இலங்கைச் செய்திகள்


இலங்கை இந்தோனேசியாவிடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்..! 

பிள்ளையானின் பிணை மனு நீதமன்றத்தால் நிராகரிப்பு!

வவுனியாவில் சமாதான விகாரை திறந்து வைப்பு

வவுனியாவில்  11 ஆவது நாளாக தொடரும் காணாமல் போன உறவுகளின் போராட்டம்

விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய  துணை ஜனாதிபதி சந்திப்பு..!

பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில்  கைது

கேப்பாபுலவு இராணுவத்தலைமையக வாயிலில் நின்று இராணுவத்தை திட்டி தீர்த்த மக்கள் : அனுமதிக்காவிட்டால் அத்துமீறுவோம் என எச்சரிக்கை!

 கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு






இலங்கை இந்தோனேசியாவிடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்..! 


08/03/2017 இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின், மாநாட்டில் பங்குபற்றிய நிலையிலேயே, குறித்த இருநாட்டு தலைவர்களுக்கிடையில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்  தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்து சமுத்திரத்தை சேர்ந்த 21 நாடுகள் பங்கு பற்றிய இயோரா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







பிள்ளையானின் பிணை மனு நீதமன்றத்தால் நிராகரிப்பு!
08/03/2017 முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிநேசன்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் நிராகரித்தார்.
இன்று காலை மேல் நீதமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆறு  சட்டத்தரணிகள் பிள்ளையான் தரப்பில் ஆஜராகினர்.
இருந்த போதிலும் மே மாதம் 4 ம்திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதுடன், மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2005.12.25 அன்று நத்தார் ஆராதனையில் மட்டக்களப்பு புனிதமரிளாள் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைபபு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 






வவுனியாவில் சமாதான விகாரை திறந்து வைப்பு
06/03/2017 பொலிஸ்மா அதிபர் தலைமையில் கடந்த 18.06.2016 அன்று வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் சமாதான விகாரையின் புனர் நிர்மானம் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த விகாரை இன்று காலை 6.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
27 அடி உயரமானதும் 44 அடி சுற்றுவட்டம் உடைய குறித்த சமாதான விகாரைக்கு இலங்கை பொலிஸ் திணைக்கள பௌத்த மத பிரிவிலுள்ள பொலிஸ் அதிகாரிகளால் நிதி உதவியளிக்கப்ட்டுள்ளது.
வடமாகாணத்தில் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் சமூக பொலிஸ் பிரிவிலுள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சர்வமத ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஒரு அங்கமாக நூல் வெளியீடு, மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் கர்ப்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு, வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரா, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமத்திய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், யுத்தத்தினால் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.   நன்றி வீரகேசரி 








வவுனியாவில்  11 ஆவது நாளாக தொடரும் காணாமல் போன உறவுகளின் போராட்டம்
06/03/2017 வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (06) 11 ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 
நன்றி வீரகேசரி 







விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!
06/03/2017 முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய  துணை ஜனாதிபதி சந்திப்பு..!
08/03/2017 இந்திய மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது ஹன்சாரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றிய நிலையிலேயே, குறித்த இருநாட்டு தலைவர்களும் இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை சுட்ட விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது இலங்கை கடற்படை தரப்பு குறித்த விடயம் தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தொடர் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி நன்றி வீரகேசரி









பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில்  கைது

09/03/2017 பிரான்ஸில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது  24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்ததுள்ளனர்.
இதேவேளை, அவர்கள் வந்திறங்கிய நிலையில் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைதிற்கான காரணம் தெரியவில்லையெனசும் வெிமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 









கேப்பாபுலவு இராணுவத்தலைமையக வாயிலில் நின்று இராணுவத்தை திட்டி தீர்த்த மக்கள் : அனுமதிக்காவிட்டால் அத்துமீறுவோம் என எச்சரிக்கை!

11/03/2017
முல்லைத்தீவு இராணுவ  படைத்தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த தொடர் போராட்டம்  இன்று பதினோராவது நாளாக தொடர்கின்றது.

இந்நிலையில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் யாரும் எந்த முடிவுகளையும் எடுக்காத நிலையில்,  இன்றைய தினம் விவேகானந்தன் தியீபன் வயது (28) மற்றும் பொன்னுத்துரை அழகராஜா வயது (55) ஆகியோர் தமக்கான தீர்வு கோரி  சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இன்று நண்பகல் ஒரு மணியளவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் இவர்கள் இருவரும் ஏன் தமது சொந்த  காணிக்கு செல்ல தங்களை வருத்தவேண்டுமென கொதித்தெழுந்து மக்கள்  இராணுவ முகாம் வாயிலை நோக்கி கோசங்களை எழுப்பியவாறு சென்று இராணுவ முகாம் வாயிலை பத்து நிமிடங்கள் வரை மறித்து  இராணுவத்தை திட்டித்தீர்த்ததோடு தமது காணிகளை விடுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இந்தமக்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக  ஒளிப்பதிவு செய்த இராணுவத்தினர் ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில், தாம் வெளிப்படையாக மின்குமிளில் பொருத்திய கமராவை கழற்றி, தற்போது நவீன கமரா ஒன்றை இரகசியமாக பொருத்தி மக்களை ஒளிப்பதிவு செய்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.





நன்றி வீரகேசரி 
கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு
 முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

குறித்த அலுவலகம் கல்லடியில் இன்று (11) கட்சியின் தலைவரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அலுவலகம் வடக்கில் மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலும் திறக்கப்படவுள்ளதகவும் மேலும்தெரிவித்துள்ளார்.
 நன்றி வீரகேசரி