பணிப்பெண்களாக 29 871 பேர் வெளிநாட்டில்
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்த சில்வா அழைப்பானை
பெப்ரவரியில் இலங்கை வருகிறார்
பிசராந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்
நாமலிடம் விசாரணை
பணிப்பெண்களாக 29 871 பேர் வெளிநாட்டில்
28/12/2015 கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து 14871 பெண்களும், 2015ம் ஆண்டு சுமார் 15000 பணிப்பெண்களுமாக 29871 பெண்கள் கடந்த இரு ஆண்டுகளில் மாத்திரம் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ளனர்.
2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புண்டு. 2017ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திலிலுந்து பெண்கள் பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு செல்வதை நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (ஒசா) நடாத்திய 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினை வேலயில்லாப்பிரச்சினை யாகும். இம்மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2 இலட்சம் இளைஞர் யுவதிகள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 4000 மில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்று மேலும் அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு துமிந்த சில்வா அழைப்பானை
28/12/2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தமது பதவிக்காலத்தில் சொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.
ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வழக்கிற்கு அமைவாகவே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 2011 தொடக்கம் 2013 ஆண்டு வரை தமது சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே ஊழல் விசாரணை ஆணைக்குமு வழக்கு தொடர்ந்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பெப்ரவரியில் இலங்கை வருகிறார்
29/12/2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்க தரப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன் வடக்கு விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனையும் சந்தித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையாளர்
செய்ட் அல் ஹுசேன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
விசேடமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பில் வட மாகாணத்தின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக உள்ளதால் இந்த சந்திப்பு நிச்சயம் இடம்பெறும் என தெரியவருகின்றது.
இதேவேளை முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பு குறித்த செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதும் அது தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதுமே செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 29 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இணங்கியிருந்ததாக கூறப்பட்டது. அந்தவகையிலேயே அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அல் ஹுசேன் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிசராந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்
29/12/2015 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் எதிர்வரும் ஆண்டு 2016 ஜனவரி 12ம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.
குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நாமலிடம் விசாரணை
30/12/2015 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி