குழந்தைக்காக ஒரு நிமிடம்!----மணிமுத்து

.

எழுத தெரியாத
ஏதோ ஒரு குழந்தை வரைந்த மிச்சம் தான்
இந்த மேகங்களா!

எவ்வளவு
கடினமான கேள்விகளுக்கும்
மிக எளிதான
பதில் கிடைத்துவிடுகிறது
குழந்தைகளிடம் மட்டும்!

காரணமில்லாமல் சிரிக்க
மட்டுமல்ல,
விசாரிக்காமல் விட்டுக் கொடுக்கவும்
சொல்லிக் கொடுத்த ஒரே ஆசான் குழந்தை தான்!

குழந்தையின்
கள்ளமற்ற சிரிப்பை பார்க்கும் போது
என்னுள்
என்னையுமீறி
தோன்றும் பொறாமை
நான் வளர்ந்துவிட்டேனே என்று!


பொய்யை கூட
ரசிக்க தோன்றுகிறது
அவர்கள் மழலை மொழியில்
கண்களை ஆட்டியபடி
சொல்லும் போது!

அண்ணன் சுவரில் முட்டிக் கொண்டான்
என்பதற்காக
அந்த ஜடமற்ற சுவரை
அடித்து சமாதான படுத்துகிறாள் அந்த சிறுமி!
சிரிப்பதா!
ரசிப்பதா! என்று எனக்கு தான் குழப்பம்!

அம்மா விளையாட போறேன்
என்று
அந்த குழந்தை சொல்ல
"நேத்து சண்டை போட்டனு சொன்னஎன்றாள் அம்மா
ஆமாம்,
"அது நேத்துதான இன்னிக்கி பழம் விட்டுடோம்"
என்று கூறிவிட்டு
வேகமாக ஓடிச்சென்ற
மகளை பார்க்கும் போது
அந்த தாயினுள் பட்டென்று ஒன்று உடைந்தது
"அக்காவிடம் அஞ்சுபைசா போகாத
விசியத்திற்காக சண்டையிட்டு
பேசமால் இருப்பது”

No comments: