கருப்பையா முத்துமணி ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்!--BY சி.கண்ணன்

.
கருப்பையா முத்துமணி (51)--மருந்து ஆராய்ச்சியில் அபார வெற்றி கண்டவர்: ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்!--BY சி.கண்ணன்

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த சாதனையாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மதுரைக்காரரான கருப்பையா முத்துமணி. உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ள இவரை மருத்துவ உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பையா முத்துமணி (51). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் ‘தி விஸ்டர் இன்ஸ்டிடியூட்’ என்ற மருத்துவ ஆராய்ச்சி கல்வி மையத்தின் தடுப்பு மருந்து மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.



உலகையே அச்சுறுத்திய சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா வைரஸ் நோய்களுக்கு முதல்முறையாக தடுப்பு மருந்து கண்டு பிடித்ததன் மூலம் அமெரிக்காவில் பிரபலமான நபராக கொண்டாடப்பட்டு வருகிறார். தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துமணியை அங்கீகரிக்கும் வகையில், அந்நாட்டின் சிறந்த இளம் ஆராய்ச்சியாளருக்கான விருது 2002-ம் ஆண்டிலேயே வழங்கப்பட்டது. இந்த விருதை நோபல் பரிசு தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு குழு வழங்கி வருகிறது.

உலக அளவில் தமிழகத்துக்கும், தமிழர் களுக்கும் பெருமை தேடித் தந்த முத்துமணி, அண்மையில் சென்னை வந்திருந்தார். அப்போது, ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

உலகில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான் எனது பணி. குறிப்பிட்ட ஒரு நோயை அமெரிக்காவில் ஒரு வைரஸ் ஏற்படுத்துகிறது என்றால், இந்தியாவில் அதே நோயை வேறொரு வைரஸ் ஏற்படுத்தும். இப்படி நாட்டுக்கு நாடு மாறுபடும் வைரஸ்களுக்கு தனித்தனியாக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியாது. ஒரு நோய்க்கான அனைத்து வைரஸ்களுக்கும் சேர்த்து ஒரே தடுப்பு மருந்தைதான் கண்டுபிடிக்க வேண்டும்.

வைரஸ் மனிதனைவிட புத்திசாலியானது. காலத்துக்கு ஏற்ப அது தன்னை மாற்றிக் கொள்ளும். ஒருவரின் உடலில் செல்லும் வைரஸ், அந்த உடலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. வைரஸ்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமின்றி, வைரஸ்கள் நம்முடைய உடலில் சென்றால் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்.

சிக்குன்குனியா

சிக்குன்குனியா என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் தெரியாது. தற்போது அந்தப் பெயர் எல்லோருக்கும் தெரியும். 2006-ம் ஆண்டில்தான் சிக்குன்குனியா என்ற வார்த்தையை முதலில் கேள்விப்பட்டேன். இது என்ன மாதிரியான வைரஸ் என்பதை முதலில் தெரிந்துகொண்டேன். பிறகு, அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக நானும், எனது தலைமையில் இயங்கும் குழுவினரும் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டோம். இதன் விளைவாக, உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா நோயை தடுப்பதற்கான மருந்தை 2009-ம் ஆண்டில் கண்டுபிடித்தோம்.

அதேபோல, சிக்குன்குனியா வந்த பிறகு அதை குணப்படுத்துவதற்கான மருந்தை 2013-ம் ஆண்டில் கண்டுபிடித்தோம். முயல், எலி, குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு மருந்து சோதனைகள் அனைத்தும் வெற்றி பெற்றன. இந்த தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமையை வாங்கினோம். எனது இந்த கண்டுபிடிப்பைப் பற்றி விளக்குவதற்காக பல்வேறு நிறுவனங்களை அணுகினேன். ஆனால் எவ்வளவு விளக்கியும், அவர்கள் யாரும் மருத்துவப் பரிசோதனை செய்து தடுப்பு மருந்துகளை தயாரிக்க முன்வரவில்லை.

இறுதியாக அமெரிக்காவில் உள்ள நிறுவனம் மட்டும் சிக்குன்குனியா தடுப்பு மருந்துகளுக்கான உரிமையை வாங்கியுள்ளது. ஆனாலும் தற்போது சிக்குன்குனியா பாதிப்பு இல்லாததால், தடுப்பு மருந்துகளை மனிதருக்கு கொடுத்து பரிசோதித்து மருந்து தயாரிக்கும் பணியை இன்னும் தொடங்கவில்லை. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த சிக்குன்குனியாவுக்கான தடுப்பு மருந்துகள், இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

மெர்ஸ் வைரஸ்

சவுதி அரேபியாவில் 2012-ம் ஆண்டில் மெர்ஸ் வைரஸ் வேகமாக பரவியது. 2002-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸுக்கும், மெர்ஸ் வைரஸுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மெர்ஸ் வைரஸால் சவுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆனாலும், அங்கு அது எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.

பின்னர், மெர்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் வேலை விஷயமாக சவுதியில் இருந்து கொரியாவுக்கு சென்றார். அவர் மூலம் ஒரே வாரத்தில் 900 பேர் மெர்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இருமல், தும்மல் மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு வேகமாக பரவத் தொடங்கியது. சிலர் நுரையீரல் பாதிப்படைந்து 5, 6 நாட்களில் உயிரிழக்கத் தொடங்கினர். அப்போதுதான், மெர்ஸ் வைரஸை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். 2013-ம் ஆண்டில் இது தீவிரமாக இருந்தது.

அமெரிக்க ராணுவம்

மெர்ஸ் வைரஸைப் பற்றி கேள்விப்பட்ட 6 மாதத்திலேயே முதல்முறையாக அதை தடுப்பதற்கான மருந்தை எனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்தேன். என்னைப் போலவே அரசு மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான ஆராய்ச்சியாளர்களும் மெர்ஸ் வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தனர். அனைவரின் ஆராய்ச்சி கட்டுரைகளும் அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியானது. ஆனால், அமெரிக்க ராணுவத்துக்கு எனது கண்டுபிடிப்பு பிடித்துவிட்டது. அவர்கள் எனது கண்டுபிடிப்பை தேர்வு செய்து மருத்துவ பரிசோதனையில் ஈடுபடத் தொடங்கினர். மனிதருக்கும் கொடுத்து பரிசோதித்துவிட்டனர். அமெரிக்க ராணுவத்தினர் எப்போதுமே நோய் வரும்முன் தடுப்பதையே விரும்புவர். அதனால்தான் மெர்ஸ் வைரஸுக்கான எனது தடுப்பு மருந்தை அவர்கள் தேர்வு செய்தனர். தற்போது மெர்ஸ் வைரஸால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஜிகா வைரஸ்



ஜிகா வைரஸ்.. இதுவும் மோசமானதுதான். இதை டெங்குவின் சகோதரி என்றுகூட சொல்லலாம். டெங்குவும், ஜிகா வைரஸும் ஒரே மாதிரியான அறிகுறிகள் கொண்டவை. ஆனால், ஜிகா வைரஸால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும்போது, அவர்களது கருவில் இருக்கும் குழந்தையின் மூளையும் பாதிக்கப்படும். பிரேசிலில் இதுபோன்று ஜிகா வைரஸால் கருவில் இருந்த குழந்தையின் மூளை பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதனால்தான் ஜிகா வைரஸை கண்டு மக்கள் பயப்படத் தொடங்கினர்.

1947-ம் ஆண்டு ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் 1960-ம் ஆண்டிலும், 2015-ம் ஆண்டிலும் பரவியது. இந்தியாவிலும் இது இருந்துள்ளது. ஆனால், யாருக்கும் தெரிய வில்லை. ஆரம்பத்தில் வலிமை குறைந்ததாக இருந்த ஜிகா வைரஸ், தற்போது வலிமையானதாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.

உடலுறவால் பரவும் ஜிகா

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொண்டால், அவருக்கும் அந்த பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. ஜிகா வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியை 2015-ம் ஆண்டு டிசம்பரில் எனது குழுவினருடன் தொடங்கினேன். எங்கள் ஆராய்ச்சியின் விளைவாக 3 மாதங்களிலேயே ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று, ஜிகா வைரஸ் தடுப்பு மருந்துக்கான உரிமத்தைப் பெற்று மனிதர்களுக்கு கொடுப்பது உட்பட ஏராளமான பரிசோதனைகளை மேற்கொண்டது.

அந்தப் பணிகள் எல்லாம் கடந்த ஜூலை மாதத்துக்குள் நிறைவுபெற்று, தற்போது ஜிகா வைரஸ் தடுப்பு மருந்தை அந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தென் அமெரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. டாக்டர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிகா வைரஸ் தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்கின்றனர். ஜிகா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

எஃப்டிஏ அனுமதி:

அமெரிக்காவில் அந்நாட்டு அரசு நிறுவனமான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி கொடுத்தால்தான் தலைவலி, காய்ச்சல் உட்பட எந்த நோய்க்கும் பிற நிறுவனங்கள் மருந்துகளை தயாரிக்க முடியும். என்னுடைய கண்டுபிடிப்பான மெர்ஸ் வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க ராணுவம் எஃப்டிஏ-விடம் அனுமதி பெற்று மருத்துவ சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. ஜிகா வைரஸ் தடுப்பு மருந்துக்கான உரிமம் பெற்ற தனியார் நிறுவனம், எஃப்டிஏ-வின் அனுமதி பெற்று மருந்தை தயாரித்து வருகிறது. எத்தனையோ ஆண்டுகள் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தைத்தான் முதல்முறையாக எஃப்டிஏ தேர்வு செய்து அனுமதி கொடுத்துள்ளது.

சிக்குன்குனியா தடுப்பு மருந்துக்கு உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் இன்னும் எஃப்டிஏவிடம் விண்ணப்பிக்கவில்லை. தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததும் முயல், எலி, குரங்குக்கு கொடுத்து பரிசோதனை செய்வோம். அத்துடன் எங்களுடைய பணி முடிந்துவிடும். எஃப்டிஏ அனுமதி பெறுவதற்கு இதுவே போதுமானது. தடுப்பு மருந்துக்கான உரிமத்தை பெறும் நிறுவனம் எஃப்டிஏ-விடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அதன்பிறகு அந்த மருந்தை மனிதருக்கு கொடுப்பது உள்ளிட்ட மருந்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு மருந்தை தயாரிப்பார்கள். நான் கண்டுபிடித்த அனைத்து தடுப்பு மருந்துகளும் ஊசி மூலமாக செலுத்தப்படக்கூடியது.

எச்ஐவி தடுப்பு மருந்து

எச்ஐவி-க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் என்னுடைய பங்கும் இருக்கிறது. 1996-ம் ஆண்டில் மாணவராக தொடங்கிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எச்ஐவி-க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். எச்ஐவி-க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க மாட்டோம். அப்படி கண்டுபிடித்தால் எச்ஐவி குறித்த பயம் மக்களிடம் இல்லாமல் போய்விடும். அதே நேரத்தில் எச்ஐவியை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

டெங்கு

டெங்குவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாது. டெங்குவில் 4 வகைகள் இருப்பதால், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தோல்வியில் முடியும் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், டெங்குவை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் எனது குழுவினருடன் நானும் ஈடுபட்டு வருகிறேன்.

ஃபுளூ காய்ச்சல்

ஃபுளூ காய்ச்சலுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்தான் ஃபுளூ போன்ற வைரஸ் காய்ச்சல் வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களிடம் இருந்து, எதிர்ப்பு சக்தியை எடுத்து அதன்மூலம் மாற்று நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த தடுப்பு மருந்தை செலுத்துவதன் மூலம் ஃபுளூ காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். 5 நாட்கள் தொடர்ந்து ஃபுளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பு மருந்தை செலுத்தினால் அவர் குணமடைந்து விடுவார்.

இவ்வாறு முத்துமணி தெரிவித்தார்.

திறமையான ஆராய்ச்சியாளர் முத்துமணி: கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் பாராட்டு

முத்துமணி கண்டுபிடித்த தடுப்பு மருந்துகள் பற்றி கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய (கிங் இன்ஸ்டிடியூட்) இயக்குநர் டாக்டர் பி.குணசேகரன் கூறியதாவது:

முத்துமணி திறமையான ஆராய்ச்சியாளர். ஆரம்பத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் பணியில் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். அமெரிக்காவில் அவர் கண்டுபிடித்த சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா நோய்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கு இந்தியா உரிமை கொண்டாட முடியாது. ஆனால், தடுப்பு மருந்துகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான நோய்களுக்கான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்துதான் இந்தியாவுக்கு வருகிறது. அதுபோல முத்துமணி கண்டுபிடித்த தடுப்பு மருந்துகளையும் நாம் பயன்படுத்த முடியும். கிங் இன்ஸ்டிடியூட்டில் முத்துமணியை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆராய்ச்சி தொடரும்

படித்து முடித்ததும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் வேலை தேடித்தான் அமெரிக்கா சென்றேன். பணம் சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தோடு இல்லாமல் நாம் படித்த படிப்பு மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சென்ற இடத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒருவரிடம் 20 ஆண்டுகளாக பணியாற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்தான் உலகின் முதல் இதய அறுவை சிகிச்சை நடந்தது.

கடந்த 6 மாதங்களாக ‘தி விஸ்டர் இன்ஸ்டி டியூட்’டில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆரம்பகாலத்தில் போலியோ தடுப்பு மருந்தை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்தது இந்த நிறுவனம்தான். எனது தனிப்பட்ட விருப்பத்தின்படியே தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். உலகில் எந்த நாட்டில் என்ன வைரஸ் புதிதாக வந்தாலும், அதை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றார் முத்துமணி.

Keywords: திறமையான ஆராய்ச்சியாளர் முத்துமணி, ஃபுளூ காய்ச்சல், டெங்கு, ஜிகா வைரஸ், எச்ஐவி தடுப்பு மருந்து, மெர்ஸ் வைரஸ், சிக்குன்குனியா
nantri http://tamil.thehindu.com/

No comments: