வலியே மருந்தாகும்போது... - சிந்து எஸ்

.

ஒராண்டுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என்னுடைய தந்தையைப் பார்த்தபோது, வலியாலும் வேதனையாலும் படுக்கையில் புலம்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் இருந்தார். அவருடைய அரற்றல் என் காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடிவிட வேண்டும் என்றே விரும்பினேன்.

84 வயதான அவர் எனக்கு உற்ற நண்பர். கையிலும் உடலின் வேறு பகுதியிலும் ஊசியாலும் ரப்பர் குழாய்களாலும் செருகப்பட்டு, தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் டாக்டர்களையோ செவிலியர்களையோ எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ரப்பர் குழாய்களைப் பிய்த்துப் போடுகிறார் என்பதற்காக ஒரு கையைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள்.மருத்துவமனை என்பது நோயாளிக்கு எந்தச் சுகமும் கண்ணியமும் கூடாது என்று நினைக்கிறதோ என்ற அளவுக்கு நடத்தப்பட்டார். அவருக்கு மாட்டியிருந்த மருத்துவமனைச் சீருடை அவிழ்ந்து, தோள் பகுதி முழுக்கத் தெரிந்தது. அவருடைய கழுத்துச் சதையில் கூர்மையான ஊசியை இறக்கியபோது கத்தவும் முடியாமல் தாங்கவும் முடியாமல் துடித்தார். மூடியிருந்த கண்களைத் தலையணை மேல் அழுத்தி வலியைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்தார்.

திரவ ஆகாரம் செலுத்தப்படுவதற்காக மூக்கில் ஒரு டியூபும், சிறுநீரை வெளியேற்றுவதற்கு சிறுநீர்ப்பை அருகில் கதீட்டரும், மூச்சுக்குழலில் சேரும் திரவத்தை வடித்தெடுக்க ஒரு உறிஞ்சு குழாயும் செருகப்பட்டிருந்தன. இவை போக நாடித்துடிப்பைக் கண்காணிக்க ஒன்று, இதயத் துடிப்பைத் தொடர்ந்து அறிய ஒன்று என்று வேறு சில கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு, நுரையீரலில் சேரும் காற்றின் அளவு, உடலின் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவு போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பதிவிடப்பட்டன.

வேதனை புரியவில்லை

அவருடைய ரத்தம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகித்தார்கள். அதற்கான ஆய்வுகளை நடத்தி முடிவுக்காகக் காத்திருந்தார்கள். இடையில் வெவ்வேறு அறிகுறிகளுக்காகச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். வலுவற்ற அவருடைய இதயத்தால் தாங்க முடியாது என்ற அச்சத்தில் வலி மறப்பு மருந்துகளோ, தூங்குவதற்கான மருந்துகளோ அவருக்குத் தரப்படவில்லை. அவருடைய கழுத்தில் செருகப்பட்ட ஊசி, கடுமையான வலியைத் தந்ததுடன் தலையை இடதுபுறமாகத் திருப்ப முடியாமல் தடுத்துக்கொண்டிருந்தது. சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதால், டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பையும் இவற்றோடு சேர்த்துக்கொண்டார்கள். தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவில் டயாலிசிஸ் நடந்தது. இதைத் தாங்க மறுக்கும் விதத்தில் இரண்டு முறை லேசான மாரடைப்பும் ஏற்பட்டது.

தாங்க முடியாத வலிகளை நமக்கு நெருக்கமானவர்கள் அனுபவிப்பதை நேரில் பார்ப்பதைப் போன்ற கொடுமை எதுவுமில்லை. நீங்கள் அளிப்பது கொடூரமான சிகிச்சை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒவ்வொருவரிடமும் கூறி என் வேதனையைப் புரியவைக்க முயன்றேன். வலியில்லாமலும் அமைதியாகவும் இறக்கவே அவர் விரும்பினார். நான் போவதற்குள் அவரை மருத்துவமனையில் சேர்த்த உறவினர்களும் மருத்துவர்களும் நான் சொல்வதைக் கேட்கத் தயாரில்லை.

‘‘அவர் உடல் நலம் தேறி, மருத்துவமனையை விட்டு நடந்து செல்வார் என்று நம்புகிறீர்களா?” என்று பணியில் இருந்த மருத்துவரிடம், என் அம்மா இல்லாத சமயத்தில் கேட்டேன். “அவருக்குப் பல உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அத்துடன் அவருக்கு ரத்தத்திலும் சிறுநீரகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன. நிலைமை மோசம்” என்று அவர் பதிலளித்தார்.

யாருடைய நன்மைக்காக?

“நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தால் எதற்காக இந்த வயர்கள், ஊசிகள், டியூபுகள்உ எல்லாவற்றையும் அகற்றிவிட்டு வலியில்லாமல் இருக்க அவருக்கு மருந்து கொடுத்துத் தூங்கவைக்கக் கூடாதா? மிகவும் ஆபத்தானதும் வலியை அளிப்பதுமான டயாலிசிஸ் ஏன்?” என்று ஆற்றாமையுடன் கேட்டேன்.

“எங்களால் சிகிச்சையை நிறுத்த முடியாது. நோயாளியை உயிருடன் வைத்திருக்க எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் செய்தாக வேண்டும்” என்று அவர் பதிலளித்தார்.

இது எனக்குப் புரியவில்லை. கொடூரமான வலியைத் தந்தாலும் மேலும் சில நாட்களுக்கு நோயாளியை வாழவைக்க வேண்டும் என்று கடும் முயற்சிகளை மேற்கொள்வது யாருக்காக? மருத்துவப் பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் நோயையும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் நேரில் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காகவா? இப்படிக் கேட்டு மருத்துவர்களை நான் கோபமடைய வைக்க விரும்பவில்லை. அவர்களிடம் என் தந்தையை ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் அவருடைய உடலைப் பகுதி பகுதியாகப் பிரித்து வெவ்வேறு சிகிச்சைகளை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை முடிந்தால் - அவர்களால்தான் அவரை முழுமையானவராகத் திருப்பித்தர முடியும். மூன்று நாட்களுக்கு முன்னால்தான் அரை மயக்க நிலையில் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு லேசான நிவாரணம் தரக்கூடிய எதையாவது செய்துவிட வேண்டும் என்று துடித்தேன். “வலியிலிருந்து விடுபட நிச்சயம் நீங்கள் மருந்து வைத்திருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் அவருக்குக் கொடுங்களேன்” என்று மன்றாடினேன்.

“அது ஆபத்தானது; நேற்றிரவு டயாலிசிஸின்போது அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. ரத்தத்தில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்காக இப்போதே அவருக்கு அதிக அளவில் மருந்துகளை உள் செலுத்தியிருக்கிறோம். வலி மறப்புக்கு மருந்து கொடுத்தால் சிக்கலாகிவிடலாம்” என்று என்னை அனுதாபத்துடன் பார்த்துக்கொண்டே மருத்துவர் கூறினார்.

வலி மறப்பு மருந்து கொடுங்கள்

“உடல் நிலை சிக்கலாகிவிட்டதா, அப்படியானால் அவர் இறந்துவிடுவாரா?” என்று கேட்டேன். பதில் இல்லை, சும்மா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் அவர். அந்த இடத்திலிருந்து சில அடிகளுக்கு அப்பால் வலி, வேதனை காரணமாக முனகிக்கொண்டும் ஈனஸ்வரத்தில் அரற்றிக்கொண்டும் இருந்தார் அப்பா. அவருடைய வேதனைக் குரல் தங்களுடைய காதுகளில் ஏறாததைப் போலவும், அவரைத் தாங்கள் பார்க்காததைப் போலவும் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து தங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டிருந்தனர் செவிலியர்களும் மருத்துவர்களும்.

அவருக்கு வலி மறப்பு மருந்து கொடுங்கள் என்று மருத்துவரிடம் மீண்டும் கெஞ்சினேன். நாளை மூத்த மருத்துவரிடம் கேட்டு வருகிறேன் என்று அவர் பதில் அளித்தார். அன்று மாலை மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றபோது அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். லேசான வலி மறப்பு மருந்து கொடுத்தோம் என்று நான் கெஞ்சி கேட்டுக்கொண்ட அந்த மருத்துவர் கூறினார். எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

அடுத்த நாள், இன்னொரு டயாலிசிஸுக்குப் பிறகு மீண்டும் வலியால் அரற்ற ஆரம்பித்தார் அப்பா. அந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மூத்த பெண் மருத்துவர் அவருடைய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குக் கொஞ்சம் வலி மறப்பு மருந்து கொடுங்களேன் என்று அவரை மன்றாடினேன். “அவர் இப்போது ஏராளமான மருந்து, மாத்திரைகளை உட்கொண்டிருக்கிறார். அவருடைய நிலையில் இப்போது வலியையெல்லாம் உணரவே முடியாது. தூக்க மயக்கத்தில்தான் இருப்பார். செவிலியர்கள் அவரைச் சுத்தம் செய்தால்கூடக் கத்துகிறார்” என்றார் அவர்.

இழந்த நிம்மதி

இந்த ஊசிகளும் குழாய்களும்தான் அவரை வேதனைப்படுத்துகின்றன என்றால், அவற்றையெல்லாம் அகற்றிவிட வேண்டியதுதானே என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அங்கு என்ன நடக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் மருத்துவரும் இல்லை. எப்படி முடிவெடுப்பது?

அன்று மாலை அவருடைய படுக்கை அருகே சென்றேன். என்னுடைய கையை அவருடைய கை அருகில் கொண்டுசென்றேன். என்னுடைய விரல்களை அவரால் முடிந்த வரையில் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். கண்கள் பாதி திறந்த நிலையில் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். ஆனால், என்னை நோக்கிப் பார்க்கவில்லை. மருந்தும் வேதனையும் அவருடைய பார்வையைப் பாதித்திருக்க வேண்டும். ஒரு மனித உடலுக்குத் தரப்பட வேண்டிய மரியாதைகூட இல்லாமல் பொத்தல் போடப்பட்டிருந்த அந்த நிலையைக் கண்டு நிலைகுலைந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் படுக்கையில் வீழ்ந்த என் பாட்டிக்கு மூக்கில் டியூப் செருகி திரவ உணவு செலுத்தினார்கள். அந்த ஊசியை செவிலியர் மாற்றும்போது அவளுடைய அரற்றலைக் கேட்க முடியாமல் கண்களில் நீர் பெருக வாசல் கதவருகே ஓடிச்சென்று காதைப் பொத்திக்கொள்வார் அப்பா. அவருடைய அம்மாவைவிட அதிகமான வேதனைக்கு இப்போது ஆளாகியிருக்கிறார்.

இன்னொரு நாள் காலையில், டயாலிசிஸ் முடிந்த பிறகு அவருக்கு அருகில் சென்று பார்க்கத் துணிவு இல்லாமல், நானும் அம்மாவும் வெளியில் காத்திருந்தோம். ஒரு நாளைக்கு இரு முறை தலா ஐந்து நிமிடங்கள் ஒவ்வொருவராக அவரைப் பார்க்க எங்களுக்கு அனுமதி உண்டு. அவர் தூங்கும்போது சென்று பார்க்க விரும்பினேன். அவருக்குப் பேரனைப் போல பணிவிடை செய்த ஆதர்ஷ் என்று இளைஞன் உள்ளே சென்றான். வலி தாங்காமல் அப்பா கடவுளிடம் ஏதோ மன்றாடிக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றான்.

சித்ரவதை அல்ல

அம்மா, அப்பாவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, நான் உள்ளே சென்றேன். என்னை சித்ரவதை செய்யாதீர்கள் என்று என் அப்பா கெஞ்சுவதைக் கேட்டேன். அவருடைய உள்ளங்கைகள் சிவந்து வீங்கியிருந்தன. உரிய நரம்பு கிடைக்காமல் குத்திக் குத்தி கை புண்ணாகியிருந்தது. பாதி மூடப்பட்ட இமைக்குள் விழிகள் அலைபாய்ந்தன. அவர் அரற்றியபோதெல்லாம் இதயம் வலித்தது. அவருக்குப் பதில் அந்த இடத்தில் நான் இருந்து இறப்பை எதிர்கொள்ள விரும்பினேன்.

கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு மூடியிருந்த அவருடைய கையை என்னுடைய விரல்களால் திறக்க முயன்றேன். நடுங்கிய என் விரல்களை மிகவும் வாஞ்சையாகத் தன் கைகளால் மூடி அழுத்திக்கொண்டார். தாங்க முடியாத அந்த வேதனைக்கு நடுவிலும் அவர் எனக்கு ஆறுதல் கூற முனைகிறார் என்று புரிந்துகொண்டேன். கண்கள் இழுப்பதைப் போலத் தெரிந்தது. அதாவது, பார்க்க முடியாவிட்டாலும் நான் விழித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று காட்ட முனைந்தார்.

அப்பா கவலைப்படாதீர்கள், உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்கிறேன். அதுவரை பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு வலி தெரியாது என்று காதோரம் சன்னமாகச் சொன்னேன். நான் வெளியே சென்றபோது, அம்மா உள்ளே வந்தாள். திருமணத்துக்குப் பிறகு 50 ஆண்டுகளுக்கும் மேல் சேர்ந்து வாழ்ந்த அம்மா, கண்களில் நீருடன் சொன்னாள், “அப்படியேதானே இருக்கிறார், முன்னேற்றம் இல்லையே” என்று. உள்ளிருக்கும் நோயாளிகளைப் பார்க்கவும் பழங்கள் வாங்கிக் கொடுத்து வாழ்த்துக் கூறவும் உறவினர்கள் பலர் காத்திருந்தனர்.

அவரோடு பேசக்கூட முடியவில்லையே, தனி அறையாக இருந்தால் வேதனையைக் குறைக்கும் வகையில் பேசி சாந்தப்படுத்த முடியும் என்று அம்மா ஆதங்கத்துடன் வேதனைப்பட்டாள். அவர் நலமாகி வீடு திரும்புவார். 84 வயதுதான் ஆகிறது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் என்று நம்புகிறேன் என்றாள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. அம்மா களைப்பும் குழப்பமும் மிகுந்திருந்தாள். அவளுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு ஆகியவையும் உண்டு. இத்துடன் என்னுடைய தந்தையைக் கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். இன்சுலின் ஊசியைப் போடுவாள், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று வீட்டிலேயே சோதிப்பாள், சர்க்கரை அளவு குறைந்தால் நள்ளிரவு என்றும் பாராமல் ஆம்புலன்ஸுக்குச் சொல்லிவிடுவாள். எனவே, அதற்கும் மேல் பேசி அவளுடைய மனதைக் காயப்படுத்த விரும்பவில்லை.

அப்பாவுக்கு அம்மா மீது பாசம் அதிகம். கடைசிக் காலத்தில் அவரையே எதற்கும் நம்பியிருந்தார். இந்த மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு முன்னதாக இன்னொரு சிறிய மருத்துவமனையில் சேர்த்திருந்தபோது செவிலியர்களிடம் என் அம்மாவைக் காட்டி, ‘இது என்னுடைய அம்மா’ என்று குழந்தையைப் போலச் சொன்னார். அடிக்கடி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதால், எந்த மருத்துவமனை என்பதிலும் எது இரவு, எது பகல் என்பதிலும் குழப்பம் இருந்தது. என் கண்களில் நீர் திரண்டது. அம்மா எதிரில் அழுவதைத் தவிர்த்தேன். நோயாளிகளுடன் வருவோர் உட்காருவதற்கான இடத்துக்குச் சென்று அம்மாவுக்குத் தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன். அப்பா மீண்டும் டயாலிசிஸ் செய்யப்படுவார் என்பதால், உறங்காத மற்றொரு இரவுக்குத் தயார்படுத்திக்கொண்டேன்.

மரத்திலிருந்து பழம் உதிர்வதைப் போல, செடியிலிருந்து பூ உதிர்வதைப் போல வலியில்லாமல் என்னுடைய உயிரை எடுத்துக்கொள் என்றுதான் இறைவனை தினமும் வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. எப்படியாவது அவரை இந்த இடத்திலிருந்து கூட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற ஆவேசம் எனக்குள் வந்தது. இந்த வேதனையை நிறுத்த முடியுமா, அதற்கு வழி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ‘வலி குறைப்பு, நோய்த் தணிப்புச் சிகிச்சை’ என்ற ஒன்று இருப்பதே எனக்கு அப்போது தெரியாது.

மேலும், ஒரு இரவுக்குப் பிறகு பணியில் இருந்த மருத்துவர் என்னை வெளியே அழைத்து, அவர்கள் சந்தேகப்பட்டதைப் போல அவருடைய ரத்தத்தில் நோய்த் தொற்று ஏதும் இல்லை என்ற ஆய்வுக்கூட அறிக்கை காலையில் கிடைத்தது என்றார். அந்த சந்தேகத்தில்தான் அவருக்குக் கடுமையான மருந்துகளை ஒரு வாரமாக உள் செலுத்திக்கொண்டிருந்தனர். அறிக்கை கிடைக்கும்வரை காத்திருந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது. உடனே, அப்பாவைப் பார்க்கச் சென்றேன். மனம் உடைந்துபோனது. அந்தச் சூழலே எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. என்னைச் சித்ரவதை செய்யாதீர்கள் என்றே ஈனஸ்வரத்தில் யாரிடமோ முறையிட்டுக்கொண்டிருந்தார். அந்த ஒரு நொடியில் நான் ஆயிரம் முறை இறந்ததைப் போல உணர்ந்தேன்.

படிவம் முக்கியம்

அவருக்குத் தரும் எல்லா மருந்துகளையும் நிறுத்துங்கள், வலி மறப்பு மருந்து மட்டும் தாருங்கள் என்று மருத்துவரிடம் கூறினேன். நானும் அப்படித்தான் விரும்புகிறேன். ஆனால், அதற்கு முன்னால் நீங்கள் ஒரு படிவத்தில் கையெழுத்திடுவது முக்கியம் என்றார் அவர். உடனே கையெழுத்திட்டேன். அப்பா உங்களை விரைவில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அதுவரை கடவுளைப் பிரார்த்தியுங்கள் என்றேன் காதோரத்தில். உடனே, தனக்குத் தெரிந்த துதியைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாங்கள் பேசுவது, சொல்வது எல்லாம் அவருக்குப் புரிந்திருக்கிறது என்பது உறைத்ததும் கண்ணீர் மீண்டும் பெருகியது.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் என்னை அழைத்தார்கள். மாரடைப்பால் அப்பா இறந்துவிட்டார் என்றார்கள். வெற்றுக்கூடாக இருந்த அவர் உடல் அதிர்ச்சியில் உறைந்திருந்தாலும், இறப்பினால் நிம்மதி அடைந்ததைப் போலத் தோன்றியது. வலிகுறைப்பு, நோய்த் தணிப்புச் சிகிச்சை குறித்து அறிந்து அவரைக் கூட்டிச் செல்ல முடிவு செய்திருந்தும், அதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். என் வாழ்நாள் முழுவதும் இதை நினைத்து நினைத்தே நான் வேதனையில் துடிப்பேன். அவர் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. ஒரு வாரத்துக்கும் மேல் அவர் வலி, வேதனையில் துடித்ததை என்னால் மறக்க முடியவில்லை. அவருடைய அழுகையை மறக்க முடியவில்லை.

என் வாழ்க்கையில் புதியதொரு வழியைக் காட்டாமல் என்னுடைய தந்தை இறக்கவில்லை. வலி மறப்பு, நோய்த் தணிப்பு என்பதுதான் அந்த வழி. இதை மற்றவர்களுக்கும் உணர்த்தும் செயலில் ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய நீண்ட நாள் நண்பரும், அவரைவிட வயதில் சிறிது இளையவருமான ஒரு நண்பர்தான் அதைப் பற்றி முதலில் என்னிடம் பேசினார். தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் தொடர்ந்து அளித்த உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை என்ற தேவைக்கும் மேற்பட்ட சிகிச்சையின் விளைவாக அப்பா இறந்தார். கடைசியாக அவர் குடிக்க பானமோ சாப்பிட ஆகாரமோ கேட்கவில்லை. என்னை நிம்மதியாகத் தூங்கவிடுங்கள் என்றுதான் கெஞ்சினார். தூங்கிக்கொண்டே இன்னொரு உலகம் போய்ச் சேர நினைத்தார்.

(மும்பையைச் சேர்ந்த கட்டுரையாளர், இந்தியாவில் முதியோர் இறப்பின் தரம் குறித்துப் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இனி சிகிச்சையளிக்க முடியாது என்ற நிலையை எட்டிவிடுவோரைக் கடைசி நாட்களில் வலியில்லாமலும் நிம்மதியாகவும் குடும்பத்தாருடன் இருக்கவிடும் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.)

தமிழில்: சாரி
டூ ‘தி இந்து’ ஆங்கிலம்

Nantri http://tamil.thehindu.com/

No comments: