மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் - டாக்டர் கு .கணேசன்

.
உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாதான். 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது.
மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள். ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும். நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிறைந்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆகவேதான், நடப்பு ஆண்டில் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மருத்துவர்களையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அறிவுறுத்திவருகிறது.


என்ன காரணம்?
மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி, அதிகரித்துவரும் மதுப் பழக்கம், தன் வேலை, தன் வீடு எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி… இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற மனக்காயங்கள், இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற வேலையில்லாதது போன்றவை காரணமாகின்றன. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், மோசமான பணிச் சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் என்று பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டுவருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாள்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.
பொதுவாக, மன அழுத்தம் அதிகமாகும்போது அது உடல்நலனையும் பல வழிகளில் பாதிக்கும். உடல் இளைப்பது, அஜீரணம், இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, காரணம் தெரியாத உடல் வலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, ஆஸ்துமா, தூக்கமின்மை, ஆண்மைக் குறைவு, பாலியல் ஆர்வம் குறைவது போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.
குறுகிய கால மன அழுத்தம் குறித்துப் பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், நாள்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை. அதிகமுறை மன அழுத்தத்துக்கு ஆளாகிறவர்களை மீண்டும் அமைதிநிலைக்குக் கொண்டுவருவது கடினம் இவர்கள் தனக்குத்தானே பேசிக்கொள்வதும், மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பதும், தனிமையை நாடுவதும், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதும் உண்டு. தன்னைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, வீட்டைவிட்டு ஓடிப்போவது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது போன்றவற்றுக்கு மன அழுத்தம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.
பசி குறைவது அல்லது அதிக பசி, அடிக்கடி கோபப்படுவது/எரிச்சல்படுவது, உறக்கம் குறைவது, பேச்சு, செயல்களில் வேகம் குறைவது, எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, முக்கியமானவற்றில் முடிவெடுக்க முடியாத நிலைமை, தன்னம்பிக்கை இல்லாமல் பேசுவது, பாதுகாப்பற்ற உணர்வு, ஞாபக மறதி, பதற்றமான எண்ணங்கள், மனக் குழப்பம் போன்றவை மன அழுத்த நோயின் முக்கியமான அறிகுறிகள்.
என்ன செய்யலாம்?
உடலும் மனமும் நலமுடன் இருக்க வேண்டு மானால் ஆரோக்கிய உணவு, போதிய ஓய்வு, நிம்மதியான உறக்கம் ஆகியவை மிகவும் அவசியம். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டுச் செய்யவும் சரியான நேரத்தில் முடித்துவிடவும் பழகிக்கொண்டால் மன அழுத்தத்துக்கு இட மில்லாமல் போகும். அலுவலகப் பிரச்சினைகளை வீட்டுக்குக் கொண்டுவருவதை நிறுத்தினாலே பாதிப் பிரச்சினை சரியாகிவிடும். பிடித்த உறவுகளுடனும் தன்னம்பிக்கை மனிதர்களுடனும் பழகும் நேரத்தை அதிகப்படுத்தினால் மனதிலிருக்கும் சுமை குறையும்.
நம்பிக்கை தரும் வாசகங்கள் படிப்பது, பாடல்களைக் கேட்பது என வழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்க்கையின் மீது பற்று உண்டாகும். உடற்பயிற்சிக்குத் தினமும் அரை மணி நேரம் ஒதுக்கினால் மூளைக்குள் ‘என்டார்பின்’கள் சுரந்து மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும். நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்திக்கொள்வதும், தினமும் யோகா/தியானம் மேற்கொள்வதும், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதும் மன அமைதிக்கு வழி அமைக்கும்.
தற்போது கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் மன அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களைக் காண முடிகிறது. என்றாலும், நடைமுறையில் மன அழுத்தம் உள்ளவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே முறையான சிகிச்சைக்கு மனநல மருத்துவரிடம் வருகின்றனர். தங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே பொதுமருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோர்தான் அதிகம். இன்னொரு புறம், மனக்கோளாறுகளுக்குப் பயந்த கோளாறு, செய்வினைக் கோளாறு, பேய், பிசாசு பிடித்துவிட்டது என்றெல்லாம் மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்கள் கிராமங்களில் அதிகம். இவர்களெல்லாம் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கே வருகின்றனர். மன அழுத்தத்தை ஆரம்பக்கட்டத்திலேயே கவனித்துவிட்டால், மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் வந்தால் நோயின் தீவிரத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. மன அழுத்தப் பிரச்சினைக்கு மனநல மருத்துவரும் (Psychiatrist) மனநல ஆலோசகரும் (Psychologist) இணைந்து சிகிச்சை கொடுத்தால் மிக விரைவில் நோய் குணமாகும். காரணம், இவர்களுக்கு மாத்திரை மருந்துகளோடு, மன அமைதிக்கு வழி வகுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டியது முக்கியம். இந்த ஆலோசனைகளை மனநல ஆலோசகர்களால்தான் சரியாக மேற்கொள்ள முடியும். ஆனால், இந்தியாவில் மன அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, தேவையான எண்ணிக்கையில் மனநல மருத்துவர்களோ, மனநல ஆலோசகர்களோ இல்லை.
இந்தியாவில் 4 லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மொத்தமே சுமார் 4,000 மனநல மருத்துவர்களும், 1,000 மனநல ஆலோசகர்களும்தான் இருக்கிறார்கள். இதனால், மன அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குச் சரியான சிகிச்சை கிடைக்காமல் போகிறது. நாளுக்கு நாள் மன அழுத்தப் பிரச்சினை பூதாகரமாகிவரும் இத்தகைய சூழலில் அரசு மருத்துவமனைகளிலும் சரி, தனியார் மருத்துவமனைகளிலும் சரி, இப்போதுள்ள மனநலப் பிரிவுகள் எத்தனை பேருக்குச் சிகிச்சை கொடுக்க முடியும்?
மத்திய - மாநில அரசுகள் இதைக் கவனத்தில் கொண்டு, மன அழுத்த நோயாளிகள் எதிர்கொள்ளும் மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சினைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப் பிரத்யேகமான மனநோய் மையங்கள் தனி இடங்களில் தொடங்கப்பட வேண்டும். மனநல மருத்துவம் மற்றும் மனநல ஆலோசகர் படிப்புக்கான இடங்களை அதிகரித்து, எல்லா மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவரையும் மனநல ஆலோசகரையும் நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அரசுகள் கவனிக்குமா?
- கு.கணேசன்,
பொதுநல மருத்துவர்,

No comments: