தெய்வமே தாயாவாள் ! எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.

         
       
          பூமியில் பிறந்தமுதல் பூமிக்குள் போகும்வரை
                தான்பெற்ற பிள்ளைக்காய் தனையிழப்பாள் தாயாவாள்
        சேயதனின் வாழ்வினுக்காய் செலுத்திடுவாள் தன்னலத்தை
                பூதலத்தில் தெய்வமாய் பொலிந்திடுவாள் தாயாவாள்
         ஆரென்ன சொன்னாலும் அதைமனதில் ஏற்றாமல்
                 பேரெடுத்துப் பிள்ளைவாழ பெரும்பொறுப்பை தான்சுமந்து
          ஊருணரச் செய்துநிற்பாள் உண்மையிலே தாயாவாள் !

           நிலத்திலே வந்தபிள்ளை மலத்திலே கிடந்தாலும்
                  மனத்திலே மகிழ்ச்சியுடன் அதைச்சுத்த மாக்கிநின்று
           கலத்திலே சோறிருந்தும் கவனமதில் கொள்ளாமல்
                 அணைத்துமே மகிழ்ந்திடுவாள் அருமைமிகு தாயாவாள் !


           மார்பணைத்துப் பால்கொடுக்கும் தாயவளின் மார்புதன்னை
                 நோவெடுக்கக் கடித்தாலும் நோவாகாக எடுக்கமாட்டாள்
           நீரருந்தி மோரருந்தி நீண்டநேரம் தான் இருப்பாள்
                   தன்பிள்ளை பசிபொறுக்காள் தயவான தாயாவாள் !

           காய்ச்சலிலே தானிருப்பாள் களைப்புவந்து தான்படுப்பாள்
                 ஆசையுடன் பிள்ளைதனை அரவணைத்தல் தவிர்த்துவிடாள்
           மூச்செல்லாம் முழுவதுமாய் பிள்ளையிடம் தானிருக்கும்
                 பேச்செல்லாம் பிள்ளையன்றி பிறிதறியாள் தாயாவாள் !

           கண்கலங்கி பிள்ளைகாணின் கதிகலங்கிப் போய்விடுவாள்
                உண்ணாமல் உறங்காமல் உயிர்கொடுத்தும் காத்திடுவாள்
          கருவுற்ற நாள்முதலாய் கையில்பிள்ளை வரும்வரைக்கும்
                கடவுளினை வேண்டிநிற்பாள் கருணைநிறை தாயாவாள் !

         பிரசவத்தில் அழுதிடுவாள் பெருந்துன்பம் கண்டிடுவாள்
                பிள்ளையது முகங்காணின் பெருமகிழ்வு எய்திடுவாள் 
         காலமெல்லாம் தானழுவாள் கவலையெலாம் தான்சுமப்பாள்
                ஞாலமதில் பிள்ளையினை தாங்கிநிற்பாள் தாயாவாள் !

          அழுதழுது பிள்ளைபெற்றும் ஆனந்தம் தானடைவாள்
                ஆனாலும் பிள்ளைதனை அழுவதற்கு விடமாட்டாள் 
          ஒருபொழுதும் தன்னலத்தை உயர்த்திவிட எண்ணமாட்டாள் 
                 முழுமனதும் பிள்ளையிடம் கொடுத்துநிற்பாள் தாயாவாள் !

          பிள்ளைவளர்ந் தாளாகி பெரியநிலை அடைந்தாலும்
                 உள்மனமோ பிள்ளையிடம் ஓடியே நின்றுவிடும் 
          பிள்ளைதாயைப் பாராமல் பேசாமல் இருந்திடினும்
                  கள்ளமில்லா அன்புதனை காட்டிநிற்பாள் தாயாவாள் !

         பால்கொடுப்பாள் தாயாவாள் பசிதீர்ப்பாள் தாயாவாள்
             நோய்தடுப்பாள் தாயாவாள் நுடங்கிவிடாள் தாயாவாள்
         வேர்விட்டு வளர்வதற்கு வித்தாவாள் தாயாவாள் 
                மேதினியில் நாம்காணும் தெய்வமே தாயாவாள் !




                 

No comments: