இலங்கையில் பாரதி --- அங்கம் 06 - முருகபூபதி

.


இலங்கையில்  ஐந்து சதத்திற்கு ஒரு தமிழ்ப்பத்திரிகை விற்கப்பட்டிருக்கும் தகவலுடன், இந்தத்தொடரின் ஆறாவது அங்கத்திற்குள்  வருகின்றோம்.

இன்று  இவ்வாறு  மிக  மிகக்குறைந்த விலையில் ஒரு அச்சுஊடகத்தின் பிரதியை  வாங்கமுடியாதிருப்பதற்கான  காரணங்கள் வாசகர்களுக்குப்புரியும்.

எதிர்காலத்தில் இணையத்தின் ஊடாக செய்திகளை படிக்கமுடியும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்காத -- கற்பனை செய்தும் பார்த்திராத  அக்காலத்தில்  ஐந்து சதத்திற்கு கொழும்பிலிருந்து விற்பனைக்கு வந்திருக்கும் வீரகேசரி,  சுமார் 86 வருடங்களுக்கு முன்னர்  கொழும்பில்  தோன்றியது.

அக்காலப்பகுதியில்  தமிழகத்திலிருந்து  சதேசமித்திரன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளும் மலேசியாவிலிருந்து தமிழ்நேசன் பத்திரிகையுமே  இலங்கைத்தலைநகர்  தமிழ் வாசகர்களின் தேவையை  பூர்த்திசெய்தன.

வடபுலத்தில்  ஈழகேசரி, ஈழநாடு  என்பன  இங்குள்ள வாசகரிடம் செல்வாக்குச்செலுத்தின.  காலப்போக்கில்   இவற்றின் மறைவையடுத்து   யாழ்ப்பாணத்திலிருந்து  ஈழமுரசு,  முரசொலி, ஈழநாதம்,  வெள்ளிநாதம்,  திசை,  நமது ஈழநாடு,  நமது முரசொலி, வைகறை,    தாய்வீடு  முதலான பத்திரிகைகளும்  அதன்பின்னர், உதயன்,  வலம்புரி, தினமுரசு, யாழ். தினக்குரல்  என்பனவும் வெளியாகி  கடந்த  தேர்தலையடுத்து  தினமுரசுவும் தனது ஆயுளை முடித்துக்கொண்டது.




தந்தை செல்வாவின் சுதந்திரன் வாரப்பத்திரிகையும் (ஆசிரியர் கோவை மகேசன்) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்  இடம்பெயர்ந்து வெளியாகி,  காலப்போக்கில் மறைந்தது. தந்தையின்  தனயன் சந்திரஹாசன் சென்னையிலிருந்து ஈழ சுதந்திரன் என்ற பத்திரிகையை  வெளியிடுகிறார்.

தற்பொழுது  மற்றும் ஒரு  புதிய  ஊடகமாக காலைக்கதிர் தினப்பதிப்பும்  வார இதழும்  வாசகர்களின் கரங்களுக்கு கிடைத்துவருகின்றன.

இந்தவரலாற்றுப் பின்புலத்திலிருந்து தென்னிலங்கையை பார்ப்போம்.   1930 ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஒரு புதன் கிழமையன்று கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்த ஒரு அச்சகத்திலிருந்து 8 பக்கங்களுடன் வெளிவரத்தொடங்கியதுதான் எட்டு தசாப்தங்களையும் கடந்து வாழும்  வீரகேசரி.

பெரி. சுப்பிரமணியம் செட்டியாரால்  தொடங்கப்பட்ட வீரகேசரியில் எச். நெல்லையா  ஆரம்பகால ஆசிரியராகவும் பின்னர் பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.ரா, மற்றும் கே.பி.ஹரன் ஆகியோரும் ஆசிரியர்களாக பணியாற்றினர்.



மக்கள் இடம்பெயர்வதுபோன்று கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி காலப்போக்கில் கொழும்பு - 14 இல் கிராண்ட் பாஸ் வீதியிலிருந்த 185 ஆம் இலக்க கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்து  வெளிவரத்தொடங்கியது.

இந்தக்கட்டிடம் தொடர்பாகவும் சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. சுப்பிரமணியம் செட்டியார் அந்தக்கட்டிடத்தை ஒரு செல்வாக்கு மிக்க  சிங்களக்குடும்பத்திடமிருந்தே குத்தகை அடிப்படையில்  வாங்கியிருந்தார். வாடகையும் கொடுத்தார்.

அந்த கட்டிடம் முன்னர் ஒரு வீடாகத்தான் இருந்தது. அங்கு 17-09-1906 ஆம் திகதி  ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைதான் பின்னாளில் இலங்கையிலும் அனைத்துலக அரசியலிலும் பிரபல்யம் பெற்ற ஜே.ஆர். ஜெயவர்தனா.

கடந்த  வாரத்தில் நாம் எழுதியிருந்த இலங்கையில் பாரதி தொடரில் வரும்  தர்மிஷ்டர்  இவர்தான்.

குறிப்பிட்ட  கட்டிடத்தை தமது நினைவு இல்லமாக்கவேண்டும் என்றுதான் அவர்  முதலில்  பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றகாலப்பகுதிகளில்  நினைத்திருந்தார்.

ஆனால், அக்கட்டிடத்தை அவ்வாறு நினைவில்லமாக்க நேர்ந்தால் அதன் சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பு பிரதேசமாக்க வேண்டிவரலாம். அதற்காக  நூற்றுக்கணக்கான  குடும்பங்களை  அங்கிருந்து எழுப்பவேண்டிவரும்.  பல  கட்டிடங்கள் தரைமட்டமாகும். ஏனோ இதுவிடயத்தில்  தர்மிஷ்டர்  கருணை காட்டியதனால்  இன்றும்  அந்த இடத்திலிருந்து  வீரகேசரி  வெளியாகிறது.

எண்பது  வருடங்களின்  பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மார்க்கத்தில் ஜா எல என்னும் இடத்திற்கு அருகில் ஏக்கலை  என்னும்  தொழிற்பேட்டை  வர்த்தக வலயப்பிரதேசத்தில்  பல ஏக்கர் விஸ்தீரணம்கொண்ட   நிலப்பரப்பிற்கு வீரகேசரியின் சில இலாகாக்கள்  இடம்பெயர்ந்துள்ளன.

இலங்கையில் பாரதி பற்றிய ஆய்வில் ஈடுபடும்போது, பாரதியின் சிந்தனைகளைப்  பரப்பிய , பாரதி தொடர்பான விவாதங்களுக்கு களம் அமைத்த பத்திரிகைகளின் தொடக்க  கால சுருக்கமான  வரலாறும்  தவிர்க்கமுடியாததே.

" தமிழ்  வளர்ச்சிக்குத்  தமிழ்ப்பத்திரிகைகள்  செய்த பங்களிப்பு அளப்பரியது.  தமிழின்  பல  துறைகளும்  வளர்ச்சி  காணப் பத்திரிகைகள்   உதவியிருக்கின்றன.   இயல், இசை, நாடகம் ஆகிய  மூன்று  துறைகளுக்கும்  பத்திரிகைகள்  உறுதுணையாக இருந்து வந்துள்ளன.  சமயப்பத்திரிகைகளாக  உருவானவை கூடத்  தத்தம்  சமயத்தை  வளர்ப்பதனையே குறிக்கோளாகக்கொண்டிருந்த போதிலும்,  தமிழின் மூலமே சமயத்தை  வளர்த்தன.  சமயம்  வளர்ச்சிகண்டபோது  தமிழும் வளர்ச்சி   கண்டது.  எனவேதான் தமிழ் வளர்ச்சி பற்றி ஆராய்பவர்கள்  தமிழ்ப்பத்திரிகைகள்  பற்றிய  ஆய்வையும் மேற்கொள்வது  அவசியமாகிறது."  என்று தினகரன் முன்னாள் ஆசிரியர் இ.சிவகுருநாதன் தமது  இலங்கையில் தமிழ்ப்புதினப்பத்திரிகையின் வளர்ச்சி  என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் பாரதி குறித்த ஆய்விலும் இலங்கைப்புதினப்பத்திரிகைகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும்  அவற்றின்  உள்ளடகத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது. காரணம், இந்தத்தொடரின்  ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று மகாகவி பாரதி கவிஞராக மாத்திரம் அறியப்பட்டவரில்லை. அவரும் ஒரு பத்திரிகையாளர்தான். சில பத்திரிகைகளின் ஆசிரியராகவும்  இருந்துள்ளார்.

கருத்துப்படம், கேலிச்சித்திரம் என்று பேசப்படும்  அரசியல்  அங்கத
Cartoon கலைக்கு  தமிழ்ப்பத்திரிகைத்துறையில்  வித்திட்ட முன்னோடியும்  பாரதிதான்.

நாளாந்தம்  வெளியாகும்  பத்திரிகைகளை  புரட்டும்  பல  வாசகர்கள் முதலில்  இந்த  கேலிச்சித்திரங்களை  பார்ப்பதில்தான்  அதிகம் ஆர்வம்  காண்பிப்பார்கள்.  கேலிச்சித்திரங்கள்  பற்றி  தனியாக விரிவாகவே  ஆராயலாம்.  விரிவஞ்சி  தவிர்த்துக்கொண்டு  நகர்வோம்.

வீரகேசரி  வெளிவரத்தொடங்கிய  தொடக்க  காலத்தில்  இலங்கையில்   வாழும்  இந்தியத்தமிழர்களின்  ஆத்மாவை நிறைப்பதற்கான  விடயதானங்களுக்கு  முன்னுரிமை வழங்கிவந்தாலும்,   காலப்போக்கில்  இலங்கையின் தேசியப்பத்திரிகையாக  பரிமாணம்கொண்டது.



பாரதியின்  நண்பர்  வ.ரா  வீரகேசரியில்  ஆசிரியராக  அமர்ந்த  காலம்  முதல்  இன்றுவரையில்  பாரதி  தொடர்பான  படைப்புகளுக்கும்   விவாதங்களுக்கும்  சிறந்த  களம் வழங்கிவருகிறது.

பாரதி  பிறந்த - மறைந்த  தினங்கள்  வரும்  திகதிகளில்  விசேடமாக ஒரு  நினைவுக்கட்டுரையோ  ஆய்வு  ஆக்கமோ  வெளிவரும்.

1935  ஆம்  ஆண்டு  செப்டெம்பர்  மாதம்  12  ஆம்  திகதி  வெளிவந்த வீரகேசரியில்   ஒரு  வேண்டுகோள்  என்னும்  தலைப்பில்  ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

( இந்த  தினத்தில்தான் பாரதியார் சென்னையில் இறந்தார்.)

இதனை எழுதியவர், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி.வி. வேலுப்பிள்ளை.  மலையக  மக்களுக்காக  உழைத்த தொழிற்சங்கவாதி. அத்துடன்  1947 இல் சோல்பரி ஆணைக்குழுவின் பிரகாரம்  நடந்த  முதலாவது பாரளுமன்றத்தேர்தலில்  மலையகத்தில் தலவாக்கலை  தொகுதியிலிருந்து  தெரிவாகியவர்.

 அக்கட்டுரையின் இறுதியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

" நவீன காலத்துத்தமிழ் இலக்கியங்களுக்குள் பாரதியின் கவிதைகளுக்கு  இணையாகச் சொல்லக்கூடியது  ஒன்று கூட இல்லை. பாரதியாரின்  திருநாமம்  தமிழகத்தில்  உள்ள  ஒவ்வொரு  வீட்டிலும் கிணீர்   கிணீரென்று  தொனிக்கின்றது.  சுருங்கச்சொல்லுங்கால் வங்காளிகளுக்கு  தாகூர்  எப்படியோ,  அதே போன்றுதான் தமிழர்களுக்கு   பாரதியார்.   தமிழ்ப்பாஷை  பிற்போக்கடைந்து கொண்டிருந்த   தருணத்தில்  பாரதியார்  தோன்றினார். அவருடைய கவிதைகள்   தமிழுக்கு  மறுமலர்ச்சியை  அளித்தன.
இத்தகைய  பெரியாராகிய  பாரதியார்  இன்றுதான்  உலகை  நீத்தார்.

இந்தத்தினத்தை  இந்தியாவிலும்  இலங்கையிலுமுள்ள இந்துக்கள் ஒரு  தேசிய  தினமாகக்கருதிக்  கொண்டாடுவார்களென்பதில் ஐயமில்லை.

சி. வி. வேலுப்பிள்ளையவர்களின்   இந்த  வரிகள்   நெருடலாக  அமைந்துள்ளன.  அதே  கட்டுரையின் தொடக்கத்தில், " ....... பாரதியார் முதலான  மாபெரும்  கலைஞர்களைக்  குறிப்பிட்ட  ஒரு காலத்தைச்சேர்ந்தவர்கள்   என்றோ,  அல்லது  ஒரு  தேசத்தையோ அல்லது   ஜாதியையோ  சேர்ந்தவர்களென்றோ  கூறமுடியாது.  அகில உலகெல்லாம்   அவர்களுடைய   வீடு.   உலக மக்கள் அனைவரும் அவர்களுடைய   பந்துக்கள்.  நண்பர்கள்....."   என்று எழுதிய சி. வி. வேலுப்பிள்ளையவர்கள், இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள இந்துக்கள்  பாரதியின் மறைவு தினத்தை தேசிய தினமாக அனுட்டிக்கவேண்டும்   என வேண்டுகோள் விடுப்பது, --- பாரதியை 'இந்து' என்ற  சிமிழுக்குள்  அடக்க  எத்தனிப்பதாகாதா...?

யாதும்  ஊரே  யாவரும் கேளீர் என வாழ்ந்தவர் பாரதி.

" ஜாதி மதங்களைப்பாரோம்" எனச்சொன்னவர் பாரதி. அதனால் அவர் சி.வி. பதிவுசெய்வதுபோன்று 'இந்து'க்களுக்கு மாத்திரம் சொந்தமானவரில்லை.

சி.வி. அவர்கள் 1935 ஆம் ஆண்டளவில் எந்தச்சிந்தனைவயப்பட்டு எமக்கு  மிகவும்  நெருடலான  வார்த்தைகளை  அவ்வாறு  எழுத்தில்  உதிர்த்தாரோ  தெரியவில்லை. எனினும் பாரதி மறைந்து  பதினான்கு ஆண்டுகளின்  பின்னர்,  குறிப்பிட்ட  தினத்தை  தேசிய  தினமாக அனுட்டிக்கவேண்டும்  என்னும்  வேண்டுகோளை  வீரகேசரி  ஊடாக விடுத்திருக்கிறார்  என்பதும்  தகவலாகிறது.

இவ்வாறு  1935  இல்  வெளியான தகவலை,  17-01-1982  ஆம்  திகதிய வீரகேசரியிலிருந்து  தெரிந்துகொள்கின்றோம்.



அன்றையதினம்  சி.வி.யின் குறிப்பிட்ட  கட்டுரை  மறுபிரசுரம் கண்டது.  பாரதி நூற்றாண்டு (1982 - 1983) காலப்பகுதியில் வீரகேசரி நாளேட்டிலும்   வார  வெளியீட்டிலும்  பலரும் பாரதி பற்றிய கட்டுரைகள்  எழுதினர்.

                சொக்கன்,  பத்மா  சோமகாந்தன்,  அன்னலட்சுமி   இராஜதுரை( யாழ்நங்கை),   வள்ளிநாயகி  இராமலிங்கம்  (குறமகள்), ச. அம்பிகைபாகன்,   மண்டுர்  சிவ பரமானந்தன்,  மாதகல்  வ. கந்தசாமி,   முருகபூபதி,  பொ. சங்கரப்பிள்ளை,  பேராசிரியர்  அ.வி. மயில்வாகனம்,  தமிழோவியன்,  வசந்தி  கனகசபை,  மத்திய கரவை ஆ. கேதீஸ்வரன்,   பிரேம்ஜி  ஞானசுந்தரன்,  சபா ஜெயராசா, ஈழத்துச்சிவானந்தன்,  எஸ். எம். ஹனிபா,  மு. கனகராசன்,  பால விவேகானந்தன், உட்பட  பலர்  எழுதினர்.

சில்லையூர் செல்வராசன், புதுவை ரத்தினதுரை, இ.முருகையன், சொக்கன், புலவர் பார்வதி நாத சிவம் ஆகியோர் பாரதி தொடர்பாக கவிதைகள் படைத்தனர்.

சில்லையூர் 'பாரதிக்கு ஒரு பகிரங்க மடல்' என்னும் தலைப்பில் எழுதிய நீண்ட கவிதைக்கு எதிர்வினையாற்றும் கவிதைகளையே சொக்கனும் முருகையனும் ரத்தினதுரையும் எழுதினர்.

இவை வெளிவந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த திராவிடர் கழகத்தைச்சேர்ந்த தமிழரசன் என்பவரின் நேர்காணல் பதிவாகி பெரும் சர்ச்சையும் தோன்றியது.

திராவிடர்  கழகங்களைச் சேர்ந்தவர்களின்  பார்வைக்கு  பாரதி ஒரு பார்ப்பானக் கவிஞன்தான்.  அந்தப்பொதுப்புத்தியிலேயே தொடர்ந்தும்  பாரதியை  அவர்கள்  விமர்சித்துவந்தார்கள்.  அதற்கு ஈடுகொடுக்குமாற்போன்று  எதிர்வினைகள் பாரதி இயல் ஆய்வாளர்களினால்  முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வீரகேசரி அலுவலக நிருபர் அ. சொலமன்ராஜிற்கு 31-10-1982 இல் தமிழக  தமிழரசன் வழங்கிய நேர்காணலில், குறிப்பிட்ட வரிகள் அதிர்ச்சியளிப்பவை.

சிலவற்றை இங்கு தருகின்றோம்:

"....... இனவெறி மிக்க திலகரினால் தட்டி வளர்க்கப்பட்ட சுப்பிரமணிய பாரதிக்கு இன்று நூற்றாண்டு விழா கொண்டாடும் வரையில் போயிருக்கிறது. தமிழ் இன வரலாறே தெரியாதவர் பாரதி."

" பாரதி இனத்துக்காக சிந்திக்கவில்லை."

 " தமிழ் இதிகாசங்கள் பற்றியும் எமது இலக்கிய பாரம்பரியம் பற்றியும் பாரதிக்குத்தெரியாது. இவ்விஷயத்தை பாரதியின் தந்தையாரே பாரதிதாசனிடத்தில் கூறியிருக்கிறார். பாரதிக்கு மகா பாரதமும்  ராமாயணமுமே அதிகம் தெரிந்திருக்கிறது."

" தமிழனான கட்டபொம்மன் பற்றியே பாரதி பாடவில்லை. பாஞ்சாலியைப்பற்றியும் கண்ணனைப்பற்றியுமே பாடியுள்ளார். "

" பாரதியின் ஆயிரக்கணக்கான பாடல்களில் தமிழ்ப்பண்பாடு கூறப்படவில்லை. தமிழரின் பண்பாடு காட்டப்படவில்லை. தமிழ்க்கலைகள், கலாசாரம் விளங்கவில்லை."

இவ்வாறு அந்த நேர்காணலில் பாரதி குறித்த அவதூறுகள் சொல்லபட்டிருந்தன.

தமிழக தமிழரசனின் பார்வையிலிருந்த கோணல்தன்மையையும் முரண்பாடான கருத்தியலையும் அடுத்த அங்கத்தில் காணலாம்.

(தொடரும்)

No comments: