கண்ணுக்கு
இமை தெரிவதில்லை. கண்ணாடியில் பார்த்தால்தான் கண்ணைப்பாதுகாக்கும் இமை எமக்குத்தெரியும்.
எமது உடலமைப்பின் பிரகாரம் கண்ணுக்கு இமை தெரியவாய்ப்பில்லை.
அதுபோன்று
அருகிலிருக்கும் மனிதநேய ஆளுமைகளும் சமூகமாந்தர்களுக்குத் தெரிவதில்லை. அவ்வாறே பாரதியும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர்பற்றிய அருமை பெருமை தெரியாமல்தான்
அவர் பிறந்த எட்டயபுரத்து மக்கள் இருந்தார்கள்.
சிறுவன் சுப்பிரமணியனின் பால்யகாலத்தின் வாக்கு வசீகரத்தினால் கவரப்பட்ட எட்டயபுர மன்னர், பாரதியாக்கினார். எனினும் வளர்ந்த பாரதியின் நடையுடை
பாவனைகளையும் அவர் கூடித்திரிந்த நண்பர்களையும்
அவதானித்த எட்டயபுரத்து பிராமண சமூகம் ' கோட்டி' என்றே எள்ளி நகையாடியிருக்கிறது.
'கோட்டி' என்றால் கிறுக்கன் , விசரன், பைத்தியக்காரன்
என்று பொருள்படும். பாரதியார் சித்தனாக வாழ்ந்திருப்பவர். அதனால்தான் அவரால் எவருடனும்
ஏற்றத் தாழ்வின்றி, சாதி வித்தியாசம் பாராமல் சரி சமமாக உறவாட முடிந்திருக்கிறது. காக்கைக்கும்
குருவிக்கும் வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த அரிசியையும் அள்ளித்தூவ முடிந்திருக்கிறது. கழுதைக்குட்டியை சுமந்துகொண்டு எட்டயபுரத்தின் அக்ரஹாரத்தெருக்களில்
ஆடிப்பாட முடிந்திருக்கிறது. ஹரிஜனச்சிறுவன் கனகலிங்கத்தை தனது வீட்டின் நடுக்கூடத்தில்
இருத்திவைத்து அவனுக்கு உபநயனம் செய்து பூநூல்
அணிவித்து அவனையும் ஒரு பிராமணனாக்க முடிந்திருக்கிறது.
அத்துடன் அவர் நிற்கவில்லை. "
கனகலிங்கம், இன்று முதல் நீயும் ஒரு பிராமணன்தான். எவரிடமும் துணிந்து சொல்." என்றும் சொல்லியனுப்பியவர்.
சித்தர்களுக்குரிய
இயல்புகளுடன் வாழ்ந்த இந்த தீர்க்கதரிசியை எட்டயபுரத்து மக்கள் ' கோட்டி' என்றே விளித்திருக்கும் செய்தியை
இலங்கையிலிருந்து வெளியான மல்லிகை இதழில் தெரிந்துகொண்டோம்.
இந்த
அரியதகவல்கள் அடங்கிய விழிகள் என்ற சிறு
சஞ்சிகை பற்றிய குறிப்பினை பேராசிரியர் க. கைலாசபதி 1982 ஜூலை மாதம் வெளியான மல்லிகையில்
பதிவுசெய்துள்ளார்.
" சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வு"
என்ற
அக்கட்டுரையை பாரதி நூற்றாண்டு காலத்தில் அவர் எழுதியிருந்தார். அத்துடன் அந்த இதழின்
முகப்பினை அலங்கரித்தவர் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ.மு.
சி. ரகுநாதன். அவர் பற்றிய சிறந்த கட்டுரையையும் கைலாசபதியே எழுதியிருக்கிறார்.
" இவ்வாண்டு
( 1982) பாரதி நூற்றாண்டையொட்டி தமிழ்நாட்டிலே வெளிவந்துகொண்டிருக்கும் நூல்களை நோக்கும்பொழுது
மொத்தத்தில் ஏமாற்றமே எழுகின்றது. அரசின் பல்வகைப்பட்ட ஆதரவுடனும் - அல்லாமலும் மகாகவியின்
படங்களை வெளியிடுவதும், ஏலவே வெளிவந்துள்ள நூல்களை - கவிஞனது படைப்புக்களை - வெவ்வேறு
வடிவத்திலும் ரூபத்திலும் வெளிக்கொணர்வதும் வணிக நோக்கின் மேலாதிக்கத்தையே துலாம்பரமாகக்
காட்டுகின்றன. ஆரவாரம் அடங்குவதுபோலத் தோன்றினாலும், ஆழமான முயற்சிகள் அருந்தலாகவே
உள்ளன." என்று அக்கட்டுரையின் தொடக்கத்திலேயே தனது கவலையையும் ஏமாற்றத்தையும் கைலாஸ்
பொதுமைப்படுத்தியிருந்தார்.
அதேசமயம், குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் பாரதி தொடர்பாக
ஆரவாரம் ஏதும் இன்றி நடந்திருக்கும் சில அருஞ்செயல்களையும் அக்கட்டுரையில் விபரிக்கிறார்.
எட்டயபுரத்து
மக்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்காமல் மனைவி செல்லம்மாவின் தோளில் கைபோட்டும்
கைகோர்த்தும் அவர் அங்கு வீதிகளில் வலம் வந்தவர். இந்தக்காட்சிகளை இதனைப்படிக்கும்
வாசகர்கள் பாரதி திரைப்படத்திலும் காணமுடியும்.
மதுரையிலிருந்து
1982 ஜனவரியில் வெளியான விழிகள் இதழில் ராமசாமி என்பவர் " எந்நாளும்
அழியாத சோதிமிக்க நவகவிதை யாத்த ஶ்ரீமான் சுப்பிரமணிய பாரதிக்கு நூறு வயசு" என்ற தலைப்பில் எழுதியிருந்த அக்கட்டுரையை கைலாஸ்
சிலாகித்து பதிவுசெய்திருக்கிறார்.
பாரதியின்
எட்டயபுர வாழ்க்கைக்காலத்தில் அவருடன் பழகியவர்கள், அவர்கள் குடும்பத்தைச்சேர்ந்த இளைய
தலைமுறையினர், இவர்களிற் சிலரைப் பேட்டிகண்டு அறிந்து எழுதியிருப்பவை சுவையாக இருக்கின்றன என்னும் தகவலையும் கைலாஸ் சொல்கிறார்.
" இந்தத்தேசியக்கவி உள்ளுர் ஜனங்களால் 'கோட்டி' என்றுதான் கணிக்கப்பட்டிருக்கின்றார்.
அய்யர் வீட்டுப்பிள்ளை அக்ரகாரத்தில் அடக்கமாக
இருக்காமல், கிடாய் மீசை வளர்த்தால் கோட்டி-
அய்யர் வீட்டுப்பிள்ளை அந்நிய ஜாதிக்காரர்களின் வீட்டில் சாப்பிட்டதால் கோட்டி - ஜமீன்தாரிடம் கைகட்டி சேவகம்
செய்யாமல் ' வந்தே மாதரம்' காரணமாக வெளியேறி ஒரு கோட்டிக்காரனுடன் சுற்றிக்கொண்டிருந்ததால் கோட்டி - பாரதி சுற்றிக்கொண்டிருந்த கோட்டிக்காரன்
கட்டைய மணியக்காரரையும் பாரதியையும் சேர்த்தே குறிப்பிடுகின்றனர். 'பாரதி பிறந்த வீடு
' என்று எட்டயபுரத்தில் பாரதி மாமா சாம்பசிவ அய்யர் வசித்த வீட்டை அரசு தத்தெடுத்து
( தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம்) அதில் முதல் அறையில் பாரதி பிறந்த இடம் என்றெழுதிய
அட்டையையும் வைத்திருக்கிறது. அரசு எடுத்திருப்பது உண்மையில் பாரதியார் பிறந்த வீடு
அல்ல"
மல்லிகையில்
கைலாஸ் தரும் மேற்குறித்த தகவலுடன் மேலும் சில செய்திகளையும் இங்கு சொல்ல
விரும்புகின்றோம். பாரதியுடன் இளமைக்காலத்தில் எட்டயபுரத்தின் வீதிகளில் அலைந்து திரிந்து அவ்வூரிலேயே
வாழ்ந்துகொண்டிருந்த ஒருவரையும் (முதுமைக்காலத்தில்) மற்றும் ஒரு இலக்கியச்சிற்றிதழ் பேட்டிகண்டு எழுதியது.
அந்த
முதிவருக்கு கட்புலனும் செவிப்புலனும் மங்கியிருந்தபோதிலும் பாரதியைப்பற்றி கேட்டதும்
அவர் ஆர்வத்துடன் பேசியிருக்கிறார்.
" அவன் ஒரு கோட்டி. நானும் அவனுடன் சுற்றியதால் என்னையும் இங்கு கோட்டி என அழைத்தார்கள். அதிகாலையில் நாமிருவரும் எங்காவது வெளியில் ' கொல்லைக்கு' போவோம். ( இங்கு கொல்லைக்குப்போதல் என்பது காலைக்கடன் கழிக்கச்செல்லுதல் என்று அர்த்தப்படும்) நான் வீடு திரும்பிவிடுவேன். ஆனால், பாரதி சூரியோதயத்திற்காக காத்திருப்பான். முழு நிர்வாணமாக நின்று சூரிய நமஸ்காரம் செய்வான். அதனால் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும் என்பான். " என்று தெரிவித்துள்ளார்.
" அவன் ஒரு கோட்டி. நானும் அவனுடன் சுற்றியதால் என்னையும் இங்கு கோட்டி என அழைத்தார்கள். அதிகாலையில் நாமிருவரும் எங்காவது வெளியில் ' கொல்லைக்கு' போவோம். ( இங்கு கொல்லைக்குப்போதல் என்பது காலைக்கடன் கழிக்கச்செல்லுதல் என்று அர்த்தப்படும்) நான் வீடு திரும்பிவிடுவேன். ஆனால், பாரதி சூரியோதயத்திற்காக காத்திருப்பான். முழு நிர்வாணமாக நின்று சூரிய நமஸ்காரம் செய்வான். அதனால் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும் என்பான். " என்று தெரிவித்துள்ளார்.
இந்தக்காட்சியை
பாரதி திரைப்படத்தில் வேறு ஒரு ரூபத்தில்
காண்பித்திருப்பார்கள். அதில் வரும் நிற்பதுவோ
நடப்பதுவோ பறப்பதுவோ பாடல் ( இசை: இளையராஜா - இயக்கம் ஞான ராஜசேகரன் - நடிப்பு
சாயாஜி ஷிண்டே என்ற கன்னட நடிகர்) காட்சியில்
பாரதியார் இவ்வாறு நுட்பமாகக் காண்பிக்கப்படுவார்: சிறிய நீர்வீழ்ச்சியில் நீராடும்போது அவரது அரையில்
இருக்கும் துண்டு அவிழ்ந்து தண்ணீருடன் அடித்துச்செல்லும். பாரதியின் சூரிய நமஸ்காரக்காட்சி இவ்வாறு வேறு ஒரு
கோணத்தில் தத்ரூபமாக காண்பிக்கப்படும்.
இலங்கையில்
பாரதி என்னும் இந்தத்தொடரை எழுதும் கட்டுரையாளர் 1984 இல் எட்டயபுரத்தை தரிசிப்பதற்காக
சென்றபோது, குறிப்பிட்ட பாரதி பிறந்த வீடு,
அவருக்கு பாரதி பட்டம் வழங்கப்பட்ட - அத்துடன் அவர் சிறிதுகாலம் வேண்டா வெறுப்பாக சும்மா
இருந்து வேலைசெய்த அரண்மனை, கவிதைகள் புனைவதற்காக
அமர்ந்திருந்த தெப்பக்குளத்தின் படிக்கட்டுக்கள், மனைவி செல்லம்மாவின் தோளில் கைபோட்டு
அலைந்து திரிந்த மாடவீதி, பாரதியார் மணி மண்டபம் முதலானவற்றைத்தரிசித்து வந்து வீரகேசரியில்
விரிவான கட்டுரையும் எழுதியிருக்கிறார்.
பாரதியின்
இல்லமும் மணிமண்டபமும் தமிழக அரசினால் பராமரிக்கப்பட்டாலும்,
குறிப்பிட்ட எட்டயபுர அரண்மனையை அரசிடம் ஒப்படைப்பதற்கு மன்னரின் சந்ததி எனச்சொல்லிக்கொண்டிருப்பவர்கள்
மறுத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் உரிய கவனிப்பின்றி அந்த வரலாற்று முக்கியத்துவம்
பெற்ற அரண்மனை பரிதாபத்திற்குரியதாக காட்சியளித்தது.
33 வருடங்களின்
பின்னர் இன்று அங்கு நிலைமை எப்படி என்று தெரியவில்லை.
மேலைநாடுகளாயின் என்ன நடந்திருக்கும்...? அருங்காட்சியகமாக
மாற்றியிருப்பார்கள்.
இவ்வாறு இந்தியாவில்
பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் பாதுகாத்துப்பேணப்படாமல் அழிந்துகொண்டிருக்கின்றன.
மல்லிகை, இலங்கையில் பாரதி நூற்றாண்டிற்காக மாத்திரம் சிறப்பிதழ்
வெளியிடவில்லை. வெளிவரத்தொடங்கிய காலம் முதலே பாரதிஆய்வுகளுக்கு சிறந்த களம் வழங்கியது.
விமர்சகர்கள் சபா.ஜெயராசா (
பாரதியின் புதிய ஆத்திசூடி) க. அருணாசலம் ( ( பாரதியார் - ஆஸ்தீகன் - முற்போக்காளன்
- பொதுவுடைமையாளன் - நாவேந்தன் ( பாரதியின் மரபு மீறல்) மரகத சிவலிங்கம் ( சாக்தன்
பாரதி) சேதுகாவலர் ( பாரதி புதுமைச்சாரதி ) மனோன்மணி சண்முகதாஸ் ( பாரதியின் சுயசரிதை) அ. சண்முதாஸ் ( கண்திறந்திட வேண்டும்) மேமன் கவியின்
கால வழிப்போக்கனும் ஒரு கிருதயுகப்பாடகனும் - கவிதை) என்பனவற்றுடன் பாரதி வாழ்வில்
இடம்பெற்ற சில சம்பங்களின் தொகுப்பு உட்பட பல ஆக்கங்கள் மல்லிகையில் வெளியாகியிருக்கின்றன.
பேராசிரியர்
கைலாசபதி மல்லிகையில் பாரதி தொடர்பாக பல ஆய்வுகளை மரணிக்கும் வரையில் அடிக்கடி எழுதியிருக்கிறார்.
அவர் மல்லிகையில் எழுதியிருந்த இலங்கை கண்ட பாரதி என்ற கட்டுரையை தமிழ்நாட்டின் தாமரை இதழ் அவரது
மறைவுக்குப்பின்னர் அவரது நினைவாக மறுபிரசுரம் செய்தது.
மல்லிகையில்
தமிழக எழுத்தாளர் தி.சா. ராஜூவின் மானுடத்தின் மகா கவி, தமிழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளராக
இருந்த தா. பாண்டியனின் அயலாளர் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன் முதலான கட்டுரைகளும்
இடம்பெற்றன.
பேராசிரியர்
க. கைலாசபதி தொடர்ச்சியாக பாரதி ஆய்வுகளில் தீவிரமாக இருந்தவர். அதனால் அவரின் பாரதி
மீதான ஆழ்ந்த கண்ணோட்டத்தைப் பரவலான வாசிப்புக்குப் பகிரவேண்டும் என்பதனால் பாரதி தொடர்பாக
அவர் எழுதிய 22 கட்டுரைகளை தொகுத்து, சென்னையில்
கைலாஸின் தோழர் செ. கணேசலிங்கன் தமது குமரன் பதிப்பகத்தினால் ' பாரதி ஆய்வுகள்' என்ற பெயரில் வெளியிட்டார். இதுவரையில் மூன்று பதிப்புகளைக்கண்டுவிட்டதிலிருந்து
அதன் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
" பாரதியியலில்
அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த கைலாசபதி, பாரதியியலில் பல புதிய ஆக்கபூர்வமான கருத்துக்களைக்
கூறியவர். ஆய்வுநெறிகளை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்று பாரதி நூல்களுக்கு ஆராய்ச்சிப்பதிப்பு
வெளியிடவேண்டுமென்பதாகும். மூலப்பாடத்திதிறனாய்வுக்கண்ணோட்டத்தில் பாரதியின் எழுத்துக்களுக்கு
- குறிப்பாகக் கவிதைகளுக்கு ஆதராபூர்வமான ஆராய்ச்சிப்பதிப்பு வெளியிடவேண்டுமென அடிக்கடி
வலியுறுத்திவந்தார். இக்கருத்தினை அவரளவு அழுத்தமாக வற்புறுத்தியர் வேறொருவருமில்லை.
இந்நூலில் இடம்பெறும் பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் - சில குறிப்புகள், பாரதி
நூற்றாண்டை நோக்கி செய்யவேண்டியவை, செய்யக்கூடியவை, பாரதி நூல் பதிப்புகள் முதலிய கட்டுரைகள்
இதுதொடர்பான அவர் கருத்துக்களைத்தெரிவிப்பனவாகும்." இவ்வாறு இந்த நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு குறிப்பிடுகிறார்.
கைலாஸின்
பாரதி ஆய்வுகள் நூல் உயர்தர வகுப்பு, மற்றும்
பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கும் உசாத்துணையாக பரிந்துரைசெய்யப்படவேண்டிய பாடநூலாகவும் திகழுகின்றது.
இலங்கையில்
பாரதியின் சிந்தனைகள் எவ்வாறு வேரூன்றின என்பதை
ஆராய்வதற்கும் இந்த நூல் பெரிதும் உதவும்.
(தொடரும்)