப்பட்டுள்ளவர்கள் எமது பிள்ளைகளை கடத்தியமைக்கு பொறுப்புக்
கூற வேண்டும். தயவு செய்து அரசியல் இலாபத்துக்காக எமது பிள்ளைகளைப்
பயன்படுத்த வேண்டாம் எனக் கோரினார்.
இதனையடுத்து தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்படையினரால்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா எனும்
பெண் ஊடகங்களுக்கு பேசினார்.
'தனது காதலியுடன் வேனில் போகும் போது எனது மகன் 2008.09.11 ஆம் திகதி
கடத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் எனது கணவரை 2008.10.17
ஆம் திகதி கடத்திச் சென்ரனர். மகன் கணவர் இருவர் தொடர்பிலும் இதுவரை
தகவல் இல்லை.
என்னிடம் மகனையும் கணவரையும் விடுவிக்க கடற்படையின் அண்ணாச்சி என
தன்னை அறிமுகம் செய்த ஒருவர் கப்பம் கோரினார். 15 இலட்சம் கோரினார்.
என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். இறுதியில் 5 இலட்சம் கோரி அதனை
மூன்று இலட்சமாக குறைத்துக்கொண்டு பணத்தையும் எடுத்துக் கொண்டு
நாரம்மல பகுதிக்கு சென்று கொடுத்தேன். அப்போதும் அவர்களை
விடுவிக்கவில்லை. கொடுத்ததில் ஒரு 1000 ரூபா நோட்டு குறைவதாக
கூறினர். மகனையும் கணவரையும் திருப்பித் தரவில்லை.
அண்மையிலேயே மகன் பயணித்த வேன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலும்
எஞ்ஜின், செஸி இலக்கங்கள் வேறாக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்
பிரிவினர் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என தெரியவில்லை. தயவு செய்து
எனது கணவரையும் மகனையும் மீட்டுத் தாருங்கள் என்றார்.
இதனையடுத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள மொஹம்மட் சாஜித் எனும்
நபரின் சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவரும் தனது சகோதரை
மீட்டுத் தருமாறும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எவ்வித சம்ப்ந்தமும்
அற்றவர் எனவும் கூறினார்.
குறிப்பாக விமல் வீரவன்ச தமது பிள்ளைகளை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு
படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 8 வருடங்களின் பின்னர்
இவ்வாறானதொரு விடயத்தை அவர் தெரிவிப்பதானது கவலையளிப்பதாகவும் பெற்றோர்
தெரிவித்ததுடன் இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என கை
கூப்பி வேண்டுகோள் விடுத்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment