குல தெய்வங்கள்

.


தாமிரபரணி ஆற்றினை  ரசிக்காதவர்கள் கிடையாது எனலாம். இந்த ஆறு என்னைக் கவர்வதற்கு ஒரு பிரத்தியேகமானக் காரணம் இருக்கின்றது. இந்த ஆற்றின் கரையோரங்களில் ஆங்காங்கே சின்னச்சின்னதாய் கோயில்கள் பல  இருக்கின்றன. பெண் தெய்வமாகவும் ஆண் தெய்வமாகவும் வெவ்வேறு பெயர்களுடன் இந்தத் தெய்வங்களின் சிறு கோயில்கள் அமைந்திருப்பதையும் இங்குச் சென்று வந்தவர்கள் நேரில் அறிந்திருக்கலாம்.

ஒரு முறை நான் இந்தப் பகுதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஆற்றங்கரையில் கிராம மக்கள் கூட்டமாக நின்று பூசைக்கு தயாராகிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் ஆடையணிந்த பெண்களும் ஆண்களும் தலையில் குடங்களை ஏந்தியவாறு இருக்க, அருகில் மத்தளம் நாதஸ்வரம் என இசைக்கருவிகளை ஒரு குழு வாசித்துக் கொண்டிருக்க, அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோர் சிலர் பக்கத்தில் நின்று கொண்டு குதூகலம் பொங்க சில சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அதற்குச் சற்று தூரத்தில் சிறிய கோயில் ஒன்று பூமாலையும் வன்ண வண்ண காகித மாலைகளின் அலங்காரமும் செய்யப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்ததையும் காண முடிந்தது.

அங்கிருந்து பயணித்து தொடர்ந்து வரும் போது ஆற்றங்கரையின் இரு பக்கமும் ஆங்காங்கே இன்னும் பல சிறு கோயில்கள் இருப்பதையும் கண்டேன். ஒரு கோயிலின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்று பார்த்தோம்.  அங்கே மண்ணால் செய்யப்பட்ட சிலாரூபங்கள் குவியலகாக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே கோயிலில் செல்லி அம்மன், இசக்கி அம்மன் என்ற தெய்வங்களின் சிலைகளும் வழிபாட்டில் வைக்கப்படிருந்தன. குள்ளமாக அமைக்கப்பட்ட சிறிய சன்னிதிகளில் சாமி உருவங்கள் இருந்தன. வெளியே குவியலாக மண்ணால் செய்யப்பட்ட வண்ணப்பூச்சுக்களால் ஆன கண்களைக் கவரும் பொம்மைகளின் குவியல் பார்ப்பதற்கு ஆச்சரியம் தருவதாக இருந்தது.

தாமிரபரணி கரையோரம் மட்டும் இந்தக் காட்சி என்றில்லாமல் தமிழகத்தின் பல ஊர்களில் இத்தகைய கிராம தெய்வங்களை காணக்கூடியதாக உள்ளது. நாட்டார் தெய்வங்கள் எனும்போது நாம் நன்கறிந்த  காளியம்மன், மாரியம்மன், சுடலை மாடன், காத்தவராயன், மதுரை வீரன். வீரபத்திரன், முனியாண்டி சாமி, பேச்சாயி அம்மன் என்று மட்டும் இல்லாமல் ஊருக்கு ஊர் மாறுபாட்டுடன் வெவ்வேறு பெயர்களுடன் நாட்டார் தெய்வங்கள் அமைந்திருப்பதுதான் நாட்டார் வழிபாட்டின் சிறப்பு. இத்தகைய நாட்டார் தெய்வங்களே மக்களின் மனதோடு அணுக்கமாக அமைந்தவை. இவ்வகை வழிபாடுகளைச் சிறு தெய்வ வழிபாடு என தரம் அமைத்து நாட்டார் தெய்வ வழிபாட்டினை ஏளனப்படுத்தியும், குறைத்து மதிப்பிட்டும் பிரச்சாரம் செய்வது போன்ற செய்ல்கள் நடப்பதையும்  காண்கின்றோம். தெய்வத்துள் சிறு தெய்வம் பெருந்தெய்வம் எனத்தரம் பிரிப்பதே மனிதர்களின் அறியாமையைக் காட்டுவதுதான் என்பது ஒரு புறமிருக்க, இது மேன்மையைப் பிரதிபலிக்கும் மேட்டிமைத்தன்மையின் ஒரு வகை வெளிப்பாடே எனும் உளவியல் கூற்றினையும் ஒதுக்கி விட முடியாது.

நாட்டார் வழிபாடுகள் என்பன மனித குலம் தோன்றிய காலம் தொட்டு வழி வழியாக வருபவை. வரலாற்றை நன்கு ஆராய முற்படுவோர் தெய்வங்களின் தோற்றத்தையும் உருவாக்கத்தையும் அதன் கால அளவினையும் அறிந்து கொள்ள முடியும். காலத்துக்குக் காலம் புதிய தெய்வங்கள் உருவாக்கப்படுதலும் மக்கள் வழிபாட்டில் ஆழமான இடத்தைச் சில தெய்வ வழிபாடுகள் பெறுவதும் சில தெய்வங்கள் கால ஓட்டத்தில் அதன் சிறப்பு குறைந்து துணை நிலை தெய்வமாகக் கருதப்படும் நிகழ்வையும் ஆய்வுக்கண்கொண்டு பார்க்க முற்படுவோர் அறியலாம்.

சராசரி மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை அமையப்பெற்று பின்னர் ஒரு காலகட்டத்தில் வாழ்வில் நிகழும் ஒரு போராட்டத்தில் உயிரை இழக்கும் மாந்தர்கள் சாமிகளாக மக்களால் அங்கீகாரம் பெறும் நிகழ்வானது நாட்டார் வழிபாட்டியலில் ஒரு முக்கியக் கூறு.  இன்று சாமிகளாக அறியப்படுகின்ற பல தெய்வங்களின் இறப்புக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். அதனைச் சுற்றிய நாட்டார் கதைகளும் இருக்கும். சில வேளைகளில் இக்கதைகள் திரிந்து விரிவாக்கம் பெற்று வேறொரு கோணத்தில் மாறி இருக்கும். சிறிய கோயிலாக கல்லை மட்டும் வழிபாட்டினில்  வைத்து ஆரம்பித்து பின்னர் மிகப் பெரிய கற்கோயிலாக மாற்றம் கண்ட கோயில்களும் உண்டு.

நாட்டார் தெய்வங்கள் எனப்படுபவை தமக்கென ஒரு எல்லையை அமைத்துக் கொண்டிருப்பதை இதன் முக்கியக் கூறாகக் காணலாம். நாட்டார் தெய்வங்கள் ஒரு குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகவோ அல்லது ஒரு இனக்குழு, அல்லது ஒரு சாதி சார்ந்த  அல்லது ஒரு கிராமத்துக்கென்றே உரிய கோயிலாக, என ஒரு எல்லைக்குள் அமைவதாக இருப்பதை இதன் பண்பாட்டுக்கூறுகளின் மைய அமைப்பாகக் காணலாம். ஒரு குலத்துக்கே உரித்தான  குலக்குறிகளை  மற்றொரு குலக்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளச்சின்னங்களாக நாட்டார் தெய்வங்கள் அமைகின்றன. ஒரு ஊரைச் சொல்லி, சாமியின் பெயரைச் சொன்னால், எந்த சமூகம் எனக் கண்டறியும் அடையாளக் குறியீடாகவும் நாட்டார் தெய்வங்கள் அமைந்திருக்கின்றன. ஊரை விட்டு தூரம் சென்றவர்களும் கூட வருடத்திற்கு ஒரு முறை தன் கிராமத்திற்குத் திரும்பி வந்து குலதெய்வத்திற்குப் பொங்கலிட்டு படையல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்து செல்வது இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு விசயமாக இருக்கின்றது.

வீட்டில் நடைபெறும் சுபகாரியங்கள் அனைத்திற்கும் குலதெய்வ வழிபாடு செய்வது போலவே துக்க காரியங்களைத் தங்கள் குலதெய்வத்திடம் முறையிட்டு படையலிட்டு வழிபட்டுச் செல்வதும் நாட்டார் வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கின்றது.

எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இறைவன் தன் கைகளால் தானே சமைத்து தயாரித்த உணவைச் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையும், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாமிக்குப் படையலிட்டு மனமகிழ்வுடன் வழிபட்டுச் செல்வதுமே நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு. சாமிக்கும் தனக்கும் இடையில் குருக்கள் என்ற இடப்பட்ட மனிதரின் தேவையை அத்தியாவசியமாக்கி,  கடவுளை மனிதருக்கு நெருக்கமாக உணர வைக்கும் பண்புடன் நாட்டார் தெய்வ வழிபாட்டியல் இயங்குகின்றது.

இறை உணர்வு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. மனிதர்களின் விருப்பங்களும் வேண்டுதல்களும் அவர்களிடம் இல்லாத ஒன்றினை   வெளிப்படுத்துவன என்பதோடு, அந்த இல்லாத ஒன்றினை வழங்கி வேண்டுதலை நிறைவடையச் செய்யும் என்ற நம்பிக்கையே மனிதர்களை வேண்டுதலை நோக்கி செயல்பட வைக்கின்றது.  எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடிந்தால் அதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுவதும் இத்தகைய நாட்டார் வழிபாட்டில் இடம்பெருகின்றது.


ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம், வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபட்ட தன்மைகளுடன், தனித்துவத்துடன் நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அமைந்துள்ளார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை இத்தகைய நாட்டார் வழிபாட்டில் உள்ள சாமிகளைப் பற்றிய வரலாற்றையும் அதன் பின்னனியில் இயங்கும் கதைகளைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்து அவற்றைத் தொகுத்து ஒரு பிரத்தியேக வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றோம்.  இச்செய்திகளை http://www.tamilheritage.org என்ற வலைத்தளத்தின் ஊடாகக் காணலாம்.

தமிழர் வரலாறு, பண்பாட்டியல், சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளைச் செய்ய முனைவோர்,  நாட்டார் வழிபாட்டுக்கூறுகளுக்குத் தம் ஆய்வுகளில் தக்க இடமளித்து, அவற்றை சிறுதெய்வங்கள் எனக் கூறி ஒதுக்கி விடாமல்,   ஆய்வுகளில் இணைத்துச் செயல்படுத்துதல் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்வதில் பெரிதும் துணை புரியும். 
thfwednews.blogspot.com

No comments: