வெம்பல் - நோயல் நடேஷன்

.

இருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள்.
வேறு எவைகளாக இருக்கும்?
காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள்.
சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது.
அது மட்டுமா?
இவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் பெரியவர்களாக கிழமைக்கும் மாதத்திற்கும் ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பிழைசொல்லமுடியாது. இறகுகள் முளைத்த பின்பு புதிதான வாழ்க்கையை அவர்கள் தேடுவதுதானே எனது விருப்பமும். பதினைந்தாவது வயதில் தனியே விடப்பட்ட என்னை விடப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களே?
எனது வாழ்க்கை, குழந்தை, சிறுமி எனப் பயமற்று புல்தரையில் விளையாடிய பருவகாலம் போரின் வேகத்தில் பந்தயக் குதிரையாக வாழ்க்கை மைதானத்தை வேகமாகக் கடந்தது. இளம்பெண், மனைவி என்ற காலம் சுதந்திரத்தை இழந்து, பயத்தில் வனத்தில் ஒதுங்கி வாழும் நிலையாகியது. இப்பொழுது கடமைகள் முடிந்து பயமற்று நீண்ட மணற்பிரதேசத்தில் கால் புதைய நடக்கும் சுதந்திரமான காலத்தை அடைந்துவிட்டதுபோன்ற எண்ணம் துணிவைக்கொடுத்தது. எனது முதிர்வே துணையற்று போகும் துணிவை எனக்குக் கொடுத்து தனியாக இலங்கைக்கு செல்லத் தூண்டியது


அப்போது, அவசரமாக பார்சல் செய்யப்பட்டு அனுப்பிய பொருளாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டேன். இப்பொழுது அங்கு எவரும் நெருங்கிய உறவினர்கள் இல்லை. பெற்றோர் இறந்து சில வருடங்களாகிவிட்டது. எந்தத் தொடர்பும் இல்லாத போதிலும் இளமைக்காலத்தை அங்கு சென்று அசைபோடவேண்டும் எனத் தூண்டியது.
00
கொழும்பிற்குப் போய் சேர்ந்த அன்றே இரவு யாழ்ப்பாணத்திற்கு பஸ் ஏறினாள். பக்கத்தில் இருந்த இளைஞன்‘அன்ரி இருங்கள்’ என அருகில் இருந்த சீட்டைக் காட்டினான். காதோரத்தில் கத்தையாக நரைத்திருந்த தலை மயிர் அந்த உணர்வை அவனுக்குக் கொடுத்திருக்கலாம்.
ஆசனத்தைச் சாய்த்து வசதியாக அமர்ந்தபோது நேற்றைய இரவு சிங்கப்பூர் விமான நிலயத்தில் வரவேண்டிய தூக்கம் இப்பொழுது கண்களை அழுத்தியது.


காலையில் வீட்டை அடைந்தபோது உடைந்த வீடு கடந்த காலத்திற்கு சாட்சியாக இருந்தது. பாதி ஓடுகள்அற்று சுவர்கள் உடைந்து காட்சியளித்தது. மூன்று அறையில் ஒரு அறை ஒழுங்காக இருந்தது. வெளியே பின்பகுதிக்குசென்றபோது கிணறு தெரிந்தது. அங்கு எதுவித பாதிப்பும் தெரியவில்லை. தண்ணீர் அழுக்காக இருந்தது. கிணற்றருகேபோய் தோய்ப்பதற்காக கட்டியிருந்த கல்லினருகே எத்தனை தடவை ஆடைகளைத் தோய்த்திருக்கிறேன் என நினைத்தபடிஅந்தக் கல்லில் இருந்தபடியே பழைய நினைவுகளை மீட்டினாள்.
போர் மேகங்கள் ஊரை இறுக்கமாக இராட்சத கன்வஸ்ஸாக கவிழ்ந்திருந்த காலம். சுவாசக் காற்றில் கந்தகத்தின் எரிவும் செவியில் குண்டுகளின் வெடிச்சத்தமும் மட்டுமே அதிர்ந்த காலம். குண்டுகள் ஆகாயத்தில் இருந்து நிலத்துக்கும் நிலத்தில் இருந்து ஆகாயத்திற்கும் மாறிமாறிப் பாய்ந்து சாத்தான்கள் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. சாத்தான்களும் மனிதர்களும் மட்டுமே அந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். வாழ்ந்தார்கள் என்பதைவிட புராதனகாலத்து எகிப்திய அடிமைகளாக உயிர் வாழ்ந்தார்கள். மேய்ப்பவனுக்கோ, தீர்க்கதரிசிகளுக்கோ இல்லை. தேவதைகளுக்கோ அங்கு இடமில்லை. மரணங்கள், நோய்கள் மலிந்து சிந்திய இரத்தத்தில் சிவந்து ,கண்ணீரிலும் வியர்வையிலும் உப்பாகிய உவர்நிலம்.
நகரத்தின் அருகே கருமையான சுற்றுமதில் கொண்ட மாதா தேவாலயம். அதற்கு எதிரில் சிறிய விறகுகாலை. அதற்கு அருகே அவளது வீடு. ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்தது.
மாதா தேவாலயத்தில் உள்ள பாதிரியாரிடம் பேசவரும் அந்தப் பகுதி கேணல் இரவுகளில் தனது பாதுகாப்பிற்காக அங்கு தங்கத் தொடங்கினார். அவரது பாதுகாப்பிற்காக விறகு காலைக்கும் அவளது வீட்டின் இடைப்பட்ட பகுதியில் ஒரு சென்றி போடப்பட்டது. அது மண் மூடைகள் வைக்காமல் விறகுகாலையின் மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் அருகில் சென்று கவனிக்காதவர்களுக்கு விறகு அடுக்காகத் தெரியும். சென்றிக்கு அனுப்பப்பட்டவன் வாட்டசாட்டமான இளைஞன், துப்பாக்கியுடன் மரநிழலுள்ள ரோஜாவின் வீட்டின் முன்னால் நிற்பதும் கேணல் மாதா கோயிலுக்குள் வரும்போது, சென்றியாகவெளியிலும் நிற்பான்.
பாடசாலைக்குச் சென்று வரும் பதினைந்து வயதான ரோஜாவின் மணம் அவனது உறுதியைக் கெடுத்தது. அடிக்கடி தண்ணீர் குடிக்க உள்ளே வருவதும் சிரிப்பதும், சிறிது நாளில் துணிவை வரவழைத்து ரோஜாவுடன் பேசுவதற்கும்தொடங்கினான். அவனுக்கு பதினெட்டு வயதாக இருப்பதால் அவனிடம் ரோஜா சிரித்துப் பேசினாள் கச்சேரியில் வேலைசெய்த அவளது தந்தை இதைக்கண்டு பாதிரியாரிடம் முறைப்பட்டார்.
பாதிரியார் கேணலிடம் விடயத்தைச் சொன்னார்.
‘இந்த சென்ரிப் பொடியனை மாற்றமுடியுமா? மகளோடு சிரித்துப் பேசுகிறான் என பாவிலுப்பிள்ளை என்னிடம்குறையிடுகிறார்’
‘அது பிரச்சனையில்லை இன்னும் இரண்டு கிழமையில் ஒரு இராணுவ முகாமைத் தாக்கப் போகும்போது அவனை முன்னரங்கத்தில் அனுப்புவோம். அதன்பின் பொடியனால் பிரச்சனையிராது.’
‘அது கர்த்தருக்கு ஏற்காது. பாவமில்லையா?’
‘யாராவது இறக்கத்தானே போகிறார்கள்? மனித உயிர்களில் வேறுபாடு உள்ளதா?
பாதர் வாயடைத்துப் போனார்
‘உண்மைதான் மன்னன் டேவிட்டின் கதையில் கூட இது நடந்திருக்கிறது’
‘யார் பாதர் டேவிட்?’
‘இஸ்ரேலியர்களின் பெரிய அரசன் டேவிட். அவனது பரம்பரையில் வந்தவர் யேசுநாதர்.’
‘அந்தக் கதையை சொல்லுங்கோ பாதர்’
‘ஒரு நாள் அரசன் டேவிட்’ தனது மாளிகையின் உப்பரிகையில் நடக்கும்போது தூரத்தில் ஒரு பெண் குளிப்பதைப் பார்த்தான். அவளின் அழகில் மயங்கி அவளைத் தனது பிரதானிகளிடம் விசாரித்தபோது அது ஊறிச்சின் மனைவி பத்தீசா என்றார்கள்.
பத்திசாவை வரவழைத்து உணவுண்டு, உறவுகொண்டு வீட்டிற்கு அனுப்பினான் டேவிட்
சில மாதங்களில் கர்ப்பிணி என அவளிடமிருந்து மன்னன் டேவிட்டுக்கு செய்தி வந்தது அப்பொழுது உறிச் சாதாரண படைவீரனாக டேவிட்டின் படையில் ஒருவனாக எதிரிகளோடு போர் செய்து கொண்டிருந்தான்.
டேவிட் போரில் ஈடுபட்டிருந்த தனது படைத்தலைவரிடம் ஊறிச்சை தன்னிடம் அனுப்பும்படி சொன்னான். ஊறிச் மன்னனிடம் வந்தபோது இன்று மனைவியிடம் போய் உண்டுகளித்து, உறங்கிச் சந்தோசமாக இருந்து விட்டு, பின்பாக போர்முனைக்கு செல் என அனுப்பியபோது ஊறிச் வீடு செல்லாமல் மன்னனின் சேவகர்களோடு உண்டு உறங்கினான் இதைஅறிந்த டேவிட் ஏன் வீடு செல்லவில்லை என அடுத்த நாள் விசாரித்தபோது ஊறிச் ‘மன்னனே போர் நடந்து நமது படைவீரர்கள் காயமடைவதிலும், இறக்கும் காலத்தில் எப்படி நான் உண்டு களித்து மனைவியுடன் சந்தோசமாக இருப்பது?
‘இல்லை நீ வீடு செல்“ என இரண்டாவது நாள் அனுப்பியபோதும் ஊறிச் வீடு செல்லவில்லை.
போர்க்களத்தில் உள்ள தளபதிக்கு உறிச்சை முன்னரங்குக்கு அனுப்பித் தாக்கிவிட்டு பின்வாங்கு எனக் கட்டளை ஓலைஅனுப்பினான் மன்னன் டேவிட். மன்னனது கட்டளைப்படி சேனாதிபதி செய்ததால் ஊறிச் இறந்தான்.
அதன்பின் பத்திசாவை மணந்தான் மன்னன் டேவிட்
இந்த விடயத்தால் யாவோவின் கோபத்திற்கு ஆளாகிதால் நாதன் என்ற தீர்க்கதரிசி மன்னனிடம் வந்தார் .
‘மன்னா, ஊரில் பண்ணையார் ஒருவன் ஏராளமான செம்மறிகளும், மாடுகளும் கொண்டு மிகவும் வசதியாக வாழ்கிறான். அதேவேளையில் ஒரு குடியானவன் ஒரு செம்மறி குட்டி மட்டுமே வைத்திருக்கிறான் அந்த பண்ணையாளனின் வீட்டிற்கு விருந்தாளி வந்தபோது பண்ணையார் அந்தக் குடியானவனின் செம்மறிக்குட்டியை பறித்துக் கறி சமைக்கிறார். இது எப்படி நீதியாகும்?’
அப்பொழுது ஆத்திரமடைந்த டேவிட் ‘அப்படிச் செய்த பண்ணையார் தண்டிக்கப்பட வேண்டியவன். அது என் இராச்சியத்தில் நடக்கலாமா? அது யார்?
‘அது நீயேதான்: நீ ஊறிச்சுக்கு செய்தது அநியாயம்’
மிகவும் வெட்கமடைந்தான் டேவிட்.
‘உனது பாவசெயலுக்கு யாவேவின் சம்பளம் உள்ளது. நீ வஞ்சகமாகச் செய்த இந்த விடயத்திற்காக யாவேவால் நேரடியாகத் தண்டிக்கப்படுவாய். உனக்கும் பத்திசாவுக்கும் பிறந்த குழந்தை இறக்கும்’ என்றார்.
பத்திசாவுக்கும் மன்னன் டேவிட்டிற்கும் குழந்தை பிறந்து சில நாளில் இறந்தது. பத்திசாவின் இரண்டாவதுகுழந்தையே பிற்காலத்தில் இஸ்ரேலியர்களின் நீதியான அரசன் சாலமன்’
இதைக் கேட்டுக்கொண்டிருந்த கேணல், ‘நான் செய்யும் வேலைக்கு கிறிஸ்தவத்தில் பாவமன்னிப்பு உள்ளது அல்லவா பாதர்“ எனத் தலை குனிந்தான்.
‘இந்துவாகிய உனக்கு எப்படி நான் பாவமன்னிப்புத் தரமுடியும்?
‘நான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக நடக்கவில்லை. மேலும் அங்கு பாவமன்னிப்புக் கிடையாது. தண்டனை மட்டும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?’
‘எனது மனசாட்சியை இன்று வெளியே வைத்துவிட்டு பாவமன்னிப்பு தருகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உன்னை மன்னிப்பாராக’ என கேணலின் முடியற்ற தலையில் கையை வைத்தார்.
‘பாதர், உங்கள் மூலம் எனக்கு முன்ஜாமீன் கிடைத்திருக்கிறது எனச் சொல்லிக் கொண்டு கேணல் வெளியே நடந்தான்.அதைப் பார்த்து சென்றியில் இருந்தவன் கேணல் ஜீப்பில் ஏறும்வரையும் விறைப்பாக நின்றான்.
இராணுவ முகாமைத்தாக்க முனைந்த போராளிகளில் இரண்டுபேர் கொல்லப்பட்டார்கள். அந்தச் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்ததுடாக விரைவில் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என உள்ளுர் பத்திரிகையில் செய்தி வந்த சில நாட்களில் மாதாகோவில் பாதிரியார் வெளிநாட்டுக்குப் பிரசாரம் செய்வதற்காகச் சென்றார். அங்கிருந்த சென்றிக் காவல் எடுக்கப்பட்டது. இளம் பாதிரியார் அந்த மாதாகோவிலுக்கு வந்தார்.
பாவிலுப்பிள்ளை பாதர் செய்த உதவியை மனைவி ரெஜீனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது ரோஜாவின் காதில் விழுந்தது. எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிக்கு நேர்ந்தது அவளிடம்
ஆத்திரத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.
அதை எப்படி வெளிக்காட்டுவது?
தாய் தந்தை இருவரின் மேல் இருந்த மரியாதை காற்றாகப் பறந்தது.
சில நாளில் கொழும்பில் பதவி உயர்வு கிடைத்து நிம்மதியாக மாதாகோவிலுக்கு வெள்ளையடிப்பதற்காக ஒருதொகையை கொடுத்துவிட்டு பாவிலுப்பிள்ளை கொழுப்பு சென்றார். இளம்பாதிரியார் பாவிலுப்பிள்ளையின் சன்மானத்தைத் தனது ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் சொல்லி மகிழ்ந்தார்.
ரோஜா பாடசாலையில் இருந்து மாலையில் வந்த ஒரு நாள் வாசலில் அம்மாவோடு கேணல் பேசிக்கொண்டிருந்தார்.அம்மா அவர் செய்த கொலைக்காக அவருக்கு நன்றி சொல்லியதாக இருக்கலாம்.
கேணலின் மொட்டைத்தலையும் முழிக்கண்களும் எனக்குப் பிடிக்கவில்லை அதைக் கவனிக்காமல் எனது புத்தகத்தில் மூழ்கியிருந்தேன். அவர்களும் என்னைக் கணக்கெடுக்கவில்லை.
அடுத்த ஒருநாள் ஒரு தேவாலயத்தின் மீது குண்டுபோட்டதாக ஊரெங்கும் ஹர்த்தால் நடந்தது. தெருவெங்கும் அமைதி. வாகனங்கள் ஓடவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால் வீட்டில் நின்று வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுமிச்சுபிசி வாகனத்தில் கேணல் வந்து இறங்கியதும் வாகனத்தையும் பாதுகாவலரையும் திருப்பி அனுப்பிவிட்டு உள்ளேவந்தார். அம்மா வாசலுக்கு வந்து கேணலை வரவேற்றார்.
கேணல் இராணுவ உடையில் இருந்தார். அவரது இடுப்பில் கட்டிய பெல்ட்டில் கைத்துப்பாக்கி கொழுவியிருந்தது.
‘அம்மா இன்று உங்கள் வீட்டில் பாதுகாப்புக்காக நான் தங்குகிறேன். தேவாலயத்திற்குப் பக்கத்தில் உங்கள் வீடு இருப்பதால் பாதுகாப்பு என நினைக்கிறேன்’
‘தாராளமாக. கேணல் உங்களுக்கு இல்லாததா? அப்பாவின் அறையை உங்களுக்குச் சுத்தப்படுத்தி தருகிறேன்’;
‘அம்மா சுத்தப்படுத்திய அறைக்குள் நுழைந்த கேணல் அன்று இரவு வெளியே வரவில்லை. அதிகாலையில் எழுந்து சென்றுவிட்டதாக அம்மா சொன்னார்.
அடுத்த நாள் இரவில் வந்து தங்கினார். அதன் பின்பு அறிந்தேன் அம்மா அவரிடம் வீட்டு திறப்பொன்றை கொடுத்துவிட்டார். அத்துடன் வரும்போது இராணுவ உடையற்று சாதாரணமான உடையுடன் வந்தார்.அவரைக் கண்டால் மெதுவாகச் சிரிப்பதுடன் எனது தொடர்பு முடிந்தது. முப்பது வயதானவர், சாதாரண உடையில் இருக்கும்போது எந்த ஒரு கவர்ச்சியும் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை நானும் அம்மாவும் ஒரு மாதாகோவிலில் நடந்த உறவினர்களது ஞானஸ்ஞானம் ஒன்றுக்குப் போய்திருப்பியபோது இரவு எட்டு மணியாகிவிட்டது எமது வீட்டின் முன்பாக உள்ள மாமரத்தின் முன்பாக சாரத்தையும்கையில்லாத பெனியனையும் அறிந்தபடி கதிரையில் இருந்தார். அவருக்கு முன்னால் எங்களது சிறிய மேசையும் அதன்மேல் வெள்ளைத் தாளில் ஒரு வரைபடம் இருந்தது. அதைச் சுற்றி பத்து இராணுவ உடையணிந்தவர்கள் நின்றார்கள். அருகே சென்றபோது சிவப்பு பேனையால் கோடுகள் போடப்பட்டு இருந்த படத்தையும் கேணலினது வார்த்தைகளையும் அவதானமாகக் கேட்டபடி மற்றவர்கள் நின்றனர். எங்களது வீட்டை தங்களது முகாமாக்குவது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களை விலத்தியபடி நான் உள்ளே வந்துவிட்டேன். ஆனால் அம்மா அவர்களுக்குச் சந்தோசமாக சிரித்தபடி உணவு கொண்டு சென்றார். எனது அறையில் இருந்து நான் வெளியே வந்தபோது அம்மா வாசல் படியில் இருந்து, அவர்களைப் பார்த்தபடி வைத்த கண் எடுக்காமல் இருந்தார். இரவு பத்துமணிவரையும் அவர்கள் இருந்தார்கள்.
பெரும்பாலான இரவுகள் கேணல் எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கிவிட்டார். இரவில் அவர் வரும் வாகனசத்தம் அதிகாலையில் அவர் செல்வது எனக்குக் கேட்கும்.
காலையில் பாடசாலைக்கு நான் போவதற்கு முன்பாக உணவு தரும் வேளையில் பாதுகாப்புக்காக எங்கள் வீட்டைபயன்படுத்கிறார் என அம்மா விளக்கம் சொன்னார். அம்மா சொல்லும்போது எனது கண்களைப் பார்க்கவில்லை. என்றுமேபோல் இல்லாது தலை குனிந்தபடி எனக்கு உணவைப் பரிமாறியதுபோல எனக்கு மனத்தில் பட்டது. அம்மாவைப் பார்த்தபோது தலையில் இருந்த சில வெண்ணிற மயிர்கள் காணாமல் போயிருந்துடன் தலை மினுமினுத்தது. டை வைத்திருக்கிறார்போல. கண்ணைப் பார்த்தபோது கண்ணில் மெதுவான கருமை தெரிந்தது. அம்மாவுக்கு நாற்பதாகவில்லைத்தானே என நினைத்தபடி பாடசாலைக்குப் போனேன்.
சரியாக தமிழ்ப் பாடம் முடிந்து விஞ்ஞானபாட ஆசிரியர் வரும்போது வயிற்றுக் குத்துத் தொடங்கியது. நெளிந்தபடி குந்தியிருந்தேன். பாடங்கள் எதுவும் ஏறவில்லை. தலையை மேசையில் வைத்துப் படுத்தபோது ரீச்சர் வந்து எழுப்பினார்
‘வயிற்றுக்குள் குத்துகிறது டீச்சர்”
‘சரி வீட்டைபோ’
வீட்டுக்கு வந்தபோது கேணல் ஹாலின் நடுவே மேசையில் இருந்து உணவருந்தியபடி இருந்தார். அம்மா அவருக்குநெருக்கமாக நின்று பரிமாறியபடி இருந்தாலும் கேணலின் இடதுகை அம்மாவின் இடையிலும் வலதுகை நண்டைக் வாயில் வைத்துக் கடித்தபடியும் இருந்தார். பின்புறமாக வந்த என்னை இருவரும் பார்க்காதபடியால் மீண்டும் திரும்பி முற்றத்து மாமரத்தருகே நின்றபடி ‘அம்மா’ என குரல் கொடுத்தபடி உள்ளே சென்றேன்.
‘ஏன்டி ஏன் அரைவாசியில் வந்தாய்?”
‘வயிற்றுக் குத்து’
அம்மா குளித்து தலை ஈரத்துடன் மயிரைத் தொங்கவிட்டிருந்தாள் அவளது உடலில் ரெக்சோனா மணம் அந்த ஹோலை நிறைத்தது. கேணலும் அவரது தலையில் சுற்றி இருந்த சிறிதளவு தலைமயிரில் ஈரம் தெரிந்தது.
படுக்கையில் தலைமாட்டில் இருந்த தலையணையை வயிற்றுக்குள் வைத்தபடி குப்பற விழுந்தபோது அம்மாவும் கேணலும் வயிற்றுக்குத்தின் வலியைவிட மீறி நின்றார்கள்.
அன்றிலிருந்து அம்மாவையும் கேணலினது நடத்தையை வேவு பார்க்கத் தொடங்கினேன். அப்பாவுக்கு இதைப் பற்றி சொல்வதற்கு முன்பு எனக்குத் தகுந்த ஆதாரம் வேண்டும் என நினைத்ததேன். வகுப்பில் இருக்கும்போது அம்மாவையும் கேணலையும்தான் நினைக்கத் தோன்றியது அல்லாது பாடங்கள் காதில் ஏறவில்லை. இடைநிலைப்பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாதல் மற்றைய வகுப்புத் தோழிகள் ரோஜாவுக்கு என்ன நடந்தது எனக்கேட்டனர்.
இந்த பிரச்சனைக்கு முடிவு காணவேண்டும் என மதியம் ஒருநாள் வீடு வந்தபோது வீடு அமைதியாக இருந்தது.அம்மாவைக காணவில்லை காலில் சப்பாத்தைக் கழற்றிவிட்டு மெதுவாக கேணலின் அறைக்குச் சென்று நீங்கிய கதவுகள் ஊடாக பார்த்தபோது அம்மாவின் தலையைக் காணவில்லை. ஆனால் கேணலின் முதுகு முழுவதும் நீண்ட தலைமயிர் தெரிந்தது. எப்படி அவரது மொட்டைத் தலையில் இவ்வளவு நீளமான மயிர்கள் முளைத்தன? அம்மாவின் பொது நிறமானகால்கள் கேணலின் கால்களுடன் ஒன்றாகப் பிணைந்து இருந்தது. கேணலின் வெள்ளைத்தோலும் விரிந்த தோள்களும்அம்மாவை முற்றாக மறைந்தன. கேணலும் அம்மாவும் ஒருவராக இணைந்திருந்தார்கள். இருவரது பெருமூச்சுகளும் ஒருவரை ஒருவர் விழுங்குவதற்காகச் சண்டையிடும் காட்டு மிருகங்கள் போல் இருந்தது. அதிர்ச்சியா ஆத்திரமா அதிகமாக ஏற்பட்டது எனத் தெரியவில்லை. கத்த நினைத்த எனக்கு வாயில் இருந்து வந்த சத்தம் தொண்டையில் சிக்கிக் கொண்டது.குரலை வெளிப்படுத்த முயன்றாலும் அது முடியவில்லை. வாயைக் கையால் பொத்தியபடி எனது அறைக்குச் சென்றபோது அம்மா எனது நினைவில் இல்லை. கேணல் மட்டும்தான் தெரிந்தார்.
என்னையறியாமல் அன்று தொடக்கம் கேணல் நினைவில் மட்டுமல்ல கனவிலும் வந்தார். வகுப்பில் இருக்குபோது, விளையாட்டு மைதானத்தில் விளையாடும்போது, குளிக்கும்போது என வெட்கமில்லாமல் எனது நிழலாக வந்தார். வருபவர் மிலிட்டரி உடையோ, சிவிலியன் உடையோ அணிந்திருக்கவில்லை. வெக்கம் கெட்ட மனிதனாக வந்ததுடன் மட்டுமல்ல எனது உடலில் காச்சலை உருவாக்கினார். ஆரம்பத்தில் உடல் வருத்தமா எனப்பயந்தேன். பின்பு அவரது நினைவுகள் என்னைத் தாக்குகிறது எனப் புரிந்ததும் அம்மாவின் நைட் கவுன்களை உடுத்தபடி கேணல் முன்பு வருவேன்.அம்மாவோ கேணலோ என்னைக் கணக்கெடுக்கவில்லை. அடிக்கடி கிணற்றடிக்கு சென்று துணிகளை துவைப்பேன்.
‘அம்மா என்னடி கிணத்தடியல ஒரே நிக்கிறாய்?
‘சுத்தம் சுகம் தரும் என ரீச்சர் சொல்லியிருக்கிறா”
ஒரு ஞாயிற்றுக்கிழமை அம்மா உறவினர் வீட்டுக்குப் போயிருந்தார். கேணல் வீட்டின் அறையில் நித்திரையில் இருந்தார். அம்மாவின் நைட் கவுனை போட்டபடி அவரது அறையுள் சென்று அவரது அருகே படுத்தேன்.’ இரவு முழுக்க இராணுவ முகாமைத் தாக்கியதால் நித்திரையில்லை’ எனச் சொல்லியபடியே அணைத்தார். எனது நைட்கவுணை விலக்கி நெருங்கி முத்தமிட்டபோது விழித்து ‘ஏய் வெளியே போ’ என்றார்.
எனக்குப் புதிராக இருந்தது. கட்டியணைத்த பின்பு கலைக்கிறாரே!?
‘அம்மாவை விட நான் நல்லா இல்லையா?“
‘நீ ஒரு வெம்பல்’ எனச் சொல்லி கன்னத்தில் அறைந்துவிட்டுத் தள்ளி கதவை மூடினார்.
அவமானம் தாங்காமல் அறைக்குள் சென்று அழுதுகொண்டே எனது அறைக்குச் சென்றேன்.
எப்படி அம்மாவையும் கேணலையும் பழிவாங்குவது என யோசித்தேன். அப்பாவிற்குக் கடிதம் எழுதவேண்டும். அம்மாவைப்பற்றி சொல்லவேண்டும். ஆனால் எப்படி கேணலைப் பழிவாங்குவது? இரண்டுபேரையும் ஒன்றாக செய்வது நல்லது நினைத்து என எண்ணத்தை ஒத்திவைத்தேன்.
சில நாளில் பின்பு அம்மா வந்து
‘ உனக்கு இந்தியாவில் படிக்க அட்மிசன் கிடைத்திருக்கிறது. கொழும்புக்கு அவசரமாக ஒரு சிஸ்ரர்கூட அனுப்புகிறேன்’
‘அம்மா உன்னைப்பற்றி எனக்குத் தெரியாது என நினைக்காதே’
‘ஓமடி உன்னைப் பற்றி எனக்கும் தெரியும் இதையெல்லாம் விட்டிற்று படிக்கிற வேலையைப்பார்’ என தலையில் ஓங்கிக்குட்டி அனுப்பினார் .
கொழும்பிற்குப் போய் அப்பாவின் வெள்ளவத்தை அறையில் அம்மாவைப் பற்றி சொல்ல வாயெடுத்தபோது ‘அப்பா சொன்னார் ‘எங்கள் வீட்டருகே கேணலுக்குக் குண்டெறிந்தார்கள். அவரது கால் போய்விட்டதாக செய்தி வந்திருக்கு. பாவம் அந்த மனுசன் எங்களுக்கு எங்வளவு உதவியாக இருந்தது.’
அப்பாவின் அப்பாவித்தனத்தை பார்த்தபோது உண்மையைச் சொல்லி என்ன பிரயோசனம்? நான் நினைத்தபடி தண்டனை இருவருக்கும் கிடைத்துவிட்டது என்ற திருப்தியுடன் இந்தியாவுக்குச் சென்று பின்பு மருத்துவராகி அவுஸ்திரேலியாசென்றேன். கேணல் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆனாலும் எனது நினைவில் ஈரமாகிறார் என எழுந்தாள்.
00
‘சொறி அன்ரி பஸ் குலுக்கத்தில் உங்களில் எனது போத்தல்த் தண்ணீர் ஊற்றிவிட்டது. மன்னிக்கவும்’;
‘அது பரவாயில்லை நல்ல நித்திரை. பொழுது விடிந்து விட்டது. எழும்பத்தானே வேணும். எங்கே இப்ப?
‘கொடிகாமம் கழிந்து சாவக்சேரி வரப்போகிறது.’
நன்றி ஞானம் மாத சஞ்சிகை

No comments: