" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் " - முருகபூபதி

.
புகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு  கவிஞர்  அம்பித்தாத்தா  வழங்கும்  கொஞ்சும்தமிழ்
ஓடிடும்   தமிழருக்கு  அறைகூவல்  விடுக்கும்  மூத்த கவிஞர்

ஓடிடும்  தமிழா  நில்,  நீ  ஒரு  கணம்  மனதைத்தட்டு
 வீடு நின்னூருள்  சொந்தம்,  விளைநிலம்  நாடு  விட்டாய்
தேடியதெல்லாம்   விட்டுத்திசைபல  செல்லும்  வேளை
 பாடிய   தமிழை  மட்டும்  பாதையில்  விட்டிடாதே
ஓர்தலைமுறையின்  பின்னே  உன்னடி  உறவென்றேனும்
 ஊரிலே   அறியாப்பிள்ளை   உலகரங்கினில்  யாரோ
தாரணி மீதில்  நானோர்  தமிழனென்றுறுதி  செய்யின்
 ஊர்பெயர்   உடைகள்  அல்ல  ஒண்டமிழ்  மொழியே  சாட்சி

சாட்சியாய்  அமையுஞ்  சொந்தச்  செந்தமிழ்  மொழியே  முன்னோர்
 ஈட்டிய   செல்வம்  எங்கள்  இனவழிச் சீட்டாம்
ஏந்த  நாட்டிலே  வாழ்ந்தபோதும்  நடைமுறைவாழ்வில்  என்றும்
 வீட்டிலே   தமிழைப்பேணும்  விதிசெயல்  கடமை  ஐய !
வீட்டிலே  தமிழைப்பேசும்  விதி  செயல்  கடமை  ஆமாம்
 பாட்டனாய்  வந்து  பேரன்  பரம்பரை  திரிதல்  கண்டே
ஈட்டிய   செல்வம்  போச்சே,   இனவழி  போச்சே   என்று
 வாட்டு   நெஞ்சுணர்வை  வெல்ல  வழி   பிறிதொன்றுமில்லை.
                                                                                                      --   கவிஞர்  அம்பி



இலங்கையில்  வடபுலத்தில்  நாவற்குழியில்  1929  ஆம்  ஆண்டு  பிறந்த   இராமலிங்கம்  அம்பிகைபாகர்தான்  பின்னாளில்  கவிஞர் அம்பி   என  அறியப்பட்டார்.
அவர்  முன்னர்  ஆசிரியராகப் பணியாற்றிய  யாழ்ப்பாணம் தெல்லிப்பழை   யூனியன்  கல்லூரிக்கு  வயது  200.   அந்த  நிறைவு விழா   மெல்பனில்  அக்கல்லூரி  பழைய  மாணவர்கள்  நாளை  28  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   கொண்டாடவிருக்கும்  இச்சந்தர்ப்பத்தில் கவிஞர் அம்பி    எமது  தமிழ்க்குழந்தைகளுக்காக  இயற்றித்தொகுத்து வெளியிட்ட   கொஞ்சும்  தமிழ்  நூல்   தொடர்பான  எனது  வாசிப்பு அனுபவத்தை   எமது  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தினால்    இன்று  27  சனிக்கிழமை   அவுஸ்திரேலியா  குவின்ஸ்லாந்து  மாநிலத்தில்  கோல்ட்கோஸ்டில்  (பொற்கரையில்) நடக்கும்   16  ஆவது   தமிழ்  எழுத்தாளர்விழாவில்  இடம்பெறும் நிகழ்வில்   தெரிவிக்கின்றேன்.


கவிஞர் அம்பி  எமது  சங்கத்தின்  ஸ்தாபக  உறுப்பினர்.  அவருக்கு  2004 ஆம்   ஆண்டு  75  வயது  பிறந்தபொழுது  அதனை  பவளவிழாவாக  நாம் கன்பராவில்   கொண்டாடினோம்.   அச்சந்தர்ப்பத்தில்  அந்த  விழா அவ்வேளையில்   சங்கத்தின்  தலைவராக  இருந்த  பேராசிரியர் ஆசி. கந்தராஜா   அவர்களின்  தலைமையில்தான்  நடந்தது.
இன்று   குவின்ஸ்லாந்தின்  பொற்கரையில்  அவருடைய  தலைமையில் மீண்டும் நடக்கும்  16  ஆவது  விழாவில்,   நாம்    கவிஞர்  அம்பி அவர்களுடைய  கொஞ்சும்  தமிழை  எமது  குழந்தைகள்   மற்றும்   பெரியவர்கள்  மத்தியில்  அறிமுகப்படுத்துவதையிட்டு  மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
குழந்தைகளை  நாம்  என்றென்றும்  கொஞ்சிக் கொஞ்சித்தான் வளர்க்கின்றோம்.    " உலகில்  நல்லவைகள்  யாவும்  குழந்தைகளுக்கே" என்று  பல்லாண்டு காலத்திற்கு முன்னரே சோவியத்  ரூஷ்யாவின்  சிற்பி  மேதை  லெனின்  தெரிவித்தார்.
எழுதுவதற்கு  மிகவும்  சிரமமான  இலக்கியம்   எதுவென்று  கேட்டால் குழந்தை   இலக்கியம்தான்  படைப்பதற்கு  சிரமமானது எனச்சொல்வார்கள்.   அதில்   உண்மை   இருக்கிறது.
குழந்தைகளின்   உளவியலைப்புரிந்துகொண்டால்தான்  அது சாத்தியம்.
குழந்தை  இலக்கியங்களை  ஊக்குவித்து  வளர்ப்பதற்காக யுனெஸ்கோ   முதற்கொண்டு  பல  உலக  அமைப்புகள்  அன்று  முதல் தீவிரமாக   இயங்கிவருகின்றன.
கவிஞர்  அம்பி,  தமது  ஆசிரியப்பணி   காலத்திலேயே  குழந்தை இலக்கியம்   படைத்தவர்.   கொழும்பில்  கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில்   பாட  நூலாசிரியராகவும் பணியாற்றியவர்.   அவருக்கிருந்த  அனுபவத் தேர்ச்சியினால் சிட்னியில்   தமிழ்ப்பாட  நூல்கள்  தயாரிக்கும்  குழுவிலும் அங்கம்வகித்தார்.

எமது   தமிழ்க் குழந்தைகளுக்காக  ஏறக்குறைய  22  வருடங்களுக்கு முன்னர்  எமது  மெல்பனில்  மாவை  நித்தியானந்தன்  பாரதி பள்ளியை  தொடக்கியபொழுது  அங்கு  வந்து  அதனை   முறைப்படி ஆரம்பித்துவைத்தவரும்   அம்பிதான்.   அனைவராலும்  நேசிக்கப்படும் அன்பர்    என்பதனால்  அன்புக்கோர்  அம்பி  என்றும்  நாம்  அவரை வர்ணிப்போம்.
தற்பொழுது   சிட்னியில்  தமது  பிள்ளைகள்,  மருமக்கள் பேரக்குழந்தைகள்  சகிதம்  ஏறினால்  கட்டில்  இறங்கினால்  சக்கர நாற்காலி   என்று   முதுமையில்   அவர்  இருப்பதனால்  இந்த நிகழ்ச்சிக்கு    அவரால்  வருகைதரமுடியவில்லை.
அம்பி   அவர்களை  ஈழத்தின்  தேசிகவிநாயகம் பிள்ளை   என்று தமிழ்நாட்டில்   முன்னர்  வெளியான  கோமல்  சாமிநாதனின் சுபமங்களா   இதழ்  வர்ணித்திருக்கிறது.
கவிஞர் அம்பி  எழுதிய  கவிதைக்கு  சென்னையில்  நடந்த உலகத்தமிழராய்ச்சி  மாநாட்டில்  தங்கப்பதக்கமும்  கிடைத்துள்ளது. அமெரிக்க   மருத்துவ  பாதிரியார்  டொக்டர்  கிறீன்  பற்றிய  ஆராய்ச்சி  நூல்  எழுதியமைக்காக  இலங்கையில் அமெரிக்கத்தூதரகத்தால்  பாராட்டி  கொளரவிக்கப்பட்டவர். பன்னூலாசிரியர்   அம்பியின் யாழ் பாடி  கவிதை  நாடகத்தை அண்ணாவியார்   இளையபத்மநாதன்  கூத்தாக  பல  தடவைகள் அரங்காற்றுகை  செய்துள்ளார்.  இவ்வாறும்,  இதற்குமேலும்  தமிழ் கலை  இலக்கிய  உலகில்  கொண்டாடப்பட்டவர்தான்  கவிஞர்  அம்பி.
பாரதி  எழுதிய  பல  குழந்தை  இலக்கியப்பாடல்கள்  இன்றும்  எமக்கு உவகையூட்டுகின்றன.  அவற்றில்   இடம்பெறும்  எளிமையான வார்த்தைக்கோவைகள்தான்  அதற்கு   முக்கிய  காரணம்.
அதுபோன்று  கவிஞர்  அம்பியும்  எமது  குழந்தைகளுக்காக எளியசொற்களையே  பயன்படுத்தினார்.
கொஞ்சும் தமிழின்  அழகும்   அச்சிடப்பட்டிருக்கும்  நேர்த்தியும் குறிப்பிடத்தகுந்தது.
கண்ணைக்கவர்தல்,  கருத்தை  கவர்தல்,  மனதில்  பதிதல்,  அதனால் நினைவில்  நிற்றல்  முதலான  அம்சங்கள்தான்  குழந்தைகள் இலக்கியத்தின்  சிறப்பு.


கொஞ்சும் தமிழ்  -  தமிழ்நாட்டில்  மித்ர  பதிப்பகத்தினால் அழகாக   அச்சிடப்பட்டிருக்கிறது.   தமிழகத்தின்  ஓவியர்களை  மித்ர பதிப்பகத்தின்  எஸ்.பொ.  தக்கமுறையில்  இந்நூலுக்காக பயன்படுத்தியுள்ளார்.
தொடக்கமே  எமது  குழந்தைகளை  அன்போடு  அழைப்பதாகவே அமைந்துள்ளது.
அன்புப்பாலர்  வாருங்கள்
அம்பிப்பாடல்  பாடுங்கள்
அண்ணா  அக்கா  வாருங்கள்
அமுதப்பாடல்  பாடுங்கள்
அம்மா   அப்பா  வாருங்கள்
ஆடல்   பாடல்  பாருங்கள்
வாணித்தாயே  வாருங்கள்
வந்தே  ஆசி  தாருங்கள்.
கல்விக்கும்  கலைகளுக்கும்  தெய்வமாக  போற்றப்படும் கலைவாணியையும்   குழந்தைகளுடன்  சேர்த்து  அழைக்கிறார். வீடுகளில்   நவராத்திரி  காலத்தில்  சரஸ்வதி  பூசை  நடத்துவார்கள். இறுதி  நாளில்  வரும்  விஜயதசமியன்று  குழந்தைகளுக்கு  ஏடு  துவக்கி வித்தியாரம்பம்   செய்விப்பார்கள்.
இந்தப்பண்பாடு   தொன்றுதொட்டு  பின்பற்றப்படுகிறது.   கவிஞர் அம்பியும்   புலம்பெயர்ந்த  தமிழர்கள்  இந்தப்பண்பாட்டையும் தொடரவேண்டும்   என்பதை  சாமர்த்தியமாக  இந்த  அழகிய  நூலின் தொடக்கத்திலேயே   பதிவுசெய்துள்ளார்.
குழந்தைகள்   பிறந்த  பின்னர்  முதலில்  சொல்லும்  வார்த்தை  அம்மா, கன்றுக்குட்டி  கூட  ம்மா  என்றுதான்  குரல்கொடுக்கும். எந்தத்தேசத்துக்குழந்தையென்றாலும்  அதன்  முதல்  வார்த்தையில் ம்மா   இருக்கும்.   அதனால்  இந்நூலில்  இரண்டாவது  பாடல் அம்மாவில்   தொடங்குகிறது.
எங்கள்   தாய்நாட்டில்  நாம்  குழந்தைகளாக  இருந்தபொழுது  எமது பெற்றோர்   அம்புலியை  காண்பித்து  உணவு  தருவார்கள்.  "  நிலா நிலா   ஓடிவா  நில்லாமல்  ஓடிவா  மலை  மீது  ஏறி  வா  மல்லிகைப்பூ கொண்டுவா "  , இந்தப்பாடல்   காலம்  காலமாக  எமது தமிழ்   சமுதாயத்தில்  வாழ்கிறது.
இந்தக்கணினி  யுகம்  வந்த  பின்னர்,   குளிர்காலத்தில்  வெளியே குழந்தையை  அழைத்துச்சென்று  நிலவைக்காண்பிக்க  முடியுமா? ஐ.பேட்  வந்துவிட்டது.
எமது   குழந்தைகள்  தற்பொழுது  ஐபேட்  பார்த்துக்கொண்டுதான் உண்கிறார்கள்,    உறங்குகிறார்கள்.   அதில்  நிறைய கற்றும்கொள்கிறார்கள்.   வீட்டில்  அம்மாமாருக்கும்  வேலை குறைந்துவிடுகிறது.
கொஞ்சும் தமிழில்  மூன்றாவது  பாடல்  அம்புலி  பற்றியது.
அடுத்து   வருகிறது  ஆடும்  குட்டியும்  என்ற  பாடல்,  அதன்  பின்னர் இலை,   இரவு.  இவ்வாறு  அ  முதல்  அகேனம்  வரையில்   ஒவ்வொரு எழுத்துக்கும்   ஒரு  பாடலை  அம்பி  இயற்றியிருக்கிறார்.
எளிமையாகவும்  எமது  குழந்தைகள்  இலகுவில்  புரிந்து கிரகித்துக்கொள்வதற்கு   ஏற்றவாறும்  இந்த  நூலின்  உள்ளடக்கம் அமைந்துள்ளது.
பக்கத்திற்குப்பக்கம்  அழகிய  வண்ணப்படங்கள்.
குழந்தைகளுக்கு    பிறந்தநாள்  பரிசாகவும்  கொடுக்கக்கூடியது.
ஒவ்வொருவர்  வீட்டிலும்  இருக்கவேண்டியது.
தற்பொழுது   புகலிடத்தில்  எமது  பெரியவர்கள்  கூட  தமது தாய்மொழி  தமிழில்  எழுத்துக்களை , வசனங்களை மறந்துவிடுகிறார்கள்.   அது  மட்டுமல்ல  தமிழில்  எழுதுவதும் குறைந்துவருகிறது.
அதனால்   அம்பியின்  கொஞ்சும்  தமிழ்  குழந்தைகளுக்கு மாத்திரமல்ல   பெரியவர்களுக்கும்  சிபாரிசுசெய்யக்கூடியது.
இதனை   இங்கிருப்பவர்கள்  பெற்று  குழந்தை  இலக்கியத்தை ஊக்குவித்தல்   வேண்டும்.
இன்று   இந்த  எழுத்தாளர்விழாவில்  கலந்துகொண்டு பேசுகின்றவர்கள்,   கவிமழை  பொழிபவர்கள்  எல்லோரும்  ஒரு காலத்தில்   இவ்வாறு  குழந்தை  இலக்கியங்கள்  படித்தவர்கள்தான்.
எனவே   நாம்  கடந்து  வந்த  பாதையை  நாம்  மறக்கக்கூடாது அல்லவா.  அந்தப்பாதையில்தானே  எமது  குழந்தைகளும் நடைபயின்று   வருகின்றனர்.
எனவே   இந்த  அரங்கில்  எமது  மூத்த  தமிழ்  அறிஞர் -  கவிஞர்  அம்பி அவர்களின்   கொஞ்சும் தமிழை  உங்கள்  முன்னிலையில் அறிமுகப்படுத்துகின்றேன்.
இதனை  வாங்கி  குழந்தைகள்  இலக்கியத்தின்  வளர்ச்சிக்கு  ஆதரவு தாருங்கள்.
(குவின்ஸ்லாந்து -  கோல்ட்கோஸ்டில்  நடந்த  அவுஸ்திரேலியா  தமிழ்  எழுத்தாளர்  விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட   உரை)

No comments: