இலங்கையில் பாரதி - அங்கம் 26 முருகபூபதி





பாரதி,  தமது வாழ்நாளில்  கவிதை, கட்டுரை, விமர்சனம் மற்றும் இதழியல் ஊடகத்துறையிலும்தான் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது வாழ்க்கைச்சரிதையை அவரது மறைவிற்குப்பின்னர் வெளியான நூல்களிலிருந்தும், வெளியான திரைப்படங்கள், நாடகங்கள் முதலானவற்றிலிருந்தும் தெரிந்துகொண்டோம்.
இலங்கையில் எங்காவது பாடசாலைகளில் அல்லது சனசமூக நிலையங்களில் விளையாட்டுப்போட்டிகள் , விழாக்கள் நடைபெறும் வேளைகளில் விநோத உடைப்போட்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில்  பங்குபற்றி ரசிகர்களை பரவசப்படுத்துவார்கள்.
பாரதி வேடமிட்டு மக்களிடம் வலம் வருபவர்களிடம் பாரதிக்கே உரித்தான கம்பீரத்தைத்தான் நடுவர்கள் எதிர்பார்த்து புள்ளிகளும் தருவார்கள். பாரதி வேடமிட்டு, குழந்தைகள் நிகழ்ச்சிகளில் தோன்றும்போது பாரதியின் வீர வசனங்களை அல்லது பாடல்களைப்பாடுவார்கள்.
இலங்கையில் அன்றும் இன்றும் நடந்தேறும் இக் காட்சிகள்தான் தமிழர் புகலிட நாடுகளிலும் தொடருகின்றது.
தமிழ்த்திரைப்படங்கள் பலவற்றிலும் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் அதே சமயம், பாரதியாகவே பலர் தோன்றி நடித்து அசத்தியுமிருக்கிறார்கள்.




கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடிகர் எஸ்.வி. சுப்பையா பாரதியாகவே நடித்தார். இருகோடுகள் படத்தில் ஒரு நாடகத்தில் பாரதி வேடமிட்டு நடிகர் நாகேஷ் களைகட்டினார். கைகொடுத்த தெய்வம் என்ற படத்தில் சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடலுக்கு சிவாஜிகணேசன் பாரதி தோற்றத்தில் கம்பீரம் காண்பித்தார்.
இயக்குநர் கே. பாலச்சந்தர், நடிகர் கமல்ஹாசனை வைத்து பாரதி என்ற படத்தை தாயாரிக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு, பின்னர் கைவிட்டார்.
எனினும் ராஜ ஞானசேகரன், பாரதி என்ற படத்தையே வெளியிட்டு சாதனை புரிந்தார். அதில் கன்னட நடிகர் ஷயாஜி ஷிண்டே பாரதியாகத்  தோன்றினார்.
இந்தத்தகவல்களின் பின்னணியில் இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலத்தில் மேடையேற்றப்பட்ட மகாகவி  பாரதி நாடகத்தையும் அதே காலப்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த  எழுத்தாளரும் கலைஞருமான சிலோன் விஜயேந்திரன்  என்பவர்    பாரதி வரலாற்று நாடகம் என்ற நூலையும் வெளியிட்டிருந்தார்.
யார் இந்த சிலோன் விஜயேந்திரன்....?

இலங்கையில் ஆசுகவி எனப்போற்றப்பட்ட கல்லடிவேலன் அவர்களின் பேரனான இவர், யாழ்ப்பாணத்தில் 1946 இல் பிறந்து பின்னாளில் தமிழ்நாட்டில் வாழ்ந்து 2004 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில்  இடம்பெற்ற  ஒரு தீவிபத்தில் சிக்கி பரிதாபகரமாக  இறந்தார்.
பல நூல்களை வரவாக்கியிருக்கும் விஜயேந்திரன் பைலட் பிரேம்நாத், பொல்லாதவன், புன்னகை மன்னன் முதலான படங்கள் உட்பட எழுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைநடிகராகவும் தோன்றியிருப்பவர்.
ஆசுகவி கல்லடி வேலன், கம்பதாசன், உட்பட பலரைப்பற்றியும் ஆய்வுநூல்கள் எழுதியிருக்கும் இவர், சிறுகதை, கவிதை,  நாடகம் முதலான துறைகளிலும் சுமார் 30 நூல்கள் எழுதியிருக்கிறார்.
இலங்கையில் தனிநபர் நடிப்பில் பிரபல்யம் பெற்றிருந்த இவர், தமது இறுதிக்காலத்தை சென்னையிலேயே கடந்தார். ராஜீவ் காந்தி கொலைச்சம்பவத்தினால் இவரையும் புலானாய்வுப்பிரிவு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து ஒரு வருடத்திற்கும் மேல் தடுத்துவைத்து விசாரித்துவிட்டு விடுதலை செய்தது.
இவருடைய பல நூல்களை தமிழ்நாடு அல்லயன்ஸ் மற்றும் காந்தளகம் முதலான பதிப்பகங்கள் வெளியிட்டன.
ஈழவாணன், ஈழத்துச்சோமு, ஈழவாணி, ஈழவேந்தன், ஈழகணேஷ்  முதலான புனைபெயர்களில் பலரும் அறியப்பட்டிருக்கிறார்கள். விஜயேந்திரன் தம்மை சிலோன் விஜயேந்திரன் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டு,  எழுத்துலகிலும் நாடகம் மற்றும் தமிழ்த்திரையுலகிலும்  நடமாடியவர்.
மகாகவி பாரதியின் வாழ்வில்  இடம்பெற்ற பல முக்கிய நிகழ்வுகளின் பின்னணியில் இவர் எழுதிய ( ஜூன் 1982) நூல் பாரதி வரலாற்று நாடகம். இதற்கு பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதன் முன்னுரையும், சிலம்புச்செல்வர் ம.பொ.சி அணிந்துரையும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார் மதிப்புரையும் வழங்கியிருக்கிறார்கள்.
" பாரதியின் இந்த முதல் நூற்றாண்டு விழாவின்போது அந்தப்பாவலனுக்குப் புகழாரம் சூட்டும் முயற்சியாகப் பற்பல எழுத்துப்படையல்களும் வெளிவருவது  இயற்கை, என்றாலும் இந்தப்புகழராங்களில் மகிழமும் மல்லிகையும் மட்டுமல்லாது, சமயங்களில் எருக்கம் பூக்கள்  சிலவும்  இடம்பெற்றுவிடுகின்றன என்பதும் ஒரு கசப்பான உண்மை.
பாரதிக்கு மகுடம் சூட்டுவதாக எண்ணிக்கொண்டு அவன் தலையில் மண் சட்டியைக் கவிழ்க்கும் பொய்யும் புனைசுருட்டுமான ' தகவல்' களும் தவறான மதிப்பீடுகளும் ' புகழாரம்' என்ற பெயரில் புகுந்துவிடுகின்றன என்பது கண்கூடு.
இத்தகைய சூழ்நிலையில்,  பாரதியைப்பற்றி வெளிவந்துள்ள வரலாற்று  நூல்கள், மற்றும் குறிப்புகள் ஆகியவற்றிலிருந்து உண்மைகளை  கூடியவரையில் நன்கு சலித்தெடுத்துப் பதரையும் நீக்கி, பாரதியின் வரலாற்றை எளிமையும் இனிமையும் மிக்க நடையில்  சுவையான நாடகமாக்கித்தர முயன்றிருக்கிறார் இலங்கை யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த  ஈழத்தமிழர் இளைஞர்  விஜயேந்திரன்" என்று  தமது  முன்னுரையில்  குறிப்பிட்டுள்ளார்  தொ.மு. சி.ரகுநாதன்.
இந்தத்தகவல்கள்  ஒரு புறமிருக்க, இலங்கையிலும் அதே நூற்றாண்டு காலத்தில் கொழும்பில் மேடையேறிய கொழும்பு நாடக வட்டம் என்ற அமைப்பு  தயாரித்த  மகாகவி பாரதி  நாடகத்தையும் பார்ப்போம்.
அந்தனி ஜீவா, இலங்கையில் பிரபலமான எழுத்தாளர், கலைஞர். கொழுந்து என்ற இலக்கிய இதழையும் நடத்தியவர். சுவாமி விபுலாநந்தர், அ.ந.கந்தசாமி, நடேசய்யர், சி.வி வேலுப்பிள்ளை, இந்திராகாந்தி பற்றியெல்லாம் நூல்களை எழுதியிருக்கும் இவரது அக்கினிப்பூக்கள் என்ற நாடகம் பல தடவைகள் மேடையேறியிருக்கின்றன.
அந்தனி ஜீவா 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு டவர் மண்டபத்தில் மேடையேற்றிய நாடகம்தான் மகாகவி பாரதி.
இந்த நாடகம் பின்னர் கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாவின்போது பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் அரங்கேறியது.
இதனைப்பார்த்து ரசித்த  தொ.மு.சி. ரகுநாதன்  மேடையேறி நடித்த கலைஞர்களையும் எழுதிய இளங்கீரனையும் பாராட்டினார். ஆனால், அதனை இயக்கியவர் அந்தனி ஜீவாதான் என்ற தகவல் அவருக்குத்தரப்படவில்லை.
முதல் மேடையேற்றத்தின்பொழுது அதனை எழுதிய இளங்கீரனுக்கும் இயக்கிய அந்தனிஜீவாவுக்கும் இடையே இருந்த நட்புறவு இரண்டாவது தடவை  அதே நாடகம் தமிழகப்பேச்சாளர்களின் முன்னிலையில்  மேடையேறியபோது  நீடித்திருக்கவில்லை.
எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கே உரித்தான இயல்புகள் அங்கும் வெளிப்பட்டிருந்ததையும்  குறிப்பிடவேண்டியிருக்கிறது.
பாரதியின் வாழ்வில் அவரது புதுச்சேரி புகலிடம் மிகவும் முக்கியத்துவமானது. சென்னையில் பிரிட்டிஷாரின் அடக்குமுறை தலைதூக்கியதனால் தலைமறைவாக பாரதி பிரான்ஸின் ஆதிக்கத்திலிருந்த புதுவைக்கு குடும்பத்துடன் வந்துவிடுகிறார் என்பது வரலாறு. இங்குதான் அவரது பல அமரத்துவமான படைப்புகள் வெளியாகியிருக்கின்றன.
புதுவையில்  பாரதியின்  இடப்பெயர்வு வாழ்க்கை குறித்து செல்லம்மா பாரதி, வ. ரா, யதுகிரி அம்மாள், பாரதிதாசன் உட்பட பலரும் எழுதியிருக்கிறார்கள்.
புதுவை வாழ்க்கையை சித்திரித்து, அங்கு பாரதியுடன் நடமாடிய  சீனிவாசாச்சாரி, வண்டிக்காரன், நோயாளி, பத்தர், சுந்தரேசன், மளிகைக்கடைக்காரன், யதுகிரி, அம்மாக்கண்ணு, வக்கீல் ஆகியோருடன், செல்லம்மாவையும் சித்திரிக்கும் நாடகத்தையே இளங்கீரன்  எழுதியிருந்தார்.
இந்நாடகம் பற்றி 1982 டிசம்பரில் கொழும்பு நாடக வட்டம் 
வெளியிட்ட  துண்டுப்பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
தமிழ்மொழிக்கும் கவிதைக்கும் புத்துயிரும் புதுப்பொலிவும் வலிவும் ஊட்டி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் மறுமலர்ச்சியைத்தோற்றுவித்த மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றில் ஒன்றாக பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியரும் வானொலி நாடக ஆசிரியருமான இளங்கீரனின் இந்நாடகமும் அரங்கேறுகிறது.
மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக்கொண்ட  இதுபோன்ற முழு நாடகம் எதுவும் நாம் அறிந்தவரையில் இதுவரையில் இந்தியாவிலும் மேடையேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையும் கருத்திற்கொண்டு  இக்கலையாக்கத்தை பாரதி அன்பர்களும் கலா ரசிகர்களும் நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.
கொழும்பில் 1982 இல் மகாகவி பாரதி நாடகம்  இளங்கீரனால் எழுதப்பட்டு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் மேடையேற்றம் காண்கிறது.
தமிழ் நாட்டில் அதே 1982 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் பாரதி வரலாற்று நாடகம் சிலோன் விஜயேந்திரனால் எழுதப்பட்டு நூலுருவில் வெளியாகியிருக்கிறது.
இந்தத் தகவல்களை பாரதி பக்தர்களின் கவனத்திற்குச்  சமர்ப்பிக்கின்றோம்.
இலங்கை வானொலியில்.....
இலங்கையில் தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முன்னர்  இலங்கை வானொலி மிகவும் வலிமையான ஊடகமாகவே திகழ்ந்திருக்கிறது. இலங்கையில் மாத்திரமன்றி தமிழகத்திலும் இலங்கை வானொலிக்கு சிறந்த வரவேற்பிருந்தது.
அதன் தேசிய சேவை, வர்த்தக சேவை என்பன பல தரமான நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும், உரைச்சித்திரங்களையும் நேயர்களை கவரும் விதமாக ஒலிபரப்பிவந்திருக்கின்றன.
வானொலி அறிவிப்பாளர்களுக்கு நாடெங்கும் ரசிகர்கள் தோன்றினர். அவர்களின் குரல்வளத்தினால் மயங்கியவர்கள் நேரிலேயே வந்து பார்ப்பதற்காக வானொலி கலையகத்திற்கும்  வந்திருக்கும் சுவாரஸ்யமான தகவல்களும் இருக்கின்றன.
இலங்கை வானொலி சம்பிரதாய பூர்வமாக பாரதி பிறந்த - மறைந்த தினங்கள் வரும் காலங்களில் பாரதியின் பாடல்களை ஒலிபரப்பியும் உரைச்சித்திரங்களை தொகுத்தும் வழங்கியிருந்தாலும், பாரதி நூற்றாண்டு காலத்தில் தினமும் காலையில் ஒரு பாரதி பாடலை குறிப்பிட்ட நூற்றாண்டு காலத்தில் ஒலிபரப்பியது.
அக்காலப்பகுதியில் அங்கு பிரதி ஞாயிறு தோறும் மதியம் சிறுவர் மலர் நிகழ்ச்சியிலும் பாரதிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
எழுத்தாளரும், நயப்புரைகள் எழுதுவதில் கைதேர்ந்தவரும் கொழும்பில் இன்றும் இயங்கிவரும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் (தகவம்) ஸ்தாபகருமான (அமரர்) வ.  இராசையா வானெலி மாமாவாக அறியப்பட்டிருந்தார்.
சிறுவர் மலர் நிகழ்ச்சிகளில் பாரதி பற்றிச்சிறுவர்கள் எழுதிய கட்டுரைகள் பலவற்றை ஒலிபரப்பினார். பாரதி பாதையில் என்ற தலைப்பில் சிறார்களை கவிதைகள் புனையச்செய்து அவற்றுக்கும் களம் வழங்கினார்.
அகில இலங்கையிலும் நடைபெற்ற பாரதி நினைவுப்பேச்சுப்போட்டிகளில் பரிசு பெற்ற சிறார்களை வானொலி கலையகத்திற்கு வரவழைத்து பேசவைத்தார்.
பாரதியின் கவிதைகள் மற்றும் உரைநடைகளை சிறுவர் மலரில் அறிமுகப்படுத்தினார். அவருடைய வாழ்வில் இடம்பெற்ற அவரது குணவியல்புகள்,  மற்றும் அவரது கவித்துவம், ஆகியனவற்றை உணர்த்தக்கூடிய வாழ்க்கைச்சம்பவங்களையும் சிறார்களைக்கொண்டு ஒலிபரப்பினார். அத்துடன் பாரதி பாடல்களை அடியொற்றி, அச்சமில்லை, குடுகுடுப்பைக்காரன், தீராதவிளையாட்டுப்பிள்ளை, பாரதி வந்தார் முதலான சிறுவர் நாடகங்களையும் வ. இராசையா ஒலிபரப்பினார்.
இலங்கை வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியானது. 08 - 16 வயதிற்குட்பட்ட சிறார்களின் சுய ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமையப்பெற்றதாகும். அதனால், இவர்களுடைய அறிவு, அனுபவம், தேவைகள், என்பனவற்றை கருத்திற்கொண்டே பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை வானொலியில் ஒலிபரப்புவதற்கு அவர் திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டவர் வ. இராசையா.
இந்நிகழ்ச்சிகளை  ஒலிபரப்பிய காலப்பகுதியில், சிறார் நேயர்கள் விரும்பி வரவேற்றதையும், இதில் ஏற்பட்ட அவர்களுடைய ஆர்வமும் உற்சாகமும் நயப்பும் காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து வந்ததை அவர்கள் சிறுவர் மலருக்கு எழுதிய நேயர் கடிதங்களிலிருந்து காண முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்தும் நாட்டின் ஏனைய பாகங்களிலுமிருந்தும் பல மாணவர்கள் தாம் பரிசுபெற்ற பாரதி தொடர்பான பேச்சுப்போட்டி உரைகளை நிகழ்த்துவதற்கு மிகவும் உற்சாகமக வானொலி கலையகத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் வ. இராசையா, விந்தைச்சுவைக்கலைகள் என்ற  நிகழ்ச்சியையும் நடத்தியிருப்பவர்.
இதில், கலாநிதி இ . பாலசுந்தரம் " பாரதி பாடலில் விந்தைச்சுவைகள்" என்னும் தலைப்பிலும் இளங்கீரன் " புதுயுகக்கவிஞன்" என்ற  தலைப்பிலும் உரையாற்றியிருப்பதாக வ. இராசையா பதிவுசெய்துள்ளார்.
இவ்வாறு இலங்கையில், பாரதியின் தாக்கம் மேடைகளிலும் வானொலி ஊடகத்திலும் நீடித்திருந்த பொற்காலம் குறிப்பிடத்தகுந்தது.
(தொடரும்)







No comments: