உலகச் செய்திகள்


சிறையை உடைத்து தப்பிய 17 குற்றவாளிகள் சுட்டுக்கொலை : பப்புவா நியூகினியாவில் சம்பவம்..!

‘ஒசாமா பின்லேடனு’க்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பித்த ‘சதாம் ஹுசைன்’ கைது

 கொலரா நோயினால் 209 பேர் பலி : 17 ஆயிரம் பேர்வரையில் பாதிப்பு : ஏமனில் சம்பவம்

 பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி, 50 க்கும் மேற்பட்டோர் காயம்

சர்ச்சைகளுக்கு மத்தியில் குறுந்தூர ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியுள்ள வடகொரியா..!

பாலியல் குற்றம் சுமத்திய அதிகாரிகளை மறக்கவும் முடியாது - மன்னிக்கவும் முடியாது : ஜூலியன் அசாஞ்சே






சிறையை உடைத்து தப்பிய 17 குற்றவாளிகள் சுட்டுக்கொலை : பப்புவா நியூகினியாவில் சம்பவம்..!

15/05/2017 பப்புவா நியூகினியாவில்  புய்மோ சிறையை உடைத்து, தப்பித்து சென்ற குற்றவாளிகளை தேடும் நடவடிக்கையின் போது, சுமார் 17 கைதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 57 பேரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  புய்மோ சிறைசாலை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. 
பப்புவா நியூ கினியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லே நகரிலுள்ள புய்மோ சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்து வெள்ளிக்கிழமை கைதிகள் குழுவொன்று சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பிசென்றுள்ளனர். இச்சூழலில் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் தப்பியோடிய கைதிகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 17 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
மேலும் சிறைக்கு அண்மையில் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் 57 கைதிகளை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த வருடம் குறித்த சிறைச்சாலையிலிருந்து  தப்பியோடிய 12 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி  வீரகேசரி 










‘ஒசாமா பின்லேடனு’க்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பித்த ‘சதாம் ஹுசைன்’ கைது

16/05/2017 அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்த இளைஞர் ஒருவரை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சதாம் ஹுசைன் மன்சூரி (25) என்ற இளைஞர் ராஜஸ்தானின் பில்வாரா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்மையில் அரச அலுவலகத்துக்குச் சென்று ஆதார் அட்டையொன்றைப் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அந்த விண்ணப்பத்தில் ஒசாமா பின்லேடனின் புகைப்படம் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தமையே!
இதையடுத்து இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகக் கூறி சதாம் ஹுசைனைக் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
எதனால் இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.   நன்றி  வீரகேசரி 










கொலரா நோயினால் 209 பேர் பலி : 17 ஆயிரம் பேர்வரையில் பாதிப்பு : ஏமனில் சம்பவம்

18/05/2017 ஏமனில் கொலரா நோயின் தாக்கத்தினால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் சுமார் 209 பேர் பலியாகியுள்ளதுடன், இதுவரை சுமார் 17ஆயிரத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் ஏமனில், பாதிக்கப்பட்ட உணவு, மற்றும் சுத்தமற்ற குடிநீர் காரணமாக கொலரா நோய் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் ஏமனில் தினமும் 3 ஆயிர பேருக்கும் அதிகமானவர்கள் கொலரா நோய் பிடிப்பிற்குட்படுவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடத்திற் கொருமுறை, ஐந்து வயதிற்கும் குறைவான வயதை உடைய குழந்தை 1 இறக்கும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 
அத்தோடு ஏமனில் கொலரா நோய் காரணமாக கடந்த 18 மாதங்களில் சுமார் 10ஆயிரம் பேர் வரையில் இறந்துள்ளதுடன், 2 மில்லியன்பேர் வரை பதிப்படைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தகவல் பகிர்ந்துள்ளது.
குறித்த நோய் தொற்று காரணமாக கடந்த வருடம் மாத்திரம் சுமார் 2ஆயிரம் பேர் வரியில் இறந்துள்ளதாகவும், அதில் அதிகளவானவர்கள் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய கிழக்கின் ஏழ்மையான நாடாக கூறப்படும் ஏமனில், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரச படைக்குமிடையில் உளநாட்டு யுத்தம் இடம்பெற்று வருகின்றது. இதில் அரச படைகளுக்கு சவுதி அரேபியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் அந்நாட்டு மக்கள் சுகாதார வசதி இன்றி அவதிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     நன்றி  வீரகேசரி 












பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி, 50 க்கும் மேற்பட்டோர் காயம்

23/05/2017 பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மென்செஸ்டர் எரினாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதலானது தீவிரவாத தாக்குதல் என  சந்தேகிக்கப்படுகிறது.     நன்றி  வீரகேசரி 














சர்ச்சைகளுக்கு மத்தியில் குறுந்தூர ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியுள்ள வடகொரியா..!

22/05/2017 வடகொரியா உலக நாடுகளில் எழுந்துள்ள ஏவுகணை பரிசோதனை எதிர்ப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று புதிய ரக ஏவுகணை ஒன்றை சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.
மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பானிய போர்கப்பல் கொரியா தீபகற்ப கடற்பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு, வலய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தின. இருப்பினும் வடகொரியா அதற்கு அஞ்சாமல் நெடுந்தூர ஏவுகணையை செலுத்தி பரிசோதித்தலில் வெற்றி அடைந்துள்ளதாக கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், வடகொரியா புகுக்கஸோங் -2 எனும் பெயருடைய குறுந்தூரம் செல்லும் ஏவுகணையை, நேற்று ஏவி பரிசோதனைச் செய்ததாக தென்கொரியா குற்றச்சாற்றோன்றை முன்வைத்துள்ளது.  
வடகொரியாவின் தெற்கு பியாங்கன் மாகாணத்திலுள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்டகுறித்த ஏவுகணை, சுமார் 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று, தென்கொரியாவின் கிழக்கு பகுதி கடலில் விழுந்துள்ளதாக தென் கொரிய இராணுவ செய்திகள் தெரிவித்துள்ளன. 
அத்தோடு வடகொரியா நடத்திய குறைந்தளவிலான தூரம் செல்லும் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதாகவும், அதற்கு ஜனாதிபதி கிம் ஜோங் உன் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி  வீரகேசரி 










பாலியல் குற்றம் சுமத்திய அதிகாரிகளை மறக்கவும் முடியாது - மன்னிக்கவும் முடியாது : ஜூலியன் அசாஞ்சே

20/05/2017 பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றமே செய்யாமல் கடந்த 7 வருடங்களாக கைதியை போல் வாழவைத்த, சுவீடன் அதிகாரிகளை தன்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதென விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகை அதிர செய்த அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் உலக அரசியல் சார் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 
இந்நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொள்ளவே, அவர் சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோம் நகருக்கு செல்லவே, அந்நாட்டு அரச அதிகாரிகள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி வழக்கு பதிவு செய்தனர்.
குறித்த வழக்கு காரணமாக ஏற்படுத்தப்பட்ட கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, லண்டன் சென்ற ஜூலியன் அசாஞ்சே, அங்குள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசியல் தஞ்சம் புகுந்து கைது செய்வதிலிருந்து விடுபட்டிருந்தார்.
மேலும் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு விசாரணையை, சுவீடன் கைவிடும் முடிவை ஈக்குவடார் வரவேற்றுள்ளது. அத்தோடு அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
சுவிடனின் முடிவை தொடர்ந்து, ஈக்குவடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே,  ஈக்குவடார் செல்வதாகவும்,, பிரான்ஸில் அரசியல் தஞ்சமடைய விரும்புவதாகவும் தகவல்கள் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி  வீரகேசரி 







No comments: