முற்றுப்புள்ளி ! எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.


   மதச்சண்டை மறைவதற்கு
   வைக்கவேணும் முற்றுப்புள்ளி
   இனச்சண்டை ஒழிந்தழிய
   இடவேணும் முற்றுப்புள்ளி
   துரைத்தனத்தால் மனமொடியச்
   செய்துநிற்கும் நிலையகல
   துணிவுடனே முற்றுப்புள்ளி
   வைத்திடுவோம் வாருங்கள் !

   மதுவரக்கன் ஒழிவதற்கும்
   விபசாரம் மடிவதற்கும்
   தெருச்சண்டை தீர்வதற்கும்
   வைத்திடுவோம் முற்றுப்புள்ளி
    நிதிநீதி தனிலெங்கும்
    நீண்டுவரும் ஊழலுக்கும்
    நிச்சயமாய் முற்றுப்புள்ளி
    வைத்திடுவோம் வாருங்கள் !


    கலப்படத்தைச் செய்வார்கும்
    நிலம்சுரண்டி வாழ்வார்க்கும்
    கட்டாயம் முற்றுப்புள்ளி
    வைத்திடுதல் அவசியமே
    உளமளவில் நாடுபற்றி
    உணராத உலுத்தர்களை
    உணரவைக்க முற்றுப்புள்ளி
    உடனேயே இடல்வேண்டும் !

     ஊழல்செய்யும் கூட்டத்தார்
     உழைப்பில்லாக் கூட்டத்தார்
     ஏழைகளைச் சுரண்டுவார்
     இரக்கமதை நசுக்குவார்
     கோளைகளாய் வாழுகின்ற
     குணங்கொண்டார் யாவருக்கும்
     வாழ்வினிலே முற்றுப்புள்ளி
     வைத்திடுவோம் வாருங்கள் !

     சினமணைத்து நின்றிடுவார்
     தீவினையைத் தேர்ந்திடுவார்
     குணமனைத்தும் நஞ்சுடையார்
     குவலயத்தைக் கலைக்கிடுவார்
     நலம்முழுக்க நசுக்கிவிட
     நாளுமே நினைத்திடுவார்
     இனமகன்று போவதற்காய்
     இட்டிடுவோம் முற்றுப்புள்ளி !

      சீதனத்தை வாங்குதற்கு
      தேவையிப்போ முற்றுப்புள்ளி
      காதல்தனை கொல்வார்க்கு
       கட்டாயம் முற்றுப்புள்ளி
       பாதகத்தை செய்வதற்கு
      பாவைதனை தூண்டுவார்க்கு
       நீதியெனும் முற்றுப்புள்ளி
       நிச்சயமாய் தேவையிப்போ !

       பெற்றவரைப் பேணாமல்
       பெருந்தடையே எனவெண்ணி
       சற்றுமவர் மனம்பார்க்கா
       சண்டாள குணமுடையோர்
       காப்பகத்தில் விட்டுவிடும்
       கருணையற்ற செயலொழிய
        கட்டாயம் முற்றுப்புள்ளி
        வைத்திடுவோம் வாருங்கள் !

        பொறுமையெனும் நகையணியும்
         நிறைவுடைய பெண்ணினத்தை
         குறைபடுத்தும் குணமுடையார்
          நெறியுடைத்து நிற்கின்றார் 
         அவர்செயலை அகற்றிவிட
         ஆர்வமுடன் கிளர்ந்தெழுந்து 
          அவர்தமக்கு முற்றுப்புள்ளி
          அனைவருமே வைத்துநிற்போம் !
               
          காந்திக்கு முற்றுப்புள்ளி
          கோட்சேயால் வந்தது
          சாந்திக்கு முற்றுப்புள்ளி
           சண்டையால் வருகிறது
           திக்கெட்டும் முற்றுப்புள்ளி
           தேவையாய் இருக்கிறதே 
           திசைமாற்றம் தடுப்பதற்கு
            தேவையன்றோ முற்றுப்புள்ளி !

No comments: