கடந்த
26 - 02 - 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன்
அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும்
உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவின்
செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன்
அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா சீவராசா
அவர்கள் ஈகைச்சுடரேற்றி
மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
அதனைத்தொடர்ந்து
நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
மலர்வணக்கத்தைத்
தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தையடுத்து தலைமையுரையை திரு வசந்தன் அவர்கள்
நிகழ்த்தினார்.
அவர்
தனது தலைமையுரையில் ஈழத்துப்பாடகர் எஸ். ஜி. சாந்தன்
அவர்கள் "இந்தமண் எங்களின் சொந்தமண்..." என்ற பாடலில் தொடங்கி
போரின் இறுதிக்காலம் வரையிலும் நூற்றுக்கணக்கான பாடல்களைப்பாடி எமது தாயக விடுதலைப்
போராட்டத்திற்கு தனது இசையால் வலுச்சேர்த்தவரென்றும்
எமது ஆயுதப்போராட்டம் தீவீரமடைந்திருந்த காலப்பகுதிகளில் புதிய போராளிகளை உள்வாங்குகின்ற பரப்புரைப்பணிகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பங்களிலும் சாந்தன் அவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது என்றும் குறிப்பிட்டார்.
அதனையடுத்து
எஸ். ஜி. சாந்தன்அவர்கள் மாவீரர்களுக்காகப்
பாடிய பாடலான "கண்னுக்குள்ளே வைத்துக்காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்...." என்ற பாடலை வளர்ந்துவரும்
இளைய பாடகர் செல்வன் சஜிந்தன் அவர்கள் உணர்வுபூர்வமாகப் பாடினார்.
அதனையடுத்து
நினைவுரையினை திரு கொற்றவன் அவர்கள்
நிகழ்த்தினார். அவர் தனதுரையில் ஈழத்துப்பாடகர்
சாந்தன் அவர்களின் இசைப்பயணம் தொடர்பாகவும் காலத்திற்கேற்றவகையில் அவரால் பாடப்பட்ட சில பாடல்களையும் தொட்டுக்காட்டியதோடு
மேலும் அவரது மகனும் பாடகரும் மாவீரருமாகிய கப்டன் இசையரசன் 2000-ம் ஆண்டு காலப்பகுதியில் தாயக விடுதலைப் போராட்டத்தில்
தன்னை இணைத்துக்கொண்டு பரப்புரைச் செயற்பாடுகளின்போதும் போராளிகள் மட்டத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளின்போதும் தனது தந்தையார் பாடிய
பாடல்களைப் பாடியே இசையுலகில் பிரவேசித்து பின்னர் இசைத்தட்டுகளுக்கும் பலபாடலகளையும் பாடியிருந்தார்.
மேலும்
ஈழப்பாடகர் சாந்தன்அவர்கள் யுத்தம் முடிவுற்ற தருணத்தில் அரசபடையினரிடம் சரணடைந்து படையினரால் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகியிருந்தார்.
அவர்
விடுதலையாகி வந்த பின்னரும் தாயகத்திலுள்ள
பல இந்துஆலயங்களுக்கும் பக்திப் பாடல்களைப்பாடியிருந்ததோடு
2013-ம் ஆண்டு வடமாகாணசபைத் தேர்தலின்போது "எங்கும் தமிழே புறப்படு தமிழினமே...." என்ற பாடலைப்பாடி தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு தனது இசையால் வலுச்சேர்த்தவர்
என்றும் பாடகர் எஸ். ஜி. சாந்தன்
அவர்களின் இழப்பு எமது கலைத்துறைக்கு ஈடுசெய்யமுடியாத
இழப்பாகும் என்றும் தனது நினைவுரையில் குறிப்பிட்டார்.
சில
நெருக்கடியான தருணங்களில் அழுத்தங்களின் மத்தியில் செயற்பட்டபோதும் சாதுரியமாக தமிழர் தேசியத்தை விட்டுக்கொடுக்காமல் செயற்பட்ட காலங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இறுதியாக
மாலை 5.20 இற்கு வணக்கநிகழ்வு நிறைவுபெற்றது.
------------------------------ ------------------------------ ------------------------------ -------------------------
தமிழீழ தேசியப் பாடகன் சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு – சிட்னி, அவுஸ்திரேலியா
தாயகவிடுதலைக்கானஇலட்சியத்தோடு
உறுதியாக இறுதிவரை பயணித்து மறைந்துபோன தமிழீழ தேசியப்பாடகன் சாந்தன்
அவர்களின் வணக்க நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் இன்று நடைபெற்றன.
சிட்னியில் துங்காபி சனசமூக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 05-03-2017 மாலை 3.10 மணிக்கு வணக்க நிகழ்வுகள் தொடங்கின.
அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பித்து சாந்தன் அவர்களின் நினைவுப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
அதனைத்
தொடர்ந்து தேசிய விடுதலைக்கான பணியில் பாடகர் சாந்தன் அவர்களுடன் இணைந்து
பணியாற்றிய அபரன் அவர்கள், சாந்தன் அவர்களின் எண்ணங்களையும் கனவுகளையும்
பகிர்ந்து நினைவுரை ஆற்றினார்.
தமிழீழ
தேசிய விடுதலைக்கான பணிகள் வெவ்வேறு வடிவங்களை எடுத்தாலும்
இலட்ச்சியத்தில் உறுதியாக பயணிக்கவேண்டும் என்ற தலைவரின் எண்ணங்களுக்கேற்ப
இறுதிவரை செயற்பட்ட தேசிய செயற்பாட்டாளன் சாந்தன் என அவர் தனது
நினைவுரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வில் சாந்தன் அவர்களின் நினைவைச் சுமந்த பாடலை நம்பிராஜ் வசந்தனும் கவிதையை சிவகுமார் அவர்களும் பாடினர்.
உறுதியுரையோடு வணக்கநிகழ்வு மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.