500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள்

.


நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் தாள்களை வங்கிகளில் வைப்பு செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 
அதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர்.  ஏ.டி.எம். நிலையங்களில் நாளை புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்கள்; வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை பெற்றுச் செல்கின்றனர்.


பல்வேறு பகுதிகளில் 500 ரூபாய் தாள்கள் வரவில்லை என்பதால் புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் தாள்கள் வழங்கப்படுகின்றன. 
இதற்காக வங்கிகளில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து கொடுத்து பணம் பெற்றுச்செல்கின்றனர். 
தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் மாற்றுவதற்காக மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பல்வேறு வங்கிகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments: