பூத்த நெருப்பு - அறிவுமதி

.

என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று
கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று
சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்
பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்



மின்னல்
இருளின் விரோதியன்று
அது
மழையின் விளம்பரம்
கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே
காதலிக்கத் தெரிந்த
உங்களின்
கவிதைகள் கூட
காதல் தோல்விகளின்
கண்ணீர்
விளம்பரங்கள்தாமே
காதலையே
வெற்றிகொள்ள முடியாத
கோழைகளே
கவிஞர்கள் என்றால்
ஓ…
கவிஞர்களே
இந்த
வீரமரணத்தை
நீங்கள்
ஈரப்படுத்தாதீர்கள்
தூரப் போங்கள்
போய் விடுங்கள்
சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே
நேற்றுவரை
உங்களோடு
மலை முகடுகளில்
விவாதித்துச்
சேரி வீதிகளில்
வில்லுப் பாட்டிசைத்த
வீரக்
கவிமகன்தான்…இதோ
சாம்பற்
பொட்டலமாய்
உங்களைச்
சந்திக்க
வந்திருக்கிறேன்
தோழர்களே
என்
மரணம்
நிஜமானது
மாரடைப்புத்தான்
பொய்யானது
ஆம்
மரணம் எனக்கு
ஊட்டப்பட்டது
வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள்
வெட்டப்படுகின்றன
கசக்கிப்
பிழிந்து
ருசித்துச்
சுவைத்த பின்
தூக்கி எறியப்படுகிற
மாங்கொட்டைகள்
மரங்களாய்
விஸ்வரூபமெடுக்கும்
என்பதை
இவர்கள்
மறந்து போயிருக்கிறார்கள்
கோழிக்
குஞ்சுகளைக்
காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளைக்
கலைக்கத் துடிப்பது
குற்றமா என்ன
சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே
ஒரே
ஒரு நிமிட
மெளன அஞ்சலியும்
வேண்டாம்
புறப்படுங்கள்
தொடரட்டும் நமது
மக்கள்பணி

No comments: