விளம்பர கட்டுப்பாடு: தயாரிப்பாளர் சங்கம் மீது பார்த்திபன் அதிருப்தி

.


விளம்பர கட்டுப்பாடுகள் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் பார்த்திபன்.
பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது. விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்துடன், இப்டம் மட்டும் தான் வெளியாகியுள்ளது.
மிகவும் குறைந்த திரையரங்களில் வெளியாகியுள்ளது 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
"தமிழகத்தில் இருக்கும் 1000 திரையரங்குகளில், 800-ல் 'பைரவா' வெளியாகியுள்ளது. மீதமுள்ள 200-ல் தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெளியாகியுள்ளது. 'பைரவா' போன்ற பெரிய படத்தோடு வெளியாகும் போது, முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அவர்களுடைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. 'பைரவா'வுக்கு இணையாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காத போது என்னுடைய விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது.
எங்களுக்கு சுதந்திரம் அல்லது சமத்துவம் கொடுங்கள் அல்லது எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

No comments: