தமிழ் சினிமாபசங்க-2

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது அரிது. அதிலும் குழந்தைகளின் பிரச்சனைகளை கூறும் படங்கள் அரிதிலும் அரிது. அந்த வகையில் பசங்க, மெரீனா படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் குழந்தைகளுக்கான ஒரு புது உலகத்தை இந்த பசங்க-2 படத்தின் மூலம் படைத்துள்ளார்.
படத்திற்கு கூடுதல் பலமாக முன்னணி நடிகர் சூர்யாவே இப்படத்தை தயாரித்து நடித்திருப்பது படத்திற்கு எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது.


கதைக்களம்
குறும்புத்தனத்திற்கு உருவம் கொடுத்தார்ப்போல் இரு குழந்தைகள். எப்படி நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியாதோ அதுபோல் குறும்பு செய்யாமல் இருக்கவே முடியாது, ஒரு கட்டத்தில் இவர்களின் குறும்பின் காரணமாக இவர்களின் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், இதனாலயே பல பள்ளிகள், பல அப்பார்ட்மெண்ட்டுகள் மாற நேர்கிறது! இதன் இடையில் குழந்தைகள் மன நல மருத்துவரான சூர்யா மூலம் இவர்களுக்கு ADHD (Attention deficit hyperactivity disorder ) இருக்கிறது என தெரியவருகிறது, இதன் பின் அக்குழந்தைகளுக்கு என்னவானது என்பது மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் ஹைக்கூவான மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி, இரு குழந்தைகளுக்கு பெரிய எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. குறும்பின் உச்சத்தை காட்டும் போதும் ரசிக்கவைக்கும் இவர்கள் , தங்களுக்கே உரிய பாணியில் தங்கள் சோகத்தை வெளிக்காட்டும் போது கண்களை குளமாக்குகிறார்கள். சூர்யாவை தவிர இந்த கதாப்பாத்திரத்தை யாரும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு தன் கைதேர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
டீச்சராக வரும் அமலா பால் வைஷ்ணவியின் அம்மாவாக வரும் பிந்து மாதவி இவர்கள் இது போன்ற கதையில் நடிக்க சம்மதித்தற்காகவே பாராட்டலாம். இவர்களை தவிர முனீஷ்காந்த், கார்த்திக், வித்யா எல்லோரும் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் முன்னோடத்தை பார்த்து விட்டு இது ஏதோ சிறுவர்களுக்கான படம் என நினைத்து விட வேண்டாம் இப்படம் கட்டாயம் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்.
பல வெடிகுண்டு சத்தங்களுக்கு இடையே அழகான மெல்லிசைப்போல் வந்திருக்கும் படம். இக்கால குழந்தைகளின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் மீது பெற்றோர்களால் திணிக்கப்படும் பல சமுதாய பிரச்சனைகளையும் கண்ணாடி போல் பிரதிபலித்திருக்கிறது. தனது முதல் படமான பசங்க படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பாண்டிராஜ் இப்படத்தின் மூலம் அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார்.
க்ளாப்ஸ்:
படத்தின் கரு, வசனங்கள், நடிகர்களின் கைதேர்ந்த நடிப்பு. ஒரு படத்திற்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்தளவிற்கு தன் பங்கை தெளிவாக கொடுத்த தொழில்நுட்ப கலைஞர்கள்.
சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இதுப்போல் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து தயாரிப்பது தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆரோக்கியம்.
பல்ப்ஸ்:
தாரே ஜமின் பர் படத்தில் வரும் காட்சிகளை தவிர்க்க முடியவில்லை, ஒரு சில இடங்களில். அது மட்டுமின்றி குழந்தைகள் சில இடங்களில் கவுண்டர் கொடுப்பது சொல்லிக்கொடுத்து நடித்தது தெரிகின்றது. மற்றப்படி ஏதும் இல்லை.
மொத்ததில் பசங்க 2 அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஹைக்கூ கவிதை!

ரேட்டிங்: 3.5 / 5 நன்றி  cineulagam