.
ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம்
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. சராசரியாக 250 கிலோ முதல் 700 கிலோ எடை கொண்டது. உயரம் 7 முதல் 8 அடி வரை!
பரம சாதுவாகக் காட்சி அளிக்கும் ஒட்டகங்கள், சாதாரணமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை. சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும். ஒட்டகம் ஒன்று 200 கிலோ எடையைச் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தூரம் நடக்கக் கூடியது. பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. பாலைவனப் பகுதிகளில் ஒட்டகங்களை ராணுவத்தினர் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.
கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாட்கள் வாழக்கூடிய சக்தி கொண்டவை, ஒட்டகங்கள். மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் தண்ணீர் குடிக்காமல் ஒட்டகத்தால் இருக்க முடியும்.
சில மாதங்கள் நீர் அருந்தாமல் உலர் நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடித்து விடும். இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் நீர்ச்சத்து ஏறி விடும். பிற விலங்குகள், நீர் இல்லாத உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது. ஏனெனில் ரத்தத்தில் திடீரென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் அந்த விலங்குகளின் சிவப்பணுக்கள் வெடித்து விடும். ஆனால் ஒட்டகங்கள் நீரை அருந்தியவுடன் அதன் இரைப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரைத் தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது. அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது. அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240 சதவீதம் விரிந்து இடமளிக்கிறது.
குட்டி போட்டுப் பாலூட்டும் ஏனைய விலங்குகள் அனைத்திற்கும் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40 சதவீதம் நீர் குறைந்தாலும்கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பு அம்சம் கொண்டது. பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதற்காக அதிகமான நீரைச் சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது, அதன் சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விட்டால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர்நிலையைக் கண்டறிதல் அதன் சிறப்பம்சமாகும்.
பாலைவனத்தின் கடும் குளிரையும், கொடும் வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும் வகையில் அதன் முடியும், தோலும் அமைந்துள்ளன. கடும் குளிருக்கும், வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்ப நிலையை 34 செல்சியசில் இருந்து 41.7 செல்சியஸ் வரை (93 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட்வரை) தாமாக மாற்றிக் கொள்ளும். இப்படி உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34 செல்சியஸ் வரை குறைத்துக் கொள்வதால் கடுங்குளிர் அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது. அதே நேரம் கடும் வெயில் கொளுத்தும்போதும் வெப்பத்தைக் கடத்தாத தனது தடிமனான தோலினாலும், தன் உடல் வெப்ப நிலையை 41 செல்சியஸ் வரை அதிகரித்துக் கொண்டும் கோடையின் சவாலைச் சமாளிக்கிறது.
மேலும் ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல் நீர் வெளியாவது குறைகின்றது. நீர் இல்லாதபோது தனது சிறுநீரையும் ஒட்டகங்கள் பெருமளவு குறைக்க வல்லவை. ஆனால் அதே நேரத்தில் மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2 முதல் 3 செல்சியஸ் வேறுபாடுகளைத்தான் தாங்கும் சக்தி கொண்டது.
ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் அமைந்துள்ள 'திமில்' போன்ற மேட்டுப் பகுதியில் கொழுப்புப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் கொழுப்பு, வளர் சிதை மாற்றம் அடைந்து அதன் துணை வினைப்பொருளாக நீர் உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் ஒட்டகம் தானாகவே பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்கிறது.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. அதோடு ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீரைச் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது.
பாலைவனம் என்றாலே புழுதிக் காற்றும், மணல் துகளும் வாரி இறைக்கும். அப்போது ஒட்டகத்தின் மூக்கில் அமைந்துள்ள விசேஷ மூடிகள் தானாகவே மூடிக் கொள்ளும். காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள், மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகின்றன. அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றனுள் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு மணல் புயலில் இருந்து கண்ணுக்கு முழு பாதுகாப்பை அளிக்கிறது. பாலைவனப் புயலின்போது ஒட்டகங்கள் இமைகளை இறுக மூடிக் கொள்கின்றன. இருந்தபோதிலும் இமைகளின் தோல்கள் கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. அதனால் இமைகள் மூடினாலும் பார்வை மறைவதில்லை.
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது. பிளவுபட்ட இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகண்ட வட்ட வடிவிலான தட்டையான பாதத்தைக் கொண்டது. இதனால் பாலை மணலில் கால்கள் புதைந்து நிலைதடுமாறி விடாமல் சுடும் மணலிலும் அதனால் ஓட முடிகிறது.
இப்படிப்பட்ட விநோத உடல் அமைப்பைக் கொண்ட அதிசயப் பிராணி ஒட்டகம்.
அதனால்தான் திருக்குர்ஆனில், 'ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?' (88:17) என்று ஒற்றை சொற்றொடரில் ஒட்டகத்தை ஒப்புமை காட்டி இறைவன் கூறுகின்றான். ஒட்டகத்தைத் தொடர்ந்து, அதே வசனத்தில் 'வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? பூமி எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது?' என்று தனது வல்லமையை சொல்லிக் காட்டுகிறான்.
வானம், பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், கடல், மலை போன்றவைகளை எப்படி இறைவன் படைத்தானோ அதே அளவுக்கு ஒட்டகத்தையும் அவன் ஒப்பற்ற அதிசயமாகவே படைத்திருக்கின்றான் என்றால், அது மிகையல்ல.
No comments:
Post a Comment