விடிவிளக்காய் இருக்குதன்றோ ! - ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...)

.


     கண்ணபிரான் யேசுபிரான்
         கஷ்டமதில் அவதரித்தார்
    எண்ணரிய சிந்தனைகள்
         எமக்களித்து நின்றார்கள்
    மண்ணுலகில் உள்ளவர்கள்
         மனந்திருந்த வேண்டுமென்று
    உண்மைநிறை சேதிகளை
         உவந்தளிந்து நின்றாரே !

     ஆடுமாடு கொட்டிலவர்
         அண்டிநின்ற இடமாகும்
     அன்னையது நிழலிருந்து
         அனைத்துமவர் ஆற்றினரே
      அன்புநிறை உள்ளமொடு
          அவர்தொண்டு அமைந்ததுவே
      அண்டிவந்தோர் அனைவருக்கும்
           அடைக்கலமும் ஆகினரே !

     உலகுய்ய வந்தஅந்த
          உத்தமரை மனங்கொண்டு
    உலகத்தார் உன்மத்தம்
         உடைந்துவிடல் வேண்டாமோ
   மலம்நிறைய மனங்களிலே
          வைத்திருக்கும் மாந்தரெலாம்
    புலன்சிறந்து விளங்குதற்குப்
           புனிதரெமக் குதவிடுவார் !

   நாத்திகம் பேசிநின்ற
        நம்கவிஞர் கண்ணதாசன்
  ஆத்திக வழிசெல்ல
        அவர்துணையாய் அமைந்தாரே
   கீதைக்கு உரைசெய்த
       கீர்த்தியுடை கண்ணதாசன்
   யேசுபிரான் காவியத்தை
        நேயமுடன் அளித்துநின்றார்

   மதமென்னும் வெறிவந்தால்
         மனமெல்லாம் மாசாகும்
   விதம்விதமாய் கற்பனைகள்
          விளைத்துவிடும் விவரீதம்
    வதம்செய்யும் அரக்ககுணம்
           மனதைவிட்டு மறைந்துவிட
     வையமதில் உதித்தவரே
            மாண்புநிறை மாபுருஷர் !

    மதவெறியை  ஊட்டுவதை
          வையகத்தில் ஒழித்திடுவோம்
    விதம்விதமாய் நற்பணிகள்
           விரும்பிநின்று செய்துதிடுவோம்
     உளம்முழுக்க சமதர்மம்
            ஓங்கிவிடச் செய்துநிற்போம்
     ஒற்றுமையே உயர்வுதரும்
             எனவுரத்துச் சொல்லிடுவோம் !

    கீதைபைபிள் இரண்டிலுமே
         நல்பாதைபற்றி  அறிந்திடலாம்
   போதைகொண்டு பார்பதைநாம்
         புறந்தள்ளி விட்டிடலாம்
   சோதனைகள் விளைவாக
          வந்தஇந்த கீதைபைபிள்
    வேதனைகள் போவதற்கு
          விடிவிளக்காய் இருக்குதன்றோ !

   மதநூல்கள் என்றுநாம்
       மறுபெயரை வைக்காமல்
   வாழ்வுக்கு உகந்ததென
        மனங்களிலே வைத்திடுவோம்
    உதவாத குணத்தையெலாம்
         உடைத்தெறிய வந்ததனால்
    உயர்நிலையில் நிற்கின்றார்
           எனவுணர்ந்து போற்றிடுவோம் !