உலகச் செய்திகள்


டொரன்டோ நகர சபை உறுப்பினராக இலங்கையர் நீதன் ஷான் தெரிவு!

வைத்தியர் வேடத்தில் வந்த ஐஎஸ் தீவிரவாதிகளால் 38 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம்..!

டிரம்பின் தொலைபேசியை ஒட்டு கேட்ட விவகாரம் : முன்னாள் உளவுத்துறை தலைவர் மறுப்பு..! 

ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராகப் போரிட மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள்!
H-1B விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து சிக்கலில் H4 வகை விசாக்கள் : அமெரிக்காவின் அடுத்த அதிரடி..!
 சிரியாவில் வான்வழித் தாக்குதல்; 23 பொதுமக்கள் பலி!







டொரன்டோ நகர சபை உறுப்பினராக இலங்கையர் நீதன் ஷான் தெரிவு!


07/03/2017 கனடாவின் டொரன்டோ நகர சபை உறுப்பினராக இலங்கைத் தமிழரான நீதன் ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்காபரோ - ரூஜ்ரிவர் வார்ட் இலக்கம் 42ல் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல் ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று உறுப்பினராகியிருக்கிறார் நீதன்!
இருபத்தொன்பது பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தல், மற்றெவரையும் விட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் நீதன் வெற்றிபெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. நீதன் 4,763 வாக்குகளையும், நீதனுக்கு அடுத்தபடியாக ஸுஹைர் செய்யத் 1,452 வாக்குகளையும், முன்னாள் நகரசபை உறுப்பினர் ரேமன்ட் சோவின் உதவியாளர் ராச் ஐநெஜியான் 1,055 வாக்குகளையும் பெற்றனர்.
பதினாறு வயதில் அகதியாக கனடாவுக்கு இடம் பெயர்ந்த நீதன், பன்மொழி ஆசிரியராகக் கடமை புரிந்தவர். கடந்த பல வருடங்களாகவே இந்தப் பதவிக்காகப் போட்டியிட்டு வரும் நீதன் ஷான், ‘ஸ்காபரோ ஃபெர்ஸ்ட்’ என்ற, ஸ்காபரோவை முன்னணிக்குக் கொண்டுவரும் திட்டங்களையே தொடர்ந்து அறிவித்து வந்ததுடன், ஸ்காபரோவில் வாழும் பல்வேறு சமூகத்தினரது பிரச்சினைகளும் நகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் தீவிரமாகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









வைத்தியர் வேடத்தில் வந்த ஐஎஸ் தீவிரவாதிகளால் 38 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம்..!

08/03/2017 ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவ வைத்தியசாலையில், தீவிரவாதிகள் வைத்தியர்களை போல உடை அணிந்து சென்று தாக்குதல் நடத்தியதால் 38 பேர் இறந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தலை நகர் காபூலிலுள்ள, முஹம்மது தாவுத் கான் இராணுவ வைத்தியசாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் வைத்தியர்கள் உடையில் வந்தவர்களால் நிலைகுலைந்த வைத்தியசாலை இராணுவத்தினர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது, தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு அந்நாட்டு தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேலதிக பாதுகாப்பு படையினரின் அதிரடியான தாக்குதலை தொடர்ந்து நிலைமை கட்டு படிர்ட்க்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதே பாணியில் கடந்த நவம்பர் மதம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 30 பேர் வரை கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











டிரம்பின் தொலைபேசியை ஒட்டு கேட்ட விவகாரம் : முன்னாள் உளவுத்துறை தலைவர் மறுப்பு..! 

06/03/2017 அமெரிக்காவின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப், போட்டியிட்ட போது, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்க உறுப்பினர்கள், டிரம்பின் தொலைபேசியை  ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு, முன்னாள் அமெரிக்க உளவுத்துறை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம்  தொடர்பாக  டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல், தனது தொலைபேசி அழைப்பை ஒட்டு கேட்டதோடு, அவற்றை சட்டவிரோதகமாக பதிவு செய்துள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தன காரணமென குறிப்பிட்டுள்ளார். 
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக  ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கிளப்பர்,  டிரம்பினதும், அவரது கட்சியினதும் எவ்வித தொலைபேசி அழைப்புகளும் ஒட்டு கேட்கப்படவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது  நன்றி வீரகேசரி 








ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராகப் போரிட மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள்!

09/03/2017 சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடும் யுத்தத்தை ஆரம்பித்திருக்கும் அமெரிக்க ஆதரவு கூட்டுப் படைக்கு மேலும் ஆயிரம் இராணுவ வீரர்களை அனுப்ப ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள் குவைத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவர்களைக் களமிறக்கவுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
யுத்த களத்தில் ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னரங்கு படையணைத் தலைவர்கள் இந்த வீரர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும், அங்கு ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது முதற்கட்ட நடவடிக்கைகளுள், ஐ.எஸ். இயக்கத்தைப் பூண்டோடு அழித்துவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










H-1B விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து சிக்கலில் H4 வகை விசாக்கள் : அமெரிக்காவின் அடுத்த அதிரடி..!


09/03/2017 தகவல் தொழிற்துறையில் பணியாற்றுவதற்காக அமெரிக்கா செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது   H4 விசாவினுடாக அமெரிக்காவிற்கும் பிரவேசிக்கும் H - 1B வகை சார் விசாவுடைய குடும்பத்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக H - 1B விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் குடும்பத்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு H4 என்ற விசா வழங்கப்படுகிறது.
மேலும் H- 1B விசா ஊடாக அமெரிக்கா வந்து பணிபுரிபவர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து, H4 விசாவின் ஊடாக அமெரிக்கா வருபவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் உயரியக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம், பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.

அத்தோடு H4 விசாவில் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்த கோரி அமெரிக்கர்களுக்கான தொழில் அமைப்பு ஏற்படுத்திய கோரிக்கையை தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறை சார்பில், வொஷிங்டன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, அமெரிக்காவிற்கு குடும்பமாக சென்று பணிபுரியும் திட்டமுடையவர்களுக்கு  பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி









 சிரியாவில் வான்வழித் தாக்குதல்; 23 பொதுமக்கள் பலி!


09/03/2017 சிரியாவில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடபகுதி நகரான ரக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக நம்பப்படும் பகுதியில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் எட்டு சிறுவர்களும் அடங்குவர்.
தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின்போது தாம் மிகுந்த கவனத்துடன் செயற்படுவதாகவும், கூடியவரையில் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதாகவும் கூட்டுப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கொல்லப்படும் பொதுமக்கள் தொடர்பில் இராணுவம் குறிப்பிடும் எண்ணிக்கைகள் உண்மைக்கு மாறாக இருப்பதாக கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி