என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..! "Dr.Subashini"

.
நேற்று மாலை   ஜோக்கர் தமிழ்த்திரைப்படம் பார்த்தேன். திரைப்படமா, நிஜ நிகழ்வா என பிரித்தரியமுடியாத படி இந்தத் திரைப்படம் இருக்கின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது அத்தியாவசியமான ஒன்று. இதற்கு மக்கள் போராட வேண்டியிருக்கின்றதே. அந்தப் போராட்டத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு அதில் சுய லாபம் பார்க்கும் கூட்டமாக சிலர் இருக்கின்றனரே, என்ற வேதனையை இந்தத் திரைப்படம் என்னுள்ளே ஏற்ப்படுத்தியது.

எளிய மக்கள் வாழவும் முடியாது சாகவும் முடியாது என்பது பரிதாபமானது. கழிப்பறை பல வீடுகளில் இன்றளவும் கூட இல்லை என ஒரு நிலை இருப்பது இதுவரை ஆண்டு வந்த அரசுகள் பொதுமக்களுக்கான தம் கடமைகளைச் சரியாக ஆற்றவில்லை என்பதற்கான அறிகுறிதான். சுதந்திர இந்தியாவில் இன்னமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கழிப்பறை வசதி வீட்டில் இல்லாது இருக்கின்றார்கள் எனும் போது ஆடம்பரமான அரச நிகழ்வுகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க மனம் வருகின்றதே என்பது வருந்த வைக்கும் ஒரு விசயம் என்பதை புறந்தள்ளி விட்டுப் போக இயலவில்லை.

இவ்வகை போராட்டங்களில் பொது மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் தான் இந்தப் பிரச்சனைகள் ஒரு பிரச்சனை என்றே பார்க்கப்படும். ஆக, பொதுமக்கள் இத்தகைய சமூகப் போராட்டங்களில் இணைந்து கொண்டு அவற்றை முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

தமிழ்த்திரைப்படம் கனவுலக தொழிற்சாலை அல்ல. நிஜத்தையும் காட்டும் படங்கள் எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்தத் திரைப்படம் இருக்கின்றது. படத்தின் இயக்குனருக்கும் படத்திற்ககா உழைத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களோடு இத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனைக்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-சுபா

No comments: