சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா

.
  

ஆங்கில நாட்டினிலே அழகுதமிழ் சபையேறி அனைவரையும் அணைத்து
நின்ற அதிசயத்தைச் சொல்லுகிறேன்.வெள்ளையர்கள் தாமும் விருப்புடனே
சேலையுடன் துள்ளுதமிழ் விழாக்காண துடிப்புடனே வந்துநின்றார்.நல்ல
தமிழ் பேசிநின்ற நம்முடைய பிள்ளைகளை நாலுபேர் அறிவதற்கு நற்சபை
யாய் அமைந்ததுவே !
   கவிகம்பன் விழாவினையே கருத்துடனே நடத்திநின்ற காளையரைக்
கன்னியயரை கனம்பண்ணல் முறையன்றோ.ஜெயராமின் துணிவாலும் பணி
வான குணத்தாலும் ஜெயமான விழாவாக அமைந்தமையை அறிந்திடுவோம்.
   யாழ்மண்ணில் நடக்கின்ற விழாவாக நான்கண்டேன்.ராஜ கதிரைகளும்
ராஜசபை அலங்காரமும் ஜோராக இருந்ததை யாவருமே ரசித்தார்கள்.
ஜெயராஜின் கற்பனைகள் சிந்தாமல்,சிதறாமல், அவரின் மனத்தைப் பிரதி
பலிப்பதாக மண்டப ஒழுங்கமைப்பு , அலங்காரம், வரவேற்று உபசரித்தல்,
அத்தனையும் அமைந்தமையைக் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.
     அக்கால மன்னர்கள் தமிழுக்கு உழைத்தோர்களைக் கெளரவித்து
அவர்களுக்கு குடை கொடி ஆலவட்டம் சகிதம் சபைக்கழைத்து பரிசில்கள்
வழங்கினார்கள் என்று இலக்கியங்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.
  இக்காலத்தில் மன்னர்களுக்குப் பதிலாக அரசாட்சியாளர்கள் தங்கள்
மனம் போனபடி பாராட்டிப் பரிசளிப்பதையும் காண்கின்றோம்.ஆனால்
கம்பன்கழகம் போன்ற ஒரு அமைப்பு செய்வதைப்போல வேறு எந்த தமிழ்
அமைப்புகளும் இப்படி ஒரு கெளரவிப்பு விழாவினைச் செய்யவில்லை என்றே
கூறலாம்.


    பொருத்தமானவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய கெளரவம்
கொடுத்து மனத்திலே இருத்திவைக்கும் படியான பெறுமதி மிக்க பரிசினை
யும் வழங்கும் நயத்தகு நாகரிகத்தினால் ஏனைய அமைப்புக்களைவிடக்
கம்பன்கழகம் உயர்ந்தோங்கியே நிற்கிறது என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்.
   சிட்னி மாநகரில் அண்மையில் நடந்தேறிய கம்பன்விழாவில் நடந்த
கெளரவிப்பை சோழ அரசபையில் நடந்த கெளரவிப்பாகக் கற்பனை செய்து
நான் பார்க்கிறேன்.அத்தனை நேர்த்தியும், சிறப்புமாக அந்த வைபவம் அமைந்திருந்தது.இதனை தனது மனதில் திட்டமிட்டு தனது சீடர்களுடன்
இணைந்து அரங்கேற்றிய அன்புத்தம்பி ஜெயராம் அவர்களை அகமார
வாழ்த்துகின்றேன்.   21 அக்டோபர் ஆரம்பமான இத்திருவிழா அறிஞர்பலர் சிறப்பிக்க 23
அக்டோபர் வரை ஆனந்தமாக நடைபெற்றது.
   21, 22, அக்டோபர் திகதிகளில் நடைபெற்ற விழாவில் பங்குகொள்ளும்
பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருந்தார்.இரண்டு தினங்களும்
" தன்னை மறந்தாள் தன்நாமம் கொட்டாள் தலைப்பட்டாள் நங்கை
 தலைவன் தாளே " என்னும் நிலையில்த்தான் நானிருந்தேன் என்று சொல்லுவதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
    உண்ணும் சோறும் , பருகும் நீரும், கம்பனும் கன்னித்தமிழுமே என்றிரு
க்கும் தம்பி ஜெயராமையும் அவரது மாணாக்கர் பரம்பரையும் பார்க்கும் பொழுது தமிழ் இனி ஒருபோது வீழாது.அதற்கு என்றுமே உயர்ச்சிதான்
என்னும் எண்ணமே எனக்குத் தோன்றியது.
     சிட்னியில் நடந்த கம்பன் திருவிழாவில் வயது வேறுபாடின்றி மிகச் சிறிய
வரும் இடைத்தரமானவரும் ,நடுத்தரமானவரும், முதிர்வானவர்களும், நிகழ்சி
களை அலங்கரித்தமை மிகவும் அற்புதமாக இருந்தது.
      அதிகமான விழாக்களில் சற்று முதிர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்
கள்.ஆனால் பத்தாவது ஆண்டு கம்பனது திருவிழா வயதினைதூக்கி ஒரு
மூலையில் வைத்துவிட்டு வளரிளம் குருத்துக்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்
படுத்தியமை மிகவும் முக்கிய விடயமாக அமைந்ததைக் கட்டாயம் சொல்லி
யே ஆகவேண்டும்.
     முதல் நாள் கவியரங்கம் கலாநிதி ஶ்ரீ பிரசாந்தன் நடுவராயிருக்க நடந்தது.இதில் கலந்தவர்கள் இளைஞரும் அல்ல முதியவர்களும் அல்ல.
" எண்ணங்களும் வண்ணங்களும் " என்பதே கவியரங்கத் தலைப்பு.
இதில் பங்கு கொண்டவர்கள் வெளிப்படுத்திய விதங்களைப் பார்த்து
உண்மையில் வியந்தேவிட்டேன்.சாதாரண வண்ணங்களுக்குள் இவ்வளவு
விஷயங்களா என்று எண்ணத்தோன்றியது.இதில் பங்கு கொண்டவர்களில்
தமிழ்முரசு ஆசிரியர் திரு பாஸ்கரன் அவர்களை மட்டுமே எனக்குத் தெரியும்.
ஏனையவர்களை அன்றுதான் மேடையில் கண்டேன்.பாஸ்கரன் அவர்கள்
'முடிவுறா முகாரி ' என்னும் கவிதைநூலினை வெளியிட்டிருந்தார்.நானும்
அதனை வாசித்து விமர்சனமும் எழுதுயிருக்கிறேன்.பாஸ்கரன் புதுக்கவிதை
தானே பாடுவார்.அவர் எப்படி இதற்குள் வந்தார் என்று நான் யோசித்துக்
கொண்டிருக்கும்போதே கறுப்பு வண்ணம் பற்றிக் கவிபாட வந்துவிட்டார்.
    கொம்யூனிசமாகக் கொட்டப்போகிறாரே என்று எண்ணிய எனக்கு
ஏமாற்றமே காத்திருந்தது.பாஸ்கரனின் மரபுக்கவிதை பக்தியுடன் பின்னிப்
பிணைந்து எதுகை மோனையுடன் சந்தத்தமிழாய் கொட்டியது கண்டதும்
உண்மையிலே பிரமித்தே விட்டேன்.கறுப்பென்றால் வெறுக்கவேண்டாம் என்னும் கருவை மிகவும் நயமாக பாஸ்கரன் தந்தது எனக்குள் உறைந்து
விட்டது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
       வண்ணங்களைப் பற்றி உலகு பார்க்கும் பார்வை, உலக மக்கள் பார்க்கும்
பார்வை, சாதாரணமாக மக்கள் பார்க்கும் பார்வை, இலக்கியங்கள் பார்க்கும்
பார்வை என பல பார்வைகளை பலவண்ணமாய் இக்கவியரங்கம் விருந்தாக
அளித்தது.கவியரங்க நடுவரின் புன்சிரிப்பும் , சுவையான ,கலகலப்பான
தமிழ் கவிதையும் கவியரங்கின் அழகுக்கு அழகூட்டியது என்பது எனது
அவிப்பிராயமாகும்.
  இரண்டாம் நாள் திருவிழா இளைஞரையும் சிறுவர்களையும் முன்னிறுத்தி
ஆரம்பமாகியது.
   தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த தமிழ் பேராசிரியர் வி.அசோக்குமார்
அவர்களது தலைமையில் " திட்டம் போட்டு எழுதினானே " என்னும் மகுடத்தில் காதல், தியாகம்,வீரம்,தாய்மை,நட்பு,வஞ்சகம், என்னும் பார்வையில் இளையர் பட்டாளம் இனிய தமிழைப் பொழிந்துநின்றார்கள்.
   அவுஸ்த்திரேலிய மண்ணில் உள்ள இளைஞர்கள் இங்கிலீசு மட்டும்தான்
பேசுவார்கள்.தமிழென்றால் எட்டவே நிற்பார்கள் என்னும் எண்ணத்தைத்
தவிடு பொடியாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.அவர்கள்
அனைவரையும் அகமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.இவர்களால் இனிய தமிழ்
இன்ப உலா வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
    இளைஞரைத் தொடர்ந்து வயதிலே மூத்தோர்கள் பலர் பங்கு கொள்ள
கம்பனது கண்பார்வையில் இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜின் தலைமையில்
சிந்தனை அரங்கம் இடம்பெற்றது.இப்படியும் சிந்திக்க முடியுமா என்று சபை
யினரையே அதிரவைத்தது இவ்வரங்கம்.    கம்பவாரிதியின் சொல்லாற்றலால் வாதிட்டவர்கள் மயங்கியே விட்டார்கள்.சபையைக் கேட்கவா வேண்டும்.ஆடாமல் அசையாமல் யாவருமே
கம்பவாரிதியையே கண்கொட்டாமல் பார்த்தபடி அவர் பேசுவதைக் கேட்டபடி
இருந்தார்கள்.யாவரையும் இனிய தமிழ் இறுக அணைத்தபடியால் நிகழ்ச்சி
முடிந்துவிட்டதா என்பதே தெரியாமல் யாவரும் இருந்தார்கள் என்பதே உண்மை.அதற்கு நானும் விலக்கல்ல.
     சிறுவர்களைக் கொண்டு கம்பனது தெரிந்தெடுத்த பாத்திரங்களைக்
கண்முன்னே நிறுத்திய நிகழ்ச்சியாக இது இருந்தது.பாத்திரப் பொருத்த
மாக சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய ஆடைஆபரணங்க
ளுடன் மேடையில் உலாவர விட்டமையை யாவருமே மனதார ரசித்தார்கள்
அந்தக்குழந்தைகளையும் அன்புடன் நேசித்தார்கள்.மனதில் பதியும் நிகழ்ச்சி
என்று சொல்லவே வேண்டும்.அவர்களை ஒழுங்கு படுத்தியவர்கள் பாராட்டுக்கு
உரியவர்களே.
      கம்பன் கழகத்தால் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின்
திறலுக்காக பலநிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து
சான்றோர் விருதும் மாருதி விருதும் வழங்கும் நிகழ்சி இடம்பெற்றது.
     ஆங்கில மந்திரிகள் அரங்கினில் அமர்ந்து இருக்கச் சான்றோர் விதுகள்
வழங்கப்பட்டன.அதைத்தொடர்ந்து மாருதி விருது விழா மிகவும் கோலாகல
மாகத் தொடங்கியது.
   நிறைவில் கம்பவாரிதியின் தலைமையில் மிகச் சிறப்பான பட்டிமண்டபம்
இடம்பெற்றது.மீண்டும் தமிழ் மாரி பொழிந்தது,சபையிலே ஆனந்தம் பெரு
கியது.
   அக்டோபர் மாதத்தில் ஆனந்தம் , அகநிறைவு, அத்தனையும் தந்தவிழாவாக
சிட்னிமாநகரில் நடைபெற்ற கம்பனது திருவிழாவைக் காணுகிறேன்.இது
தமிழ்த் திருவிழா.தமிழைத் தளைக்கச் செய்யும் பெருவிழா.எங்கு சென்றாலும்
தமிழ் தமிழ்தான் என எடுத்தியம்பும் விழா என்பதே எனது மனதில் எழுந்த
எண்ணமாகும்.இப்படி விழாக்கள் நடந்தால் எல்லோரும் மகிழ்வடைவார்.
எங்கள் தமிழ் பெருமையுறும்.
           "  கம்பனைப் படிப்போம் கன்னித்தமிழ் காப்போம் "

             எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

No comments: