தமிழக ஆட்சி கலைக்கப்படும் : நீதிபதி
அதிபர் தேர்தலால் அமெரிக்கர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பு
காதலருடன் நெருக்கமாக நின்றமைக்கு பெண்ணுக்கு கசையடித்தண்டனை
குருதிப்பணம் ஏற்க மறுப்பு : சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்
கெமரூனில் ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
தமிழக ஆட்சி கலைக்கப்படும் : நீதிபதி
18/10/2016 தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவோரை கைது செய்தால், தமிழக ஆட்சியை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர போராடுவேன் என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் பொலிஸாரின்; இந்த நடவடிக்கையை மார்கண்டேய கட்ஜூ கண்டித்துள்ளார். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு என்று பதிவை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன். ஒருபுறம், ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவதாக பொதுமக்களை கைது செய்து வருகிறீர்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள். சட்டத்தின் எந்த விதியின் கீழ் இப்படி செயல்படுகிறீர்கள்?.. இது என்ன ஜனநாயக நாடா அல்லது கொடுங்கோலாட்சியா? இங்கு பேச்சு சுதந்திரம் இல்லையா? மம்தா பானர்ஜி மற்றும் மஹாராஷ்டிர அரசு போல் செயல்படுகிறீர்கள். அல்லது, பாடகர் கோவனை கைது செய்தது போல் இதையும் செய்கிறீர்கள். ஜெயலலிதாவை சந்தோஷப்படுத்துவதற்காக இதை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளை நீங்கள் நிறுத்தவில்லையென்றால், சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி, 356 பிரிவின் கீழ், தமிழக அரசை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவதற்கு நான் ஜனாதிபதியிடம் முறையிடுவேன்.
ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்த பின், சட்டத்தின் உங்களை நிறுத்தி, போர் குற்றம் புரிந்த ஜெர்மன் நாஜிகளுக்கு கிடைத்த தண்டனை போல், உங்களுக்கும் கடுமையான தண்டனையை பெற்றுத் தருவேன்” என்று அவர் எச்சரித்துள்ளார். நன்றி வீரகேசரி
அதிபர் தேர்தலால் அமெரிக்கர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பு
அதிபர் தேர்தல் பிரசாரம் போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கர்களுக்கு கணிசமான அளவு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க மனநல மருத்துவ சங்கம் (ஏ.பி.ஏ.) நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாவது:
தேர்தல் செய்திகள், விவாதங்கள், புகைப்படங்கள், விடியோ, சமூக வலைதளத் தகவல்கள் இவற்றில் சாதாரண எதிர்ப்பு தெரிவிப்பது முதல் கடுமையான பகையுணர்வுடன் தொடுக்கப்படும் தாக்குதல்கள், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் பேச்சு ஆகியவை மன அழுத்தத்துக்கு காரணமாக உள்ளன. சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான விவாதங்கள் 38 சதவீத அமெரிக்கர்களுக்கு மன அழுத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் மிகப் பிரதானமான செய்தியாக உள்ளது. இது சுமார் 52 சதவீத மக்களுக்கு குறிப்பிடத் தக்க அளவு மன அழுத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். கட்சி பேதமில்லாமல், குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் தெரிவித்தனர்.
ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களில் 55 சதவீதத்தினரும், குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் 59 சதவீதத்தினரும், அதிபர் தேர்தல் மன அழுத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இனப் பாகுபாடு இன்றி, நாட்டின் பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் அதிபர் தேர்தல் மன அழுத்தத்தை அளித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க மன நல மருத்துவ சங்கத்தின் துணைச் செயல் இயக்குநர் லின் புஃப்கா கூறினார். நன்றி தேனீ
காதலருடன் நெருக்கமாக நின்றமைக்கு பெண்ணுக்கு கசையடித்தண்டனை
19/10/2016 இந்தோனேசிய ஏக் பிராந்தியத்தில் தனது காதலருடன் நெருக்கமாக நின்றிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கசையடித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி பிராந்தியத்தில் திருமணமாகாத ஜோடிகள் நெருங்கிப் பழகுவது மதச் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண் பள்ளிவாசலொன்றில் பொதுமக்கள் முன்னிலையில் மண்டியிட்டு அமர்ந்திருக்கப் பணிக்கப்படுகிறார்.
தொடர்ந்து அவருக்கு அதிகாரியொருவரால் 23 தடவைகள் பிரம்பால் அடித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அன்றைய தினம் அந்தப் பள்ளிவாசலில் கசையடித் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்த 21க்கும் 31க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 பேரில் மேற்படி பெண்ணும் ஒருவராவார்.
திருமணமாகாத ஜோடிகள் தொடவோ முத்தமிடவோ அல்லது அரவணைக்கவோ கூடாது என வலியுறுத்தும் மதச் சட்டத்தை மீறிய குற்றச்சாட் டில் ஏனைய 6 ஜோடிகளும் கைது செய்யப்பட்டிருந் தனர்.
அவர்களில் 22 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கு அன்றைய தினம் கசையடித் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
நன்றி வீரகேசரி
குருதிப்பணம் ஏற்க மறுப்பு : சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்
19/10/2016 சவூதி பிரஜை ஒருவரை கொன்ற குற்றத்திற்காக சவூதி நாட்டு இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்படி இளவரசர், மூன்று வருடங்களுக்கு முன் தனது சக சவூதி பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவரை சுட்டுக் கொண்டுள்ளார்.
கொல்லப்பட்டவரின் குடும்பம் கொலைக்கு பிரதியீடாக “குருதிப்பணம்” பெறுவதை மறுத்ததையடுத்தே மரண தண்டனை நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வருடம் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குறித்த இளவரசர் 134 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கெமரூனில் ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
22/10/2016 மேற்கு ஆப்பிரிகாவின் கெமரூன் நாட்டில் நேற்;று இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
ரயிலானது எசெகா நகரினை சென்றடைவதற்கு முன்பு தடம் புரண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கோர விபத்தில் சுமார் 75 பேர் உயிரிழந்துள்ளதோடு 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
கெமரூன் தலைநகர் யாவுண்டே மற்றும் மற்றொரு வர்த்தக நகரமான டவுலாலா இடையே இந்த பயணிகள் ரயில் சேவை இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் வழமைபோன்று நேற்றும் ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது, எசெகா நகருக்கும் அண்மையில் ஏற்பட்ட கடுமையாக போக்குவரத்து இடையூறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கெமரூன் போக்குவரத்து துறை அமைச்சர் எட்கர் அலென் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment