28 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்

.
அவுஸ்திரேலியாவில்  -  28 ஆண்டுகளை  பூர்த்திசெய்யும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின்  அவசியத்தை  வலியுறுத்திய  வருடாந்த   ஒன்றுகூடல்

" அவுஸ்திரேலியா  மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது.
இதுவரை காலத்தில் இலங்கையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய  இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால்  அனுப்பி  பட்டதாரிகளாக்கியுள்ளது.  எனினும் இலங்கையில்   நீடித்த   போரினால்  பாதிப்புற்ற  தமிழ் மாணவர்களின்  தேவைகள்  நீடித்துக்கொண்டே  இருக்கின்றன."





இவ்வாறு கடந்த ஞாயிறன்று ( 16 ஆம் திகதி)  அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 28 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய  நிதியத்தின் தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  குறிப்பிட்டார்.
மெல்பன், வேர்மண்  தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  நிதியத்தின்  உறுப்பினர்கள்  கலந்து  சிறப்பித்தனர்.
இலங்கையிலும்  உலகநாடெங்கிலும்  போர்களினாலும்  இயற்கை அனர்த்தங்களினாலும்  உயிரிழந்த  மக்களுக்கும்,  கடந்த ஆண்டு இறுதியில்  மறைந்த நிதியத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  ஒரு  நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டது.
நிதியத்தின்  2015- 2016  ஆண்டறிக்கையை  துணை  நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியும்  நிதியறிக்கையை  நிதிச்செயலாளர்  திருமதி வித்தியா  ஶ்ரீஸ்கந்தராஜாவும்  சமர்ப்பித்தனர்.
இதுவரைகாலமும்  நிதியத்துடன்  இணைந்து  இயங்கும் அன்பர்களுக்கும்  இலங்கையில்  செயற்படும்  தொடர்பாளர்களுக்கும் நிதியத்தின்  செய்திகளை  வெளியிடும்   ஊடகங்களுக்கும் அறிக்கையில்  நன்றி   தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில்  நீடித்த போர் அனர்த்தங்களினால்  தந்தையை  அல்லது குடும்பத்தின்  மூல உழைப்பாளியை  இழந்த ஏழைத்தமிழ் மாணவர்கள்  தமது கல்வியை ஏழ்மை கருதி நிறுத்திவிடாமல் தொடருவதற்காக   உதவி வழங்கும்  தொண்டு  நிறுவனமாக இயங்கும்   இக்கல்வி  நிதியம்  அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட  அமைப்பாகும்.
இதுவரை காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி,  அவர்களை க.பொ.த உயர்தர வகுப்புவரையில் கல்வியை  தொடரவைப்பதற்கு  ஆக்கபூர்வமாக நிதியம் உதவியபோதிலும்  அனைத்து   மாணவர்களுக்கும்  பல்கலைக்கழக அனுமதி  கிடைப்பதில்லை.
பல மாணவர்கள்  தமது கல்வியை சாதாரண தரம் அல்லது உயர்தரத்துடன் நிறுத்திவிடுகின்றனர். பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகிய  மாணவர்களும்  பொருத்தமான  தொழில் வாய்ப்புக்கிட்டாமல்  அவதியுறுகின்றனர்  என்று  இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் உயர்தரத்துடன் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் அரசினால் இயங்கவைக்கப்படும் தொழில் நுட்பக்கல்லூரிகளில்  இணைந்து தொழில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.   இலங்கையில்   அனைத்து   மாவட்டங்களிலும் அரசாங்கத்தின்  தொழில்  நுட்பக்கல்லூரிகள்  இயங்குகின்றன.


குறிப்பிட்ட  மாணவர்களில்  குறைந்த  எண்ணிக்கையினரே  இவற்றில் இணைந்து   படிக்கின்றனர்  தொழில் பயிற்சிகளில் தேர்ச்சியடைகின்றனர்.  இதில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு  விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையென்று  இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியா  முதலான  தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் செயல்படும்  பழைய  மாணவர் சங்கங்கள் வருடாந்தம்  ஒன்றுகூடல் விருந்து  நிகழ்ச்சிகள்  மற்றும்  கலை நிகழ்ச்சிகள் நடத்தி தமது ஊர்ப்பாடசாலைகள்  கல்லூரிகளின்  அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும்  உதவி வருகின்றன.
ஆயினும்,  அங்கு எத்தனை  மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்துகின்றனர்,  அதற்கான பின்னணி காரணிகள் யாவை முதலான  விடயங்களில்  ஆய்வு மேற்கொள்வது அரிதாகக்காணப்படுகிறது என்றும்  இக்கூட்டத்தில்  கவலை  தெரிவிக்கப்பட்டது.
நீடித்த போர்ச்சூழலினால்,  இழப்பு, வாழ்வாதார பிரச்சினைகள், இடப்பெயர்வுகள், ஆசிரியர் பற்றாக்குறை, முதலான நெருக்கடிகளும், குடும்பத்தின் வருமானம்  சூழ்நிலை  கருதி தமது குடும்பத்தில்  தம்மை விட வயது குறைந்தவர்களுக்கு  உதவுமாறு கோரிக்கை  விடுத்துவிட்டு,  சிறு சிறு கூலித் தொழிலுக்கு செல்வதற்காக கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டதுடன்,  தீர்வுகளை   நாடுவதற்கான செய்திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்  என்ற  தீர்மானமும்  முன்வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா மெல்பனில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தி, தாயகத்தில் இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை  முன்னெடுப்பதெனவும் கூட்டத்தில் முடிவாகியது.
பொருளாதார காரணங்களினாலும்  மேற்கல்வியை தொடரமுடியாத தேர்ச்சியின்மையினாலும்  கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களை தொழில் நுட்பக்கல்லூரிகளில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து, இலங்கை தொடர்பாளர்களுடனும் வடக்கு கிழக்கு  மாகாண  சபை  கல்வி  அமைச்சு  அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை  உருவாக்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்  எனவும்   கருத்துகள்   முன்வைக்கப்பட்டன.
நற்செய்திகள்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்று பட்டதாரிகளாகியிருக்கும் பல மாணவர்கள் அதிபர், ஆசிரியர், மற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர்களாகியிருக்கும் தகவல்களும் அரச தனியார் துறை தொழில் வாய்ப்பு பெற்றுள்ள நற்செய்திகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்த ஆண்டு பல்கலைக்கழகம் பிரவேசித்துள்ள மாணவர்கள், மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றமாணவர்களுக்கும் இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 பரிபாலனசபை தெரிவு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவாகும் நிதியத்தின் பரிபாலன சபைக்கு  பின்வருவோர்   ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்கள்.
தலைவர்: திரு. விமல் அரவிந்தன்.
துணைத்தலைவர்கள்: திரு. எஸ்.துரைசிங்கம் (சிட்னி)
                                             Dr. D. ரவீந்திரராஜா (கன்பரா)
செயலாளர்: திருமதி சத்தியா சிவலிங்கம்
துணைச்செயலாளர்: திருமதி சாந்தி ரவீந்திரன்
நிதிச்செயலாளர்: திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா
துணை நிதிச்செயலாளர்: திரு. லெ. முருகபூபதி
பரிபாலன சபை உறுப்பினர்கள்:
Dr. திருமதி மதிவதனி சந்திரானந்த் - திரு. என். கணேசலிங்கம்
திரு. நவரத்தினம் அல்லமதேவன் - திரு. தயாளகுமார்
திரு. இராஜரட்ணம் சிவநாதன்  - திருமதி செல்வம் இராஜரட்ணம்
திரு. நடனகுமார்   - திரு. அ. சதானந்தவேல்
          கணக்காய்வாளர்:   திரு.ஆ.வே. முருகையா
                       ---0----

No comments: