ரசிகமணி எனும் நிலா ரசிகர்! - தி.சுபாஷிணி, எழுத்தாளர்.

.
மரணத் தறுவாயிலும் தமிழ் மொழி மீதான காதலுடன் இருந்தார் டி.கே.சி.

அது 1903-ம் ஆண்டு. மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனரும், வள்ளலும், தமிழறிஞருமான ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவருக்கு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவை சார்பில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள், பிரபுக்கள், புலவர் பெருமக்கள், பிரமுகர்கள் என அம்மண்டபம் நிறைந்திருந்தது. உ.வே.சாமிநாதய்யர், வெள்ளக்கால் வி.பி.சுப்பிரமணிய முதலியார் ஆகியோரோடு இணைந்து வந்து, விழா மேடையில் பாண்டித்துரை தேவர் அமர, வரவேற்புரை நிகழ்த்தத் தொடங்கினான் கல்லூரியின் தமிழ்ப் பேரவைத் தலைவராக இருந்த அந்த மாணவன்.



அபாரமான மொழி வளத்தோடு அமைந்த அவனது உரை, மண்டபத்தில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவனது குரலில் பெருக்கெடுத்த உணர்ச்சியும், வார்த்தைக்கு வார்த்தை சிதறிய நொடிப்பும், கும்மாளமும், அம்மண்டபத்தைக் குலுங்க வைக்க, விழாவை ஏற்பாடு செய்த கல்லூரிப் பேராசிரியர்களுக்கு அளவிட முடியாத ஆனந்தம். சக மாணவர்கள் அவனைத் தங்களது வழிகாட்டியாகவே எண்ணி மகிழ்ந்தார்கள். அந்த இளைஞன்தான் பிற்காலத்தில் ரசிகமணி என்றும், டி.கே.சி. என்றும் தமிழிலக்கியச் சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியார்.

தேடிவந்த பாரதி

கல்லூரியில் படிக்கும்போதே, தமிழிலும், தமிழ்ப் பாடல்களிலும் டி.கே.சி.க்கு மிக்க ஈடுபாடு இருந்ததால், வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை ஆகிய பாவினங்களில் சுயமாகப் பாடல்கள் இயற்றிப் பாடியிருக்கிறார். கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் தமிழில் தெளிவுபெற்றுத் திகழ்கிறான் என டி.கே.சி.யைப் பற்றி அறிந்து, அவரைப் பார்க்க அடிக்கடி கல்லூரிக்கு வந்திருக்கிறார் மகாகவி பாரதி. தன்னுடைய பல பாடல்களை அவரிடம் பாடிக் காட்டியிருக்கிறார் பாரதி. சில சமயங்களில், ‘இந்தச் சொல்லுக்கு இப்படிப் போட்டிருந்தாலும் மேலும் அழகாய் இருந்திருக்கும்..’ என டி.கே.சி. பாரதியிடம் சொல்ல, அவரும் அதைப் பாராட்டி அங்கீகரித்திருக்கிறார். கல்லூரிப் படிப்பில் டி.கே.சி.க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது, அங்கு செயல்பட்ட தமிழ்ப் பேரவையும், ஸ்கின்னர், ஹெண்டர்சன் போன்ற பேராசிரியர்களின் இனிய போதனையும், அறிஞர்களின் நூல்களும், பாரதி போன்ற கவிஞர்களின் உறவும்தான்.

செருகு கவிகள்

கம்பரின் பாடல்களைப் படிக்கப் படிக்க, அவரது எழுத்தின் அத்தனை நுட்பங்களையும் உணர்ந்தார் டிகே.சி. மேலும், கம்பர் எழுதியது போலவே தோற்றமளிக்கும் செய்யுள்கள் அதே எதுகை, மோனை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றோடு அமைந்திருந்ததை உணர்ந்தார். அவையும் விருத்தப் பாவில் அமைந்திருந்ததால், உண்மைப் பாடல்கள் போல் மயங்கிக் கிடந்தன. ஆனால், அவை வெறும் செய்யுள்கள்தாம். கவியின் உருவம் அதில் தென்படவில்லை. கம்பராமாயணத்தில் மட்டும் இப்படிப் போலிப் பாடல்கள் மலிந்து கிடக்கக் காரணம் என்ன எனச் சிந்தித்த டி.கே.சி.க்கு உண்மை புலப்பட்டது. கம்பனின் பாடல்கள் தனித்துவமான உன்னத உணர்ச்சி பாவங்களைக் கொண்டிருக்கின்றன. அதில் மயங்கி அவரைப் போலவே கவிகள் இயற்றி அதில் சேர்த்துவிட்டனர்.

அத்துடன், கம்பர் தாம் அமைத்த பாத்திரங்களுக்குத் தம்முடைய லட்சியங்களுக்காகக் கதையின் போக்கினையும், கதையையும் ஆங்காங்கே மாற்றியிருக்கிறார். வால்மீகியையும், துளசிதாஸ் ராமாயணத்தையும் படித்தவர்கள் பாத்திரங்களுக்கும், கதைக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதுபோல் அவர்களும் கதைப்போக்கை மாற்றி அதே எதுகை, மோனையில் செய்யுள்களை நிரப்பிவிட்டனர். மூன்றாவதாக, முற்காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதிவைத்திருந்தனர். அது மழையாலும், கரையான் அரித்தும் இற்றுப்போய்ப் பழுதுபடும். இதனால் அழிந்துபோன பகுதிகளுக்கு நினைவிலிருந்தும் சிலர் எடுத்துப் போட்டுள்ளனர். சிலர் தானே இயற்றிச் சில செய்யுள்களைச் செருகிவிட்டனர். இப்படிப் படலம் படலமாக போலிக் கவிகள் கம்பராமாயணத்தில் இருக்கின்றன எனக் கூறி, அவற்றை ‘செருகு கவிகள்’ என டி.கே.சி. வரையறுத்தார்.

தனது வீட்டுக்குத் தமிழ் அன்பர்களை வரவழைத்து, வட்டமான முற்றத்தில் அமர்ந்து, கம்பனையும் அவரது கவி உருவத்தையும் பாடல்களாகப் பாடிக் காட்டி விளக்கம் கொடுத்தார். ‘வட்டத் தொட்டி’ எனப் பெயர் பெற்ற அச்சங்கம், 1924-ல் தொடங்கப்பட்டு, வாரம் ஒருமுறை கூடி கம்பனின் கவிநயங்களைக் கொண்டாடிக் களித்தது. இந்த ‘வட்டத் தொட்டி’ கூட்டங்களில் தவறாது கலந்துகொண்டு இன்புற்ற அறிஞர்களில் வையாபுரிப் பிள்ளை, ஆர்.பி.சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், சுப்பையா முதலியார், பி.ஆவுடையப்ப பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

1927-லிருந்து 1930 வரை எம்.எல்.சி.யாகவும், 1930-லிருந்து 1935 வரை இந்து அறநிலையத் துறை ஆணையராகவும் செயல்பட்டார் டி.கே.சி. 1942-ல் இருந்து பல ஆண்டுகள் ‘கல்கி’ இதழில் ‘கம்பர் தரும் காட்சி’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதிவந்தார். பிற்காலத்தில் அக்கட்டுரைகள் ‘கம்பர் தரும் இராமாயணம்’ என்கிற தலைப்பில் நூலாக வந்தது. 1943-ல் தமிழிசை விழாவைத் தலைமையேற்று நடத்தினார்.

நிலா ரசிகர்

ரசிகமணியின் உடல்நிலை மிகவும் நலிவுற்ற தருணத்தில், அவரைக் கவனித்துக்கொள்ள மருத்துவர் சேஷகிரி ராவ் அழைக்கப்பட்டார். மருத்துவர் அவரைச் சோதித்துக்கொண்டிருக்கும்போது, ரசிகமணி அவரிடம், “மிகவும் தாகம் எடுக்கிறது. எத்தனை தடவை தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குவதாக இல்லை. ‘நாவறட்சி’ என்ற சொல் தமிழில் இருக்கிறதே. இதற்கு இணையான சொல் எதுவும் ஆங்கிலத்தில் உண்டா..?” என்றார். டி.கே.சி.யின் மருத்துவர், லண்டனில் மருத்துவக் கல்வி பயின்றவர். மிகுந்த ஆங்கிலப் புலமை உடையவர். நீண்ட நேரம் யோசித்துவிட்டு டி.கே.சி.யிடம் “அப்படி ஏதும் சொல் இருப்பதாகத் தெரியவில்லையே” என்றார் மருத்துவர்.

அவரின் இந்த பதிலைக் கேட்ட டி.கே.சி., “சாதாரண மக்கள் பேசுகின்ற பேச்சில் கலைச் சொற்கள் எவ்வளவோ இருக்கின்றன. உழவர்களிடம் உரையாடிப் பார்த்தால் உழவுத் தொழில் சம்பந்தமான சொற்கள் தமிழில் நிறைய இருப்பது தெரியும். தச்சர்களிடம், கொல்லர்களிடம் உறவாடினால், பொறியியல் சம்பந்தமான கலைச் சொற்கள் எத்தனை உள்ளன என்பது விளங்கும். ஆனால் அரசு என்ன செய்கிறது? நிபுணர் குழுவை நாலாவது மாடியில் அமர்த்தி கலைச் சொற்களை உருவாக்கச் சொல்கிறது. எவ்வளவு கேவலமான காரியம் இது?” என்றார். மரணத் தறுவாயிலும் தமிழ் மொழி மீது டி.கே.சி.யின் பற்று குறித்து வியந்தார் மருத்துவர்.

மெல்ல மெல்ல மரணம் ரசிகமணியை நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றைய பகலில் வெயில் சற்றுக் கடுமையாக இருந்தது. அதைப் பார்த்து ‘நிலா.. என்னமாய் காய்கிறதுஉ’ என்றிருக்கிறார். 1954 பிப்ரவரி 16 அன்று காலையில் தான் பெரிதும் விரும்பிக் கொண்டாடிய ஆனந்தத்துடன் ஆனந்தமாகக் கலந்தார் டி.கே.சி. அப்போது உதிர்த்த இறுதி வார்த்தைகள்: “நான் ஆனந்த உலகத்துக்குப் போகிறேன்”.



தொடர்புக்கு: subashinitirumalai@gmail.com

ஆகஸ்ட் 18 - ரசிகமணி டி.கே.சி பிறந்த தினம்

No comments: