அனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட்
மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)
கருப்பு பணத்திற்கு வந்த சோதனை ; மோடியின் அதிரடி அறிவிப்பு
செல்லுபடியாகாத 500 மற்றும் 1,000 ரூபா தாள்கள் : மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை.!
லண்டனில் இடம்பெற்ற டிராம் விபத்தில் 7 பேர் பலி ; பலர் காயம்
“ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு
மட்டக்களப்பில் குண்டுகள் மீட்பு.!
அனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட்
அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக எனது சேவையை வழங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடிய ஹிலாரி கிளிண்டன் வேற்றுமைகளை மறந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும். நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ள அவருக்கு என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து, அமெரிக்காவின் 45 ஆவது புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் , தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.
09/11/2016 நியூயோர்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனக்கு முதன் முதலாக ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்ததார். தானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலின் 8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.
ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார்.
இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.
ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை நனவாக்கலாம்.
நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன்.
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது.
அமெரிக்காவை நண்பனாக நினைத்து நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் திகதி பொறுப்பேற்கிறார்.
ஹிலாரி கிளிண்டன்: 218 (13 மாகாணங்களில் 218 இடங்களில் வெற்றி) நன்றி வீரகேசரி
மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)
09/11/2016 தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன் சற்றுமுன்னர் உருக்கமாக தெரிவித்தார்.
தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும்
நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்.
தேர்தலில் தோல்வியுற்றது வலி தான், இந்த வலி இன்னும் சில காலங்கள் இருக்கும். இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே குடிமக்களின் கடமை.
மேலும் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றி வீரகேசரி
கருப்பு பணத்திற்கு வந்த சோதனை ; மோடியின் அதிரடி அறிவிப்பு
08/11/2016 இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் இந்திய ரூபாய்க்கள் 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் செல்லுப்படியாகாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.
இந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், ''நாடு முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம். ஒப்படைக்க அடையாள அட்டை அவசியம்'' என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான குறித்த அறிவிப்பினை அதிரடியாக பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்
* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் திகதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக வங்கி அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.
* டிசம்பர் 30-ம் திகதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் சான்றுதல் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
* நாடு முழுதும் ஏடி.எம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் திகதிகளில் செயல்படாது.
* எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள், அரசு வைத்தியசாலைகள், சர்வதேச விமான நிலையங்கள், புகையிரத டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நாணயங்களை நவம்பர் 11 ஆம் திகதி வரை பயன்படுத்தலாம்.
* சில நாட்களுக்கு ஏடிம் இலிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.
* இணைய வங்கி, பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
* நாளை வங்கிகள் செயல்படாது.
*புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு வரும்.
*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்” பிரதமர் மோடி தெரிவித்தார். நன்றி வீரகேசரி
செல்லுபடியாகாத 500 மற்றும் 1,000 ரூபா தாள்கள் : மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை.!
09/11/2016 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மக்கள் செய்ய வேண்டியவை என்ன என்று ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
நவம்பர் 10ம் திகதி முதல் ஏற்கனவே உள்ள ரூபாய் தாள்களை எந்த ஒரு வங்கியின் கிளையிலும், அஞ்சலகத்திலும் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
தனி நபர் ஒருவர் ரூ.4000 வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டு வாங்கி கொள்ளலாம். அதற்கு மேலான தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.
பணத்தை மாற்றும் போதும், வைப்பு செய்யும்போதும் அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும்.
4000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கி சேவை, டெபிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கிக்கணக்கு தொடங்கப்படும்.
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை ஏடிஎம்.களில் எடுக்க சில நாட்கள் ஆகும். நவம்பர் 11ம் திகதி முதல் 18ம் திகதி வரை நாள் ஒன்றுக்கு ஏடிஎம்.ல் 2000 ரூபாயும், 19ம் திகதி முதல் 4000 ரூபாய் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பின்பு நாள் ஒன்றுக்கு உச்ச வரம்பு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
நவம்பர் 24ம் திகதி வரை பணம் எடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாயும், காசோலையில் 20,000 ரூபாய் வரையும் பணம் எடுக்க முடியும்.
மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், பண்ட் டிரான்ஸ்பர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.
டிசம்பர் 30ம் திகதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான சேவை ஆகியவற்றிற்கு 11-ம் திகதி வரை 500, 1000 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற ரிசர்வ் வங்கி இணைய தளத்தை பார்க்கவும்.
ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02 -22602201, 22602944 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளலாம். நன்றி வீரகேசரி
லண்டனில் இடம்பெற்ற டிராம் விபத்தில் 7 பேர் பலி ; பலர் காயம்
10/11/2016 லண்டனின் தெற்குப் பகுதியிலுள்ள குரொய்டனில் இடம்பெற்ற டிராம் வண்டி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வளைவொன்றில் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மாறாக அதிக வேகத்தில் சென்று திரும்பும் போதே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிராம் வண்டியின் வயதுடைய சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு
10/11/2016 அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியில் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க் உட்டபட 7 நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு எதிராக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் அமெரிக்க கொடியை எரித்தும் ட்ரம்பின் கொடும்பாவியை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நியூயோர்க், சிக்காக்கோ, போர்ட்லாண்ட், பொஸ்டன், பிலடெல்பியா, நியூஒர்லியன்ஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில் ட்ரம்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளை மாளிகைக்கு முன்னாள் மொழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரார்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் குண்டுகள் மீட்பு.!
10/11/2016 மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை தீவு பகுதியில் பனை மரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 40 மில்லிமீற்றர் குண்டுகள் மூன்றைத் தகவலொன்றில் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இந்தக் குண்டுகளை மீட்டுள்ளனர்.
இந்தக் குண்டுகள் பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment