,
ஒரு காலத்தில் சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆசையிருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் போது ரஜினி மாதிரி ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். எட்டாம் வகுப்பு படித்த போது ஆள் குண்டுமுட்டி மாதிரி ஆகியிருந்தேன். மன்சூர் அலிகானாக ஆகிவிடக் கூடும் என்று தோன்றியது. நல்லவேளையாக இப்பொழுது ஓமக்குச்சி நரசிம்மனாகியிருக்கிறேன்.
எங்கள் ஊர்தான் சின்ன கோடம்பாக்கம் ஆயிற்றே? ஒரே சமயத்தில் ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி என்று பெரும் நட்சத்திரங்களின் படப்பிடிப்புகள் பக்கத்து பக்கத்து வயல்களில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்புகளை வாயைத் திறந்து பார்க்கும் போது நடிகைகளுக்கு அடுத்தபடியாக இயக்குநர்கள் மீதுதான் ஈர்ப்பு உண்டானது. எப்படியும் நடிகை ஆக முடியாது. ஆனால் இயக்குநர் ஆகிற களை முகத்தில் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். சொல்லி வைத்தாற் போல அந்தச் சமயத்தில் பெரும்பாலான இயக்குநர்கள் கத்தரிக்கப்பட்ட தாடியுடன் தோள் மீது சிறு டர்க்கி துண்டை போட்டுக் கொண்டு விரட்டியடித்துக் கொண்டு இருந்தார்கள். அதற்காகவே விரைவில் தாடி முளைக்க வேண்டுமென்று வேண்டாத சாமி இல்லை. ஆனால் இன்று வரைக்கும் சீரான தாடி முளைக்கவேயில்லை. இயக்குநர் வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்ற முடிவுக்கு வருவதற்கு அது ஒன்று மட்டுமே போதுமானதாக இருந்தது.
கவிதை எழுதத் தொடங்கிய பிறகு பாடலாசிரியர் கனவு வந்தது. அதுவொரு தனி அத்தியாயம். ஆனால் சினிமாவுக்கு வெறும் கனவு மட்டும் போதாது. தொடர்புகள் தேவை. உள்ளே நுழைந்தவுடன் யார் முகத்தில் விழிக்கிறோம் என்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நேர்த்தியான அதேசமயம் வெறித்தனமான உழைப்பும் அவசியம். என்னிடம் வெறும் கனவு மட்டுமே இருந்தது. கட்டாக எழுதி வைத்திருந்த கவிதைகளை எடுத்துக் கொண்டு கவிஞர் அறிவுமதியைப் பார்க்கச் சென்றிருந்தேன். மழை சொட்டிக் கொண்டிருந்தது. அவருடனான தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கமாக இருந்தது. கவிதைகளை வாசித்துவிட்டு முன்னுரை கூட எழுதிக் கொடுத்தார். அப்பொழுது அவரது அறையில் நிறையப் பேர் இருந்தார்கள். ‘சினிமாவில் பாட்டு எழுதணுங்கண்ணா’ என்று சொல்லக் கூச்சமாக இருந்தது. எதுவும் பேசவில்லை. கிளம்பி வந்துவிட்டேன். கடந்த மாதத்தில் பார்த்த போது கூட ‘முன்னாடியே நீ என்னை வந்து பார்த்திருக்கணும்’ என்றார். சினிமாவுக்காகச் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னார்.
அந்தச் சமயத்தில் அவரை மட்டுமில்லை. நிறையப் பேரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒருவேளை அடுத்த நாளிலிருந்து அடிக்கடி அறிவுமதியைச் சென்று பார்த்திருந்தால் திசை மாறியிருக்கக் கூடும். அவர் திசை காட்டியிருக்கக் கூடும். எப்படியாவது உருட்டிக் கொண்டிருந்திருக்கலாம்தான். சினிமாக்காரன் என்று சொல்லி வேணியைக் கட்டி வைத்திருக்கமாட்டார்கள். ஐடியில் சம்பாதித்து பெங்களூரில் வீடு கட்டியிருக்க முடியாது.
நடப்பதெல்லாம் நல்லதுக்குத்தான் என்று நம்புவதில்தான் வாழ்க்கையே இருக்கிறது.
நண்பர் தம்பிச்சோழன் காதல் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் இருந்த சமயத்தில் அடிக்கடி சந்திப்போம். திடீரென்று ஒரு கதையைச் சொல்வார். எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதிக் கொடுப்பேன். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் ‘இதையெல்லாம் படமா எடுத்தா எப்படி பார்ப்பாங்க?’ என்று என்னுடைய திரை எழுத்து மீது எனக்கே சிரிப்பாக இருக்கும். ஆனால் எல்லாமும் ஏதாவதொரு இடத்திலிருந்துதானே தொடங்க வேண்டும். சினிமா குறித்தான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். சுஜாதா, கருந்தேள் ராஜேஷ் போன்றவர்களின் விரல் பிடித்துப் போகப் போகத்தான் இந்தக் கடலின் ஆழமும் அகலமும் தெரிந்தது. நினைத்தவுடனே எட்டிக் குதிப்பதெல்லாம் சாத்தியமேயில்லை.
ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் நிர்மல் குமாரின் உதவியாளர் வேல்முருகன் அழைத்து ‘இயக்குநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்றார். அப்பொழுது சலீம் படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. சென்னையில் சந்தித்தோம். அடுத்த படத்திற்கான கதையைச் சொன்னார். பேசியதையெல்லாம் பதிவு செய்து கொடுத்து ‘எழுதறீங்களா?’ என்றார். அப்படியே எழுதிக் கொடுத்தேன். அவர்கள் அநேகமாக அதைப் பார்த்துவிட்டுச் சிரித்திருக்கக் கூடும். சினிமாவில் திரைக்கதை எழுதுவதற்கென்ற ஒரு வடிவம் இருக்கிறது. விவரணைகள் இடது பக்கமாக இருக்கும். வசனங்கள் தாளின் வலது பக்கமாக இருக்கும். அது கூடத் தெரியாமல் நோட்பேடில் வரிசையாக அடித்துக் கொடுத்திருந்தேன். எழுதிக் கொடுத்ததையெல்லாம் வேல்முருகன் சினிமாவுக்கான வடிவமாக மாற்றிக் கொடுத்தார். படம் தாமதமானது. நிர்மல்குமார் தெலுங்கு படத்திற்கான வேலைகளைச் செய்தார். அதற்கும் எழுதிக் கொடுத்தேன்.
ஒவ்வொரு முறையும் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிக் கொடுக்க வெகு நாட்கள் பிடித்தது. பயிற்சியின்மைதான் காரணம். எழுத எழுதத்தான் பயிற்சி. பயிற்சியில்லாமல் சாத்தியமேயில்லை.
இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் சசியின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட பிறகு ஒருவிதத்தில் நம்பிக்கை வந்திருக்கிறது. சினிமாவைத் தெரிந்து கொண்டேன் என்கிற நம்பிக்கையில்லை அது. சினிமாவின் நுனியைத் தொட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை. இன்னமும் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. கதையை யோசிக்கும் போது ஒரு வடிவத்தில் இருக்கும். எழுதும் போது இன்னொரு வடிவத்திற்கு வரும். பிறகு வாசித்துப் பார்க்கும் போது நன்றாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் கதையாக யாரிடமாவது சொல்லும் போது சொதப்பலாக இருக்கும். இன்னமும் வெகுகாலம் பிடிக்கக் கூடும். ஆனால் எல்லாவற்றையுமே முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணமிருக்கிறது. இவன் இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் வரையறுக்க முடியாது. ஆனால் இதைச் செய்ய வேண்டும் என்றிருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயமாக நமக்குக் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் திறமையை நிரூபிப்பதும் அவரவர் சாமர்த்தியம்தான்.
இன்று சதுரங்கவேட்டை-2 க்கு பூஜை போட்டிருக்கிறார்கள். மனோபாலா தயாரிக்கும் படம் இது. கதை, திரைக்கதையை முதல் பகுதியை இயக்கிய வினோத் எழுதிக் கொடுத்துவிட்டார். சலீம் இயக்குநர் N.V.நிர்மல்குமார் படத்தை இயக்குகிறார். அரவிந்த்சாமியும் த்ரிஷாவும் நடிக்கும் இந்தப் படத்தில் உதவியாக இருக்கச் சொல்லி நிர்மல்குமார் அழைத்திருந்தார். அவர் கேட்ட வேலைகளையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன். எதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று படம் வந்த பிறகுதான் எனக்கே தெரியும். படம் வெளிவரட்டும். விரிவாகச் சொல்கிறேன்.
இதுவொன்றும் ஆகச் சிறந்த சாதனை இல்லைதான். பயணிக்க வெகு தூரமிருக்கிறது. baby step கூட இல்லை. இதை பிறகொரு நாளில் கூட எல்லோருக்கும் சொல்லியிருக்கலாம்தான். என்னிடம் ரகசியம் என்று எதுவுமில்லை. எதைச் செய்கிறேனோ அதைச் சொல்லிவிடுவதில் தயக்கம் எதுவுமில்லை.
பூஜை போட்ட படங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
நாளைக்கு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. போகிற போக்கில் போய்க் கொண்டிருக்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் சமீமபாக, சம்பாத்தியத்திற்கான வேலையைத் தாண்டி எனது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நிசப்தம்தான் அடிப்படையாக இருக்கிறது. அத்தனை மனிதர்களும் இதன் வழியாகவே அறிமுகமாகிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பற்கான பாதைகளும் இங்கிருந்தேதான் திறக்கிறது. அதனால் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. சொல்லிவிட்டேன்.
பூஜை போட்ட படங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
நாளைக்கு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. போகிற போக்கில் போய்க் கொண்டிருக்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் சமீமபாக, சம்பாத்தியத்திற்கான வேலையைத் தாண்டி எனது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நிசப்தம்தான் அடிப்படையாக இருக்கிறது. அத்தனை மனிதர்களும் இதன் வழியாகவே அறிமுகமாகிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பற்கான பாதைகளும் இங்கிருந்தேதான் திறக்கிறது. அதனால் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. சொல்லிவிட்டேன்.
Nantri http://www.nisaptham.co
No comments:
Post a Comment