இந்திய ரூபாயின் சுவையான வரலாறு பேராசிரியர் கே. ராஜு

.


     இந்திய ரூபாய் பல நூற்றாண்டுகால சுவையான வரலாற்றினை உடையது. உங்கள் பாக்கெட்டிலோ பர்சிலோ உள்ள ரூபாயின் (மோடியின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு உங்கள் பாக்கெட்டில் ரூபாய் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்) கடந்த காலம் பல திருப்பங்கள் கொண்டது. ரூபாய் நோட்டில் பிரபலாகிவிட்ட மகாத்மா காந்தியின் சிரிப்புக்குப் பின்னால் நீண்ட போராட்டம், தேடல், செல்வம் கொண்ட வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு பண்டைக்கால இந்தியாவில் கி.மு. 6வது நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றில் சில முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்.
     சீனர்கள், மத்தியக் கிழக்கைச் சேர்ந்த லித்தியர்களோடு உலகின் பழமையான நாணயங்களை வெளியிட்ட பெருமை பண்டைக்கால இந்தியர்களுக்கு உண்டு. கி.மு. 6வது நூற்றாண்டில் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் பண்டைய இந்தியாவில் அன்றிருந்த காந்தாரா, குண்டல, குரு, பாஞ்சால, சௌராஷ்ட்ரா போன்ற ராஜ்யங்களைக் குறிக்கும் மகாஜனபதாஸ் என அழைக்கப்பட்டன. வெள்ளியிலான இந்த நாணயங்கள் வட்டம், சதுரம் போன்ற முறையான வடிவத்தில் அமையவில்லை. பிறகு வந்த மௌரியர்கள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களில்   நாணயங்களை வெளியிட்டனர். அடுத்து வந்த இந்திய கிரேக்க குஷான வம்சத்து மன்னர்கள் நாணயங்களில் ஓவியத் தலைகளைப் பொறிக்கும் வழக்கத்தைத் தொடங்கினர். இந்த வழக்கம் எட்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. குப்தப் பேரரசு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது.  அந்த நாணயங்களில் குப்த மன்னர்களின் சித்திரங்கள் இடம் பெற்றன.
     கி.பி. 12-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய சுல்தான்கள் இந்திய மன்னர்களின் வடிவங்களை நீக்கிவிட்டு இஸ்லாமிய எழுத்துக்களைப் பதித்தனர். 1526ஆம் ஆண்டில் தொடங்கிய முகலாய சாம்ராஜ்யம் ஓர் ஓருங்கிணைக்கப் பட்ட நிதியமைப்பு முறையைக் கொணர்ந்தது. ஹுமாயூனைத் தோற்கடித்த ஷேர் ஷா `ருபியா' எனப் பெயரிடப்பட்ட வெள்ளி நாணயத்தை வெளியிட்டது ரூபாயின் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை எனலாம்.
     முதன்முதலாக தாளில் அச்சடித்த ரூபாய் நோட்டு பிரிட்டிஷ் இந்தியாவால் வெளியிடப்பட்டது. 1857 சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு ரூபாயை இந்தியாவின் அதிகாரபூர்வமான கரன்சி என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. நோட்டுகளிலும் நாணயங்களிலும் ஐந்தாவது ஜார்ஜ் மன்னரின் தலை இடம் பெறத் தொடங்கியது.1862-ல் மகாராணி விக்டோரியாவைக் கௌரவிக்கும் விதமாக அவரது படம் இடம் பெற்ற வங்கி நோட்டுகளும் நாணயங்களும் ஏராளமாக வெளியிடப்பட்டன. அவரது காலத்திற்குப் பின் வந்த மன்னர்களின் படங்கள் நாணயங்களில் இடம் பெறுவது பின்னர் தொடர்ந்தது. 
     1935ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசின் நோட்டுகளை வெளியிடும் அதிகாரம் படைத்த நிறுவனம் என அறிவிக்கப்பட்டது. ஆறாவது ஜார்ஜ் மன்னரின் படம் கொண்ட 5 ரூபாய் நோட்டுதான் ரிசர்வ் வங்கி 1938ஆம் ஆண்டில் வெளியிட்ட முதல் ரூபாய் நோட்டு. 10000 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. ரிசர்வ் வங்கியின்  வரலாற்றில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் அதிக மதிப்புள்ளது இந்த நோட்டுதான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த உயர்மதிப்பு ரூபாய்கள் செல்லாதவை என இந்திய அரசு அறிவித்தது. 
     சுதந்திர இந்தியா வெளியிட்ட முதல் நோட்டு ஒரு ரூபாய் நோட்டுதான். அந்த ரூபாய் 64 பைசாக்கள் கொண்டது. 1950 ஆகஸ்ட் 15 அன்று இந்தியக் குடியரசின் முதல் நாணய அமைப்பாக 16 அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய் என அறிவிக்கப்பட்டது. 
     1957ஆம் ஆண்டில் தசாம்ச முறை அமுலுக்கு வந்தது. 16 அணாக்கள், 64 பைசாக்கள் என்ற அளவீடு மாறி ஒரு ரூபாய்க்கு 100 பைசாக்கள் என ஆனது. முதலில் இவை 100 `நயே பைசே அதாவது புதிய பைசாக்கள் என அழைக்கப்பட்டன. பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் 1, 2, 5 மற்றும் 10 பைசாக்களுக்கு வெவ்வேறு வடிவங்கள் கொடுக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு முன் வெள்ளியை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்திய ரூபாய் சுதந்திரத்திற்குப் பின் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றப்பட்டது. 1959-ல் ஹஜ் பயணிகள் சவுதி அரேபியாவில் மாற்றிக் கொள்ளப் பயன்படும் வகையில் 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1996-ல் மகாத்மா காந்தி படம் உள்ள ரூபாய் நோட்டுகள் வெளிவரத் தொடங்கின.


     காமன்வெல்த் விளையாட்டுகள், இந்திய நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு, யோகாவின் சர்வதேச தினம் ஆகிய அம்சங்களை முன்வைத்து விசேஷ நாணயங்கள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. 
     இப்படி இந்திய ரூபாயின் வரலாறு பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. கடைசியாக நாம் சந்தித்த நவம்பர் 8 செல்லாத நோட்டு அறிவிப்பு எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. மக்களையெல்லாம் வங்கிகள் முன்பும் ஏடிஎம் எந்திரங்கள் முன்பும் காத்துக் கிடக்க வைத்துவிட்டு அதையே தன் ஆகப் பெரும் சாதனையாக முழக்கமிடும் பிரதமர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடிக்கு உண்மை நிலவரத்தை எப்படிப் புரிய வைப்பது என்பதுதான் நமக்குப் புலப்படவில்லை.No comments: