தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம். - நடேசன்

.

எக்சைல் 1984.

சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது.
எமது நிறுவனம் வெளிநாட்டில் தமிழர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து இருந்து பெற்றபணத்தால் வளர்ந்து வந்தது. ஒரு வருடத்தின் பின்பு 86 ஆண்டு ஆரம்பக்காலத்தில் எமது முதலாவது வருடாந்தப்பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது.
144 சூளைமேட்டுத்தெருவில் மேல்மாடியில் காலை பத்து மணியளவில் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. செயலாளராக நான் எல்லாவிடயங்களையும் தயார் செய்துவிட்டு கூட்டத்திற்கு, அரைமணிக்கு முன்பாக மாம்பலத்தில் வசிக்கும் தலைவரை ஓட்டோவில் சென்று அழைத்துவரும்படி எங்களுக்கு உதவியாக இருந்து கருணாநிதியை அனுப்பினேன்.


தலைவருக்கு வாகனத்தை அனுப்புவது அதுவே முதல் தடவை. வழமையாக நான் அப்படிச் செய்யமாட்டேன்.ஆனால் அன்று மனத்தில் ஏதோ ஒரு பட்சி தலைவர் வருமாட்டார் எனச் சொன்னது. பத்துமணிக்கு மேலாகிவிட்டது. கூட்டம் தொடங்குவதற்கான நேரம் கடந்து விட்டது. உபதலைவராக இருந்த டாக்டர் சாந்தி இராஜசுந்தரம் வந்து விட்டார். விடுதலைப்புலிகளைத் தவிர மற்றைய இயக்கத்தின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். தலைவருக்காகக் காத்திருந்தோம்.
சூழைமேடு தெருவில் மேல்மாடியில் உள்ளது எங்கள் நிறுவனம் தெருவில் கார்களையும் மற்றைய வாகனங்களினதும் இரைச்சலை மீறி படிகளில் ஏறிவந்த கருணாநிதியின் செருப்பின் காலடி சத்தம் தெளிவாக கேட்டது. அடுத்த செருப்புச் சத்தத்திற்காக எனது காது கூர்மையாகியது. கருணாநிதியைத்தொடர்ந்து தலைவர் வருவார் என விழித்திருந்தபோது கருணாநிதி மட்டும் வந்து எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
கருணாநிதி தலையை நிமிர்த்தி எம்மைப் பார்த்தபடி ” டாக்டர் செங்கல்பட்டிலுள்ள செய்யாறு அகதிகள் முகாமிற்குப்போகவேண்டுமாம். தனக்கு வரநேரமில்லை ” என்றார். ”
எல்லோருக்கும் ஏற்பட்ட ஆச்சரியத்தை முகங்கள் காட்டிக்கொடுத்தது. ஆனால் வாய் திறக்கவில்லை. ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை. அதைவிட வேறு ஒன்றிற்குப் போகவேண்டும் என்பது மிகவும் அசாதாரணமான விடயம். மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டபோதும் எனக்கும் நிதிப்பொறுப்பாளரான டாக்டர் சிவநாதனுக்கும் அதிகம் வியப்பளிக்கவில்லை. ஆனால் அலட்சியமான தலைவரின் பதில் அவரின்மேல் வருத்தத்தை உருவாக்கியது.
அக்காலத்தில் அடையாறுக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட புயல் பாதுகாப்பு மண்டபங்களில் இருந்த இரண்டு அகதிகள் முகாங்களுக்கு திருமதி அடல் பாலசிங்கம் போய் மருந்துகள் வினியோகிப்பதும் , அவரோடு டாக்டர் ஜெயகுலராஜா செல்லுவதும் , எனக்கும் டாக்டர் சிவநாதனுக்கும் தெரிந்த விடயம். அவர் அதைத் தனிப்பட்ட ரீதியாகச் செய்கிறார் என நினைத்திருந்தோம். ஆனால் தான் தலைவராக இருந்த நிறுவனத்தை இப்படி அந்தரத்தில் கைகழுவுவார் என நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இந்த உண்மையை அன்று வந்திருந்த கூட்டத்தவரிடம் நாங்கள் பகிரவில்லை. உபதலைவரை வைத்து வருடாந்தக்கூட்டத்தை நடத்தினோம். அதன்பின் எமது நிறுவனத்தில் இருந்து விலகுவதாக டாக்டர் ஜெயகுலராஜா செய்தி அனுப்பிய பின்பு டாக்டர் சாந்தி இராஜசுந்தரம் எமது தலைவராக இயங்கினார்.
டாக்டர் ஜெயகுலராஜா, மிகவும் நேர்மையும் கனிவான உள்ளமும் கொண்டவர் . எந்த நேரத்திலும் குரலை உயர்த்திக் கூட பேசமாட்டார். அவரோடு நான் பழகிய காலத்தை இன்னமும் சந்தோசனமான காலமாக நினைக்கிறேன் அப்படிப்பட்டவரது செய்கைக்கு எமக்கு விளக்கம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவரே தமிழ் புனர் வாழ்வுக்கழகத்தின் தலைவராகினார். ஒருநாள் அவரை சந்தித்தபோது ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்? எங்களுக்கு சொல்லி விட்டு இராஜினாமா செய்திருக்கலாமே?’ என்றபோது ” “தம்பிக்கு நான் கடமைப்பட்டவன் ” என்றார் சுருக்கமாக. அவரது நிலை எமக்குத் தெரியாதபோது இதைத் தவறாக நாங்கள் கருதவில்லை.
இந்தத் தமிழர் மருத்துவ நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு 12000 இந்திய ரூபாயை அமரிக்காவில் வதியும் எனது மைத்துனர் டாக்டர் ஜெயகுலராஜாவிடம் கொடுத்தார் என்பதையும் இங்கு நினைவு கொள்ளவேண்டும். அவர் அந்தப் பணத்தை எம்மிடம் தந்து கோடம்பாக்கம் வங்கிக் கிளையில் கணக்கை ஆரம்பிக்கச்சொன்னார்.எனவே இந்த நிறுவனத்தின் முக்கிய பங்காளி அவரே.
இந்த நிகழ்வின் பின்பாக உருவாகியதே தமிழர் புனர்வாழ்வுக்கழகம். அதனது தலைவராக டாக்டர் ஜெயகுலராஜா செயல்ப்பட்டார் அவர்களிடம் வெள்ளை வான் ஒன்றிருந்தது. அந்த வானில் சென்றே விடுதலைப்புலிகள் தமிழர் நிவாரண நிதிக்காக தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களிடம் சேகரித்த நான்குகோடியில், மூன்று கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டதாக தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது. இந்த நிறுவனமே பிற்காலத்தில் வெளிநாடுகளில் பெரும்பணத்தை ஆயுதத்திற்குச் சேகரிக்க உதவியது. நான் மெல்பேன் வந்தபின்பு டாக்டர் ஜோய்ஸ் மகேஸ்வரன் இந்த நிறுவனத்தின் சர்வதேசத்தலைவராகவும் பின்பு இலங்கை அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குழுவில் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் உட்பட ஐந்து இயக்கங்களை உள்ளடக்கியிருந்ததமிழர் மருத்துவ நிறுவனத்தை வெட்டி ஓடியதுடன், அதன் தலைவராக இருந்தவரை வைத்தே தமிழ் புனர்வாழ்வுக்கழகத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். இந்த நிகழ்வின் பின்பே மற்ற இயக்கங்களுடன் மோதல் உருவாகியது. மற்றைய இயக்கங்கள் உட்கட்சிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அக்கினிக்குஞ்சு ஒன்று எமது நிறுவனத்தில் எப்படி உருவாகியது என்பதைப் பார்க்கத்தவறினர் என்பதற்காக இதை விவரித்தேன். அரசியல், சமுத்திரத்தில் பாய்மரக்கப்பல் ஓடுவது போன்றது. சிறிய அசைவுகளை கவனிக்கத் தயங்கியவர்கள் உயிர் பிழைப்பதில்லை.
அந்த வருடாந்த கூட்டத்தின் பின்பு இருந்து விடுதலைப்புலிகளின் பிரிதிநிதிகள் எமது மாதாந்தக்கூட்டங்களுக்கு வாராதபோதிலும் எமது நிறுவனம் பல அகதி முகாங்களுக்கு தொடந்ந்து சேவை செய்தது. ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எங்களைப் போட்டியாளர்களாகப் பார்த்தார்கள்
ஆரம்பக்காலத்தில் இந்திய கரையில் அகதிகளாக வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் மன்னார்கரையோரப்பகுதியை சேர்ந்தவர்களும் சிறிதளவு தொகையில் இந்திய தொடர்புடன் மன்னார் பகுதியின் விவசாயப்பிராந்தியங்களில் வசித்தவர்கள். இந்த இரு பகுதியினரும், இயக்கங்களது தொடர்புகள்கொண்டவர்கள் என்பதாக இராணுவம் , கடற்படையின் நெருக்கடிக்கு உட்படுத்தியதால் வெளியேறினவர்கள். 85ன் கடைசிக்காலத்தில் இலங்கை இராணுவத்தாக்குதலால்
திருகோணமலைப்பிரதேசத்தினர் பலர் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் பலர் வல்வெட்டித்துறையில் கொண்டு, கொடுத்தவர்கள். இவர்கள் வந்து இறங்கியபோது நாகபட்டினம் பகுதி புயல் பாதுகாப்புமண்டபங்களில் தங்கினார்கள்.
தமிழர் மருத்துவ நிறுவனம் அவர்களில் பலருக்கு முதலுதவிகளைப் பயிற்சியை அளித்து இரு திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களை அங்கு நிரந்தரமாக பொறுப்பாக நியமித்தோம்
அவர்களில் ஒருவரான ரவி ஒரு நாள் அதிகாலையில் வந்து என்னிடம் “எங்களைப் புலிகள் இனி இந்தப்பக்கமே வரவேண்டாம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இங்கு சேவை செய்யும் எனத் துரத்திவிட்டார்கள். ஆனால் மக்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் யாரோ பிரபாகரனது மாமா முறையானவர் எங்கள் சார்பாகப் பேசிய பெண்களுக்கு தூசணத்தால் பேசி நாங்கள் தான் இந்த முகங்களுக்கு இனிப்பொறுப்பு எனச் சொல்லி விட்டார். நாங்கள் பயத்தில் ஓடிவந்து விட்டோம். ” என்றார்
இது என்னடா மருத்துவசேவை செய்ய வந்து புலியோடு பிரச்சனைப்படவேண்டியுள்ளது என் உள்ளுர பயம் ஏற்பட்டது. வெளிக்காட்டமுடியாது. நான் நிறுவனத்தின் செயலாளர். ஏதாவது செய்யவேண்டும். எனது மனப்பிராந்தியைக் காட்டாமல் ரவியிடம்
“யார் இப்பொழுது நாகபட்டினத்தில் இருப்பது?
” டாகடர் ஜெயகுலராஜா வந்து நாகபட்டணத்தில் தங்கியிருக்கிறார் ”
‘சரி, அவரோடு பேசுவோம்.’ என அவர்கள் மூலமாக வெள்ளிக்கிழமை வந்து பேசிப்பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகத் தகவல் அனுப்பினேன்
சென்னையில் இருந்து நானும் சிவநாதனும் ரவியுமாக வியாழக்கிழமை காலை நான்கு மணிக்கு நாகபட்டினம் சென்று ஐந்து மணிக்கு டாக்டர் ஜெயகுலராஜா தங்கியிருந்த ஹோட்டல் கதவைத்தட்டினோம்.
ஒரு நாள் முந்திச் சென்றதன் காரணம் வெள்ளிக்கிழமை நாங்கள் போவதைத் தெரிந்து எங்களைக்கடலுக்குள் படகில் கொண்டு சென்று கல்லைகட்டி கடலில் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாது. ஏற்கனவே ரெலோ, புளட், புலிகள் எல்லாம் தங்களவர்களை வள்ளத்தில் நடுக்கடலில் கொண்டு போய் நடுக்கடலில்
தள்ளிருக்கிறார்கள். அக்காலத்தில் இந்தியர்களுக்கு (தமிழ்நாட்டுப் புலன் ஆய்வுப்பிரிவு) கரையில் நடந்த குற்றங்களை புள்ளிவிவரத்திற்காக மட்டும் கணக்கு வைப்பார்கள். ஆனால் கடலில் நடந்த குற்றங்களுக்கு அவர்கள் கணக்கு வைப்பதில்லை. இவையெல்லாம் டாக்டர் சிவநாதனும் நானும் அறிந்து வைத்திருந்தோம்
பயந்து பயந்துதான் நானும் சிவநாதனும் திருகோணமலை ரவியும் பஸ்சில் பிரயாணம் செய்தோம். அன்று இரவு பஸ்சில் போட்ட திரைப்படத்தின் பெயர் தெரியாது என்றால் அதற்கு மேல் எமது மனநிலையை விளக்கவேண்டியது இல்லை.இப்படியான விடயங்களை வீட்டில் சொல்லவுமில்லை.
நாகபட்டினம் பஸ்நிலயத்தில் இறங்கியபோது விடியவில்லை. ஓர் இரு கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அங்கு ரீ குடித்துவிட்டு ஓட்டோவில் சென்று தட்டியபோது டாகடர் ஜெயகுலராஜா கதவைத் திறந்ததும் எங்களைப் பார்த்து திடுக்கிட்டார்.
“என்னடாப்பா இந்த வேளையில்? ”
உங்கட தம்பியின்ர ஆட்களுக்கு பயந்துதான் ஒரு நாள் முதல் வந்தோம் என அவரிடம் சொல்லமுடியாது.
“வேறு வேலையுமிருந்தது. அதையும் சேர்த்து ஒன்றாக முடிப்பதற்கு வந்தோம். அதிகாலையில் வந்தால்தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதால் இப்போது வந்தோம்’
“உள்ளே வாங்கோ”
“டாக்டர் உங்களுக்குத்தெரியும்தானே இந்த முகாங்களில் நாங்கள் உங்கள் காலத்தில் இருந்தே நாங்கள் வேலை செய்வது—”
“இவர்களுக்கு பேசத்தெரியது”
” பரவாயில்லை இங்கு பத்து அகதிமுகாங்களில் ஐந்தை நாங்கள் பார்க்கிறோம்’ நீங்கள் ஐந்தைப் பாருங்கள். சமூகசேவை செய்ய வந்து ஏன் பிரச்சனை? இல்லை எல்லாவற்றையும் நீங்கள் செய்வதன்றால் நாங்கள் அடுத்த மாவட்டதிற்கு போகிறோம் ” என்றேன்
” பரவாயில்லை நீங்கள் ஐந்தைச் செய்யுங்கள். நான் இவர்களுடன் பேசுகிறேன் ” என்றார்
டாகடர் ஜெயகுலராஜாஅறையை விட்டு வெளியே வரும்போது ரவி “இதுதான் எங்களை துரத்தியவர் பிரபாகரனது மாமாவாம் ”
நான் திரும்பியபோது அவர் முகத்தை திருப்பிக்கொண்டார். தொந்திக்குமேல் வெள்ளை சேட்டும்ம முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிய நீலக் கோட்டுச் சரமும் கறுத்த மயிர்கள் கொண்ட அவரது கால்களும் இன்னும் நினைவுள்ளது.
இதன் பின்பு அக்காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் செயலாளராக இருந்த நாதன் என்பவர் என்னிடம் “யாழ்ப்பாணத்திற்கு வா பார்த்துக்கொள்வோம் ” என்றார்
சிரித்தபடியே அவரை விலத்திச் சென்றேன்.
அதன் பின்பு இரண்டு வருடங்கள் சென்னை வீதிகளில் வெள்ளைவான் எதிரில் வந்தால் பக்கத்தில் ஏதாவது சந்து உள்ளதா எனப் பார்ப்பேன். போரை மட்டும் விடுதலைப்புலிகள் ஏகபோக குத்தகைக்கு எடுக்கவில்லை. தமிழ் மக்களுக்குச் செய்த மருத்துவச்சேவைகளுக்கும் அவர்களே ஏகபோக கொந்தராத்தை எடுக்க நினைத்தார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற்காலங்களில் தமிழர்கள் இருந்த எல்லா இடங்களுக்கும் விஸ்தரித்தார்கள்.
வருடங்களாகிய போதிலும், கொந்தராத்து எடுத்தவர்கள் மறைந்தாலும், கொந்தராத்து எடுத்த முறைகளின் நினைவுகள் மறையவில்லை. இவையெல்லாம் கடந்தகாலம் மறந்துவிடவேண்டும் என்றாலும் மறைந்துவிடுமா?
Advertisements

No comments: