புனிதமுடன் நோக்குவோம் ! ( எம். ஜெயராமசர்மா.... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


      கருணையொடு பாசமும் கள்ளமில்லா உள்ளமும்
          உருகிநிற்கும் அன்புமே உருவமெனக் கொண்டதாய் 
      கருவறையில் சுமந்துமே கண்விழித்துப் பார்த்துமே
            மனமுழுக்கச் சுமந்திடும் மாண்புடைய மங்கையை 
       நிலமுழுதும் இன்றுநாம் நீக்கமறப் போற்றுவோம்
           அவள்மனதில் ஆனந்தம் அமர்ந்துவிடச் செய்குவோம் !

       பொறுமையில் சிகரமாகி பொறுப்பினில் வைரமாகி
           அறிவினில் கூர்மைகொண்டு அனைத்திலும் உழைத்துநிற்கும்
       பெருமையாம் பெண்கள்தம்மை பெருமையாய் பார்க்கும்பாங்கு
            உலகினில் உதிக்கவேண்டி  ஒலியுடன் குரலெழுப்பி
        தனிமையில் வாடும்பெண்மை தலைநிமிர்ந் திடுகவென்று
             அனைவரும் அழைப்போம்வாரீர் அவரகம் மகிழ்ந்துநிற்பார் !

      மாதர்தம்மை இழிவுசெய்வார் மடமையைப் பொசுக்குவோம்
      மாநிலத்தில் மாதர்தம்மை மதிப்புயரச் செய்குவோம் 
      பேதமின்றி பெண்கள்வாழ பெரிதும்பணி ஆக்குவோம் 
      பூதலத்தில் பெண்கள்தமை புனதமுடன் நோக்குவோம் !