23/10/2016 யாழ். பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைகழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்துவிட்டனா். அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் இங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது. மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது பல்கலைகழக மாணவா்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.
பின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.