.
தங்கேஸ் பரம்சோதியின் அரிய ஆவண முயற்சி:
புங்குடுதீவு - சிதைவுறும் நிலம்
புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடம் புலம்பெயரா மக்கள் பேசும் ஆவணப்படம்
தெய்வங்கள் தூணிலுமிருக்கும் துரும்பிலும் இருக்கும் என்றுதான் எமது முன்னோர்கள் எமது பால்யகாலத்தில் சொல்லிவைத்தார்கள்.
அந்தத்தெய்வங்கள் கனவில் வந்தால் நாம்தான் வரம்கேட்போம் என நம்பியிருந்தேன். ஆனால், தெய்வங்கள் தங்களுக்கு வரம் கேட்குமா ....? நாம் தூணிலும் துரும்பிலும் மாத்திரம் .இருந்தால் போதாது எங்களுக்கென்று கோயில்கள் கட்டு எனச்சொல்லும் தெய்வங்களும் - எனக்காக பத்து முட்டை அடித்து என்பசி போக்கு என்று அம்மன்களும் கனவில் வந்து சொல்லும் கதைகளை கேட்கத் தொடங்கியிருக்கின்றோம்.
"கோயிலைக்கட்டு இந்துக்கள் மகிழ்ச்சி அடைவர். தேவாலயங்கள் கட்டு கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைவர், மசூதிகள் கட்டு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைவர். பாடசாலைகளைக்கட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவர்" இவ்வாறு தமிழகத்தின் கர்மவீரர் காமராஜர் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதாக அறிந்திருக்கின்றோம்.
எங்கள் இலங்கையில், ஒருவர் இப்படிச்சொன்னார்:
"கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார், கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்" இவ்வாறு சொன்னவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர். சமூகச் செயற்பாட்டாளர். அவர் பிறந்து வாழ்ந்த ஊரில் ஒரு கண்ணகி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீர் அள்ளுவதற்கு மேல்சாதிக்காரர் அனுமதி தரவில்லை என்றபடியால் சாத்வீக முறையில் அந்தக்கோயில் முன்றலில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்தார்.
மேல்சாதிமான்கள் பொலிஸிடம் சொல்லி அவரை அடித்து இழுத்துச்செல்லவைத்தனர். அவர் பொலிஸிடம் அடிவாங்கி சில மாதங்களில் அற்பாயுளில் மறைந்தார்.
இச்சம்பவம் 1974 ஆம் ஆண்டில் நடந்தது. இது நிகழ்ந்த ஊரின் பெயர் புங்குடுதீவு. அவ்வாறு மரணித்தவர் எமது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளி மு. தளையசிங்கம்.
இது நிகழ்ந்து 42 வருடங்களாகிவிட்டன. இந்த நான்கு தசாப்த காலத்தில் புங்குடுதீவில் நேர்ந்துள்ள மாற்றங்களை, இன்றும் அதே சாதிப்பிடிப்புடன் அவரவர்களுக்கு கோயில்கள் கட்டுகின்றார்கள்.
அதேசமயம் இந்தக்கொடுமைகளை சகிக்காமல் நன்னீர் ஊற்றுக்களும் மரணித்துவிட்டன என்பதை துல்லியமாக பதிவுசெய்து ஆவணப்படுத்தியிருக்கிறது ' புங்குடுதீவு - சிதைவுறும் நிலம்' என்ற ஆவணப்படம்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொண்ட பணிகளைப்பற்றி நீண்ட தொடரே எழுதமுடியும். தமது தாயகத்தில் போர் முடிந்தபின்னர், இதுவரையில் இலட்சக்கணக்கானோர் சென்று திரும்பியுள்ளனர்.
தங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று, " இதுதான் எங்கள் ஊர், இவர்கள்தான் எமது உறவுகள், இங்குதான் நாம் பிறந்து வளர்ந்த வீடு இருக்கிறது" என்பதைக்காட்டி படங்களும் எடுத்து, தங்கள் முகநூல்களிலும் பதிவுசெய்துகொண்டிருக்கின்றனர்.
தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர் இங்கிலாந்தில் கிழக்கு இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தமது கலாநிதி பட்டப்படிப்பிற்கான மானிடவியல் கள ஆய்வுக்கற்கையை அடிப்படையாகக்கொண்டு புங்குடுதீவுக்குச்சென்று இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.
இதுவெறுமனே மானிடவியலை மாத்திரம் பேசவில்லை. சிதைந்துகொண்டிருக்கும் ஒரு அழகிய தீவின் தொன்மையையும் அதன் ஆத்மாவையும் பேசுகிறது.
தாயகத்தின் சொந்த நிலத்திற்கும் புகலிட மண்ணின் இரண்டக வாழ்வுக்கும் இடைப்பட்ட கானலையும் சித்திரிக்கிறது.
" இந்த மண் என் கால்களின் கீழுள்ள தூசிப்படலமல்ல
எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்துபோகாத உயிர்த்தளம்"
என்ற வரிகளுடன் இந்த ஆவணப்படம் தொடங்குகிறது.
இந்த உள்ளத்துணர்வை எம்மிடம் விட்டுச்சென்றவர் கவிஞர் சு. வில்வரத்தினம். இவரும் புங்குடுதீவைச்சேர்ந்த சிந்தனையாளர். இவரும் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து, திருகோணமலையில் மறைந்துவிட்டார்.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட மு. தளையசிங்கத்துடன் இணைந்து சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டவர்தான் கவிஞர் சு. வில்வரத்தினம்.
நீடித்த இனநெருக்கடியும் போர்ச்சூழலும் புங்குடுதீவில் வாழ்ந்த 20 ஆயிரம்பேருக்கு மேற்பட்டவர்களை விரட்டியபோது அவர்களில் ஒருவராக இடம்பெயர்ந்து, திருகோணமலைக்குச்சென்றார். இவ்வாறு உள்நாட்டுக்குள்ளேயே பல பிரதேசங்களுக்கும் அவ்வூர் மக்கள் சென்றனர். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பரதேசிகளாய் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா என்று பறந்தனர்.
புங்குடுதீவில் 42 ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீருக்காக எங்கள் தளையசிங்கம் போராடி உயிர் நீத்த காலத்தில் பிறந்திருக்காத, தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர், அந்தத்தீவிலிருந்து புலம்பெயர்ந்து அந்நியம் சென்றவர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் எதிர்காலச்செயற்பாட்டுக்கும் வழங்கியிருக்கும் இந்த ஆவணப்படம் இலங்கை அரசை , வடமாகாண சபையை, எம்மவர்களின் மனச்சாட்சியை பிரசார வாடையே இன்றி கேள்விக்குட்படுத்துகின்றது.
இங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் பாரிய உள்ளுர் இடப்பெயர்வு, வெளிநாடு புலப்பெயர்வுகளினால் இந்தத்தீவின் நிலம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணமாக முன்னிறுத்தியிருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை இவ்வாறு சுருக்கமாகச்சொல்ல முடியும் என்ற பதிவையும் இதன் உறையில்(DVD Video Cover) காணமுடிகிறது.
ஆயுத யுத்தம் முடிவுற்றதொரு சூழலில் தாய்நாட்டுக்கு வெளியே சிதறிவாழும் உறவுகளை மீளிணைக்கும் ஒரு யுக்தியாகத் தமது சமுதாயக்கோயில்களை மீளக்கட்டுவிக்கின்ற புலம்பெயர்ந்து வாழும் ஊர்ப்பற்றுள்ள தமிழர்களினதும் உள்ளுரில் வாழும் அவர்களது உறவினர்களினதும் முயற்சிகள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாளாந்த வாழ்வில் புங்குடுதீவில் வாழும் மக்கள் எதிர்கொள்கின்ற வாழ்விடம், தண்ணீர், விவசாயம், பாதுகாப்பு, சாதியம், மதம் முதலிய பல சிக்கலான பிரச்சினைகளையும் இந்தப்படம் வெளிக்கொண்டுவருகின்றது.
யாழ்ப்பாணம் குடாநாட்டின் தென்மேற்குத்திசையில் 28 கிலோ மீற்றர் தொலைவில் 11. 2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத்தீவு முன்னோர் காலத்தில் பொன்விளையும் பூமியாகத்திகழ்ந்திருக்கிறது. பொன்குடுதீவு மருவி, பொங்குடுதீவாகி பின்னாளில் புங்குடுதீவாகியிருக்கிறது.
ஆனால், இங்கு வந்திறங்கிய போர்த்துக்கேயர், சப்த தீவுகள் என்றழைக்கப்படும் சில தீவுகளுக்கு மத்தியில் இது அமைந்திருப்பதனால் இதற்கு மிடில்பேர்க் (Middleburg) என்றே பெயர்சூட்டியிருக்கிறார்கள்.
இந்தத்தீவில் வாழ்ந்த சில ஆளுமைகள், படைப்பாளிகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்தப்பதிவுகளில் இவ்வூரின் மகிமைகளை சொல்லியிருந்தாலும், இந்த மண்ணில் கால் பதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆயினும் இந்த ஊரைக்கடந்து குறிக்கட்டுவான் சென்று அங்கிருந்து நயினாதீவுக்கு இரண்டு தடவைகள் சென்றிருக்கின்றேன்.
1983 இல் தென்னிலங்கையில் கலவரம் வந்த பின்னர் குழந்தைகளுடன் நயினாதீவுக்குச்சென்றிருந்தபோது, கோயில் கிணற்றடியில் இரண்டு இளம் யுவதிகளின் உரையாடல் என்னை துணுக்குறச்செய்தது.
ஒருத்தி மற்றவளிடம் கேட்கிறாள்," தண்ணீர் அள்ளுவதற்கு உனது வீட்டருகிலேயே ஒரு கிணறு இருக்கிறதே...? ஏன் குடத்தை தூக்கிக்கொண்டு இவ்வளவு தூரம் வருகிறாய்..? "
மற்ற யுவதியின் பதில்: " அங்கே கண்ட கண்ட சாதியெல்லாம் தண்ணியள்ள வருகுது"
" என்னம்மா இப்படி சொல்றீங்களேயம்மா...?" என்று அன்றே அவர்களிடம் கேட்டேன்.
உடனே ஒருத்தி, " ஊருக்குப்புதுசோ" என்று முறைத்துப்பார்த்தாள். அந்த முறைப்பு இன்னும் எனது கண்களிலிருந்து மறையவில்லை.
தங்கேஸ் பரம்சோதியின் இந்த ஆவணப்படத்தை பார்க்கின்றபோது அங்கு ஆன்ம ஈடேற்றத்திற்காக கோயில்கள் பல எழுந்தாலும் அவற்றின் அத்திவாரங்களுக்குள் ஆணவச்சாதி அகம்பாவம் புதையுண்டுபோகவில்லை என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது.
அங்கு 1991 இல் அத்துமீறி நுழைந்த இராணுவத்திற்கு அவ்வூர் மற்றும் ஒரு சிங்கப்பூராக காட்சியளித்திருக்கிறது.
அழகான கல்வீடுகள், தோட்டம் துரவுகள், பசுமையான வயல்வெளிகள், கோயில்கள், கிராமத்தின் வனப்புகள் யாவும் ரம்மியமான காட்சிகளாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் இன்று ...?
ஊர் வெறிச்சோடியிருக்கிறது. வீடுகளில் மக்கள் இல்லை. புதர்க்காடுகள் செழிப்படைந்திருக்கின்றன. கிணறுகள் பாழடைந்துள்ளன. குட்டைகள் கழிவுப்பொருட்களின் தங்குமிடமாகிவிட்டன. ஆழ் கிணறுகளில் தூர் வாரப்படாதமையினால் நன்னீர் இல்லை.
இந்த ஆவணப்படத்தில் இந்த ஊரைச்சேர்ந்தவரும் சிறிது காலம் கனடாவில் வாழ்ந்துவிட்டு திரும்பி வந்திருப்பவருமான அருணாசலம் சண்முகநாதன் , பேராசிரியர்கள் பாலசுந்தரம்பிள்ளை, குகபாலன் மற்றும் ஊர்ப் பொதுமக்களும் உரையாற்றுகிறார்கள்.
புலம்பெயர் வாழ்வில் நினைவு மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை ஊருக்கு அழைத்துவந்தால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கும் அருணாசலம் சண்முகநாதனுக்கு புங்குடுதீவுக் கோயில்களில் மணியோசை கேட்கவில்லை. ஒரு கோயிலின் மணியை திருத்தி அடிக்கச்செய்திருக்கிறார். அதன் பின்னர், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று அவர் உணர்ச்சிகரமாக கண்ணீர் பனிக்கச்சொல்கிறார்.
புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு தமது ஊரிலுள்ள கோயில்களில் மணியோசை கேட்கவேண்டும். அதற்காக இடிபாடுகளுடன் காட்சியளிக்கும் கோயில்களை திருத்தி அல்லது மாற்றங்கள் செய்து புனருத்தாரணம் செய்யவேண்டும். கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். அமைக்கும் மணி மண்டபங்களில் தங்கள் பெயர் பொறிக்கப்படல் வேண்டும் என்றெல்லாம் ஆசைவருகிறது.
இதேவேளை, ஊரில் இருப்பவர்களின் கனவுகளில் தெய்வங்கள் வருகிறார்கள். தத்தமக்கு கோயில்கள் எழுப்புமாறு வேறு சொல்கிறார்கள்.
இந்தத்தெய்வங்கள், பாடசாலைகளைக்கட்டு, நூல் நிலையங்களை உருவாக்கு, மருத்துவமனைகளை எழுப்பு என்று கனவில் வந்து சொல்ல மாட்டார்களா...?
இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்பொழுது, இந்த ஊருக்கு ஒரு பொலிஸ் நிலையத்தையாவது கட்டிக்கொடுங்கள் என்று இவ்வூர் மக்களிடம் வாக்குக்கேட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகளின் கனவில் வந்து அந்தத்தெய்வங்கள் சொல்ல மாட்டாதா..? என்ற ஏக்கம்தான் வருகிறது.
ஊரைச்சுற்றிப் பற்றைக்காடுகள். பாழடைந்த வீடுகள். சனநடமாற்றமில்லாத சூனியப்பிரதேசங்கள். இவைபோதும் குற்றச்செயல்களின் அதிகரிப்பிற்கு. அவ்வாறு நடந்த ஒரு சம்பவம்தான் வித்தியா என்ற ஒரு பாடசாலைச்சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை. அவள் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட இடமும் இதில் காண்பிக்கப்படுகிறது.
இது நிகழ்ந்து அடுத்த வருடம் மே மாதத்துடன் இரண்டு வருடங்களாகப்போகிறது. ஆனால், குற்றவாளிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.
எழுக தமிழ் எழுச்சிப்பேரணி போன்று பல பல பேரணிகள் நடந்துவிட்டன. நாடாளாவிய ரீதியிலும் ஒரு தமிழ்ச்சிறுமிக்காக மூவின மக்களும் வீதிக்கு வந்து அறப்போராட்டம் நடத்தினர்.
ஜனாதிபதியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். வீடும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.
ஆனால் , அவ்வூர் மக்கள் இன்றும் தங்கள் பாதுகாப்பிற்கென்று ஒரு காவல் நிலையம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
வெளிநாட்டில் வதியும் உறவுகள் அனுப்பும் பணத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் இம்மக்கள் அவதிப்படுகின்றனர்.
பாழடைந்த வீடுகளை திருத்தி, சீர்படுத்தி கழுவித்துடைத்து அங்கு தற்காலிக வாழ்வு வாழும் மக்களின் பிரதிநிதிகளும் குறிப்பாக பெண்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
வெளிநாடு சென்றவர்கள், என்றாவது ஒருநாள் வந்து பார்த்துவிட்டு வீடியோ எடுக்கின்றனர், படம் எடுக்கின்றனர். பின்னர் தமது முகநூல்களில் பதிவேற்றுகின்றனர். திரும்பிச்செல்கின்றனர்.
பூர்வீகச்சொத்துக்களை அவற்றை பாதுகாத்து பேணிக்கொண்டிருப்பவர்களுக்கு விற்பதற்கும் மனம் இடம்கொடுப்பதில்லை.
வீடுகளைத்திருத்துவதை விடுத்து கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து பணம் வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சராசரி 20 கோடி ரூபா இந்தக்கோயில் கட்டுமானங்களுக்காக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா முதலான தேசங்களிலிருந்து வருகிறது.
இது இவ்விதமிருக்க, சாதி அடிப்படையிலும் சிறிய கோயில்கள் பெரியகோயில்களாகின்றன.
இவ்வாறு எதிர்காலத்திலும் நிகழும் என்று தீர்க்கதரிசனமாக மு. தளையசிங்கம் சிந்தித்தமையால்தானோ அன்றே " கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார் கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்" என்று பாடினாரோ???
இதில் வேடிக்கை என்னவென்றால், 1980 களில் இங்கு 85 சதவீதமான உயர்சாதியினர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், இன்றோ அவர்களின் வீதம் பத்து சதவீதம்தான் என்கிறார் ஒரு ஊர்ப்பொதுமகன்.
வீடுவிட்டு வீடு மாறிச்சென்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிரந்தர வீடுகள் இல்லாதவர்கள், தாம் இதுவரையில் பல வீடுகளை கழுவிவிட்டோம் என்று பெருமூச்சுவிடுகின்றனர்.
அரசினாலும் புலம்பெயர்ந்து சென்றவர்களினாலும் கைவிடப்பட்ட கவனிப்பாரற்ற தீவாகியிருக்கும் இந்த ஊருக்குள் தென்னிலங்கை வாசிகளின் பிரவேசம் மௌனமாக நடந்துகொண்டிருப்பதையும் இந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது.
" இப்படியே சென்றால், விரைவில் பக்கத்து வீட்டுக்காரரை " எப்படி மாத்தயா சுகம்? " என்று விசாரிக்கும் நிலைவரலாம் என்கிறார் ஒருவர்.
தென்னிலங்கை மக்களின் வழிபாட்டுத்தலம் நயினாதீவில் நாகவிகாரை என்ற பெயரில் இருக்கிறது. அங்கு செல்வதற்கான பாதை புங்குடுதீவில் பிறக்கிறது. போர் முடிந்த பின்னர் அங்கு அவர்கள் உல்லாசப்பயணிகளாக வந்து திரும்புகிறார்கள்.
அவர்களுக்காக தென்னிலங்கை பெரும்பான்மையினரால் கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு வந்து பனையின் நுங்கு சுவைக்கிறார்கள். தாம் தங்கும் வீடுகளில் குடிநீர் தாங்கிகள் அமைக்கிறார்கள்.
இந்த மாற்றங்களை காட்சிப்படுத்தும்பொழுது பின்னணியில் ஒலிக்கிறது, " டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப்பாரு டிங்கிறி டிங்காலே" பாடலின் இசைக்கீற்று.
" Pungudutivu: A Disintegrating Island " என்னும் இந்த ஆவணப்படத்தை தமது மானிடவியல் கலாநிதி பட்டப்படிப்பிற்கான சமூக ஆய்வாக தங்கேஸ் பரம்சோதி இயக்கித்தயாரித்திருந்தாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும் உள்நாட்டில் மக்களின் வாக்குகளுக்காக நம்பியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளையும் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்களையும் சுயவிமர்சனத்திற்குள்ளாக்குகிறது.
தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழ் ஈழம் முதலான கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கண்முன்னால், ஒரு அழகான தொன்மையான தமிழர் தீவு, சிதைந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் வாழுபவர்களினதும் அவர்கள் சந்ததிகளினதும் காட்சிப்பொருளாகத் திகழும் பூர்வீக மண்ணும் அவர்களின் உறக்கத்தின்போது கனவுகளில் வரவேண்டும்.
புங்குடுதீவு போன்று இலங்கையில் கைவிடப்பட்டு அநாதைகளான பல கிராமங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் அந்த அநாதை நிலங்களின் வாசனை ஆவணமாக்கப்படல் வேண்டும் என்பதையும் பார்வையாளர்களிடமும் ஊர்ப்பற்றுள்ளவர்களிடமும் செய்தியாக வலியுறுத்துகிறது இந்தப்படம்.
மாகாண அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் அரச நிதியை முறையாக பயன்படுத்தாமல் மீண்டும் மத்திய அரசின் திறைசேரிக்கே அனுப்பிக்கொண்டிருக்கும் வடமாகாண சபைக்கும் இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்து, புங்குடுதீவு வாழ் புலம்பெயர் சமூகத்திடம் மட்டுமன்றி உலகெங்கும் சிதறி வாழும் ஈழத்தமிழர்களிடத்திலும் காட்சிப்படுத்தல் வேண்டும்.
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் படைப்பாளிகள், கலைஞர்கள், கல்வியியலார்களினதும் கடமை.
அந்தக்கடமையை நிறைவேற்றியிருக்கும் தங்கேஸ் பரம்சோதியின் இந்த அரிய முயற்சி பாராட்டுக்குரியது.
புங்குடுதீவு ஓர் சிதைவுறும் நிலம் தொடர்பான இந்தக்காணோளி இறுவட்டின் பிரதிகளை பெற்றுக்கொள்ள விருப்புவோர், மேலதிக விபரங்களுக்கு சதீஷ் அவர்களுடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளலாம்.
04 13 904 904 அல்லது 04 50 992 991.
----------------0--------------------

No comments:
Post a Comment