மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
முல்லைத்தீவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்!
மோடி உரையினால் இலங்கையின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
"மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு"
‘வன் பெல்ட் வன் ரோட்’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு வழங்கும் : சீனாவில் பிரதமர்
வாள்வெட்டு வழக்கில் மூவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை
பெற்றோல் குண்டுகள், கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - பாணந்துறை, வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம்
புளொட் நெடுமாறனுக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
கனடாவிற்கு நேரடி விமானச்சேவை..!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சம்பந்தன் உரையாற்ற வந்த போது குழப்பநிலை
வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு
வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தொடர் போராட்டம் : வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் திட்டவட்டம்
புலிகள் அமைப்பிற்கு எம்.ஜி.ஆர். பாரிய நிதி உதவிகளை வழங்கினார் : பல புதுத் தகவல்களை வெளியிட்டார் கே.பி. (காணொளி இணைப்பு)
மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..!
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
16/05/2017 முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு மட்டக்களப்பில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இன்று மாலை 5.45 மணியளவில் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.
இதன்போது இரண்டு நிமிடங்கள் மொளன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொதுமக்களால் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
முல்லைத்தீவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்!
15/05/2017 முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தல்களில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தபுரம், பேராறு, கற்சிலைமடு, சம்மளங்குளம், கூழாமுறிப்பு, மானுருவி, கருவேலங்கண்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. கரைதுறைபற்றில் மாமூலை கிராமம் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. பல கிராமங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாவட்டத்தில் வரட்சி நிலைமை அதிகரிக்குமானால் குடிநீர் நெருக்கடியும் கூடுதலாக உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மோடி உரையினால் இலங்கையின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
16/05/2017 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது அவர் ஆற்றிய உரையினால் இலங்கையின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மலையகத்தில் 10 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து பேசிய போது அவர் இந்திய பிரதமரா அல்லது இலங்கை பிரதமரா என்ற கேள்வியே எழுந்தது. அதனால் இலங்கையை
இந்தியாவின் 30 ஆவது பிராந்தியமாக்குவதற்கான முனைப்புக்களே தெரிந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தூய்மையான நாளைக்கான அமைப்பின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும், தெரிவிக்கையில்,
மோடியின் வருகை வரலாற்று ரீதியிலான பாரம்பரிய உறவை கட்டியெழுப்புவதாக மாத்திரமே அமையும் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் அவரின் வருகையின் பின்பான செயற்பாடுகள் வேறுபட்ட கருத்துக்களையே தோற்றுவிக்கின்றது.
அவர் சர்வதேச வெசாக் தினத்தின் விசேட விருந்தினர் என்றால் அவரின் கருத்துக்கள் அதுபற்றியதாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் பேச்சு இலங்கை – இந்திய உறவு பற்றியதாகவே அமைந்திருந்தது.
அவரின் பேச்சு இலங்கை மற்றும் இந்தியாவுகிடையிலான முத்தரப்பு சந்திப்பு போன்றே அமைந்தது. அவரின் கருத்து முழுவதும் அரசியல் சார்ந்த காரணிகளையே வெளிப்படுத்தியது. இருநாடுகளினதும் எல்லைகளில் தொழில்நுட்பம் ஊற்றெடுக்க வேண்டும் என்கிறார். அதனூடாக எட்கா ஒப்பந்தத்தினை உடனடியாக கைச்சாத்திட வேண்டும் என்பதையே மறைமுகமாக கூறுகின்றார்.
காரணம் எட்கா கைச்சாத்திடப்படாத காரணத்தினாலேயே தற்போதுவரையில் இலங்கை – இந்திய எல்லையில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. அதேநேரம் இலங்கையினதும் இந்தியாவினதும் சமூகங்களின் பாதுகாப்புக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது என கூறினார். இதனால் இலங்கை நினைத்தாற் போல் நடந்துகொள்ள முடியாது. பாதுகாப்பு விவகாரத்தில் எம்மைக் கேட்காமல் காய் நகர்த்த முடியாது என்பதையே கூறுகின்றார்.
இது இலங்கையின் சுயாதீன தன்மைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும் அடித்தள கட்டமைப்புக்களில் ஒருங்கிைணப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்றும் கூறினார். ஒருங்கிணைப்புச் செயற்பாடு என்பது ஹனுமான் பாலத்தை அமைப்போம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிக்கோயா சென்ற போது பேசிய விடயம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக இந்திய அம்புலன்ஸ் சேவையினை நாடு முழுவதும் விஸ்தரிப்புச் செய்வேன் என்றும் மலையகத்தில் 10 ஆயிரம் வீடு களை அமைத்துக்கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர் இலங்கையின் பிரதமரும் அல்லாத போது அவர் அவ்வாறு கூறுவது இலங்கையை இந்தியாவின் 30 ஆவது பிராந்தியமாக இணைத்துக்கொண் டார் என்பது போலவே இருந்தது.
ஜனாதிபதியை இலங்கை என்ற பிராந்தியத்தின் ஆளுனராகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதன் முதலமைச்சராகவும் எண்ணிக்கொண்டுதான் இந்திய பிரதமர் உரையாற்றினார் என்பது தெளிவாகின்றது.
மேலும் இந்தியா இலங்கையை தனது காலனித்துவத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது என அந்நாட்டு பிரதம ரின் இலங்கை விஜயத்தின் போது வெளிப்படையானது. கவலையாக இருப்பினும் இந்த விடயத்தினை குறிப்பிட் டாக வேண்டிய தேவை உள்ளது. நன்றி வீரகேசரி
"மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு"
16/05/2017 இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம் இம்மாத இறுதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார்.
சிவில் விமான அதிகார சபையினால் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது வரை இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு விமான நிலையம் அமைச்சரவை அங்கீகாரத்தின்படி 2016ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிவில் விமான அதிகார சபைக்கு கையளிக்கப்பட வேண்டும்.
இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட இல ங்கை விமான நிலைய விமான சேவை நிறுவனம் மட்டக்களப்பு விமான நிலையத்தின் பராமரிப்பை பொறுப்பேற்கவுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையம் ஜெட் மற்றும் 50 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை உள்வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை 1200 மீற்றர் நீளமானது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மட்டக்களப்பு விமான நிலையத்தைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கியிருந்தது.
அதனடிப்படையில் 317 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஜூலை மாதம் 10ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து சேவை யை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் விமானப் போக்குவரத்து இன்றியமையாதது என தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தி வந்தத ற்கு அமைவாக இந்த விமானப் போக்கு வரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக் கப்படுவதாக முதலமைச்சர் செய்னுலா ப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
‘வன் பெல்ட் வன் ரோட்’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு வழங்கும் : சீனாவில் பிரதமர்
16/05/2017 ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ‘வன் பெல்ட் வன் ரோட்’ எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலை திட்டத்துக்கு இலங்கை தனது முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.
பீஜிங் நகரில் இடம்பெற்ற வட்ட மேசை கலந்துரையாடலின் போது அந்நாட்டு தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், நூற்றாண்டுகளில் முதன் முறையாக உலகலாவிய பொருளாதார அதிகாரம் ஆசியாவை நோக்கி நகருகின்றது.
2030 ஆம் ஆண்டளவில் ஆசியா உள்நாட்டு உற்பத்தியிலும் தொழினுட்பத்தில் முலீடுகளை செய்வதிலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விஞ்சிவிடும் என்றார். நன்றி வீரகேசரி
17/05/2017 யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில் மூவருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஐவருக்கு ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் இருவர் உட்பட எட்டுப் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையானது தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. இவ் வழக்கு விசாரனையில் எட்டு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வழக்கு தவனையின் போது வழக்கின் தீர்ப்புக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் 1ஆம் 2ஆம் 8ஆம் எதிரிகளுக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஜந்து எதிரிகளுக்கும் ஒராண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்ததுடன் எட்டுப் பேருக்கும் ஒவ்வொருவரும் தலா 50ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்தவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். நன்றி வீரகேசரி
பெற்றோல் குண்டுகள், கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - பாணந்துறை, வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம்
17/05/2017 பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினமும் நேற்றும் இவ்விரு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வெவ்வேறான இரு சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பாணந்துறை பழைய பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களிடையே அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை பகுதியில் உள்ள பள்ளிவாசலானது கல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை இப்றாஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் மீது நேற்று நள்ளிரவு 01.30மணியளவில் இனம் தெரியாதவா்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வேன் ஒன்றில் வந்த சுமார் 8பேர் கொண்ட கும்பல் ஒன்றே மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பள்ளிவாசலின் பிரதான நுழைவாயில் மீதேறி உள்ளே நுழைந்து, நுழைவாயில் கதவையும் உடைத்துள்ளதுடன் பள்ளிவாசலின் கண்ணாடிகள், கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை கற்களால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் பள்ளிவாசலின் அறிவித்தல் பலகையையும் சேதப்படுத்தியுள்ளனர். கற்கலாலும் பொல்லுகளாலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் இடம்பெறும் போது பள்ளிவாசலின் மேல் மாடியில் பள்ளிவாசல் நிறப்பூச்சு (பெயிண்ட்) வேலைக்காக தங்கியிருந்தவர்கள் சத்தமிட்டதும் வந்திருந்த கும்பல் ஓடியதாக அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்திருந்ததாகவும் தாக்குதல் நடத்தும் போது, அவர்களில் ஒருவர் அதனை வீடியோ எடுத்தார் என்றும் அதனைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றுக் காலை ஸ்தலத்துக்கு சென்ற வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் நுகேகொடை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாத் ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்பு பொலிஸ் குழு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிவாசலின் தலைவர் முஹம்மத் பஸீன் கூறுகையில்,
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் குழுவொன்று பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு வந்தவர்கள் பள்ளிவாசலின் பிரதான நுழைவாயில் மீதேறி பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் 2பேர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் ஒருவர் தாக்குதல் நடத்தப்படுவதை படம் எடுத்துள்ளார்.
இவர்களின் தாக்குதலால் பள்ளிவாசலின் கண்ணாடி, கதவு மற்றும் அறிவித்தல் பலகை என்பன கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்கள் சத்தமிடவே, வந்தவர்கள் ஓடியுள்ளனர். சுமார் 5 நிமிடத்துக்குள்ளே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அறிவித்தல் பலகை மீது கையால் தாக்கியதன் காரணமாக அவரது கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கின்றோம்.
இரத்தம் தோய்ந்த நிலையில் அவரது கை ரேகை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அந்த இடம் பூராகவும் இரத்தம் வடிந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவற்றையல்லாம் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் படம் எடுத்ததுடன் கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்துக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியாது. ஊரில் இருக்கும் சிங்கள மக்கள் மிகவும் அன்னியோன்னியமாகவே எங்களுடன் இருந்து வருகின்றனர். அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கின்போது இந்த பள்ளிவாசல் ஊடாகவே சிங்கள மக்களுக்கும் உதவிகளை மேற்கொண்டோம். அதனால் ஊரில் இருக்கும் சிங்கள மக்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்க மாட்டார்கள். வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்தவர்களாலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன் என்றார்.
இதனிடையே பாணந்துறை பகுதியில் பள்ளிவாசல் மீதான தாக்குதலானது நேற்று முன் தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. நேற்று முன் தினம் அதிகாலை 3.00மணியலவில் பள்ளி வாயலுக்கு பின்புறமாக உள்ள யன்னல் வழியாக மேல்மாடியின் கண்ணாடியை உடைத்து பெற்றோல் குண்டு வீசப்பட்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது பள்ளிவாசலின் மேல் மாடிக்கு செல்லும் படிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த முஸ்லிம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் எவையும் இல்லை. எனினும் முஸ்லிம் வியாபாரிகளுக்குரிய கடைகள் 50 ற்கும் மேல் உள்ளதாக அறியப்படும் நிலையில், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வருவோர் தொழுகைகளை நிறைவேற்றும் முகமாகவே இந்த பள்ளிவாசல் கடைகளிடையே அமைக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிவாசலுக்கு பின் பக்கமாக பாணந்துறை குப்பை மேடு அமைந்துள்ள நிலையில் அப்பகுதியை நோக்கி பள்ளிவாசலில் ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னலே உடைக்கப்பட்டு மேல் மாடிக்கு பெற்றோல் நிரப்பட்ட போத்தல்கள் ஊடாக தயாரிக்கப்படும் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சிங்கள மக்கள் பொலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்தியதையடுத்தே பொலிஸார் ஸ்தலம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்தும் பாணந்துறை பொலிஸார் ஊடாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத ஸ்தலங்கள் மற்றும் மத விவகாரங்கள் தொடர்பில் அத்துமீறல்களை முன்னெடுப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அது தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்தவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. நன்றி வீரகேசரி
புளொட் நெடுமாறனுக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
17/05/2017 வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
புளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2014.08.11அன்று சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இன்றைய தினம் வழக்கு தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டு வழக்கினை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரி தனது உடமையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் கண்டு 2வருடம் கடூழியச்சிறைத் தண்டனை விதித்ததுடன் வழக்கை 7 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.
அத்துடன் 5ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறிமையால் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தினார். நன்றி வீரகேசரி
கனடாவிற்கு நேரடி விமானச்சேவை..!
17/05/2017 கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் அதிகளவில் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் எவ்விதமான நேரடி விமானச்சேவையும், அல்லது அதற்கான உடன்படிக்கையோ கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமானச்சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த திட்டம் தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு
18/05/2017 பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இன்றையதினம் நடைபெற இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும், அமைத்திக்கும் பங்கம் ஏற்ப்படும் எனக்கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106 இற்கு இணக்க பதின் நான்கு நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வித்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தொடர்புகொண்டு வினவிய போது,
குறித்த இடத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி எம்மால் அறிந்து கொள்ள முடியாது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும், அமைத்திக்கும் பங்கம் ஏற்ப்படாலாம் என சந்தேகித்து முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவிற்கு இன்று விண்ணப்பம் செய்யப்பட்டமைக்கு அமைவாகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் மட்டுமே நினைவேந்தல் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் நினைவேந்தல் மேற்கொள்ள முடியும் ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும், அமைத்திக்கும் பங்கம் ஏற்ப்படாதவாறு நிகழ்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார் நன்றி வீரகேசரி
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
18/05/2017 வவுனியாவில் இன்று (18) காலை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இதில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த உறவுகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், அப்பகுதியிலுள்ள 5 இ0ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சம்பந்தன் உரையாற்ற வந்த போது குழப்பநிலை
18/05/2017 முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் திடீரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள் அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்ப அங்கு குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். இது உரையாற்றும் இடமல்ல, இங்கு அரசியல் பேசாதீர்கள், நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்காதீ;ர்கள், இது முள்ளிவாய்க்கால் முற்றம், என பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
நன்றி வீரகேசரிவெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!
18/05/2017 வெள்ளவத்தை - சாவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் இதுவரையில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் 15 பேர் களுபோவில வைத்தியசாலையில் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலும் பலர் இதில் சிக்கியிருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் : சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு
19/05/2017 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய விசேடபொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பொலிஸ் மா அதிபர் அலுவலக பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் மேற்பார்வையில் பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் உத்தரவிற்கு அமைவாக இக்குழு பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறை பழைய பசார் வீதியிலுள்ள பள்ளிவாசல், வெல்லம்பிட்டி கொஹிலவத்த ஜும்மா பள்ளிவாசல் ஆகியவை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இன,மத நல்லிணக்கத்தை சீர் குழைக்கும் திட்டமிட்ட குழுவொன்று இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்படுவது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி கேசரிக்கு தெரிவித்தார்.
அதன்படியே பொலிஸ் தலைமையகத்தின் சிறப்பு பொலிஸ் பிரிவொன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று முதல் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்படி பள்ளிவாசள்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு வெல்லம்பிட்டி பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதலும் பாணந்துறை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும். நன்றி வீரகேசரி
வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தொடர் போராட்டம் : வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் திட்டவட்டம்
22/05/2017 அரச வேலைவாய்ப்பு கோரி 84ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் வடக்கு மாகாணப் பட்டதாரிகள், தம் அனைவருக்குமான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வடக்கிலுள்ள 3ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தமக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த போராட்டத்தினை நேற்றுடன் 84ஆவது நாளாக யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பு முன்னெடுத்து வருகின்றனர்.
இப் போராட்டம் பட்டதாரிகளின் சுழற்சி முறையிலான பங்குபற்றுதலுடன் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை யாழ்
ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த வடக்கு பட்டதாரிகளில் 1000பட்டதாரிகளுக்கு விரைவாக வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். பிரதமரது உறுதி மொழியையடுத்து தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முடித்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர். குறித்த கலந்துரையாடலின் முடிவில் வடக்கு பட்டதாரிகள் அனைவருக்குமான அரச வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பட்டதாரிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பிரதமர் 1000பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக உறுதி
யளித்திருந்தார். இவ் உறுதி மொழியானது எமக்கு மகிழ்ச்சியானதாகவே உள்ளது. ஆனாலும் வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளாக இதுவரையில் 3ஆயிரம் பேர் வரையில் உள்ளோம். எனவே எம் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். வடக்கு பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் வரை எமது கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
புலிகள் அமைப்பிற்கு எம்.ஜி.ஆர். பாரிய நிதி உதவிகளை வழங்கினார் : பல புதுத் தகவல்களை வெளியிட்டார் கே.பி. (காணொளி இணைப்பு)
22/05/2017 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தற்கொலை குண்டுதாரிகளின் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க அன்டன் பாலிசிங்கம் உள்ளிட்டவர்கள் முற்பட்ட போது அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்ததென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியிருந்தார். அந்த நிதித் தொகை ஆயுதக் கொள்வனவுக்கே பயன்படுத்தப்பட்டது.
லெபனான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளும் கூட போதுமான வாய்ப்புகளை வழங்கியிருந்தது.
நன்றி வீரகேசரி
மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..!
23/05/2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் நடவடிக்கைகளுக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வாகனங்களுக்கு செலுத்தவேண்டிய 142 மில்லியன் ரூபா நிதியை வழங்காமை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் தமது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக, தமது ஆட்சேபனையை வௌியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இறுதி வாய்ப்பை வழங்கவே நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி, விசாரணையை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment